என் மலர்
காஞ்சிபுரம்
- திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக் கூடாது.
- சுகாதாரமான முறையில் மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை மட்டுமே உபயோகிக்கவேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கோடைக்காலம் தற்போது தொடங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ் குளிர்பானங்கள் மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாகும்.
இந்த தேவைகளை பூர்த்தி செய்ய புதுப் புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கோடை கால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாது காப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அதன்படி அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.
பழரசம், சர்பத், கம்மங் கூழ் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும் நன்னீராகவும் இருக்கவேண்டும். மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.
உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும். திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கரும்பு ஜுஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும்.
திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுத்தர ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா? என உறுதி செய்து ஐஸ் கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா? என்பதை உரிமையாளர் கவனிக்கவேண்டும்.
பெரிய ஐஸ் கட்டிகளை எடுத்து செல்ல வைக்கோல், சணல் பை போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. சுகாதாரமான முறையில் மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை மட்டுமே உபயோகிக்கவேண்டும்.
அதே போல் நுகர்வோர் கடையில் திரவ உணவுப் பொருள்களை வாங்கும் போது கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கெட்டுபோகும் நிலையில் பொருட்கள் இருந்தால், அதனை தவிர்க்க வேண்டும்.
திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும். நுகர்வோர்கள் கோடைக் காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி, காலாவதிநாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்கவேண்டும்.
நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடோ காணப்பட்டால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் இதுவரை 70-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் பொதுமக்களை ஏமாற்றி மருத்துவ சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் குறித்து தொடர் புகார்கள் வந்தது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மருத்துவ துறையும், போலீஸ் துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் பொதுமக்களை ஏமாற்றி மருத்துவ சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் குறித்து தொடர் புகார்கள் வந்தது. அவ்வாறு செயல்பட்டு வரும் போலி டாக்டர்கள் மீது போலீஸ் துறை சட்டப்படி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
அதன்படி காஞ்சிபுரம் மாநகர பகுதியிலுள்ள போலி டாக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கையை எடுத்திட காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், மருத்துவ நலப்பணிகள் இயக்குனர் கோபிநாத் தலைமையில் காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியஸ் சீசர், மற்றும் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் சோதனையில் காஞ்சிபுரம் நிமிந்தகரை தெருவை சேர்ந்த சுதர்சன்பாபு மற்றும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னதி தெருவை சேர்ந்த சேஷாத்திரி ராஜீ ஆகிய இருவரும் எந்தவித தகுந்த மருத்துவ படிப்பும் இல்லாமல், போலி டாக்டர்களாக செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலி டாக்டர்கள் இருவரும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஆம்புலன்ஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரகடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள்(வயது 70). நேற்று இவர், ஒரகடம் அடுத்த பண்ரூட்டி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
இதற்காக ஆஸ்பத்திரி எதிரே வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக 108 ஆம்புலன்ஸ் மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி நாகம்மாள், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கணக்கெடுப்புப்பணிக்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- விவரங்களை dpckanchi@Yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு களப்பணி ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களிலும் மற்றும் மே இறுதி வாரத்திலும் நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணியில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர் ஈடுபடுகிறார்கள். எனவே கணக்கெடுப்புப்பணிக்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பொது மக்கள் எவரேனும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@Yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி வரை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
- புதுக்கோட்டை மாவட்ட போலீசார் காஞ்சிபுரத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் அனகாபுத்தூர் திம்மசமுத்திரம் திவ்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் என்ற பிரான்சிஸ் ஜெரால்டு (வயது 36). இவர் தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி வரை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் கடந்த மாதம் சில நாட்கள் தங்கியிருந்த அவர் ஆலங்குடி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருவரங்குளம் பகுதியை சேர்ந்த படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் விபரங்களை சேகரித்துள்ளார்.
பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு தனக்கு அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, அமுதா ஐ.ஏ.எஸ்., உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளை நன்கு தெரியும். அவர்களிடம் பேசி உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார்.
இதனை நம்பி அவரிடம் வந்த 11 பேரிடம் ரூ.55 லட்சம் வரை பணம் வசூல் செய்துள்ளார். ஆனால் கூறியபடி அரசு வேலை எதுவும் வாங்கித்தரவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்டபோது மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆலங்குடி போலீசில் பணத்தை இழந்தவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்த மோசடியை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று சசிகுமாரை புதுக்கோட்டை மாவட்ட போலீசார் காஞ்சிபுரத்தில் வைத்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை புதுக்கோட்டை அழைத்து வந்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
- புதிய விமானநிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன.
- புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 264-வது நாளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
புதிய விமானநிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு 13 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
விவசாய நிலங்களை கையகப்படுத்தி புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கிராமசபை கூட்டத்தின் போது தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
புதிய விமானநிலையம் அறிவிப்பு வந்த நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்கள் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று காலை ஏகனாபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மொட்டை அடித்தனர். மேலும் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது புதிய விமான நிலையத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட் டம் நடத்தினர். இதனால் ஏகனாபுரம் கிராமம் பரபரப்பாக காணப்படுகிறது.
புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 264-வது நாளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- மதுபோதையில் பணத்திற்காக ஆசைப்பட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதாகவும், சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
- கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.7 லட்சம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பஜார் வீதியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த மையத்தில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையன் தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (32) என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் பணத்திற்காக ஆசைப்பட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதாகவும், சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
கைதான யுவராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.7 லட்சம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.
- கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்:
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, 100 சதவீதம் வழங்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு 'ஜல் ஜீவன்' திட்டத்தை கொண்டு வந்தது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் 'பிரதமர் விருது' காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத் தில், 'ஜல் ஜீவன்' திட்டம் தொடங்கியபின், புதிதாக 1.16 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டு மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுவதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2022 அக்டோபரில் இத்திட்டப்பணிகள் முடிவுற்றன. இதுமட்டுமல்லாமல், குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், அவ்வப்போது குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்கின்றனர். கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் செல்வதை கண்காணிக்க வேண்டும். 'பைப் லைன்' பழுது, சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செய்ய இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கிராம சாலையை விட நெடுஞ்சாலைகள் பல அடி உயரம் உள்ளதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- 6 வழி சாலை பணி முடிவடைந்து 6 ஆண்டுகளாகியும் சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக உள்ள சிங்கப்பெருமாள் கோவில் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் சாலை 6 வழி சாலையாக விரிவு படுத்தும் பணி 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி முடிவடைந்த நிலையில் ஒரகடம்- சென்னகுப்பம் பகுதியில் சர்வீஸ் சாலை பணி இது நாள் வரை தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
கிராம சாலையை விட நெடுஞ்சாலைகள் பல அடி உயரம் உள்ளதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் லேசான மழை பெய்தாலே ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது.
இதனால் அந்த பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் செல்லும் 6 வழி நெடுஞ்சாலை பணி தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரகடம் சென்னகுப்பம், பகுதியில் சர்வீஸ் சாலை மற்றும் கால்வாய் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
24 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த 6 வழி சாலையில் பல்வேறு பகுதிகளில் சர்வீஸ் சாலை முடிவு அடைந்த நிலையில் ஒரகடம், சென்னகுப்பம் பகுதியில் மட்டும் ஏன் சர்வீஸ் சாலை பணி தொடங்கப்படாமல் உள்ளது. உடனடியாக தொடங்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரகடம் சென்னகுப்பம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொள்ளையர்களின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.
- ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பஜார் பகுதியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.
இன்று அதிகாலை வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதற்குள் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளைகும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் பாலுசெட்டி சத்திரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளையர்களின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.
கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேலை வாய்ப்பு முகாமில் 6 திருநங்கைகளும், 3 திருநம்பிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
- பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான (திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள்) சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டது.
இதில் காஞ்சிபுரத்தைச் சார்ந்த 114 திருநங்கைகள் மற்றும் 3 திருநம்பிகள் மற்றும் 5 வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்களும் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 6 திருநங்கைகளும், 3 திருநம்பிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். அவருக்கு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துறை இயக்குனர் அருணகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கைது செய்யப்பட்ட 19 பேரில் 5 பேர் பழைய குற்றவாளிகள் ஆவார்கள்.
- கைதானவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறை மற்றும் புழல் சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் பழைய குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ், வெங்கடேசன், சச்சின், செல்வம், நரேஷ், சபரி, சரவணன், கவுதம், அலெக்ஸ், பிரீத்தி குமார், வல்லரசு, சூர்யா, விக்னேஷ், தினேஷ் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த கமல்ராஜ், விஜயராகவன், தினேஷ் ஆகிய மூன்று பேரும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புட்டா முருகனும் கைது செய்யப்பட்டனர்.
ஒரே நாளில் 19 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட 19 பேரில் 5 பேர் பழைய குற்றவாளிகள் ஆவார்கள். அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறை மற்றும் புழல் சிறையில் அடைத்தனர்.






