என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து டெல்லி மும்பை, பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களுக்கு வழக்கமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதை தவிர்த்து ரெயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
    • விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிபொருள் விலை 16.3 சதவீதம் மீண்டும் உயர்ந்து இருக்கிறது.

    ஆலந்தூர்:

    கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து 2 வருடங்களுக்கு பின்பு சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக உள்நாடு மற்றும் உள் மாவட்ட பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டணம் தற்போது உயர்ந்து உள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

    சென்னையில் இருந்து மதுரை செல்ல விமான கட்டணம் ரூ. 5,500-ல் இருந்து 7,500 ஆக உயர்ந்து உள்ளது. அதேபோல் டெல்லிக்கு ரூ.9,500- ரூ.10,000, திருச்சிக்கு ரூ.3,500- ரூ.5000, கோவைக்கு ரூ.5,500- ரூ.6000, ஐதராபாத்துக்கு ரூ.6000-ரூ.6500, மும்பைக்கு ரூ.8600-ரூ.9000, பெங்களூருக்கு ரூ.5500-ரூ.6000 ஆக கட்டணம் அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து விமான டிக்கெட் ஏஜெண்ட்டுகள் கூறும்போது, இந்த அளவுக்கு விமான கட்டணம் உயர்வுக்கு விமானத்தின் எரிபொருள் விலை உயர்ந்தது தான் காரணம். இதனால் நடுத்தர மக்கள் விமான பயணத்தை தவிர்ப்பது அதிகமாகி வருகிறது.

    நடுத்தர வர்த்தக பயணிகள் விமான பயண கட்டணத்தை பற்றி இப்போது பயப்படுகிறார்கள். அத்தியாவசியமற்ற பயணங்களை அவர்கள் குறைத்து கொள்கிறார்கள்.

    அதுமட்டுமின்றி பயணத்தை மிச்சப்படுத்த பயணம் செய்வதற்கு 4 முதல் 5 வாரங்களுக்கு முன்பாகவே விமான டிக்கெட்டை புக் செய்கிறார்கள. அவசரமாக விமான பயணத்தை மேற்கொள்வோர்களுக்கு விமான கட்டணம் அதிகரித்து வருகிறது.

    சென்னையில் இருந்து டெல்லி மும்பை, பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களுக்கு வழக்கமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதை தவிர்த்து ரெயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

    விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிபொருள் விலை 16.3 சதவீதம் மீண்டும் உயர்ந்து இருக்கிறது என்றனர்.

    • மவுலிவாக்கத்தில் நடைபெற்ற கபடி போட்டியை பார்ப்பதற்காக மாணவன் ரித்திக் சென்றான்.
    • மாணவன் உயிரிழப்பு குறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் ரித்திக் (வயது 15), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் கபடி போட்டி நடந்து கொண்டிருந்தது. அதனை பார்க்க ரித்திக் சென்றான்.

    அப்போது அங்கு இருந்த மின்சாரவயரின் மீது எதிர்பாராதவிதமாக கை பட்டதில் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தான். இதை பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் ரித்திக்கை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரித்திக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை விமான நிலைய பகுதியிலும் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.
    • மழை ஓய்ந்ததும் அதன் பின்னர் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. விமான நிலைய பகுதியிலும் நேற்று இரவு 10 மணிமுதல் இன்று அதிகாலை 4 மணி வரை சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.

    இதனால் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னைக்கு 68 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல், வானில் தொடா்ந்து வட்டமடித்து கொண்டிருந்தது.

    இதைப்போல் ஐதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து வந்த விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள், வாரணாசி,மங்களூரில் இருந்து வந்த இண்டிகோ ஏன்லைன்ஸ் விமானங்கள் மற்றும் மலேசியாவிலிருந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா ஆகிய 2 விமானங்களும், தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானம் உட்பட 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்டநேரமாக வானிலே வட்டமடித்துக் கொண்டிருந்தன.

    இரவு 11.50 மணிக்கு 286 பயணிகளுடன் ஜொ்மன் நாட்டின் பிராங்க்பாா்ட் நகரில் இருந்து வந்த லுப்தான்ஷா ஏா்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க வந்தது. மழை, சூறைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் ஐதராபாத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் மழை ஓய்ந்ததும் அதன் பின்னர் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    அதிகாலை 2.10 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வந்த ஏா் இந்தியா விமானம் பெங்களூருக்கும், அதிகாலை 2.20 மணிக்கு தோகாவிலிருந்து வந்த கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் ஐதராபாத்திற்கும், அதிகாலை 2.40 மணிக்கு துபாயில் இருந்து வந்த எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம், பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.

    இதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், துபாய், பக்ரைன், தோகா, உட்பட சர்வதேச விமானங்கள், டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, புனே, உட்பட 6 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 15 புறப்பாடு விமானங்கள், சென்னையில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

    சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவில் பெய்த திடீர் சூறைக்காற்று, இடி மின்னல் மழை காரணமாக மொத்தம் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    • ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அதிகாரிகள் கணக்கெடுப்பு ஆய்வு மூலம் கண்டுபிடித்தனர்.
    • பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரியில் நீர்பிடிப்பு பகுதியை 50 ஆண்டு காலமாக ஆக்கிரமித்து விவசாய நிலமாக மாற்றி பயிரிடப்பட்டு வந்தது.

