என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • மாணவர் சேர்க்கை அதிகரித்திட பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு, தினசரி சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்திட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் காலனி அருகில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக பள்ளியில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார். அப்போது மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு முதல் பருவ புத்தகங்களை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    அரசு பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி, மாணவர்களுக்கான உதவித்தொகை, இலவச உபகரணங்கள், பாட புத்தகங்கள் அனைத்தும் வழங்கி பாதுகாப்பாக மாணவர்கள் இருந்து வரும் சூழ்நிலையில், இதனை பொதுமக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு செய்து அரசு பள்ளிகளில்

    மாணவர் சேர்க்கை அதிகரித்திட பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இப்பேரணியில் ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், அரசு சார்பில் மாணவர் களுக்கு வழங்கப்படும் இலவச உபகரணங்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு, தினசரி சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்திட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் Animal Handler and Animal Handler cum Driver பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது.
    • இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம்:

    இணையதளங்களில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல் பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் Animal Handler and Animal Handler cum Driver பணியிடங்களுக்கு சம்பளம் முறையே ரூ.15,000/- மற்றும் ரூ.18,000/- எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் அதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் புலனம் (Whatsapp) செயலி மற்றும் முகநூல் மூலம் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானவை.

    இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்

    • கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான "கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

    துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது.

    இந்த விருதுடன் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் ஒரு பதக்கமும் வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.

    2022 ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள் விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ 30.6.2022-க்கு முன்பாக வரவேற்கப்படுகிறது.

    மேலும் உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கோவூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
    • கஞ்சா விற்பனை கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து மாங்காடு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் கோவூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ஆட்டோவில் இருந்த கோவூரை சேர்ந்த மணி, சிலம்பரசன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் உள்ள கஞ்சா விற்பனை கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய வகை கொரோனா வைரஸால் மக்களுக்கு கொரோனா காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 2,118 நடமாடும் முகாம்கள் நடத்தப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. 2,118 நடமாடும் முகாம்கள் இதற்காக அமைக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரத்து 575 பேருக்கு முதல் தவணையும், 7 லட்சத்து 36 ஆயிரத்து 58 பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸால் மக்களுக்கு கொரோனா காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 2,118 நடமாடும் முகாம்கள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாகன ஓட்டிகளின் கோரிக்கை குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உடனடியாக காவல்துறையினர் மூலம் பழுதான சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்.
    • வாகன ஓட்டிகளின் கோரிக்கையை அறிந்து உடனடியாக சாலையை சீரமைக்க பிறந்த மாவட்ட காவல் துறைக்கு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும், மக்களும் நன்றி தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றங்கரை மேம்பாலம் அருகே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி வாகன விபத்தில் சிக்கி காயம் அடைந்து அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும்மாவட்ட நிர்வாகமோ, மாவட்ட காவல் துறையோ, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் சேதமான சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்கோரிக்கை விடுத்தனர்.

    வாகன ஓட்டிகளின் கோரிக்கை குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உடனடியாக காவல்துறையினர் மூலம் பழுதான சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து ஜேசிபி உதவியுடன் காவல் துறையினர் விரைந்து வந்து பழுதான சாலையை தற்காலிக சீரமைத்து தந்தனர்.

    வாகன ஓட்டிகளின் கோரிக்கையை அறிந்து உடனடியாக சாலையை சீரமைக்க பிறந்த மாவட்ட காவல் துறைக்கு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும், மக்களும் நன்றி தெரிவித்தனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 920575 முதல் தவணையும், 736058 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    • கொரோணா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 920575 முதல் தவணையும், 736058 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய வகை கொரோனா வைரஸால் BA4, BA5 strain மூலம் மக்களுக்கு கொரோணா காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் தமிழக முதல்வரின் ஆணையின்படி, இன்று 12 ம் தேதி சிறப்பு மாபெரும் ஒருநாள் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

    இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 2118 நடமாடும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோணா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மின்மாற்றி அருகே குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து அலரியடித்துக் கொண்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
    • தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்னயங்குளம் பகுதியில் மின்மாற்றியில் பிற்பகலில் லேசான பழுது ஏற்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக மின் மாற்றியில் தீ பொறி ஏற்பட்டுள்ளது அப்போது பொதுமக்கள் மின்சாரதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் ஆனால் மின்சாரதுறை அதிகாரிகள் யாரும் இந்த சம்பவம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    காஞ்சிபுரம் சின்னயங்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றி தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது. மின்மாற்றி அருகே குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து அலரியடித்துக் கொண்டு வெளியேறி ஓட்டம்பிடித்தனர்.

