என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • அஸ்தினாபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர்கள் பாலாஜி,லோகேஷ், விக்டர்.
    • பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அஸ்தினாபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர்கள் பாலாஜி,லோகேஷ், விக்டர். இவர்கள் 3 பேரும் பள்ளிக்கரணை அடுத்த நன்மங்கலம் பகுதியில் உள்ள பிரியாணி ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த 10 பேர் கும்பல் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி உள்பட 3 பேருக்கும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலிகிராமம் அருணாசலம் சாலையில் பிரபல நிறுவனத்தின் ஓட்டல் உள்ளது.
    • கைதான சிவகுமார் ஏற்கனவே சாலிகிராமத்தில் உள்ள ஓட்டலில் பணியில் இருந்து இருக்கிறார்.

    போரூர்:

    சாலிகிராமம் அருணாசலம் சாலையில் பிரபல நிறுவனத்தின் ஓட்டல் உள்ளது. இங்கு கடந்த மாதம் 24-ந் தேதி பணப்பெட்டியுடன் ரூ.54 ஆயிரம் ரொக்கம் மற்றும் கண்காணிப்பு கேமிரா பதிவு கருவிகள் கொள்ளை போனது.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ், சப்- இன்ஸ்பெக்டர் இளம்வழுதி, ஏட்டு ராஜ்மோகன், கேசவன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்த போது அதே நிறுவனத்தில் முகப்பேர் கிளையில் மேலாளராக வேலை பார்த்துவரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவகுமார், மற்றும் அவரது நண்பரான கார் டிரைவர் ராசுக்குட்டி என்கிற ராஜி ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான சிவகுமார் ஏற்கனவே சாலிகிராமத்தில் உள்ள ஓட்டலில் பணியில் இருந்து இருக்கிறார்.

    அப்போது தன்னிடம் இருந்த கடையின் ஷட்டர் மற்றும் முன்பக்க கண்ணாடி கதவுக்கான சாவிகளுக்கு கள்ளச்சாவி தயாரித்து நண்பருடன் சேர்ந்து பணம் இருந்த லாக்கரை தூக்கி சென்று உள்ளார்.

    வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.3 லட்சம் வரை விற்பனை பணம் இருக்கும் என்று திட்டமிட்டு கொள்ளை திட்டத்தை அரங்கேற்றினார்.

    ஆனால் கொள்ளை நடந்த அன்று ஆன்-லைன் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் அதிக அளவில் விற்பனை நடந்ததால் ரூ.54ஆயிரம் மட்டுமே லாக்கரில் இருந்ததால் ஏமாற்றம் அடைந்ததாக சிவக்குமார் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

    • உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்
    • வீட்டில் இருந்த சுலோச்சனா திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது91).இவரது மனைவி சுலோச்சனா(80). இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவர்.

    இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். மகனுடன் ஆறுமுகமும், சுலோச்சனாவும் வசித்து வந்தனர்.

    வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாகவே ஆறுமுகத்திற்கு உடல் நிலைபாதிக்கப்பட்டது. அவர் அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.சில நாட்களாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். அவரை மனைவி சுலோச்சனா மற்றும் மகன்கள், மருமகள்கள் கவனித்து வந்தனர்.

    சுலோச்சனா அவ்வப்போது கணவரிடம், உங்களுக்கு முன்பாக நான் இறைவனிடம் சென்றடைய வேண்டும். நீங்கள் இல்லாத உலகத்தில் நான் இருக்க கூடாது என்று ஆறுமுகத்திடம் கூறி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த சுலோச்சனா திடீரென மயங்கி கீழே விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டபோது சுலோச்சனா இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து உறவினர்களுக்கு தெரிவித்து சுலோச்சனாவின் உடலை அடக்கம் செய்வதற்காக இறுதி சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே மனைவி சுலோச்சனா இறந்து விட்டார் என்று தகவலை ஆறுமுகத்திடம் உறவினர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ஆறுமுகம் மயங்கினார். சிறிது நேரத்தில் அவரும் இறந்து போனார். மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆறுமுகத்தின் உயிரும் பிரிந்துவிட்டது. சாவிலும் ஆசிரியர் தம்பதி இணைபிரியாமல் இருந்ததை கண்டு உறவினர்கள் உணர்ச்சி மிகுதியால் அழுதனர்.

    இதைத்தொடர்ந்து ஆறுமுகம்-சுலோச்சனா தம்பதியின் உடல்களுக்கு சேர்ந்த்தே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது ஒன்றாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மானாம்பதி சுடுகாட்டில் இருவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பம்மல், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் ஆட்டோ டிரைவர்.
    • மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பம்மல், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(36). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு 11மணி அளவில் மதுரவாயல் அடுத்த போரூர் கார்டன் வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3பேர் கும்பல் பாஸ்கரை வழி மறித்து கத்தியால் வெட்டி அவரது செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    சின்ன நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் நிகில்(32) பிரபல தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவர் இன்று காலை 7மணி அளவில் மதுரவாயல் ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுகாக காத்து நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நிகிலின் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
    • கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    போரூர்:

    சாலிகிராமம் காவேரி ரங்கன் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ். சாப்ட்வேர் என்ஜினீயர்.

    இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து பீரோ லாக்கரில் இருந்த 25பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்று விட்டனர்.

    நேற்று மாலை சுரேஷ் வீட்டுக்கு வந்தபோது நகை-பணம் கொள்ளை போனது தெரிந்தது.

    பால்கனி ஜன்னல் வழியாக புகுந்த கொள்ளையர்கள் நூதனமான முறையில் கைவரிசை காட்டி நகை பணத்தை சுருட்டி தப்பி இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • தங்கம் கடத்தல் தொடர்பாக பிடிபட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி 4.20 கிலோ தங்கத்தை இலங்கைக்கு கடத்த மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.30 கோடி ஆகும்.

    தங்கம் கடத்தல் தொடர்பாக பிடிபட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரிஞ்சம்பாக்கம் மெயின் ரோட்டில் சுமார் 25 அடி உயரத்தில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது.
    • செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரிய வில்லை.

    ஸ்ரீபெரும்புதூர்:

    படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள கூழாங்கள்சேரி பகுதி, பேரிஞ்சம்பாக்கம் மெயின் ரோட்டில் சுமார் 25 அடி உயரத்தில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது.

    இதில் சுமார் 25வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சோமங்களம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரிய வில்லை.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் படப்பை, சோமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தையும் சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.

    • இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடம்பாடியில் இருந்து பூஞ்சேரியில் உள்ள போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
    • உயிருக்கு போராடிய பலராமனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரியை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 51). கடம்பாடியை சேர்ந்த வர்பலராமன்(45). இவர்கள் இருவரும் மின்சார வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தனர்.

    அவர்களுக்கு "செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தின் மின் வழித்தட பகுதிகளை கண்காணிக்கும் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடம்பாடியில் இருந்து பூஞ்சேரியில் உள்ள போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டு இருந்தபோது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மின் ஊழியர்கள் ஆனந்தன், பலராமன் ஆகிய 2 பேரும் தலையில் பலத்த காயம் அடைந்தனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தன் பரிதாபமாக பலியானார். உயிருக்கு போராடிய பலராமனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலராமனும் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகளின் கோரிக்கையை ஏற்று பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் நாளை முதல் வாரத்தில் 7 நாட்களும் விமான சேவை இயங்கும்.
    • லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை வந்து சேரும்.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமானம் என்பதால் இந்த விமானத்தில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த விமானத்தில் டிக்கெட் கிடைக்க பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். சென்னையில் இருந்து லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்துக்கு செல்லும் இந்த விமானம் பாரிஸ், ரோம், வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இணைப்பு விமானமாக செயல்பட்டு வருகிறது.

    எனவே பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இந்த விமானத்தை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

    பயணிகளின் கோரிக்கையை ஏற்று பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் நாளை (திங்கட்கிழமை) முதல் வாரத்தில் 7 நாட்களும் விமான சேவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை வந்து சேரும். பின்னர் இங்கிருந்து அதிகாலை 5.31 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விமானத்தின் பயண நேரம் சுமார் 13 மணி நேரம் ஆகும்.

    இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும், வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து லண்டனுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுவதால் சென்னைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரிக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தீனதயாள் உபாத்தியாய கிராம ஜோதி யோஜான திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சீரான மின் விநியோகம்
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் 26,230 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், நமது பாரத நாட்டின் 75-வது சுதந்திரதின அமுத பெருவிழாவினை முன்னிட்டு, "ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி @ 2047" நிகழ்ச்சியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

    இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம்.. இப்பெரு விழாவினை முன்னிட்டு ஜூலை 25 முதல் 30 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் @ 2047 என்ற நிகழ்ச்சி எல்லா பகுதியிலும் கொண்டாடி வருகிறது. தீனதயாள் உபாத்தியாய கிராம ஜோதி யோஜான (Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana Scheme) திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க பயன்பெறும் திட்டமாகும்.

    மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் இதர பயன்பாட்டிற்கும் தடையில்லா மின்சாரம் வழங்கும் இத்திட்டத்தின் கீழ் கிராமத்தில் மின் விநியோக பயன்பாட்டிற்காக, நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.34.83 கோடி மதிப்பில் 2 புதிய 33 KV துணை மின் நிலையங்கள் காஞ்சிபுரம் மற்றும் திருமுக்கூடல் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 26,230 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். மேலும், இதே திட்டத்தின் மூலம் மாகரல், பெருநகர், பரந்தூர் மற்றும் நெல்வாய் ஆகிய 4 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 36,333 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

    ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் (Integrated Power Development Scheme) கீழ் உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் 2 புதிய 33 KV துணை மின் நிலையங்கள் ரூ.30.46 கோடி மதிப்பில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் 43,081 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் மா.சுதாகர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, கூடுதல் தலைமை பொறியாளர் கி.சண்முகம், மாவட்ட நோடல் அலுவலர் அகஸ்டின் ரேமண்ட் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • சுங்குவார்சத்திரம் போலீசார் திருமங்கலம் ஊராட்சியில் சோதனை மேற்கொண்டனர்.
    • ஸ்ரீதர் என்வரிடம் சோதனை செய்ததில் 10 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த திருமங்கலம் ஊராட்சியில் கள்ளச் சந்தையில் மர்மநபர்கள் மது விற்பதாக சுங்குவார் சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் திருமங்கலம் ஊராட்சியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஏரிக்கரை அருகே ஒரு நபர் திருட்டுத்தனமாக மது விற்றுக் கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் திருமங்கலம் ஊராட்சி, பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 42) என்பதும் அவரிடம் சோதனை செய்ததில் 10 மது பாட்டில்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.
    • போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 42). கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (27). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஆரம்பாக்கம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பாலசுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

    இவர்கள் வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வளைவில் திரும்பிய போது ஒரகடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சாலமங்கலம் பகுதியை சேர்ந்த அஸ்வின் குமார் (25) சென்று கொண்டிருந்தார். இவரது மோட்டார் சைக்கிள் பாலசுப்பிரமணியன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கும் அஸ்வின் குமாரை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

    விக்னேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×