என் மலர்
காஞ்சிபுரம்
- தொல்லியல் துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் கடந்த 3-ந்தேதி அகழாய்வு பணி தொடங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு 7 அடி உயரத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர்.
இது குறித்து அறிந்த தொல்லியல் துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு கிடத்த பானை ஓடு மற்றும் கற்கள் கி.மு. 300 முதல் கி.பி. 300-ம் ஆண்டு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியது என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் கடந்த 3-ந்தேதி அகழாய்வு பணி தொடங்கப்பட்டது.
தொடர்ந்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து மேற்பார்வையில் அகழ்வாய்வு பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பழங்கால கட்டிட சுவர்கள் காணப்பட்டது. இதனை தொடர்ந்து அரியவகை பொருட்களான கண்ணாடி மணிகள், வட்ட சில்கள், இரும்பு பொருட்கள், கூர்மையான ஆயுதம் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற பொருட்களை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து பார்வையிட்டார். அவருடன் தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
அகழ்வாய்வு பணி முழுமையாக முடிவடைந்தால்தான் என்னென்ன வகை பொருட்கள் கிடைத்துள்ளது என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம். சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
- என் குப்பை. என் பொறுப்பு. எனும் திட்டத்தின் கீழ் அனைவரும் மேயர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணியினை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தார்.
கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பல நூறு கோவில்களை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட, வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம். சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இக்குளத்தில் நீராடிய பின் காஞ்சி ஏகாம்பர நாதரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம் மேலும் ஏகாம்பரநாதர் பங்குனி திருக்கல்யாண உற்சவத்தின் போது தீர்த்தவாரி நிகழ்ச்சி இங்கு நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இத்திருக்குளத்தில் நீத்தார் ஈம சடங்குகளை நடத்தி வழிபாடு செய்வது வழக்கம் மேலும் கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்கள் இதில் மிதந்துள்ளதால் பக்தர்கள் நீராட செல்வதில்லை.
இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி தன்னார்வர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியை மேயர் மகாலட்சுமி துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து என் குப்பை. என் பொறுப்பு. எனும் திட்டத்தின் கீழ் அனைவரும் மேயர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திருக்குளத்தில் மிதந்து கிடந்த கழிவுகள் மற்றும் நடைபாதைகள் இருந்த கழிவுகள் என அனைத்தையும் அகற்றும்பணியில் ஈடுபட்டனர்.
இது போன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள திருக்குளங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தி பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் தொடர்ச்சியாக செவிலிமேடு, சதாவரம் ஆகிய பகுதிகளிலும் குளங்கள் தூர் வாரப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆய்வாளர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- ஏகாம்பரநாதர் ஆலய ராஜகோபுரம் முன்பு ராஜகோபுர ஆறுமுக பெருமான் உள்ளார்.
- சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலய ராஜகோபுரம் முன்பு சுமார் 12 அடி உயரம் உள்ள ராஜகோபுர ஆறுமுக பெருமான் உள்ளார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிக்கிருத்திகையை ஒட்டி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இவ்விழாவில் காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டனர்.
- கொட்டவாக்கம் பகுதியில் வசித்து வந்த உஷா, அம்மு, சிவசங்கரி உள்ளிட்ட 9 பேரின் வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அகற்றினர்.
- கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகளை இழந்தவர்கள் கொட்டவாக்கம் கிராமத்தில் உள்ள கிராம சேவை கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் ஒன்றியம் கொட்டவாக்கம் ஊராட்சியில் கால்வாய் ஓரம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் 9 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். கடந்த 8 மாதத்துக்கு முன்பு பரந்தூர்-கம்மவார் பாளையம் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் முடிவெடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கொட்டவாக்கம் பகுதியில் வசித்து வந்த உஷா, அம்மு, சிவசங்கரி உள்ளிட்ட 9 பேரின் வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அகற்றினர்.
இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகளை இழந்தவர்கள் கொட்டவாக்கம் கிராமத்தில் உள்ள கிராம சேவை கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மாற்று இடம் அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்து இருந்தது.
ஆனால் வீடுகள் இடிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் 9 குடும்பத்தினருக்கும் இதுவரை வீடுகள் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்துடன் கிராம சேவை கட்டிடத்தில் தவித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடுகளை இழந்தவர்கள் இடிக்கப்பட்ட தங்களது வீட்டு முன்பு மாவட்ட நிர்வாகத்தையும், நெடுஞ்சாலைத்துறையினரையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து வீட்டை இழந்த சிவசங்கரி என்பவர் கூறியதாவது:-
எங்கள் வீட்டை இடித்து தள்ளியதால் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு சேவை மைய கட்டிடத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தங்கி வருகிறேன். இங்கு உள்ளவர்களை திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள் வீட்டை இழந்ததால் தங்கள் கணவரை பிரிந்து சென்று விட்டனர்.
வீடுகளை இழந்த குடும்பத்தினர் 45 பேரும் இரண்டு அறைகளில்தான் தங்கி உள்ளோம். பெண்கள் கழிவறை செல்வதற்கு கூட இடமின்றி தவித்து வருகிறோம். இங்கு சமையல் செய்யவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ போதிய வசதிகள் இல்லை.
எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் 118 -வது பேரவை கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் 118 -வது பேரவை கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது. வங்கி ஆரம்பித்து 118 ஆண்டுகளில் முதல் முறையாக 1 கோடியே 30 லட்சத்திற்கு மேல் லாபம் இந்த ஆண்டு வங்கி ஈட்டி உள்ளது. மேலும் 22 ஆண்டுகளுக்கு பிறகு 11 சதவீதம் டிவிடெண்ட் வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி வங்கி தலைவர் வி. பாலாஜிக்கு சிறந்த தலைவருக்கான விருது வழங்கப்பட்டது.
கூட்டத்தில் வங்கியின் துணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சாய்குமாரி, வங்கியின் பொது மேலாளர் ஹரி கிருஷ்ணன், துணைத் தலைவர் கணேசன், இயக்குனர்கள் சித்தாரா, லதா, ரவி, கருணாகரன், வசீகரன், மாமல்லன், தமின்அன்சாரி, நரேந்திரன், பிரேமாவதி, ரகுராமன், சுரேஷ் மற்றும் வங்கிப் பணியாளர்கள், வாடிக்கை யாளர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
- கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.
- நாம் ஒவ்வொருவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்து வமனைகளிலும் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி மாவட்டத்தில் அரசு மருத்துவ மனைகளிலும் கோவாக்சின் தடுப்பூசியும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நடமாடும் மருத்துவக் குழு மூலமாகவும் கோவிசீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசி இரண்டு தவணையாக செலுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு (96.45 %) இலக்கையே எட்டியுள்ளது.
இதுவரை 2,03,453 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர். எனவே 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கிராமம் வாரியாக ஆட்டோக்களின் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலமே நோய் எதிப்பு சக்தி முழுமையாக கிடைக்கும் . இரண்டு தவணை தடுப்பூசி போடப் பட்டிருந்தால் மட்டுமே கொரோனா மற்றும் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் மற்றும் இறப்பை தடுக்க முடியும் என இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது.
நம்முடைய குடும்பத்தினரும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க நாம் ஒவ்வொருவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும். எனவே நாளை (ஞாயிற்றுக் கிழமை) அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தபட்டுள்ள 1059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டு தற்போது உலகையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
18 முதல் 59 வயதினருக்கு ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை 75 நாட்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் தகுதியுள்ள நிரந்தர பணியாளர்கள் சேரலாம்.
- காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் உமாபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கூட்டுறவு பட்டயப் பயிற்சி முடிக்காத நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் 22-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி 2022-2023-ம் ஆண்டுக்கு தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் தகுதியுள்ள நிரந்தர பணியாளர்கள் சேரலாம்.
