என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3 ஆயிரம் சதுர அடி கொண்ட மக்கள் அதிகம் வரும் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. காஞ்சீபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட காந்தி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் செயல்படும் பட்டு சேலை விற்பனை கடைகளும், பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகளும் வணிக நிறுவனங்களும் காஞ்சீபுரம் நகர் பகுதியில் மூடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பட்டுசேலை எடுக்கவும் துணி மணிகள் வாங்கவும் ஏராளமான பொதுமக்கள் காஞ்சீபுரம் பகுதிக்கு வந்திருந்த நிலையில் மூடப்பட்டிருந்த பட்டு சேலை கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்டவை முன்பக்கம் மூடிய நிலையில் பின் கதவை திறந்து வைத்து பொதுமக்களை அனுமதித்து வியாபாரம் செய்து வந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பெருநகராட்சி நிர்வாகத்தினர் காந்தி சாலை, காமராஜர் சாலை, வள்ளல் பச்சையப்பர் தெரு பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பின்பக்க கதவை திறந்து வைத்திருந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.

    மேலும் பின்பக்க கதவை திறந்து வைத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை மீறி பொதுமக்களை அதிக அளவில் அனுமதித்து வியாபாரம் செய்த பிரபல துணிக்கடை உள்ளிட்ட 3 கடைகளுக்கு பெருநகராட்சி ஆணையர் மகேஷ்வரி முன்னிலையில் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

    நகராட்சி அதிகாரிகளின் திடீர் ஆய்வின் காரணமாக காஞ்சீபுரம் காந்தி சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் காந்தி சாலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று ஒரே நாளில் பல்வேறு கடைகளுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை தாம்பரத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் மற்றும் உடந்தையாக இருந்த நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்தை உயிர்காக்கும் மருந்தாக டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    ஆனால் தனியார் ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகளில் இந்த மருந்துக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். இதையடுத்து தமிழக மருத்துவ பணிகள் கழகம் மூலம் இந்த மருந்து கொள்முதல் செய்யப்பட்டு அரசு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கு தினமும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நீண்டநேரம் காத்து இருந்து வாங்கிச் செல்கின்றனர்.

    இந்தநிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் இந்த மருந்தை கள்ளச்சந்தையில் வாங்கி, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மருந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார்.

    அவரிடம் இருந்து சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டரான முகமது இம்ரான்கான்(வயது 26) என்பவர் 4 ஆயிரத்து 700 ரூபாய் மருந்தை ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கி, கள்ளச்சந்தையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்று வந்தார். அவருடைய நண்பரான விஜய்(27) என்பவரும் இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

    இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.பி. சாந்திக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது டாக்டர் முகமது இம்ரான்கானை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை, கள்ளச்சந்தையில் விற்றதை ஒப்புக்கொண்டார். உடந்தையாக இருந்த நண்பர் விஜயும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    மேற்கு வங்காளத்தில் இன்று கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை தந்தி டி.வி. வெளியிட்டு வருகிறது.
    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை பார்ப்போம்...

    காஞ்சிபுரம் மாவட்டம்

    ஆலந்தூர்

    திமுக

    ஸ்ரீபெரும்புதூர்

    காங்கிரஸ்

    உத்திரமேரூர்

    திமுக

    காஞ்சிபுரம்

    கடும் போட்டி


    செங்கல்பட்டு மாவட்டம்

    சோழிங்கநல்லூர்

    திமுக

    திருப்போரூர்

    கடும் போட்டி

    செய்யூர்

    அதிமுக

    மதுராந்தகம்

    கடும் போட்டி

    தாம்பரத்தில் 2 ஆண்டுகளாக சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தாய் மற்றும் தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

    இவருடன் தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் நெருங்கி பழகியுள்ளார். அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கார்த்திக் வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.

    அந்த நேரங்களில் சிறுமியை ஏமாற்றி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    கார்த்திக் தனது நண்பர்களான மணிகண்டன் மற்றும் முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த தனசேகரன் ஆகியோரிடமும் சிறுமியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    இதன் பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக 3 பேரும் சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்போது சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததும் தெரியவந்தது.

    சில நேரங்களில் சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து இந்த கும்பல் குடிக்க வைத்து கொடூரமாக நடந்துள்ளது. இது பற்றி வெளியில் சொன்னால் தாய் மற்றும் சகோதரியை கொன்றுவிடுவோம் என்று 3 பேரும் மிரட்டியுள்ளனர்.

    இதனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி சிறுமி வெளியில் சொல்லாமல் பயத்துடன் இருந்துள்ளார். ஆனால் இந்த வி‌ஷயம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியவந்துள்ளது.

    இதுபற்றி அதே பகுதியைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஒருவர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து மகளிர் போலீசார் சிறுமியை அழைத்து தனியாக விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை, 3 பேரும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததை வாக்கு மூலமாக அளித்தார். இதை தொடர்ந்து கார்த்திக், மணிகண்டன், தனசேகரன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இவர்களில் கார்த்திக், மணிகண்டன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கவுரிவாக்கம் பகுதியில் சிவகாமி நகர் அண்ணா தெருவில் கார்த்திக் வசித்து வருகிறார். அதே பகுதியில் காந்திநகர் 4-வது தெருவில் மணிகண்டன் வீடு உள்ளது.

    தனசேகரனும் அதே பகுதியைச் சேர்ந்தவர்தான். சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி அந்த பகுதியைச் சேர்ந்த சிலரிடமும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தவழக்கில் அரசியல் பிரமுகரான தனசேகரன் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தனசேகரனை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தனிப்படை போலீசார் தனசேகரனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் தகவல்களை சேகரித்து வைத்துள்ளனர். அவரது செல்போன் நம்பரை வைத்து இருக்கும் இடத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடசென்னை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் உள்பட பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர். இதே போன்று தாம்பரம் சிறுமி வழக்கிலும் தொடர் புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. 163, 165, மற்றும் 177 ஆகிய 3 வார்டுகளில் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னையில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. 163, 165, மற்றும் 177 ஆகிய 3 வார்டுகளில் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது.

    3 வார்டுகளிலும் 700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 177-வது வார்டில் பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கட்டுப்பாட்டு பகுதிக்குள் அந்த வார்டு கொண்டுவரப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன.

    தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அடையாறு, ஆலந்தூர் மண்டலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது.

    இந்த 2 மண்டலத்திலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

    வீடு வீடாக சென்று பரிசோதனை, காய்ச்சல் முகாம் போன்ற அடிப்படையான தடுப்பு நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கொரோனா வைரஸ்

    அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று உறுதியாகும் நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டு தனிமையிலும், கவனிப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கிறார்கள். சென்னையில் தினசரி தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தினமும் 20 ஆயிரத்துக்கும் மேல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றனர்.

    மருத்துவமனைகளில் 32 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆலோசனை பெற கட்டுப்பாட்டு அறை எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகள் மற்றும் தளர்வுகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் மருத்துவர் சுகாதார ஆய்வாளர்கள், வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி துறை, பேரூராட்சிகள் மற்றும் போலீஸ் துறை சார்ந்த அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கும்வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் கொரோனா தொற்று தொடர்பான தங்களது சந்தேகங்கள், மருத்துவ ஆலோசனைகளை பெற

    044-27237107, 044-27237207, 044-27237784, 044-27237785

    இலவச தொலைபேசி எண்: 1800-425-8978 போன்றவற்றை தொடர்பு கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு அனைத்து பொதுமக்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சில கட்டுப்பாடுகளைவும் விதித்தது. அதன்படி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடை பார்களும் மூடப்பட்டன.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்ர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் 2-வது அலை தீவிரமாக பரவுவதை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இம்மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான பார்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள தனியார் மதுபான கூடங்கள் மறு உத்தரவு வரும் வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

    மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் மதுபான கூடங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    அதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மாவட்டத்தில இயங்கிவரும் மதுபான கூடங்கள் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில இயங்கிவரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கூடங்கள் மற்றும் ஒட்டல்களில் உள்ள தனியார் மதுபானக் கூடங்கள் நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்கவேண்டும் என்றும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறப்பட்டிருந்தன.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நிலைகளில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் பெருநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    காஞசீபுரம் மாவட்டத்தில் இதுவரை 81 கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 239 ஆக்சிஜன் வசதி கூடிய படுக்கைகளும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 180 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

