என் மலர்tooltip icon

    ஈரோடு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி ஈரோடு மாவட்டத்தில் 52 இடங்களில் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.
    ஈரோடு,:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 52 இடங்களில் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, 4  நகராட்சி, 42  பேரூராட்சிகளில்  வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.  ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிட  வேட்புமனு தாக்கல் செய்ய  4 மண்டல அலுவலகங்கள்,  மாநகராட்சி அலுவலகம் மைய கட்டிடம்,  வீரப்பன் சத்திரம் பழைய  அலுவலகம் என 6  இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

    மேலும் 4  நகராட்சிகளில் போட்டியிட வேட்பு மனுவை  அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

    இதேபோல் 42 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிட வேட்பு மனுவை அந் தந்த பேரூராட்சி அலுவலகங்களில் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக  வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 கார்கள் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. 

    கொரோனா பரவல் காரணமாக வேட்பாளரின் ஆதரவாளர்கள் 200 மீட்டருக்கு முன்பு தடுத்து நிறுத்தப்படுவார்கள். 

    இதேபோல் முக கவசம் அணிந்தே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. அலுவலகத்துக்கு உள்ளே நுழைவாயிலில் வேட்பாளர்களின் கையில் சனிடைசர் தெளிக்கப்பட்டன. தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
    பெருந்துறை அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (46). இவர் தனது மனைவி வனிதா மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

    மகேஸ்வரன் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். 

    வழக்கம்போல் காலை வேலைக்கு வந்த மகேஸ்வரன் மதியம் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து இருக்கும் போது மயக்கம் வருவதாக தெரிவித்தார். 

    உடனடியாக உடன் பணிபுரியும் மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர் மனைவி வனிதாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனைக்கு வந்து வனிதா பார்த்த போது மகேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

    இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மசுதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருள் கொண்டு செல்லப்படுகிறதா? என பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    ஈரோடு:

    நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருள் கொண்டு செல்லப்படுகிறதா? என பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம்,  புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகள் உள்ளது. இதில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு அடுத்த மாதம் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 443 வாக்கு சாவடி மையங்களும், 4 நகராட்சிகளில் 153 வாக்குச்சாவடி மையங்கள், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.   

    மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நகர்ப்புற தேர்தல் அட்டவணை வெளியான உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 

    வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 66 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளதாகவும், பறக்கும் படையினர் சுழற்சி முறைகளில் பணியாற்ற உள்ளதாகவும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். 

    பறக்கும் படையினர் இன்று முதல் தங்களது சோதனைகளை மேற்கொண்டு வருகி ன்றனர். மாநகராட்சியின் முக்கியமான பகுதிகள், மாவட்டம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் பறக்கும் படையினர்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், ஜவுளி வியாபாரிகள் தினமும் பல்வேறு மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவு பணத்தைக் கொண்டு வருவது வழக்கம். 

    தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு தகுந்த ஆவணங்களை பறக்கும் படையினரிடம் காட்ட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை 2 மணி அளவில் வாகன சோதனை செய்தனர்.

    அப்போது காய்கறி ஏற்றிக் கொண்டு 2 பிக்கப் வேன் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த பிக்கப் வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அதை ஓட்டி வந்தவர்கள் மைசூரில் இருந்து கோவைக்கு காய்கறி ஏற்றிச் செல்வதாக தெரிவித்தனர்.

    அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் காய்கறி லோடை திறந்து பார்த்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 2 டன் அளவுக்கு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த பிரசன்னா (30), சுதாகர் (30) என்று தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் புகையிலை பொருட்களை மைசூரில் இருந்து கோவைக்கு காய்கறி லோடில் மறைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் 2 பிக்கப் வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் கோவைக்கு யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
    ஈரோடு:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதற்காக நாளை (28-ந்தேதி) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் போட்டியிடுபவர்கள் மாநகராட்சி மைய அலுவலகம், வீரப்பன் சத்திரம் அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

    தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    மாநகராட்சி 3-வது மண்டலத்துக்குட்பட்ட மீனாட்சிசுந்தரம் சாலை, ஜி.எச்.ரவுண்டானா, ஈ.வி.என்.ரோடு, சூரம்பட்டி நால்ரோடு, ஆசிரியர் காலனி, பெருந்துறை ரோடு ஆகிய பகுதிகளில் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் அரசியல் கட்சியினர் சுவரொட்டிகளை அப்புறப்படுத்தினர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    தேர்தல் தொடர்பான விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சியினருக்கும் விளக்கும் வகையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்தும், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும் விளக்கப்படும். அதன் பின்னர் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றனர்.
    முதல்வரின் முகவரி புத்தகத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 78 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    முதல்வரின் முகவரி புத்தகத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 78 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவற்றின் மூலமாகப் பெறப்படும் மனுக்கள் கடந்த 4 மாதங்களாக ‘முதல்வரின் முகவரி’ எனும் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    அந்தந்த மாவட்டங்களில் பெறப்படும் மனுக்களும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு முதல்வரின் தனிப்பிரிவால் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து, ஈரோடு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை கலெக்டர் குமரன் கூறியதாவது:& 

    “முதல்வரின் தனிப்பிரிவு, ஈரோடு கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம், வேளாண் குறைதீர் கூட்டம், அமைச் சர்கள் மூலமாகப் பெறும் மனுக்கள் அனைத்தும் ”முதல்வரின் முகவரி” திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    ஒரே மனுவை பல முறை வழங்குவது, தகுதி அற்றவை போன்ற காரணத்தால் சில மனுக்கள் நிராகரிக்கப்படும்.  மற்ற மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படுகிறது.

