search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஈரோட்டில் 2 இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசாருக்கு கொரோனா

    கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போலீசார் அனைவரும் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளதால் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள், போலீசார் பலர் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இத்துடன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் சேர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி முதல் கொரோனா தினசரி மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 613 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 300 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் போலீஸ்காரர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டருக்கு கடந்த சில தினங்களாக சளி தொந்தரவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    இதேப் போல் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு திடீரென சளி தொந்தரவு ஏற்பட்டது. இதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    கடம்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர், முதல் நிலை காவலர், பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் ஏட்டு, என 3 பேருக்கும் சளி காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவர்கள் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் 3 பேரும் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கருமாண்டி செல்லி பாளையம் பேரூராட்சி ஊழியர்கள் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்தனர்.

    கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போலீசார் அனைவரும் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளதால் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. லேசான அறிகுறிதான் ஏற்பட்டது உள்ளது.

    Next Story
    ×