என் மலர்tooltip icon

    ஈரோடு

    இரவுநேர ஊரடங்கு காரணமாக ஈரோடு ஜவுளி சந்தையில் இன்று வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    இரவுநேர ஊரடங்கு காரணமாக ஈரோடு ஜவுளி சந்தையில் இன்று வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஈரோடு பன்னீர்செல்வம்பார்க்கில் ஜவுளிசந்தை இயங்கி வருகிறது. இங்கு தினசரி கடைகளும், வாரசந்தையும் நடந்து வருகிறது. வாரச்சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெரும். 

    இந்த வாரசந்தையில் மகாராஷ்டிரா ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். 

    இங்கு சாதாரணநாட்களை விட விசேஷ நாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும். இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

    இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

    இந்நிலையில் இன்று ஜவுளிசந்தை கூடியது. இரவுநேர ஊரடங்கு மற்றும் தைப்பூசம் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. 

    இதனால் மொத்த வியாபாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்று வெறும் 5 சதவீதம் அளவுக்கு மட்டுமே மொத்த வியாபாரம் நடைபெற்றது. 

    இதைப்போல் உள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் கடந்த வாரத்தை விட குறைவாகவே நடைபெற்றது.
    ஈரோட்டில் இன்று தைப்பூச விழா எளிமையான முறையில் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று தைப்பூச விழா எளிமையான முறையில் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

    சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூசவிழா கட்டுப்பாடுகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த-து. இதையொட்டி தைப்பூச விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி முருகனுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    கோவிலில் இன்று நடக்க வேண்டிய தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தைப்பூசத்திருவிழா சென்னிமலை நகரில் உள்ள கிழக்குராஜாவீதி கைலாசநாதர்கோவிலில் நேற்று இரவு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 

    தைப்பூச நாளான இன்று அதிகாலை 4 மணி அளவில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெற்றது. 

    அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கைலாசநாதர் கோவிலில் உள்பிரகாரத்தில் சாமிஉலா நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

    ஈரோடு அடுத்த திண்டல்மலை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூசவிழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் வழக்கம் போல் இன்று காலை முருகனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனைதிரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். 

    ஆனால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோவில் நுழைவுவாயில் அடைக்கப்பட்டு அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு கோட்டை முத்துகுமாரசாமி மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    ஆனால் திண்டல்மலை முருகன் கோவிலுக்கு இன்று அதிகாலை ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் நடைபாதையாக  வந்தனர். அவர்கள் கோவில் அடைக்கப்பட்டு இருந்ததால்  அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நின்று கற்பூரம் ஏற்றி சாமிதரிசனம் செய்தனர். மேலும் கோவில் மலை அடிவாரம் படிகாட்டுகளில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். 

    காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்ற முருக பக்தர்கள்.

    மேலும் பலர் பால்குடம் எடுத்து வந்தனர்.   கோபி அருகே உள்ள பச்சமலை, பவளமலை முருகன் கோவில், பார்க் ரோடு முருகன் கோவில், கருங்கல்பாளையம் சுப்பிரமணியசாமி கோவில், ஈரோடு காசிபாளையம் மலைமலேசிய முருகன் கோவில், கோட்டை முத்துகுமாரசாமி கோவில், முனிசிபல் பாலமுருகன் கோவில், பவானி பழனியாண்டவர் கோவில் உள்பட அனைத்து  முருகன் கோவில்களிலும் இன்று காலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் குமரன்கோவில் வீதியை சேர்ந்தவர் ரவி. இவர் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி தமிழ் அமுது (வயது 15) என்ற மகளும், தமிழ்வாணன் என்ற மகனும் உள்ளனர். தமிழ் அமுது அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்த வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழ் அமுது வீட்டில் இருந்த மாத்திரையை எடுத்து சாப்பிட்டார். இது குறித்து மாணவியிடம் அவரது தந்தை ரவி கேட்டார். அப்போது எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் மாத்திரை சாப்பிட்டதாக கூறினார். இதை தொடர்ந்து தமிழ் அமுது பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீரென வீட்டின் பின்புறம் ஓடிச்சென்று அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவர் அலறி துடித்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை ரவி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இதில் தமிழ் அமுது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். தமிழ் அமுதுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் டி.என்.பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து கோபி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ் அமுது பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோபி நகராட்சி பொதுபிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில்  கோபி நகராட்சி பொதுபிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் தலைவர் பதவி, ஆண், பெண், பொது மற்றும் ஜாதிய சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்து நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி, ஈரோடு மாநகராட்சி பொது - பெண்ணுக்கும், சத்தியமங்கலம் மற்றும் பவானி ஆகிய நகராட்சிகள் பொது -பெண்ணுக்கும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி எஸ்.சி., -பொது என ஒதுக்கீடு செய்துள்ளனர்.