    இதுதவிர, வளர்ச்சித் திட்டப் பணிகள், சாலை அமைத்தல், உதவித்தொகை பெறுதல், போலீஸ் நடவடிக்கை போன்றவை ஏற்கப்பட்டு அந்தந்தத் துறை மூலமாக நடவடிக்கைக்கு அனுப்படுகின்றன. 

    அந்த மனுக்களும் தீர்வு காணப்படும் வரை மாவட்டத்தில் மட்டுமின்றி முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகள் வரை கண்காணிப்படுகின்றன.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பெறப்பட்ட 78 ஆயிரத்து 308 மனுக்களில் 28 ஆயிரத்து 591 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

    குறிப்பிட்ட கால அவகாசம், நிதி மற்றும் திட்ட அனுமதி போன்ற காரணங்களால் 13 ஆயிரத்து 98 மனுக்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளது.

    உரிய தகுதியுடன் ஏற்கப்பட்ட 35 ஆயிரத்து 314 மனுக்கள் மீது அந்தந்த துறை மூலமாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

    அனைத்து மனுக்களும் “முதல்வரின் முகவரி” திட்டத்தின் கீழ் பதிவேற்றம் செய்யப்படுவதால், மனு தவறிவிட்டது, இல்லை என்பது போன்ற காரணங்களுக்கு இடமின்றி தகுதி உடைய அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு நேர ஊரடங்கை மீறி சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

    அதன்படி இரவு நேர ஊரடங்கை மீறி சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதேபோல் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டத்தில் போலீசார், வருவாய்த்துறையினர் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதாரப் பணி யாளர்கள் ஒன்றிணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அரசு அறிவித்தது.

    ஈரோடு மாவட் டத்தில் நேற்று முன்தினம் முதல் போலீசார் பொது இடங்களில் முககவசம் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வந்த 10 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பொது இடங்களில் சமூக இடை வெளியை கடைப்பிடிக்காத 20 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
    மீனவர்கள் முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டையில் கோரிக்கை எழுதி தபால்பெட்டியில் போட்டனர்.
    கவுந்தப்பாடி:

    மீனவர்கள் முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டையில் கோரிக்கை எழுதி தபால்பெட்டியில் போட்டனர்.

    கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் அனத்தசாகரம் ஏரி 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது மிகவும் பழமையான ஏரி ஆகும். இந்த ஏரி கவுந்தப்பாடி- ஆப்பக்கூடல் மெயின் ரோட்டிலேயே அமைந்துள்ளது.

    வருடம் முழுவதும் நீர் நிரம்பிவழியும் இந்த ஏரிக்கு கவுந்தப்பாடி ஓடைப்பள்ளம், சலங்கபாளையம், தடப்பள்ளி கடை மடை பகுதி இதன் நீர் ஆதாரமாக உள்ளது. 

    ஆண்டு தோறும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மழை காலங்களில் ஏரியில் நீர் நிரம்பிவழியும். கோடைகாலத்தில் சுற்று வட்டார விவசாய பூமியின் நீர் ஆதாரமாக உள்ள கிணறுகள் வற்றாமல் காத்து வருகிறது.

    இதன் இன்னொரு சிறப்பு மீன் வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவையான மீனுக்கென்று சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கி செல்கின்றனர். மீனவர்கள் சங்கம் அமைத்து அதன் மூலம் மீனைபிடித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்த ஏரியில் மீனவர் சங்கங்கள் மீன் பிடிக்கும் உரிமையை ரத்து செய்ததால் மீனவர்கள்  தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    இதனையடுத்து ஏரி மீனவர் சங்கதலைவர் அய்யம் பெருமாள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் கோரிக்கையை அஞ்சல் அட்டையில் எழுதி முதல்-அமைச்சருக்கு அனுப்பும் போராட்டதை நடத்தினர்.  

