என் மலர்tooltip icon

    ஈரோடு

    குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது

    சத்தியமங்கலம்:

    குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது

    பவானி சாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கருர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 

    மேலும் இந்த அணையின் மூலம் ஏராளமான குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 மாதத்துக்கும் மேலாக  அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. 

    ஆனாலும் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. 

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 89.96 அடியாக இருந்தது. 

    அணைக்கு வினாடிக்கு 1042 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு 200 கனஅடியும், காலிங்கராயன்  வாய்க்காலில் 500 கனஅடியும்,  கீழ்பவானி வாய்க்காலில் 2380 கனஅடி என மொத்தம் 3080 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பெருந்துறைஅருகே சமையல் செய்த போது வீட்டில் தீ பிடித்து 27 மூட்டை பருத்தி, கடலை, தீவனங்கள் எரிந்து சேதமானது.
    பெந்துறை:

    பெருந்துறைஅருகே  சமையல் செய்த போது வீட்டில்  தீ பிடித்து 27 மூட்டை பருத்தி, கடலை, தீவனங்கள் எரிந்து சேதமானது.

    பெருந்துறை அடுத்த திங்களூர் கருக்குபாளையம் ஆவாரங்காடு  பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது வீடு சிமெண்ட் சீட்டாலானது. 

    நேற்று இரவு 9மணியளவில் தனலட்சுமி தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள குடிசையில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென தீப் பொறி குடிசையில் பட்டு தீ மளமளவென எரிய தொடங்கியது. 

    தொடர்ந்து வீடு முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதையடுத்து அருகில் இருந்த 

    பொதுமக்கள் ஓடிவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

    ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

    சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். ஆனாலும் தீ பிடித்ததில் வீடு முற்றிலுமாக எரிந்தது. 

    இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 20 மூட்டை பருத்தி, 2 மூட்டை கடலை, 5 மூட்டை மாட்டு தீவனங்கள், மின் மோட்டார் மற்றும் ரு.5 ஆயிரம் பணம் ஆகியவை எரிந்து சேதமானது. 

    இந்த தீ விபத்து குறித்து போலீசாரும் விசாரணை  நடத்தி வருகிறார்கள்.
    கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயிலில் செல்போன் பேசியபடி பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
    ஈரோடு:

    நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (31). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.

    இவர் நேற்று காலை கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயிலில் நெல்லைக்கு புறப்பட்டார். ரெயில் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அடுத்த கொளாநல்லி என்ற பகுதியில் சென்றது.

    அப்போது பரமசிவன் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு செல்போனில் பேசியபடி பயணம் செய்தார். அப்போது திடீரென அவர் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தெரிய வந்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பலியான பரமசிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பரமசிவனின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    கோபி:

    சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள அழகம் பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழி லாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    அதே நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்தார். இதில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

    இதையடுத்து தங்கராஜ் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தங்கராஜ் அடிக்கடி குடித்து விட்டு வந்து அந்த சிறுமியிடம் தகராறு செய்து வந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப் போது சிறுமி உரிய திருமண வயது அடைய வில்லை என தெரிய வந்தது.

    இதையடுத்து சைல்டு லைன் அமைப்பினர் கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து சிறுமி யின் உறவினர்கள் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தனர்.

     இது குறித்து போலீசார் தங்கராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரை ஈரோடு  மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத் தனர்.

    ஈரோட்டில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு கொத்துக்காரர் வீதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (28). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன் தூங்கி கொண்டிருந்தார்.அதிகாலை இவரது வீட்டில் புகுந்த நபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் போன் ஆகிய வற்றை திருடிக்கொண்டு தப்பி ஓடினார். 

     இதை கவனித்த யோகே ஸ்வரன் உறவினர்களுடன் அந்த நபரை துரத்தி சென்றார். ஈரோடு பஸ் நிலையம் அருகே அந்த நபரை மடக்கி பிடித்தனர்.  பின்னர் யோகேஸ்வரன், அந்த நபரை டவுன் போலீசில் ஒப்படைத்தார். 