    காஞ்சிபுரம்:

    ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலை ஆதாரங்களில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்படி வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட முசரவாக்கம், பகுதியில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரியில் நீர்பிடிப்பு பகுதியை 50 ஆண்டு காலமாக ஆக்கிரமித்து விவசாய நிலமாக மாற்றி பயிரிடப்பட்டு வந்தது.

    ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு ஆய்வு மூலம் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் பொதுப்பணித்துறை இளம் பொறியாளர் மார்க்கண்டேயன், காஞ்சிபுரம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முசரவாக்கம் ஏரியில் ரூ.15 கோடி மதிப்பிலான 100 ஏக்கர் ஏரி நீர் பிடிப்பு நிலங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்டு கையகப்படுத்தி அறிவிப்பு பலகையை வைத்தனர்.

    • மாவட்டம் முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன
    • முறையாக இல்லாத பள்ளி வாகனங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் கடந்த 13ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் பள்ளி பேருந்துகளை ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஆய்வு செய்வது வழக்கம்.

    அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 46 தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் 272 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட பள்ளி வாகனங்களை காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் கனிமொழி, வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், தலைமையிலான குழுவினர் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா, வாகன இன்சுரன்ஸ், வாகன ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம், பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசர வழி, உள்ளிட்டவைகளை முறையாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது முறையாக இல்லாத பள்ளி வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் சரி செய்து கொண்டு வருமாறு அனுப்பி வைக்கப்பட்டது.

    • தலைமை நீதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • அருள்மிகு வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை தலைமை நீதிபதி வழிபட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்னை தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி திடீர் வருகை புரிந்தார். சென்னையில் இருந்து கார் மூலம் வந்த தலைமை நீதிபதி முனீஸ்வரன் நாத் பண்டாரி மற்றும் அவரது மனைவி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முனிரத்தினம் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர் அருள்மிகு வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை  தலைமை நீதிபதி வணங்கி வழிபட்டார். அவருக்கு அர்ச்சகர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் அவர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் ஸ்தானிகர் சியாமா சாஸ்திரிகள் பிரசாதங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

    • திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.
    • வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாளின் பிறந்த நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

    திருவடிகோவில் புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் வரதராஜ பெருமாள் நிற பட்டு உடுத்தி,தங்ககாசு மாலை, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி சன்னதி தெருவில் வீதியுலா வந்து, திருவடி கோவிலுக்கு எழுந்தருளி பின்னர் திருக்கோவிலுக்கு திரும்பினார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

    • தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவு பாதுகாப்பு துறையில் மனித வளம் மற்றும் நிறுவனங்களை பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, 2021-2022- ம் ஆண்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட சரியான உணவு சாப்பிடும் சவால் எனும் போட்டியில் இந்தியா முழுவதும் 150 மாவட்டங்கள் பங்கேற்றன. 75 மாவட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்றுள்ள 75 மாவட்டங்களில் காஞ்சீபுரம் 5-வது மாவட்டமாக சிறந்த செயல்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளது. இவ்விருதினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    • நீர் பிடிப்பு பகுதி மற்றும் நீர் தேக்க பகுதி ஆழப்படுத்தப்படும்.
    • வெள்ள தடுப்பு, வறட்சி தடுப்பு, பல்லுயிர் இனப்பெருக்கம் போன்றவற்றிற்கு வழி வகுக்கும்.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லம் வடிகால் பகுதியில் உள்ள காரணிபேட்டை ஏரி மற்றும் பெரியதாங்கல் ஏரியை அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ஏரி தூர் வாரி புனரமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை மூலம் ரூ.16 லட்சம் மதிப்பில் நடைபெறும் புனரமைப்பு பணிகளால் ஏரிகள் தூர் வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு, வரத்து வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்படும்.

    நீர் பிடிப்பு பகுதி மற்றும் நீர் தேக்க பகுதி ஆழப்படுத்தப்படும். இதனால் நீர்த்தேக்கம் அதிகரிக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

    மேலும் வெள்ள தடுப்பு, வறட்சி தடுப்பு, பல்லுயிர் இனப்பெருக்கம் போன்றவற்றிற்கு வழி வகுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் அருண், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சீனிவாசன், பவானி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • ஓரிக்கை துணை மின் நிலையத்தில் வருகிற 18-ந்தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

    காஞ்சிபுரம்:

    ஓரிக்கை துணை மின் நிலையத்தில் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள் காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்னகாஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

    இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் காஞ்சிபுரம்/வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.

    • சதீஷ் தனது புதிய மோட்டார் சைக்கிளை, புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அடகு நகை கட்டிடம் முன்பு நிறுத்தி இருந்தார்.
    • கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது விலை உயர்ந்த புதிய மோட்டார் சைக்கிளை, புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அடகு நகை கட்டிடம் முன்பு நிறுத்தி விட்டு முதல் மாடிக்கு சென்றார்.

    பின்னர் கீழே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. கல்பாக்கம் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
    • கந்துவட்டி வசூல் செய்பவர்ள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

    காஞ்சிபுரம்:

    கந்துவட்டி புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.

    இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இது போன்று கந்துவட்டி வசூல் செய்பவர்ள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×