என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 81 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 கோடியே 34 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
    • காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 81 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 கோடியே 34 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதாஞானசேகரன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு துணைத்தலைவர் வசந்திகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். கடனுதவி பெற்ற அனைவரும் வாழ்வில் முன்னேற்றம் அடைந்திட வேண்டும் என்றார். இதில் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் பொன்.சசிக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பது அவசியமாகும்.
    • நல்ல தரமான நல்ல முளைப்பு திறன் உள்ள விதைகளே உயர் விளைச்சலை தரக்கூடிய விதையாகும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் விதை பரிசோதனை நிலைய அலுவலர் ராஜகிரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பது அவசியமாகும். ஏனென்றால் நல்ல தரமான நல்ல முளைப்பு திறன் உள்ள விதைகளே உயர் விளைச்சலை தரக்கூடிய விதையாகும். எனவே, விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள விதை குவியல்களில் இருந்து விதை மாதிரி எடுத்து விதைபரிசோதனை அலுவலர், விதைபரிசோதனை நிலையம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு ரூ.80 கட்டணத்துடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்
    • தொழிற்சாலைகள் தங்கள் வளாகத்திற்குள் இயன்றவரை மரக்கன்றுகளை வைக்க வேண்டும்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5 சிப்காட், 2 சிட்கோ தொழிற் பூங்கா மற்றும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுடன் இயங்கி வருகின்றன.

    அதிவேக தொழில் வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக, மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி, ஊரணிகளில் இருந்து தொழிற்சாலைகளின் நீர் தேவைகளுக்காக தண்ணீர் எடுக்கப்படுகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றது.

    கடந்த ஆண்டு அதிகபடியான மழையால் காஞ்சீபுரம் மாவட்டம் பெரும் வெள்ளத்தை சந்தித்தது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குவதற்கு இடம் மற்றும் மருத்துவ வசதிகள் தொழில் நிறுவனங்களின் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தியது.

    மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அனைத்து உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    நீர்நிலைகளை மறுசீரமைத்தல் தொடர்பான இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பேசியதாவது:-

    தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களை பயன்படுத்தவேண்டும்.

    மஞ்சப்பை போன்ற துணிப்பைகளின் பயன்பாட்டை அதிகபடுத்த வேண்டும். தொழிற்சாலைகள் தங்கள் வளாகத்திற்குள் இயன்றவரை மரக்கன்றுகளை வைத்து பசுமைபோர்வையை அதிகப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையில் உருவாகும் திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி முறையாக கையாளவேண்டும்.

    தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையின் அருகில் உள்ள குடியிருப்புகளில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியகொடியை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். தொழிற்சாலைகள் அருகில் உள்ள நீர் நிலைகளை புதுப்பித்து பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் இருந்த பொருட்களும் நொறுக்கப்பட்டு இருந்தது.
    • மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.

    போரூர்:

    மதுரவாயல், பாரதிநகர், 3-வது தெருவில் வசித்து வருபவர் கருணாநிதி பாண்டே. எலக்ட்ரீசியன். இவரது சொந்த ஊர் உத்தர பிரதேச மாநிலம் ஆகும்.

    இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் கருணாநிதி பாண்டே திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவும் உடைக்கபட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் நொறுக்கப்பட்டு இருந்தது.

    வீட்டில் நகை-பணம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பொருட்களை நொறுக்கி சூறையாடிவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆகாஷ் என்கிற விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சகோதரி நடத்தும் காய்கறி கடையில் வேலை செய்து வந்தார்.
    • ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைகைப்பற்றி விசாரணை.

    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ்(வயது35). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சகோதரி நடத்தும் காய்கறி கடையில் வேலை செய்து வந்தார்.

    அவர் அதே பகுதி மகாத்மா காந்தி தெருவில் 3-வது மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்தார். தினமும் அதிகாலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க ஏசுதாஸ் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை ஏசுதாஸ் மார்க்கெட்டுக்கு செல்ல வில்லை. இதையடுத்து அவரது செல்போனுக்கு சகோதரி தொடர்பு கொண்டபோது எடுக்க வில்லை. சந்தேகம் அடைந்த அவர் அருகில் வசிக்கும் ஒருவரிடம் தெரிவித்து ஏசுதாசை பார்க்குமாறு கூறினார்.

    அப்போது ஏசுதாஸ் வீட்டின் முன்பு இறந்து கிடப்பது தெரிந்தது. அவரது மூக்கு, காதில் இருந்து ரத்தம் வழிந்து இருந்தது.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைகைப்பற்றி விசாரணை நடத்தினர். ஏசுதாசின் முகத்தில் காயங்கள் இருப்பதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    நேற்று இரவு ஏசுதாசுக்கும் சிலருக்கும் இடையே பெண் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    எனவே மோதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அவரை அடித்து கொன்று வீட்டின் 3 வது மாடியில் இருந்து வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    • சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நேற்று இரவு 10 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதேபோல் இன்று காலை வரை கன மழை கொட்டியது. ஓரிக்கை, விலிமேடு, மாகரல், தாமல், பாலுசெட்டி சத்திரம், பரந்தூர், ராஜகுளம், வாலாஜாபாத், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    • விவசாய பெருமக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
    • கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற ஜூலை 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுனர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    இக்கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் இணையவழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் அரசு அறிவுரையின்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகலை காண்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்த ராஜேஷ், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
    • ரமேஷிடம் கொடுப்பதற்காக ரசாயனம் தடவிய பணத்தை ராஜேஷிடம் கொடுத்து அனுப்பியதுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). இவர் தனக்கு சொந்தமான நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக உத்தண்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் (51) என்பவரை அணுகினார்.

