என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆசிரியர் தம்பதி சுலோச்சனா, ஆறுமுகம்
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு- இறப்பிலும் இணைபிரியாத ஆசிரியர் தம்பதி
- உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்
- வீட்டில் இருந்த சுலோச்சனா திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது91).இவரது மனைவி சுலோச்சனா(80). இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவர்.
இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். மகனுடன் ஆறுமுகமும், சுலோச்சனாவும் வசித்து வந்தனர்.
வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாகவே ஆறுமுகத்திற்கு உடல் நிலைபாதிக்கப்பட்டது. அவர் அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.சில நாட்களாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். அவரை மனைவி சுலோச்சனா மற்றும் மகன்கள், மருமகள்கள் கவனித்து வந்தனர்.
சுலோச்சனா அவ்வப்போது கணவரிடம், உங்களுக்கு முன்பாக நான் இறைவனிடம் சென்றடைய வேண்டும். நீங்கள் இல்லாத உலகத்தில் நான் இருக்க கூடாது என்று ஆறுமுகத்திடம் கூறி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த சுலோச்சனா திடீரென மயங்கி கீழே விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டபோது சுலோச்சனா இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து உறவினர்களுக்கு தெரிவித்து சுலோச்சனாவின் உடலை அடக்கம் செய்வதற்காக இறுதி சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையே மனைவி சுலோச்சனா இறந்து விட்டார் என்று தகவலை ஆறுமுகத்திடம் உறவினர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ஆறுமுகம் மயங்கினார். சிறிது நேரத்தில் அவரும் இறந்து போனார். மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆறுமுகத்தின் உயிரும் பிரிந்துவிட்டது. சாவிலும் ஆசிரியர் தம்பதி இணைபிரியாமல் இருந்ததை கண்டு உறவினர்கள் உணர்ச்சி மிகுதியால் அழுதனர்.
இதைத்தொடர்ந்து ஆறுமுகம்-சுலோச்சனா தம்பதியின் உடல்களுக்கு சேர்ந்த்தே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது ஒன்றாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மானாம்பதி சுடுகாட்டில் இருவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