    இம்மாவட்டத்தில் உள்ள கோபி நகராட்சி இதுவரை பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு  இருந்ததால், வரும் தேர்தலில் பொதுவாக மாற்றப்பட்டுள்ளது. இதில், ஆண், பெண் என யாரும் போட்டியிடலாம்.

    அதுபோல, இம்மாவட்டத்தில் உள்ள, 42 பேரூராட்சியில், கிளாம்பாடி பேரூராட்சி எஸ்.சி., பெண் என ஒதுக்கீடு செய்துள்ளனர்.

    மேலும், பாசூர், கூகலு£ர், அவல்பூந்துறை, வெங்கம்பூர், கொடுமுடி, காஞ்சிகோவில், காசிபாளையம் - கோபி, எலத்தூர், சிவகிரி, நசியனு£ர், அரியப்பம்பாளையம், பெத்தாம்பாளையம், சென்னிமலை, மொடக்குறிச்சி, நல்லாம்பட்டி, வடுகப்பட்டி, சித்தோடு, பள்ளபாளையம், அத்தாணி, லக்கம்பட்டி, ஆப்பக்கூடல் என, 21 பேரூராட்சிகள் பொது - பெண் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    மற்றவை பொது என்ற பட்டியலில் இடம் பெறும். இதனால் ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
    கோபி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    கோபி:

    கோபி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டர் சட்டம்  பாய்ந்தது.

    கரூர் மாவட்டம்  பெருக்கிபாளையம் அடுத்த ஏலூரை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற ராஜா (வயது 44).

    இவர் கடந்த வருடம் கோபியில் உள்ள திருமண மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடியுள்ளார். இதைப்போல் கோபி மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று உள்ளார். 

    கோபியில் உள்ள ஒரு வீட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த பணத்தையும் திருடியுள்ளார். 

    இவ்வாறாக கோபி போலீஸ் நிலையத்தில் மட்டும் 3 வழக்குகளும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.  

    இந்நிலையில் கோபி போலீசார் ஆறுமுகம் என்கிற ராஜாவை கைது செய்து கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். 

    இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவதால் இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு பரிந்துரை செய்தார். 

    அதன்பேரில் நேற்று இரவு ஆறுமுகம் என்கிற ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க கலெக்டர்  கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.

    இதனையடுத்து போலீசார் இதற்கான உத்தரவு நகலை கோபி போலீசாரிடம் வழங்கினர்.
    ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது.

    ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு ஈரோடு மாவட்டம் தாளவாடி, அந்தியூர், கொடுமுடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கர்நாடகா மாநிலத்தின் பல பகுதி, கோவை, நீலகிரி போன்ற பகுதியில் இருந்து காய்கறி வரத்தாகும். 

    பொங்கல்பண்டிகை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் காய்கறி அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

    இதனால் காய்கறி வரத்து சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறி விலை திடீரென உயர்ந்துள்ளது.

    இது இதுகுறித்து காய்கறி மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

    ஊட்டியில் இருந்து வர வேண்டிய கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தைக்கு மட்டும், கேரட் 200 கிலோ வரத்தாகும். ஆனால் நேற்று, 118 கிலோ மட்டும் வந்தது. 

    நேற்று முன்தினம் ஒரு கிலோ, 75 ரூபாய்க்கு விற்கப்பட்டு, நேற்று, 85-க்கு விற்கப்பட்டது. தாளவாடியில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால், நேற்று முன்தினம் ஒரு கிலோ 26 ரூபாய்க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.35-க்கு விற்பனையானது.

    சின்னவெங்காயம், பெரியவெங்காயம், மிளகாய், பீட்ரூட், கோஸ், காளிபிளவர் போன்றவை மிகக்குறைவாகவே வரத்தானதால், கிலோவுக்கு 10 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.

    கொத்துமல்லி, கறிவேப்பிலை, கீரைவகைகள் போன்றவை சில மூட்டைகள் மட்டுமே வந்தது.

    இன்று அல்லது நாளை முதல் வரத்து அதிக ரிக்கும் என்றும், அதன்பின் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசியை இன்னும் 2 லட்சத்து 98 ஆயிரத்து 382 பேர் செலுத்தி கொள்ளவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் மூலம் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் பெரும்பாலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் போடப்பட்டு வருகிறது. இது தவிர 18 கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று, இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.

    மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 5 ஆயிரத்து 936 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 88.77 சதவீதமாகும்.

    இதேப்போல் கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 11 லட்சத்து 76 ஆயிரத்து 538 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 65.03 சதவீதமாகும்.