பயிற்சி கட்டணம் ரூ.15,050 ஆகும். விண்ணப்பத்தினை காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் நேரிடையாக ரூ.100 ரொக்கமாக மட்டுமே செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்கள் 28.7.22 தேதி வரையில் (விடுமுறை நீங்கலாக) வழங்கப்படும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 1.8.22. இதர விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 044-27237699-ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவியிடம், செங்கல்பட்டு முதலாவது நீதிமன்ற நீதிபதி ரீனா வாக்குமூலம் பெற்றார்.
- மாணவி தற்கொலைக்கு முயன்ற பள்ளியில் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி நேற்று மாலை பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவர் இடுப்பு எலும்பு முறிந்தும், விலா எலும்பு மற்றும் கால் மூட்டு பகுதிகளில் எலும்பில் விரிசல் ஏற்பட்டு படுகாயத்துடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவியிடம், செங்கல்பட்டு முதலாவது நீதிமன்ற நீதிபதி ரீனா வாக்குமூலம் பெற்றார். அப்போது வலியால் துடித்த நிலையில், நான் வீட்டில் செல்லப்பிள்ளை. பள்ளி ஆசிரியை ஒருவர் என்னை திட்டியதாலும், அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் மனமுடைந்து 2-வது மாடியில் இருந்து குதித்தேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே மாணவி தற்கொலைக்கு முயன்ற பள்ளியில் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதே போல் கல்வி அதிகாரிகளும் விசாரித்தனர்.
இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. மேலும் மாணவி எழுதி வைத்திருந்த டைரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
போலீசார் விசாரணையில், மாணவி பயிற்சி தேர்வில் பிட் அடிக்க பேப்பர் வைத்திருந்ததாகவும், அதை உடன்படிக்கும் தோழிகள் ஆசிரியையிடம் கூறியதால் ஆசிரியை கண்டித்துள்ளார். நாளை பெற்றோரை அழைத்து வரவும் கூறியதாக தெரிகிறது. இதில் மன உளைச்சல் ஏற்பட்டு வாழ்வா? சாவா? என யோசித்து கொண்டே தோழி ஒருவரிடம் இரண்டு விரல்களை காட்டி தொடும்படி கூறியுள்ளார். விரலை தொட்டவுடன் சற்றும் யோசிக்காமல் மாடியில் இருந்து குதித்து இருப்பது தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் இருக்கும் பெற்றோரிடம் இன்று மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
- கோவிலில் காணிக்கையாக செலுத்துவதற்கு வசதியாக இரு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
- உண்டியலில் தங்கம், வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். அவர்கள் கோவிலில் காணிக்கையாக செலுத்துவதற்கு வசதியாக இரு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
அவை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, கோவிலின் ஸ்ரீ காரியம் சுந்தரேசஐயர், கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு நவராத்திரி மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
இதில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். மொத்தம் ரூ. 74 லட்சத்து 40 ஆயிரத்து 102 உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைத்து இருந்தது. இதேபோல் உண்டியலில் தங்கம், வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
- கீழம்பி பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அரிசி கடத்திய வேனை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்தபோது அதில் 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டைகளில் 1.25 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வேனை ஓட்டி வந்த டிரைவர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.
- ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
- மாணவி பாக்கியலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர், திருமங்கை ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது 14). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை மாணவி பாக்கியலட்சுமி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் கழிவறைக்கு சென்ற அவர் மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பாக்கியலட்சுமியை மீட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி பாக்கியலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தனிநபர் கடன் திட்டம், மகளிருக்கான புதிய பொற்கால கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கறவை மாடு கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.
வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் 26-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், வாலாஜாபாத் 27-ந்தேதி (புதன்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர் 28-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், குன்றத்தூர் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், உத்திரமேரூரில் முகாம் நடைபெறுகிறது.
எனவே மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