    உடனே காஞ்சிபுரம் தீயணைப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியபடுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த 5 தீயனைப்புதுறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினர். மின்சாரதுறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இந்த விபத்திற்கான காரணம் என இப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • நிலம் விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து செல்வத்திற்கும், ராஜ்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனைவி கண்முன்பே கணவரை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது பெயரில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் முன் தொகை பெற்றுள்ளார்.

    மேலும் நிலம் விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து செல்வத்திற்கும், ராஜ்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு செல்வம் தனது மனைவியுடன் நந்தம்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்து ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கோதண்டன், சந்திரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்வத்தை அவரது மனைவியின் கண்முன்னே கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

    இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றமான விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் சத்தியமூர்த்தி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.இளங்கோவன் செல்வத்தை கொலை செய்த ராஜ்குமார் கோதண்டன், சந்திரன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • மனிதகுரங்கு குட்டி தனது தாயுடன் சேர்ந்து செய்யும் சேட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    • ஆதித்யா குட்டியை, தாய் குரங்கு எப்போதும் தன்னுடனே வைத்து கவனித்து வருகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.

    பூங்காவில் உள்ள மனித குரங்கு ஜோடியான கொம்பி-கவுரிக்கு கடந்த ஆண்டு குட்டி பிறந்தது. இதற்கு பூங்கா ஊழியர்கள் ஆதித்யா என்று பெயர் வைத்து உள்ளனர்.

    இந்த மனிதகுரங்கு குட்டி தனது தாயுடன் சேர்ந்து செய்யும் சேட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆதித்யா குட்டியை, தாய் குரங்கு எப்போதும் தன்னுடனே வைத்து கவனித்து வருகிறது.

    இந்த நிலையில் ஆதித்யா மனிதகுரங்கு குட்டிக்கு நேற்று முதல் பிறந்த நாள் ஆகும். இதனை பூங்கா ஊழியர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.

    மனித குரங்கு உள்ள இருப்பிடம் அருகே பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா மற்றும் ஊழியர்கள், பார்வையாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். அந்த கேக்கில் " முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதித்யா..." என்று எழுதப்பட்டு இருந்தது.

    பின்னர் மனிகுரங்கு குடும்பத்துக்கு ஆதித்யாவின் பிறந்த நாள் பரிசாக அதற்கு பிடித்தமான உலர் பழங்கள் நிறைந்த கேக் கொடுக்கப்பட்டது.

    அந்த கேக்கை ஆதித்யா குட்டியுடன் சேர்ந்து மனித குரங்குகள் ருசித்து சாப்பிட்டன. இந்த வீடியோ காட்சியை வண்டலூர் பூங்கா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.

    • குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    • கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (11-ந் தேதி) அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் வட்டத்தில் தென்னேரி, திருப்பெரும்புதூர் வட்டத்தில் கொளத்தூர், குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் முகவரி மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும்.

    மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிகுறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

    முகாம் நடைபெறும் இடங்களில், கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணிமங்கலம் அருகே உள்ள கரசங்கால் பகுதியில் வசிப்பவர் பால் (வயது 84).ஓய்வு பெற்ற விஞ்ஞானி.
    • ஓய்வு பெற்ற விஞ்ஞானி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மணிமங்கலம் அருகே உள்ள கரசங்கால் பகுதியில் வசிப்பவர் பால் (வயது 84).ஓய்வு பெற்ற விஞ்ஞானி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 2மகள்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் பால், தனது வீட்டில் இருந்த 100 பவுன் தங்க நகை, மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் வீட்டில் உள்ள பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை.

    இதுகுறித்து அவர் மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். நகை கொள்ளை போன வீட்டில் விலை உயர்ந்த 2நாய்கள் காவலுக்கு உள்ளன. மேலும் வீட்டின் கதவு, பீரோ உடைக்க படவில்லை என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறும்போது, பால் குடும்பத்தாரிடம் முதல் கட்டமாக விசாரணையை தொடங்கி உள்ளோம் என்றனர். ஓய்வு பெற்ற விஞ்ஞானி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×