என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ஈரோடு மாவட்டத்தில் 735 பதவிகளுக்கு தேர்தல்-நாளை வேட்புமனுத்தாக்கல்
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 735 பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 735 பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது.
கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வந்தது.
இதற்காக வார்டு வரையறை பணிகள் நடந்து முடிந்தன. அதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்ததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் நகர்ப்புற தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.
5-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 7-ந் தேதி வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் ஆகும். 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு, முதல் கூட்டம் மார்ச் மாதம் 2-ந் தேதியும், மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் 4-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தல் நடத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளும், நகராட்சிகளை பொருத்தவரை பவானியில் 27 வார்டுகள், கோபிசெட்டிபாளையத்தில் 30 வார்டுகள், புளியம்பட்டியில் 18 வார்டுகள், சத்தியமங்கலத்தில் 27 வார்டுகள் என 102 வார்டுகள் உள்ளன.
பேரூராட்சிகளைப் பொறுத்தவரை கருமாண்டி செல்லிபாளையம், அந்தியூர், சிவகிரியில் தலா 18 வார்டுகள், அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், அரச்சலூர், அரியப்பம்பாளையம், அத்தாணி அவல்பூந்துறை பவானிசாகர், சென்னசமுத்திரம், சென்னிமலை, சித்தோடு, எலத்தூர், காஞ்சிகோவில், காசிபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், கிளாம்பாடி, கொடுமுடி கொளப்பலூர் கொல்லன் கோவில், கூகலூர், லக்கம்பட்டி, மொடக்குறிச்சி, நசியனூர், நெருஞ்சிப்பேட்டை, ஒலகடம், பி.மேட்டுப்பாளையம், பெரியகொடிவேரி, பெருந்துறை, பெத்தாம்பாளையம், சலங்கபாளையம், வடுகப்பட்டி, வாணிப்புதூர், வெள்ளோட்டம்பரப்பு, வெங்கம்பூரில் தலா 15 வார்டுகள், நல்லாம்பட்டி, பாசூர், ஊஞ்சலூரில் தலா 12 வார்டுகள் என மொத்தம் 573 வார்டுகள் என மொத்தம் 735 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி 4 மண்டல அலுவலகம், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், வீரப்பன்சத்திரம் அலுவலகம் ஆகிய இடங்களில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோபியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள் ளனர்.
உதவி தேர்தல் அலுவலர்களாக நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியம், துப்புரவு அலுவலர் சோலராஜ், நகராட்சி உதவி பொறியாளர் ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
1-வது வார்டு முதல் 10-வது வார்டு வரை நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியம், 11 முதல் 20 வரை துப்புரவு அலுவலர் சோலராஜ், 21 முதல் 30 வரை நகராட்சி உதவி பொறியாளர் ராஜேஷ் ஆகியோரிடம் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பவானி, புளியம்பட்டி, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகங்களில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேப்போல் 42 பேரூராட்சி அலுவலகங்களில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
Next Story






