என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான மகேஸ்வரன், நடராஜன் ஆகியோரையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளையும் படத்தி
நாட்டு வெடிகுண்டு வீசிய 2 பேர் சிறையில் அடைப்பு
டி.என்.பாளையம் அருகே வன விலங்குகளை பிடிக்க வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே வன விலங்குகளை பிடிக்க வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாப்புதூர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார்(27), இவர் தனது தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாட்டை தோட்டத்தின் அருகேயுள்ள வனப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்,
சிறிது நேரத்தில் ஏதோ வெடிப்பு சத்தமும் அதைத்தொடர்ந்து மாடு பயங்கரமாக அலறும் சத்தமும் கேட்டு உள்ளது.
உடனே மதன்குமார் மாடு மேய்ந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது மாட்டின் தாடை கிழிந்து ரத்தம் கொட்டி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மதன்குமார் பங்களாப்புதூர் போலீசார், டி.என்.பாளையம் வனத்துத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசாரின் விசாரணையில் சத்தியமங்கலம் அருகேயுள்ள கொண்டப்பநாய்க்கன் பாளையத்தை சேர்ந்த மகேஷ்வரன்(37), பங்களாப்புதூர் அருகே யுள்ள எருமைக்குட்டையை சேர்ந்த நடராஜ்(59) ஆகிய இருவரும் தான் நாட்டு வெடிகுண்டை வனப்பகுதிக்குள் வைத்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து இருவரையும் பிடிக்க பங்களாப்புதூர் சப்&இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் அண்ணாநகர் பகுதிக்கு சென்றனர், போலீசாரை கண்டதும் மகேஷ்வரனும், நடராஜனும், தப்பியோட முயன்றனர்.
அவர்களை போலீசார் விரட்டிச்சென்ற போது, கையில் வைத்து இருந்த பையில் இருந்த நாட்டு வெடிகுண்டை காண்பித்து அருகில் வந்தால் நாட்டு வெடிகுண்டை வீசி விடுவோம் எனக்கூறி மிரட்டி உள்ளனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் துணிச்சலுடன் இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த பையை பிடுங்கி பார்த்தபோது, அதில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக 38 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து மகேஸ்வரன், நடராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது தடை செய்யப்பட்ட வெடிபொருளை கொண்டு செல்லுதல், சட்டவிரோதமாக வெடி பொருள் வைத்து இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் வீட்டிலேயே தயார் செய்த விவரமும் தெரிய வந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் அவர்கள் கூறியதாவது:&
காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக பயன்படுத்த, நாட்டு வெடிகுண்டுகளை, பட்டாசு மருந்து, வெங்கச்சாங்கல் மைதா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வீட்டிலேயே தயார் செய்து வனப்பகுதியில் ஆங்காங்கே போட்டு விடுவோம்.
கிழங்கு போன்ற உணவு என நினைத்து வனவிலங்குகள் வாயில் கடிக்கும்போது நாட்டு வெடிகுண்டு வெடித்து இறந்து விட்ட பிறகு இறைச்சியை விற்பனை செய்து பணத்தை பிரித்து கொள்வோம் என்று போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து, மகேஸ்வரன் மற்றும் நடராஜ் இருவரையும் பங்களாப்புதூர் போலீசார் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி வனவிலங்குகளை வேட்டையாடி வரும் சம்பவம் வனஆர்வலர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டு வெடிகுண்டு கடித்த பசுமாடு உயிருக்கு போராடி வருகிறது.
Next Story






