என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகள் மற்றும் பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள். இவர்கள் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலைகளை செய்தனர்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக சென்று கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது.

    இதன்காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் தேங்கிக்கிடக்கின்றன. இதனால் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

    காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகள் மற்றும் பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு 25 தொழிற்கூடங்களும் உள்ளன. இவர்கள் கடந்த ஆண்டு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் வைத்து வழிபட விநாயகர் சிலைகளை செய்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 கோடி மதிப்புள்ள ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கிலான விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கின.

    இந்த சிலைகள் மற்றும் பொம்மைகள் பல இடங்களில் மழை நீரால் சேதம் அடைந்தன. இதனால் இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடைபெறவில்லை. இதனால் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

    இதுகுறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:-

    ஆண்டு முழுவதும் தொழில் செய்தாலும் எங்களால் விநாயகர் சதுர்த்தியின்போது மட்டுமே வருமானம் ஈட்டமுடியும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது தனிநபர்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விநாயகர் சதுர்த்தி விழா நடத்தும் அமைப்பினர் பொது இடங்களில் கொரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும்.

    ஏற்கனவே சிலைகள் தேங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைக்குமா? என்பது தெரியாமல் சிலைகளை தயாரிக்காமல் உள்ளோம். தற்போது தலைவர்களின் சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகளை தயாரிக்கும் பணிகளில் மட்டும் ஈடுபட்டுள்ளோம். இதையும் விற்பனை செய்ய போதிய வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்படுகிறோம். சிலைகளை விற்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதுடன் கொரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுதொடர்பாக காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி கூறுகையில், ‘கொரோனா 3-வது அலை பரவினால் மக்கள் கூட்டம் கூடும் நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்குவது குறித்து சூழ் நிலைக்கு ஏற்றவாறு அரசு தான் கொள்கை முடிவு எடுக்கும்.

    பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பட அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம். அவர்கள் செய்யும் பொம்மைகளை மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கைவினை பொருட்களாக விற்பனை செய்ய அந்த துறை செயலாளரிடம் பேசியுள்ளேன். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பொம்மைகளை விற்பனை செய்ய இடம் ஒதுக்கி தருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.


    கள்ளக்காதல் விவகாரத்தில் பாட்டிலால் குத்தி வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த சதாவரம் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி ஷீலா (வயது 37) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஷீலாவுக்கும் காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த கோணி வியாபாரி கனகராஜ் (47) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    வரதன் பலமுறை எடுத்துக்கூறியும் ஷீலா கள்ளக்காதலை விடுவதாக இல்லை, இதனால் வரதன் தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு தேனம்பாக்கம் பகுதியில் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த ஷீலாவின் தம்பி ராஜீவ்காந்தி என்ற டோரி (30), தனது நண்பரான உதயமாங்குளத்தை சேர்ந்த உதயகுமார் என்ற உதயா (31) என்பவருடன் சேர்ந்து சகோதரியின் கள்ளக்காதலன் கனகராஜை தீர்த்து கட்ட திட்டமிட்டார்.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ராஜிவ்காந்தி, உதயா, கனகராஜ் ஆகியோர் ஒன்றாக மது குடித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜிவ்காந்தி நண்பர் உதயாவுடன் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து கனகராஜை கழுத்து உள்ளிட்ட பல பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் அருகில் இருந்த அம்மிக்கல்லால் கனகராஜ் முகத்தை சிதைத்து விட்டு தப்பிச்சென்று விட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஓரிக்கை மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த ராஜீவ்காந்தி, உதயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    கொரோனா பெருந்தொற்றுப் பரவலை தவிர்க்கும் நோக்கில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் கலெக்டர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 31-ந் தேதியன்று கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார வார துவக்க விழாவை சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கொரோனா விழிப்புணர்வு மாபெரும் கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டு, பொதுமக்களுக்கு முக கவசங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களையும் கபசுர குடிநீரும் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருக்கும் முறையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அதன் பின்னர் அவர் பொதுமக்களுக்கு கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், பொது இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்த்தல், போன்ற அரசு அறிவித்த கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    பணப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வெள்ளகொண்டான் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் சிவகாமி நாதன் (வயது 22) இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் தங்கியிருந்து ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் படப்பையில் இருந்து ஒரகடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பணப்பாக்கம் அருகே செல்லும் போது நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிவகாமிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    படப்பை அருகே வழிப்பறி வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகர் பகுதியை சேர்ந்தவர் அமனுல்லா (வயது 22). இவர் மீது மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் இருந்து வந்த நிலையில் இவரை பிடிக்க மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் படப்பை அருகே பதுங்கி இருந்த அமனுல்லாவை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மதூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (56). இவருக்கு சங்கரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    மதூர் கிராமத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த இவர், தற்போது காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. விவசாயிகளின் அணி துணை அமைப்பாளராக உள்ளார்.