    பின்னர் கோரிக்கை அடங்கிய அஞ்சல் அட்டையுடன் ஏரிக்கரை வழியாக சென்று அங்கு அமைந்துள்ள தபால் பெட்டியில் போட்டனர்.
    நம்பியூர் அருகே இன்று காலைசாலை பணியின்போது பழுதான குடிநீர் குழாயை சீரமைத்துதர கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
    நம்பியூர்:

    நம்பியூர் அருகே இன்று காலைசாலை பணியின்போது பழுதான குடிநீர் குழாயை சீரமைத்துதர கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

    நம்பியூர் அருகே உள்ளது கோசனம் பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்துக்குட்பட்ட கே.மேட்டுப்பாளையம் என்ற ஊரில் திட்டமலை-கே.மேட்டுப்பாளையம் வரை உள்ள தார்சாலை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணியின்போது ஊருக்குள் செல்லும் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

    இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பழுதான குடிநீர் குழாயை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை குழாய் உடைப்பு சரிசெய்யப்பட வில்லை.

    இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஏராள மான ஆண்கள், பெண்கள் இன்று காலை திரண்டு வந்து கோபிசெட்டிபாளையம்- நம்பியூர் ரோடு கே.மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் செய்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த பஸ் மற்றும் வாகனங்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. இதுபற்றி தெரிய வந்ததும் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
    16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு:

    16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காடப் பாளையத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 25). தொழிலாளி. 

    இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வெற்றிவேல் நெருங்கி பழகி வந்துள்ளார்.

    இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கட்டாய திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் வெற்றிவேலை எச்சரித்து, சிறுமியை மீட்டு இருவரையும் பிரித்து வைத்தனர். 

    இந்நிலையில் வெற்றிவேல் சிறுமியை  சந்தித்து நாம் சேர்ந்து வாழலாம் என ஆசை வார்த்தை கூறி  பெருந்துறை அருகே திருவேங்கடம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் வசித்து வந்தனர். 

    அப்போது, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் சிறுமி 4 மாதம் கர்ப்பம் அடைந்தார்.

    இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வெற்றிவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர். 

    பின்னர் வெற்றிவேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 735 பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 735 பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. 

    கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வந்தது. 

    இதற்காக வார்டு வரையறை பணிகள் நடந்து முடிந்தன. அதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்ததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. 

    ஆனால் நகர்ப்புற தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
     
    அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4-ந் தேதி  வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 

    5-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 7-ந் தேதி வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் ஆகும். 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு, முதல் கூட்டம் மார்ச் மாதம் 2-ந் தேதியும், மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு  மறைமுக தேர்தல் 4-ந் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தல் நடத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளும், நகராட்சிகளை பொருத்தவரை  பவானியில் 27 வார்டுகள், கோபிசெட்டிபாளையத்தில் 30 வார்டுகள், புளியம்பட்டியில் 18 வார்டுகள், சத்தியமங்கலத்தில் 27 வார்டுகள் என 102 வார்டுகள் உள்ளன.

    பேரூராட்சிகளைப் பொறுத்தவரை கருமாண்டி செல்லிபாளையம், அந்தியூர், சிவகிரியில் தலா 18 வார்டுகள், அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், அரச்சலூர், அரியப்பம்பாளையம், அத்தாணி அவல்பூந்துறை பவானிசாகர், சென்னசமுத்திரம், சென்னிமலை, சித்தோடு, எலத்தூர், காஞ்சிகோவில், காசிபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், கிளாம்பாடி, கொடுமுடி கொளப்பலூர் கொல்லன் கோவில், கூகலூர், லக்கம்பட்டி, மொடக்குறிச்சி, நசியனூர், நெருஞ்சிப்பேட்டை, ஒலகடம், பி.மேட்டுப்பாளையம், பெரியகொடிவேரி, பெருந்துறை, பெத்தாம்பாளையம், சலங்கபாளையம், வடுகப்பட்டி, வாணிப்புதூர், வெள்ளோட்டம்பரப்பு, வெங்கம்பூரில் தலா 15 வார்டுகள், நல்லாம்பட்டி, பாசூர், ஊஞ்சலூரில் தலா 12 வார்டுகள் என மொத்தம் 573 வார்டுகள் என மொத்தம் 735 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

    அதன்படி 4 மண்டல அலுவலகம், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், வீரப்பன்சத்திரம் அலுவலகம் ஆகிய இடங்களில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

    கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோபியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள் ளனர்.  

    உதவி தேர்தல் அலுவலர்களாக நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியம், துப்புரவு அலுவலர் சோலராஜ், நகராட்சி உதவி பொறியாளர் ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். 

    1-வது வார்டு முதல் 10-வது வார்டு வரை நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியம், 11 முதல் 20 வரை துப்புரவு அலுவலர் சோலராஜ், 21 முதல் 30 வரை நகராட்சி உதவி பொறியாளர் ராஜேஷ் ஆகியோரிடம் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பவானி, புளியம்பட்டி, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகங்களில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேப்போல் 42 பேரூராட்சி  அலுவலகங்களில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-வது வாரமாக பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 13500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-வது வாரமாக பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 13500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
     
    முதல் கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், 2 கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

    தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 7,500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

    சிறப்பு முகாம்கள் நடத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2-வது வாரமாக மாநிலம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 76 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. 

    இந்த சிறப்பு முகாமில் 13,500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
    ×