    முதல் மற்றும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியை மொத்தம் இதுவரை 27 லட்சத்து 82 ஆயிரத்து 474 பேர் செலுத்திக்கொண்டு உள்ளனர். மாவட்டத்தில் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 3 ஆயிரத்து 164 பேர் செலுத்தி கொள்ளவில்லை. அதைப்போல் இரண்டாம் தவணை தடுப்பூசியை இன்னும் 2 லட்சத்து 98 ஆயிரத்து 382 பேர் செலுத்தி கொள்ளவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போலீசார் அனைவரும் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளதால் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள், போலீசார் பலர் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இத்துடன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் சேர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி முதல் கொரோனா தினசரி மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 613 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 300 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் போலீஸ்காரர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டருக்கு கடந்த சில தினங்களாக சளி தொந்தரவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    இதேப் போல் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு திடீரென சளி தொந்தரவு ஏற்பட்டது. இதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    கடம்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர், முதல் நிலை காவலர், பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் ஏட்டு, என 3 பேருக்கும் சளி காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவர்கள் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் 3 பேரும் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கருமாண்டி செல்லி பாளையம் பேரூராட்சி ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்தனர்.

    கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போலீசார் அனைவரும் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளதால் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. லேசான அறிகுறிதான் ஏற்பட்டது உள்ளது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வருகிறது. 

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு என்ற இடத்தில் 215 ஏக்கர் பரப்பளவில் இந்த பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது.  இந்த பறவைகள் சரணாலயம் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.
     
    இந்த சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளுக்கான சீசன் காலமாகும். 

    இந்த காலகட்டத்தில் பெலிகான், கொசுஉல்லான், வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீர்காகம், சிறிய நீர்காகம், பாம்புதாரா, சாம்பல்நாரை, வெண்மார்பு மீன்கொத்திபறவை, ஜெம்புகோரி உள்ளிட்ட பல்வேறு பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கிறது.

    இதில் கூழைகெடா ரக பறவை ஆஸ்திரேலியாவில் இருந்தும் கொசுஉல்லான் பறவை சைபீரியாவில் இருந்தும் வருகிறது. 

    மேலும்  இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பறவைகள் ஆண்டுதோறும் சீசன் கால கட்டத்தில் இங்கு வந்து செல்லும். 

    இந்த பறவைகளை காண்பதற்காக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சேலம், கோவை, நாமக்கல், கரூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வருவார்கள். 

    மேலும் வெளிநாட்டு பயணிகளும் அதிகளவில் வருவார்கள். தினமும் காலை முதல் மாலை வரை பறவைகள் சரணாலயத்தை காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் கொரோனாதாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

    இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. 

    மேலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என  அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சரணாலயம் முன்பு அறிவிப்பு பலகையும் வனத்துறை சார்பில் வைக் கப்பட்டுள்ளது.
    கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் குளித்த போது தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பிணமாக மீட்கப்பட்டார்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் குளித்த போது தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பிணமாக மீட்கப்பட்டார்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பிள்ளையார் கோவில்வீதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52). மாற்றுத்திறனாளி. இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். 

    ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று சோழம்மாதேவி கரை தடப்பள்ளி வாய்க்காலில் ஒருவர் இறந்து கிடப்பதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் காசிபாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பதும், அவர் வாய்க்காலில் இறங்கி குளிக்கும்போது தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்புநடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனாபாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்புநடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனாபாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    கடந்த 7-ந் தேதி 103, 8-ந் 131, 9-ந் தேதி 149, 10-ந் தேதி 123, 11-ந் தேதி 242, 12-ந் தேதி 330, 13-ந் தேதி 410, 14-ந் தேதி 355, 15-ந் தேதி 542 என கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதியஉச்சமாக 570 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 10 நாட்களாக மாவட்டத்தில் 2 ஆயிரத்து 955 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 151 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 796 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 714 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 2,389 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தினசரி பாதிப்பு இருந்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணி க்கையும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் மொத்த பாதிப்பில் மாநகர் பகுதியில் தான் 50 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்னமும் பொதுமக்கள் வெளியே வரும்போது முககவசம் அணியாமல் வருகின்றனர். 

    ஒரு சிலர் முககவசம் அணிந்து வந்தாலும் அவற்றை முறையாக அணியாமல் வாய், மூக்கு தெரியும்படி கழுத்தில் தொங்க விட்டு வருகின்றனர். 

    அதிகாரிகள் பார்த்தால் மட்டும் முககவசத்தை முறையாக அணிகின்றனர். இதேப்போல் பொதுஇடங்களில் சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகியுள்ளது. 

    பொங்கல் பண்டிகையையொட்டி கடைவீதிகளில் மக்கள்கூட்டம் கூட்டமாக சென்றதை காண முடிந்தது.  இதுபோன்ற அலட்சியதால் மாவட்டத்தில் கொரோனாபாதிப்பு மேலும் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி மது விற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி மது விற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் கடந்த  2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. எனினும் தடையை மீறி ஒரு சில இடங்களில் மது விற்பனை நடைபெற்றது.
     
    தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசாருடன் இணைந்து மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  

    நேற்று முன்தினம் தடையை மீறி மது விற்ற 29 பேர் கைது செய்யப்பட்டனர். 390- க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதைதொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது மாவட்டம் முழுவதும் தடையை மீறி மது விற்றதாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். மொத்தம் 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ×