என் மலர்tooltip icon

    ஈரோடு

    சிறைக்குள் இருந்த 2 கைதிகளுக்கு கொரோனா தொற்று எப்படி? ஏற்பட்டது என்று சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் மாவட்ட சிறை சாலை உள்ளது. இங்கு ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் சிறையில் இருந்த கைதிகள் பாலயோகி, ரஞ்சித்குமார் ஆகிய 2 பேர் கடந்த சில நாட்களாக உடல் நிலைபாதிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    2 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர்கள் தங்கிருந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சிறைக்குள் இருந்த 2 கைதிகளுக்கு கொரோனா தொற்று எப்படி? ஏற்பட்டது என்று சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 124 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 466 பேருக்கு பரிசோதனை செய்ததில், 109 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 995 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 124 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 97 ஆயிரத்து 68 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 660 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 1,267 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    பவானிசாகர்:

    தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீர் பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.

    இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,984 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் தண்ணீர் வரத்து 4,883 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு வினாடிக்கு 422 கன அடி தண்ணீரும், உபரி நீராக வினாடிக்கு 4,368 கன அடி தண்ணீரும் சேர்த்து பவானி ஆற்றில் மொத்தம் வினாடிக்கு 4,790 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
    பிளஸ் 2 மாணவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு வெண்டிபாளையத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் கொல்லம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து கொல்லம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு 4 பேர் 2 ஸ்கூட்டர்களில் வந்தனர். அவர்கள் அந்த மாணவரிடம் செல்போன் கேட்டு தகராறு செய்தனர். அவர் செல்போனை கொடுக்க மறுத்ததால், அவர்கள் அந்த மாணவரை சோடா பாட்டிலால் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மாணவரை தாக்கியது 18 வயதுடைய கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 4 பேர் என்பது தெரியவந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, பவானி ஆற்றுக்கு 3390 கன அடி என மொத்தம் 3 ஆயிரத்து 890 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் தொடர்ந்து இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வந்தவுடன் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக பவானி ஆற்றில் திறந்து விடப்படும்.

    அதன்படி கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து அந்தப் பகுதியில் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நீலகிரி மலைப்பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3928 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, பவானி ஆற்றுக்கு 3390 கன அடி என மொத்தம் 3 ஆயிரத்து 890 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் வினாடிக்கு 2390 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    சத்தியமங்கலம்:

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நீர்வரத்து கணிசமாக இருப்பதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பவானி சாகர் அணையில் நீர்மட்டம் குறையாமல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 102 அடியை எட்டியது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2936 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் வினாடிக்கு 2390 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் காலிங்கராயன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பவானி சாகர் அணைக்கு இன்று காலை முதல் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், அதே அளவில் தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாலும் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பவானி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள தொட்டம்பாளையம், முடுக்கன் துறை, சத்தியமங்கலம் அக்ரகாரம், பவானி ஈஸ்வரன் கோவில், சதுமுகை, கொமாரபாளையம், கொடிவேரி ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க சத்தியமங்கலம் நகராட்சி, பவானி சாகர் பேரூராட்சி சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கொடிவேரி அணையில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
    கடத்தூர்:

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 102 அடியை எட்டி உள்ளது. இதனால் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையொட்டி கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கொடிவேரி அணையில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இந்த தடை உத்தரவை அறியாமல் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அங்கு உள்ள மீன் கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரின் சீற்றம் குறைந்த பிறகே குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்’ என்று கூறினர்.
    சென்னிமலை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே கொம்மக்கோவில் காலனி பகுதியை சேர்ந்தவர் மாதன். இவருடைய மகன் ஞானசேகரன் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சென்னிமலை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் ஞானசேகரன் சிறுமியை திருமணம் செய்த தகவல் அந்த பகுதியில் பரவியது. மேலும் இதுபற்றி ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு (சைல்டு லைன்) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கொம்மக்கோவில் பகுதிக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியை அறச்சலூர் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் நல விடுதியில் தங்க வைத்தனர். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. பாதுகாப்பு கருதி அணையில் 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.

    இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்ததால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தொடர்ந்து அணை நீர்மட்டம் 100 அடியிலேயே இருந்து வந்தது.

    நீலகிரி மலைப்பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்ததால் கடந்த சில தினங்களுக்கு முன் பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 102 அடியில் நீடித்து வருகிறது. நேற்று அணைக்கு 2,800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1028 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 440 கன அடியும் என மொத்தம் 940 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ரெயில் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஊஞ்சலூருக்கும், கொடுமுடிக்கும் இடையே செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் பெண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், இறந்து கிடந்தவர் ஊஞ்சலூர் அருகே உள்ள வெங்கம்பூர் கொள்ளுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த நல்லமுத்துவின் மனைவி வசந்தா (வயது 55) என்பதும், காது சரியாக கேட்காத அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அங்கு வந்த ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வசந்தாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாணவி பலாத்கார வழக்கில் ஈரோட்டை சேர்ந்த பூபதி என்ற வாலிபரை கர்நாடக மாநில தனிப்படை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
    தாளவாடி:

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த 20 வயது மாணவி கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவர் தன்னுடன் படித்த ஒரு மாணவரை காதலித்து வந்தார்.

    சம்பவத்தன்று காதலர்கள் 2 பேரும் காரில் காரில் மைசூர் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா என்ற பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் காதலனை கடுமையாக தாக்கி கட்டி போட்டனர்.

    பின்னர் கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    ஆபத்தான நிலையில் கிடந்த கல்லூரி மாணவியை அவரது காதலன் மீட்டு மைசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மருத்துவனை தரப்பில் ஆலனஹல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த போலீசார் மாணவி மற்றும் அவரது காதலனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாலியல் கும்பலை சேர்ந்தவர் தமிழில் பேசியதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே மைசூர் மற்றும் அதனை சுற்றி உள்ள தமிழக எல்லையை சேர்ந்த சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரம் பகுதியை சேர்ந்த பூபதி (28) என்ற வாலிபரை இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநில தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்து அழைத்து சென்றனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை பற்றிய தகவல்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



    வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், இந்த 3 நாட்களுக்கு மட்டும் கோவில்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், இந்த 3 நாட்களுக்கு மட்டும் கோவில்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கோபி கொண்டத்துக்காளியம்மன் கோவில், ஈரோடு ஈஸ்வரன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று நடைகள் சாத்தப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

    இதனால் சாமி கும்பிட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு சில பக்தர்கள், கோவில் வெளியே நின்று சாமி கும்பிட்டு விளக்கேற்றி வழிபட்டனர். இதன் காரணமாக நேற்று முக்கிய கோவில்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ×