என் மலர்
உள்ளூர் செய்திகள்

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது
- பக்ரூதின் அலி போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது.
- பக்ரூதின் அலியை வெளியே செல்ல விடமால் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
ஆலந்தூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பக்ரூதின் அலி. இவர் மீது அவரது மனைவி வரதட்சணை கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்து இருந்தார்.
ஆனால் பக்ரூதின் அலி போலீசில் சிக்காமல் வெளிநாடு சென்று விட்டார். இது குறித்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கத்தாா் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் வந்த பக்ரூதின் அலியின் பாஸ்போர்ட்டை சோதனை செய்யும்போது அவர் வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது.
இதை அடுத்து பக்ரூதின் அலியை வெளியே செல்ல விடமால் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதுபற்றி நன்னிலம் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பக்ரூதின் அலியை கைது செய்து அழைத்து செல்வதற்காக சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.






