என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பவானிசாகர் அணையின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர அணையின் மூலம் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் விளங்கி வருகிறது. அங்கு மழைப்பொழிவு இருந்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும்.
கடந்த ஆண்டில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால் 2 முறை அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. அதிகபட்சமாக கடந்த நவம்பர் மாதம் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்கியது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது.
இதற்கிடையே கடந்த 25-ந்தேதியுடன் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.80 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 331 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி பாசனத்துக்கு 800 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 100 கனஅடியும் என மொத்தம் 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டத்தில் போலீசார், வருவாய்த்துறையினர் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஒன்றிணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இருப்பினும் பலர் முககவசம் அணியாமல் வந்தனர். இதையடுத்து முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அரசு அறிவித்தது. ஈரோடு மாவட்டத்தில் ரூ.500-க்கான ரசீது புத்தகம் வராததால் போலீசார் அபராதம் விதிக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் ரூ.500-க்கான அபராத ரசீது புத்தகம் ஈரோடுக்கு வந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் இந்த ரசீது புத்தகம் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் போலீசார் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.
மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், காளை மாடு சிலை, பஸ் நிலையம் அருகே என மக்கள் கூடும் இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதித்தனர்.
இதேப்போல் கோபி, பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்யமங்கலம், கொடுமுடி மொடக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 40 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதன் மூலம் ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதுபோல் முககவசம் அணியாமல் வந்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. காய்ச்சல், சளி, தலைவலி, உடல் சோர்வு போன்றவை அதிகமாக ஏற்படுகிறது. முன்கள பணியாளர்களான போலீசையையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 2 இன்ஸ்பெக்டர் உள்பட 30 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு லேசான அறிகுறியே இருந்ததால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டனர்.
இந்நிலையில் கருங்கல்பாளையத்தில் பணியாற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லேசான அறிகுறி என்பதால் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
தடுப்பு நடவடிக்கையாக கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்கள் போலீஸ் நிலையத்திற்கு வெளியே இருந்து வாங்கப்பட்டு வருகிறது.






