என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருள் கொண்டு செல்லப்படுகிறதா? என பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஈரோடு:
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருள் கொண்டு செல்லப்படுகிறதா? என பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகள் உள்ளது. இதில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு அடுத்த மாதம் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 443 வாக்கு சாவடி மையங்களும், 4 நகராட்சிகளில் 153 வாக்குச்சாவடி மையங்கள், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகர்ப்புற தேர்தல் அட்டவணை வெளியான உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 66 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளதாகவும், பறக்கும் படையினர் சுழற்சி முறைகளில் பணியாற்ற உள்ளதாகவும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
பறக்கும் படையினர் இன்று முதல் தங்களது சோதனைகளை மேற்கொண்டு வருகி ன்றனர். மாநகராட்சியின் முக்கியமான பகுதிகள், மாவட்டம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், ஜவுளி வியாபாரிகள் தினமும் பல்வேறு மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவு பணத்தைக் கொண்டு வருவது வழக்கம்.
தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு தகுந்த ஆவணங்களை பறக்கும் படையினரிடம் காட்ட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
Next Story