    மாவட்டத்தில் இதுவரை 59 ஆயிரத்து 177 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை, போதிய அளவு கையிருப்பில் உள்ளது. ஆக்சிஜன் செல்லும் வாகனங்களுக்கு காவல் பாதுகாப்போடு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பழனி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் காந்தி ரோடு, பஸ் நிலையம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுகிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகள் வழக்கம் போல் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் காந்தி ரோடு, பஸ் நிலையம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    நகரின் அனைத்து பகுதிகளில் போலீசார் பணி அமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து விதி மீறிய 147 வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அத்தியவாசிய தேவைகளான பால், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கின. ஓட்டல்களில் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களில் சட்டம் ஓழுங்கு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே விதிகள் மீறி செயல்பட வேண்டாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கேட்டுகொண்டார்.

    ஊரடங்கு நேரத்தில் நகர் முழுவதும் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணி மற்றும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள், கபசுர குடிநீர் வழங்கினர். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திய முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி நாடுகள் இன்று அதிகாலையில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கான நேரடி விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்திய பயணிகளை தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏற்கனவே தடைவிதித்துள்ளன.

    இந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி நாடுகள் இன்று அதிகாலையில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கான நேரடி விமான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது.

    இதையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா, இண்டிகோ, எமரேட்ஸ், பிளை துபாய் விமானங்களும், அதைப்போல் சார்ஜா செல்லும் ஏர்இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும், அபுதாபி செல்லும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, எத்தியாடு ஏர்லைன்ஸ் விமானங்கள் என மொத்தம் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் அடுத்த 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அந்தந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    கோப்புபடம்

    அதே நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்.

    அதோடு ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்கள், அரசு முறையிலான பயணம் செய்யும் இந்தியர்கள், டிப்லோமெடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், ஐக்கிய அரபு நாடுகள் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்லும் டிரான்சிஸ்ட் பயணிகள் இந்த சிறப்பு விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    கொரோனா சிகிச்சைக்காக குஜராத்தில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்த தொழில் அதிபர், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    ஆலந்தூர்:

    குஜராத் மாநிலத்தில் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. அங்குள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி கிடைப்பது இல்லை.

    ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கிடைத்தாலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள வசதி படைத்தவா்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தனி விமானங்களில் வேறு மாநிலங்களுக்கு சென்று ஆஸ்பத்திரியில் சோ்ந்து சிகிச்சை பெறுகின்றனா்.

    அதன்படி குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சோ்ந்த ஒரு தொழில் அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் போதிய இடவசதி இல்லாததால் அவரை சென்னைக்கு தனி விமானத்தில் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனா்.

    இதையடுத்து சூரத்தில் இருந்து கொரோனா நோயாளியான தொழில் அதிபா் மற்றும் அவருடைய குடும்பத்தினா் 4 பேர் தனி விமானம் மூலம் புறப்பட்டு நேற்று பகல் 12 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சோ்ந்தனர். தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் தொழில் அதிபரும் அவரது குடும்பத்தினரும் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அந்த தனி விமானத்தில் வந்த தொழில் அதிபரின் பெயா் போன்ற விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
    கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    பூந்தமல்லி:

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளுக்கு அபராதம் விதிக்கும் முறை தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சப்-கலெக்டர் செல்வமதி, பேரூராட்சி அதிகாரி முகமது ரிஸ்வான் ஆகியோர் தலைமையில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள்.

    உரிய விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல், விதிமுறைகளுடன் முககவசம் அணிந்து செயல்படுபவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி முககவசம் அனியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுடன் தேவையில்லாமல் வெளியே வரும் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர். ஒரு பக்கம் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது முகம் சுழிக்க வைத்தாலும், விதிமுறைகளுடன் செயல்படுபவர்களை பாராட்டி இனிப்பு வழங்குவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அளித்துள்ளது. மேலும் அரசு பஸ்களில் சமூக விலகலுடன் பயணம் செய்யாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. கொரோனோ பாதிப்பை குறைக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    ×