    குழந்தைகள் படிப்புக்காக வாலாஜாபாத் பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் அங்கு தங்கி இருக்கிறார். நேற்று இரவு இவர் வாலாஜாபாத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இரவு 11 மணியளவில் மதூர் கிராமம் அருகே சென்ற போது ஒரு கும்பல் சண்முகத்தை வழிமறித்தது. திடீரென்று அவர்கள் இரும்புக் கம்பியால் அவரை சரமாரியாக தாக்கினார்கள். அவர் அலறி துடித்தார்.

    இதற்குள் அவரை தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சண்முகம் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி சங்கரி தாளவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    சண்முகம் மதூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். அந்த பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. தற்போது புதிதாக ஒரு கல்குவாரி தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த கல்குவாரி தொடங்க சண்முகம்தான் காரணம் என்று சிலர் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக மதூர் கிராமம் பகுதியைச் சேர்ந்த 6 பேரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றார்கள். விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
    காஞ்சீபுரத்தில் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஓரிக்கை வேளிங்கப்பட்டறை சின்னசாமி நகரை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மனைவி கீதா. இவர்களது மகள் ரக்சனா (14), மகன் தர்மேஷ் (12). இவர்களில் ரக்சனா காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 மாதங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் ரக்சனா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சுங்குவார்சத்திரம் அருகே ஓவிய ஆசிரியரை கொன்று உடல் புதைக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது மனைவி, கள்ளக்காதலன், அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சிவபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 53). இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு சோபனா (30) என்ற மனைவியும், அன்பரசி (10) என்ற மகளும், கோவேஷ் (2) என்ற மகனும் உள்ளனர்.

    கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி முதல் அன்பழகன், அவரது மனைவி சோபனா மற்றும் மகள், மகனை காணவில்லை. இது குறித்து அன்பழனின் உறவினர் சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். விசாரணையில் சோபனா தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அவர் முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் சோபனாவை துருவி துருவி விசாரித்தனர்.

    விசாரணையில் சோபனா கள்ளக்காதலன் தர்மராஜ் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து கணவர் அன்பழகனை கொன்று சிவபுரம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரம் குழி தோண்டி புதைத்து விட்டு தலைமறைவானது தெரிய வந்தது.

    போலீசார் சோபனா, தர்மராஜ், விக்னேஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் இன்று (புதன்கிழமை) ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முன்னிலையில் அன்பழகனி்ன் உடலை தோண்டி எடுக்க உள்ளனர்.

    போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் 52 பேரை கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காஞ்சீபுரம் சரக காவல் துணை தலைவர் சத்யபிரியா அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்படி காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது சம்பந்தமாக போலீசார் 52 பேரை கைது செய்தனர்.
    காஞ்சீபுரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் திருக்காலிமேட்டை சேர்ந்தவர் அன்பழகன். ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் காஞ்சீபுரம் ரெயில்வே ரோடு ஆட்டோ நிறுத்துமிடத்தில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கொலை, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட திருக்காலிமேடு, ஏரிக்கரை தெரு, அன்னை சத்யா நகரை சேர்ந்த மணி என்ற கற்பக மணி (வயது 40) ஆட்டோ டிரைவர் அன்பழகனை தரக்குறைவாக பேசி கையால் அடித்துள்ளார். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆட்டோக்களின் கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதுகுறித்து விஷ்ணு காஞ்சீ போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜிக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்று, தப்பிச்சென்ற மணியை கைது செய்தார்.

    வீட்டுமனை அளிப்பதாக கூறி ரூ.2 கோடியே 80 லட்சம் வரை மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் மாட வீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். காஞ்சீபுரம் வையாவூர், சிறுவள்ளூர் போன்ற பகுதிகளில் குறைந்த விலையில், தவணை முறையில் பணம் செலுத்துவோருக்கு வீட்டுமனை அளிப்பதாக கூறி ஒரு நபரிடம் ரூ.56 ஆயிரம் வரை வசூலித்தார்.

    மேலும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ.56 ஆயிரம் செலுத்தினால் அவர்களுக்கு அரை கிரவுண்ட் நிலம் அளிப்பதாக வாக்குறுதியை ஸ்ரீதர் அளித்தார். இதனை நம்பி காஞ்சீபுரம், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலர் பணம் செலுத்தினர்.

    தன் மீது நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக ஸ்ரீதர், சிலருக்கு மட்டும் வீட்டுமனை கொடுப்பதை போல் அதற்கான பத்திரங்களையும், சான்றிதழ்களையும் கொடுத்துள்ளார்.

    பணம் செலுத்திய அனைத்து நபர்களுக்கும் அவர்கள் நம்புவதற்காக பாண்டு பத்திரத்தில் கையொப்பமிட்டு ெகாடுத்துள்ளார். மேலும் அதிகப்படியான ஆட்களை சேர்த்தால் வாடிக்கையாளர்களை முகவர்களாக மாற்றி அவர்களுக்கு உரிய சலுகைகள் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் கொடுத்தார்.

    இதனால் பல வாடிக்கையாளர்கள் முகவர்களை போல் செயல்பட்டு தங்களுடைய உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், தெரிந்தவர்கள் என பல நபர்களை இதில் சேர்த்து விட்டுள்ளனர்.

    இவ்வாறு வீட்டுமனை பெற பொதுமக்கள் செலுத்திய ரூ.2 கோடியே 80 லட்சத்தை ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதர் மோசடி செய்ததாக தெரிகிறது. இதை அறிந்த பணம் செலுத்தியவர்கள், ஸ்ரீதர் மீது காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

    போலீஸ் விசாரணையில், 500-க்கும் மேற்பட்டோரை ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதர் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.

    இந்தநிலையில் காஞ்சீபுரம் புத்தேரி தெருவில் பதுங்கியிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதரை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், ஸ்ரீதரிடம் தாங்கள் பறிகொடுத்த பணத்தை மீட்டு தரக்கோரியும், இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ராஜா என்பவரை கைது செய்யக்கோரியும் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் மனு அளித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு கிராமத்தில் ‘லிப்ட்' தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. கடந்த 12-ந் தேதி ரூ.2½ லட்சம் மதிப்புள்ள இரும்பு பிளேட்டுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து தொழிற்சாலை மேலாளர் ராஜா ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எடையார்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராமன் (வயது 26), ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எலிமியான் கோட்டூர் மேட்டு தெருவை சேர்ந்த கணபதி (23), ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கப்பாங்கோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் (25), திருவள்ளூர் கம்பு தெருவை சேர்ந்த சீனிவாசன் (43), மேல் கொண்டையூர் பகுதியை சேர்ந்த சிவா (28) ஆகியோர் இரும்பு பிளேட்டுகளை திருடியது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு பிளேட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
    ×