என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சிறப்பு கடன் வழங்கும் மேளா மூலமாக 84 நபர்களுக்கு 74 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பு கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், சுய உதவிக் குழுக்களுக்கு, சிறு வணிக கடன் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான கடன் உதவிகளை வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் கூடுதல் பதிவாளர் மு.முருகன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முதன்மை வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், பொது மேலாளர் விஜயகுமாரி, துணை பொது மேலாளர் நாராயணன், வங்கி மேலாளர் இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து வங்கியின் மேலாண்மை இயக்குனரும் கூடுதல் பதிவாளருமான முருகன் கூறியபோது, இவ்வங்கியின் சிறப்பு கடன் வழங்கும் மேளா மூலமாக 84 நபர்களுக்கு 74 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    வேடபாளையம் கிராமத்தில் உள்ள சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேடபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இருப்பு வைக்கப்பட்டிருக்கும் உணவு தானியங்களை கையில் எடுத்து அவற்றின் தரத்தை ஆய்வு செய்தார். 

    • வளசரவாக்கம் சுப்பிர மணியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ்.
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

    போரூர்:

    வளசரவாக்கம் சுப்பிர மணியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி மாரியம் மாள். இவர்களது மகன் சரண் (35). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    சரண் மதுபோதைக்கு அடிமையாகி கடந்த 2 ஆண்டுகளாக போதை மறுவாழ்வு மையம் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வீட்டில் ரகளையில் ஈடுபட்டு வந்த சரண் நேற்று இரவு தாய், தந்தை மற்றும் சகோதரியை அடித்து வீட்டை விட்டு வெளியே விரட்டி கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    இதையடுத்து சரணின் தாய் முனியம்மாள் வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் முனுசாமி விசாரணை நடத்திக் கொண்டிருந்தார் அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த சரண் திடீரென சப் -இன்ஸ்பெக்டர் முனுசாமியை சரமாரியாக தாக்கி மாடி படிக்கட்டில் இருந்து கீழே தள்ளிவிட்டார் இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    பின்னர் அங்கு வந்த கூடுதல் போலீசார் மற்றும் தீயனைப்பு துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சரணை பிடித்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப் - இன்ஸ்பெக்டர் முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் சரண் மீது 5பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பக்ரூதின் அலி போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது.
    • பக்ரூதின் அலியை வெளியே செல்ல விடமால் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    ஆலந்தூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பக்ரூதின் அலி. இவர் மீது அவரது மனைவி வரதட்சணை கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்து இருந்தார்.

    ஆனால் பக்ரூதின் அலி போலீசில் சிக்காமல் வெளிநாடு சென்று விட்டார். இது குறித்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் கத்தாா் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் வந்த பக்ரூதின் அலியின் பாஸ்போர்ட்டை சோதனை செய்யும்போது அவர் வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது.

    இதை அடுத்து பக்ரூதின் அலியை வெளியே செல்ல விடமால் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதுபற்றி நன்னிலம் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பக்ரூதின் அலியை கைது செய்து அழைத்து செல்வதற்காக சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    • விருகம்பாக்கம், கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்.
    • வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    விருகம்பாக்கம், கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்(35). ஆட்டோ டிரைவர். வட பழனி பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டான்டில் ஆட்டோவை நிறுத்தி ஓட்டிவந்தார். இவருக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவர் பரணி என்பவருக்கும் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பரணி நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் சேகரை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சேகர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆலந்தூர் பகுதியில் உள்ள கார் கம்பெனியில் சூப்பர் வைசராக சங்கரலிங்கம் வேலை செய்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிள் வந்த 2 வாலிபர்கள் திடீரென சங்கரலிங்கத்தின் செல்போனை பறித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    தென்காசி மாவட்டம் புதூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். (வயது24). இவர் சென்னை அடுத்த ஆலந்தூர் பகுதியில் உள்ள கார் கம்பெனியில் சூப்பர் வைசராக வேலை செய்து வருகிறார். அவர் பணி சம்பந்தமாக சுங்குவார் சத்திரம் அடுத்த சந்தவேலூர் அருகே சென்னை-தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த 2 வாலிபர்கள் திடீரென சங்கரலிங்கத்தின் செல்போனை பறித்தனர். அவர்களில் ஒருவனை அக்கம்பக்கத்தினர் உதவியோடு சங்கரலிங்கம் மடக்கி பிடித்து சுங்குவார் சத்திரம் போலீசில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அவன் திருவெற்றியூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த பிரதீப் (26) என்பது தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
    • ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இஷாந்த் என்ற மாணவர் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    காஞ்சிபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வாரம் பிளஸ்-2 மாணவி மர்மமாக இறந்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பள்ளி முன்பு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

    பள்ளி வாகனங்கள் முழுவதும் தீ வைத்து எரிக்கப்பட்டது. பள்ளியும் சூறையாடப்பட்டது. இந்த கலவரத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர். கலவரத்துக்கு காரணமானவர்களை மேலும் தேடி வருகிறார்கள்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காஞ்சீபுரம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இஷாந்த் என்ற மாணவர் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    அவர் சரியாக படிக்காததை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அங்குள்ள 2-வது மாடியில் இருந்து மாணவர் திடீரென கீழே குதித்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி தற்கொலையால் பள்ளி சூறையாடப்பட்டு பெரும் கலவரமாக மாறியது. அதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பள்ளி முன்பு இன்று காலை ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. மாணவன் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி இன்று வழக்கம்போல் செயல்பட்டது.

    • பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் மோத்தம் 1,702 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமாக இறந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று காலை பள்ளி முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது கலவரமாக மாறியது.

    ஏராளமானோர் பள்ளிக்குள் புகுந்து பஸ்களுக்கு தீவைத்தனர். மேலும் பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தையும் நொறுக்கி சூறையாடினர்.

    இதனை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் தொடர்ந்து தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தனியார் பள்ளிகள் விடுமுறைவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதனால் இன்று காலை தனியார் பள்ளிக்ள செயல்படுமா? அல்லது மூடப்படுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.

    இந்த நிலையில் அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கியது. மாணவ-மாணவிகள் எப்போதும் போல் பள்ளிக்கு சென்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டத்தில் 354 மெட்ரிக் பள்ளிகளும், 140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் உள்ளது. இன்று அனைத்து மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

    பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் மோத்தம் 1,702 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் அரசு உதவி பெரும் பள்ளிகள் 860, 842 தனியார் பள்ளிகள் என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டது.

    தனியார் பள்ளி இயங்கு வதை கண்காணித்து வருவதாக மாவட்ட முதலன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தெரிவித்து உள்ளார்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கியது.

    • மேட்டுக்குப்பம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்.
    • இளம்பெண் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மேட்டுக்குப்பம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். பெயிண்டர். இவரது மனைவி லதா (26). நேற்று இரவு மது போதையில் வீடு திரும்பிய சரவணனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த லதா திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தி இருந்தனர். சுமார் ரூ.6 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.
    • போலீசார் ராணிப்பேட்டை தம்பதி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், கோனேரி குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோரிடம் ராணிப்பேட்டை, வன்னிவேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பணம் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று கூறி அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக தெரிகிறது.

    ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் ரூ.10 ஆயிரம் கிடைக்கும், ஆறு மாதம் கழித்து அதே ஒரு லட்ச ரூபாய்க்கு 2 லட்சம் தருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    இதனை நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தி இருந்தனர். சுமார் ரூ.6 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் அவர்களுக்கு கூறியபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் முறையான பதில் கூறவில்லை.

    இதனால் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பணம் கட்டியவர்கள் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். போலீசார் ராணிப்பேட்டை தம்பதி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, துவக்கி வைத்து, முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
    • ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் படித்து வேலை நாடுபவர்கள் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி துவக்கி வைத்தார்.

    படித்த வேலைவாய்ப்பற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெறும் நோக்கில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

    இதன் ஒரு பகுதியாக தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கான மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை காஞ்சிபுரம், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இம்முகாமினை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, துவக்கி வைத்து, முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    பிறகு அவர் பேசியதாவது:-

    இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துக்காண்டு 8 முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் படித்து வேலை நாடுபவர்கள் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுகிறார்கள்.

    மேலும், அரசு வேலை மட்டுமே நம்பி இருக்காமல் தனியார் நிறுவனங்கள் மற்றும் சுயத்தொழில் செய்து இளைஞர்கள் முன்னேற வேண்டும் என அரசு பல்வேறு வேலை வாய்ப்பு பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது.

    அதில் இளைஞர்கள் கலந்துக்கொண்டு தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் அருணகிரி, ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் கு.பிரகாஷ் வேலு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • காஞ்சிபுரம் சென்னை போரூர் அடுத்த பூதான்பட்டு பகுதியை சேர்ந்தவர் அம்மையப்பன்.
    • லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் சென்னை போரூர் அடுத்த பூதான்பட்டு பகுதியை சேர்ந்தவர் அம்மையப்பன் (வயது 42). இவரது மாமியார் பெத்தனாச்சி (57). இவர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் சென்றுவிட்டு வீடு திருப்பினர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் அம்மையப்பன், பெத்தனாச்சி இருவரும் தூக்கி வீசபட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பருத்தி கொள்ளை அருகே நேற்று மதியம் 2 மணி அளவில் 50 வயதான ஆண் நபர் ஒருவர் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அந்த மொபட் எதிரே வந்த தனியார் நிறுவன பஸ் மீது மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    அவர் ஓட்டி வந்த மொபட்டில் பதிவு எண் இல்லை. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன பஸ் டிரைவர் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×