     போலீஸ் விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த ரவி என்ற மாட்டுரவி (வயது36) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர்.  

    மேலும் விசாரணையில் ரவி மீது திருச்சி, கரூர் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் வீடு களில் புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து செல்போன் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

    பின்னர் ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    டி.என்.பாளையம் அருகே வன விலங்குகளை பிடிக்க வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே வன விலங்குகளை பிடிக்க வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாப்புதூர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார்(27), இவர் தனது தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாட்டை தோட்டத்தின் அருகேயுள்ள வனப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விட்டுள்ளார், 

    சிறிது நேரத்தில் ஏதோ வெடிப்பு சத்தமும் அதைத்தொடர்ந்து மாடு பயங்கரமாக அலறும் சத்தமும் கேட்டு உள்ளது.

    உடனே மதன்குமார் மாடு மேய்ந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது மாட்டின் தாடை கிழிந்து ரத்தம் கொட்டி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    இது குறித்து மதன்குமார் பங்களாப்புதூர் போலீசார், டி.என்.பாளையம் வனத்துத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசாரின் விசாரணையில் சத்தியமங்கலம் அருகேயுள்ள கொண்டப்பநாய்க்கன் பாளையத்தை சேர்ந்த மகேஷ்வரன்(37), பங்களாப்புதூர் அருகே யுள்ள எருமைக்குட்டையை சேர்ந்த நடராஜ்(59) ஆகிய இருவரும் தான் நாட்டு வெடிகுண்டை வனப்பகுதிக்குள் வைத்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து இருவரையும் பிடிக்க பங்களாப்புதூர் சப்&இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் அண்ணாநகர் பகுதிக்கு சென்றனர், போலீசாரை கண்டதும் மகேஷ்வரனும், நடராஜனும், தப்பியோட முயன்றனர். 

    அவர்களை போலீசார் விரட்டிச்சென்ற போது, கையில் வைத்து இருந்த பையில் இருந்த நாட்டு வெடிகுண்டை காண்பித்து அருகில் வந்தால் நாட்டு வெடிகுண்டை வீசி விடுவோம் எனக்கூறி மிரட்டி உள்ளனர்.

    அதைத்தொடர்ந்து போலீசார் துணிச்சலுடன் இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த பையை பிடுங்கி பார்த்தபோது, அதில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக 38 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து மகேஸ்வரன், நடராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது தடை செய்யப்பட்ட  வெடிபொருளை கொண்டு செல்லுதல், சட்டவிரோதமாக வெடி பொருள் வைத்து இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் வீட்டிலேயே தயார் செய்த விவரமும் தெரிய வந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் அவர்கள் கூறியதாவது:&

    காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக பயன்படுத்த, நாட்டு வெடிகுண்டுகளை, பட்டாசு மருந்து, வெங்கச்சாங்கல் மைதா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வீட்டிலேயே தயார் செய்து வனப்பகுதியில் ஆங்காங்கே போட்டு விடுவோம். 

    கிழங்கு போன்ற உணவு என நினைத்து வனவிலங்குகள் வாயில் கடிக்கும்போது நாட்டு வெடிகுண்டு வெடித்து இறந்து விட்ட பிறகு இறைச்சியை விற்பனை செய்து பணத்தை பிரித்து கொள்வோம் என்று போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

    இதனையடுத்து, மகேஸ்வரன் மற்றும் நடராஜ் இருவரையும் பங்களாப்புதூர் போலீசார் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி வனவிலங்குகளை வேட்டையாடி வரும் சம்பவம் வனஆர்வலர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டு வெடிகுண்டு கடித்த பசுமாடு உயிருக்கு போராடி வருகிறது.
    நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள தடப்பள்ளி& அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் தற்போது நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது, ஒவ்வொரு அறுவடையின் போதும் முன்னதாகவே அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பே அறுவடை தொடங்கப்பட்ட நிலையில் ஓரிரு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படாமல் உள்ளது. 

