search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது .
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது . 

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி முதல் தினசரி பாதிப்பு  ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 

    குறிப்பாக மாநகராட்சி பகுதியில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பில் 60 சதவீதம் மாநகராட்சி பகுதியில் பதிவாகி வந்தது.

    இதனால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு லேசான அறிகுறியே இருப்பதால் அவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

    இதையடுத்து முககவசம் அணியாமல் வருபவர்கள், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

    மாநகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 1,800 முதல் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

    இது போன்ற தடுப்பு நடவடிக்கையால் தற்போது மாநகர் பகுதியில் கொரோனா தினசரி தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. இதற்கு மாறாக தற்போது கிராமப்புறங்களில்  கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக ஒரே நாளில் 1302 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 73 கூடுதலாகும்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது. 

    நேற்று ஒரே நாளில் 901 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 680 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 722 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 7, 734 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றைய தினசரி பாதிப்பில் மாநகர் பகுதியில் மட்டும் 356 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பாதிப்புகள் அனைத்தும் கிராமப்புறப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. 

    மாநகர் பகுதியில் தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கிராமப் புறங்களில் தற்போது பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

    இதற்கு முக்கிய காரணம் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காதது தான். 

    இப்பவும் கிராமப்புறங்களில் பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. பெண்கள் தெருவில் உள்ள கடைக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்வதில்லை. 

    பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் கிராமப்புறங்களில் அதிகரித்து வருகிறது.

    மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சளி, இருமல், காய்ச்சல் , தலைவலி உடல் சோர்வு போன்ற பாதிப்புடன் மக்கள் அதிக அளவில் சென்ற வண்ணம் உள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல், தலைவலி பரவி வருகிறது. 

    குழந்தைகள், முதியவர்கள் வீட்டில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×