    அப்போது அவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ராஜேஷிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்த ராஜேஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து ரமேஷிடம் கொடுப்பதற்காக ரசாயனம் தடவிய பணத்தை ராஜேஷிடம் கொடுத்து அனுப்பியதுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தனர்.

    இந்த நிலையில், பணத்தை ரமேஷ் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். லஞ்சம் வாங்கியது தொடர்பாக ரமேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எஸ்.பி.ஜி. உயா் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆலோசித்தனர்.
    • பழைய விமான நிலையத்துக்கு முறையான அனுமதி இன்றி யாரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருவதால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை மறுநாள்(வியாழக்கிழமை) குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்.பி.ஜி. குழுவைச் சேர்ந்த 60 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்து உள்ளனா்.

    இந்த சிறப்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், பிரதமரின் ஹெலிகாப்டா் தரை இறங்கும் அடையாறு ஐ.என்.எஸ். தளம் ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

    மேலும் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எஸ்.பி.ஜி. உயா் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆலோசித்தனர். இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான பாதுகாப்பு படை, விமான நிலைய உயா் அதிகாரிகள், சென்னை மாநகர உயா் போலீஸ் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

    இந்த கூட்டத்தில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் சென்னை விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் ஓய்வறையில் சுமார் முக்கால் மணி நேரம் தங்குகின்றார். பிரதமரை வரவேற்க எத்தனை பேருக்கு பாஸ்கள் வழங்குவது?. அவரை சந்திப்பதற்கு யாருக்கெல்லாம் அனுமதி கொடுப்பது? போன்றவைகளும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து பிரதமர் புறப்பட்டு செல்லும் வரை சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக அதிகரிக்கப்படுகிறது.

    அதன்படி சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பழைய விமான நிலையத்துக்கு முறையான அனுமதி இன்றி யாரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பழைய விமான நிலைய வளாகத்தில் காா்கோ, கொரியா், வெளிநாட்டு அஞ்சலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களில் தற்காலிக பணியாளா்களுக்கு அனுமதி இல்லை. நிரந்தர ஊழியா்கள் முறையான அனுமதி பெற்று உரிய அடையாள அட்டையை அணிந்து கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் பழைய விமான நிலைய பகுதிகளில் ஓடுபாதை பராமரிப்பு பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளா்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலைய நிரந்தர பணியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என கூறப்பட்டு உள்ளது.

    இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற 29-ந் தேதி மாலை வரை அமலில் இருக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 3,552 காலிப்பணியிடங்களக்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்காக காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி பதிவு செய்தவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


    • பொன்னேரி அண்ணா சிலை அருகில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வினை திரும்ப பெற கோரியும், சொத்து வரி உயர்வினை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, மின்கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், மதனந்தபுரம் பழனி, கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, தும்பவனம் ஜீவானந்தம், ஜெயராஜ், திலக் குமார், படு நெல்லி தயாளன், கரூர் மாணிக்கம், வாலாஜாபாத் ஹரிகுமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி அண்ணா சிலை அருகில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன் ராஜா, விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், கோபால் நாயுடு, முத்துக்குமார் நகர செயலாளர் செல்வகுமார், பட்டாபி, எஸ்.டி.டி.ரவி, பா. சங்கர், கவுன்சிலர்கள் சுமித்ரா குமார், பானு பிரசாத், கிருஷ்ணா பிரியா வினோத், செந்தில் குமார், ஸ்ரீதர், டிசி மகேந்திரன், கோளுர் குமார், எம் எஸ் எஸ் சரவணன், மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி. வி.ரமணா தலைமை தாங்கினார். இதில் மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளைக்கழக திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. கனிதாசம்பத், மாவட்ட துணை செயலாளர் ப.தன்சிங் , என்.சி.கிருஷ்ணன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சாந்தகுமார், பகுதி செயலாளர்கள் ஜெயபிரகாஷ், அப்பு வெங்கடேசன், மோகன் கோபிநாதன் ,எல்லார் செழியன், கூத்தன் ஜெகன் வழக்கறிஞர் சதீஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1059 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 2159 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

    திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 17 லட்சத்து 86 ஆயிரத்து 973 (94.6 சதவீதம்) பேருக்கும், இரண்டாம் தவணை 15 லட்சத்து 27 ஆயிரத்து 565 (80.9 சதவீதம்) பேருக்கும் என மொத்தம் 33 லட்சத்து14 ஆயிரத்து 538 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இன்று மாவட்டத்தில் மொத்தம் 1100 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் கூறும்போது, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், பெரிய வணிக வளாகங்கள், சிறு தொழில் கூடங்கள் உணவகங்கள் மற்றும் தொழிற்நுட்ப கூடங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை மற்றும் முன்எச்சரிக்கை தவணைக்கான தகுதி வாய்ந்த நபர்கள் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1059 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    ×