    அதன் ஒரு பகுதியாக டி.என்.பாளையம் அருகேயுள்ள ஏளூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் கடந்த 7&ந் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஏளூர், இந்திராநகர், நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வயலில் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் மையம் முன்பு உள்ள இடத்தில் குவியலாக குவித்து வைத்துள்ளனர். 

    ஆனால் இதுவரை நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்படவில்லை.  இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது,

    கடந்த 5 நாட்களாக அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து விட்டு இரவு நேரங்களில் காவல் இருக்க வேண்டிய நிலை உள்ளது. மழை பெய்தால் நெல் அணைத்து வீணாகிவிடும். எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இதனால் உடனடியாக நெல் கொள் முதல் மையத்தை திறக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தற்போது கூடுதலாக நெல் கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளதால் அதற்கேற்ப பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். உடனடியாக நெல் கொள்முதல் மையம் திறக்கப்படும் என்றனர்.

    விவசாயிகளிடம் மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட மின் வாரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னிமலையில் விவசாய சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சென்னிமலை:

    விவசாயிகளிடம் மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட மின் வாரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னிமலையில் விவசாய சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.செ.கந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஜிதேந்திரன், அம்மாபாளையம்- பசுவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தங்கராஜ், பசுவபட்டி ஊராட்சி தலைவர் எம்.சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் எஸ்.பொன்னுசாமி வரவேற்றார். கோரிக்கைகள் குறித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கி.வே.பொன்னையன் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முத்துசாமி, சி.எம்.துளசிமணி, சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமை யாளர்கள் சங்க தலைவர் பொன்.ஈஸ்வரமூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் எஸ்.சின்னுசாமி மற்றும் கே.ஆர்.தங்கராஜ் (கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு), கே.ரவி (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), அ.செல்வராசு (புரட்சிகர இளைஞர் முன்னணி) உள்பட பலர் கலந்து கொண்டு ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுத்தி பேசினார்கள்.

    பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மும்முனை மின்சாரம் வேண்டி விண்ணப்பம் கொடுத்து விட்டு நீண்ட காலம் தவியாய் தவிக்கும் விவசாயிகளின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

     இந்த சிறப்புமிகு திட்டத்தை சீர்குலைக்கும் மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வருவாய்துறையில் வாரிசு சான்றிதழ், பட்டா வழங்குதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கும் அதிகாரிகள் பணம் பெறுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் இது போன்ற ஊழல்களை எதிர்த்து மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், பனியம்பள்ளி முன்னாள் ஊராட்சி தலைவர் பி.சிவக்குமார், அனைத்து வணிகர் சங்கங்களின் மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் உதயம் செல்வம், சென்னிமலை நிர்வாகிகள் ஏ.ரமேஷ், எம்.ஏ.அன்பழகன், ஈஸ்வரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மு.பாரதி நன்றி கூறினார்.
    பெருந்துறையில் மோட்டார் சைக்கிள் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    பெருந்துறை,:

    பெருந்துறையில் மோட்டார் சைக்கிள் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெருந்துறை அடுத்துள்ள நரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன் (வயது 28). இவர் பெருந்துறையில் உள்ள வருவாய் வட்டா ட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று  தரணிதரன் இரவு 9 மணி அளவில் தனது  மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ரோட்டின் ஓரம் மோட்டார் சைக்கிளை  சாவியுடன் நிறுத்திவிட்டு செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது தரணிதரன் பின்னால் வந்த வாலிபர் களில்  ஒரு வாலிபர் திடீரென மோட்டார்சைக்கிளை திருடி சென்றார். உடனே தரணிதரன் அவர்களுக்கு பின்னால் ஓடிச்சென்றும் பிடிக்க முடியவில்லை.

    இதனையடுத்து தனது நண்பர்களுக்கு போன் செய்து அவர்களை வர வைத்து அவர்கள் உதவியுடன் தேடிப்பார்த்தார். எனினும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதனையடுத்து  பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெருந்துறை சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ஈரோட்டில் இன்று 434 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று 434 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுகாதா ரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

    அதன்படி வாரந்தோறும் சனிக்கிழமை மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடத்தப் பட்டு வருகிறது. இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காலை 9 மணி முதல் தடுப்பூசி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.  அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 434 மையங் களில் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது.

    18 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோர், முன் களப்பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் இன்று 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. 

    இதில் 66 வாகனங்கள், 1,736 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    அப்துல்அ‌ஷரப் முகமது ரஹீம் மற்றும் அவரது தம்பி ஆகியோர் 2 தவணைகளில் வங்கி மூலம் சென்னிமலையில் உள்ள ஜவுளி நிறுவனத்திற்கு ரூ.41 லட்சம் பணம் அனுப்பி உள்ளனர்.
    சென்னிமலை:

    இலங்கையை சேர்ந்தவர் அப்துல்அ‌ஷரப் முகமது ரஹீம். இவர் தமிழ்நாட்டில் இருந்து ஜவுளிகளை கொள்முதல் செய்து இலங்கைக்கு இறக்குமதி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர் சென்னிமலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு தங்களுக்கு பல்வேறு ஜவுளி ரகங்கள் தேவைப்படுவதாக ஆர்டர் கொடுத்தார்.

    மேலும் அப்துல்அ‌ஷரப் முகமது ரஹீம் மற்றும் அவரது தம்பி ஆகியோர் 2 தவணைகளில் வங்கி மூலம் சென்னிமலையில் உள்ள ஜவுளி நிறுவனத்திற்கு ரூ.41 லட்சம் பணம் அனுப்பி உள்ளனர்.

    பணத்தை பெற்றுக்கொண்ட ஜவுளி நிறுவனத்தினர் அப்துல்அ‌ஷரப் முகமது ரஹீமுக்கு ஜவுளிகளை அனுப்பாமல் இருந்தனர். இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட ஜவுளி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார்.

    அப்போது அவர்கள் விரைவில் அனுப்புவதாக கூறி காலதாமதம் செய்து வந்தனர். இதையடுத்து அப்துல்அ‌ஷரப் முகமது ரஹீம் ஜவுளி ரகங்கள் அனுப்ப முடியவில்லை என்றால் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் ஜவுளி நிறுவனத்தினர் ஜவுளி ரகங்களையும் கொடுக்காமல் பணத்தையும் திருப்பி தராமல் இருந்து வந்தனர்

    இதையடுத்து அப்துல்அ‌ஷரப் முகமது ரஹீம் இ-மெயில் மூலம் ஜவுளி நிறுவனத்தின் மீது புகார் செய்தார். அதன்பேரில் சென்னிமலை சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஜவுளி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே காட்டுபன்றி மோதியதில் பனியன் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    பு.புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (38). பனியன் வியாபாரி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் வியாபாரம் தொடர்பாக நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதிக்கு வந்தார்.

    பின்னர் இங்கு வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் இரவு 7 மணியளவில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அவர் சத்தியமங்கலம்- மேட்டுப்பாளையம் மெயின் ரோடு விளாமுண்டி வனப்பகுதியையொட்டிய சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுப்பன்றி வேகமாக சாலையை கடக்க முயன்றது. அப்போது ராம்குமார் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத வகையில் காட்டுபன்றி மோதியது. மேலும் முன்பக்க டயரில் சிக்கிய காட்டுபன்றி சுமார் 10 அடி தூரத்துக்கு இழுத்து சென்றது.

    இதையடுத்து நிலைதடுமாறிய ராம்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். மேலும் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் காட்டுபன்றியும் படுகாயம் அடைந்து அதே இடத்தில் மயங்கி கிடந்தது.

    இந்த சம்பவம் பற்றி தெரியவந்ததும் வனத்துறையினர் மற்றும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்டுபன்றி மோதியதில் பலியான ராம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயம் அடைந்த காட்டுபன்றியை வனத்துறையினர் கொண்டு சென்றனர். அவர்கள் கொண்டு சென்ற சிறிது நேரத்தில் காட்டுபன்றியும் இறந்தது. இந்த விபத்து குறித்து பவானி சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×