என் மலர்
ஈரோடு
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி உள்பட 10 வனசரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை மற்றும் சிறுத்தைகள் அருகே உள்ள கிராமங்கள் மற்றும் கல் குவாரிகளில் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகிறார்கள்.
இதே போல் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்ட காஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, நாய்கள் போன்ற கால்நடைகளை தாக்கி கொன்று வருவது தொடர் கதையாகி வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.
கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது என மக்கள் நிம்மதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் தாளவாடி அருகே இரியபுரம் பகுதியில் உள்ள கல் குவாரியில் சிறுத்தை ஒன்று கல்குவாரி மீது படுத்து கொண்டு இருந்தது. இதை அங்கு மாடு மேய்த்து கொண்டு இருந்த விவசாயி ஒருவர் தனது செல்போனில் சிறுத்தையை படம் பிடித்தார்.
இது பற்றி அருகே உள்ள விவசாயிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது, தாளவாடி அருகே கடந்த சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கல்குவாரியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தொடர்ந்து போக்கு காட்டி வரும் சிறுத்தையை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் கொரோனா ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி தாய்லாந்தில் இருந்து வந்திருந்த இருவருக்கு முதல் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தினசரி பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக பதிவாகி கொண்டே இருந்தது.
இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு உயர்ந்து கொண்டே வந்தது. 2-ம் அலையின்போது தினசரி பாதிப்பாக ஒரே நாளில் 1,800 பேர் வரை பதிவாகியிருந்தது.
அதன் பின்னர் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டதால் பாதிப்பு குறைய தொடங்கியது. எனினும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உடையவர்கள் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவி மாவட்டத்தில் 3-ம் அலை ஏற்பட்டது.
தினசரி பாதிப்பு அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு குறைந்த எண்ணிக்கையில் இருந்தது. 3-ம் அலையில் தினசரி பாதிப்பு 1,400 வரை பதிவாகியிருந்தது. பின்னர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 2 வாரமாக மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது.
இந்நிலையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று மாவட்டத்தில் தினசரி பாதிப்பு பூஜ்ஜியம் என்றானது. தற்போது மாவட்டம் முழுவதும் தினமும் ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி தினசரி பாதிப்பு 0 ஆக பதிவாகியிருந்தது. இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 660 ஆக பதிவாகியுள்ளது.
5 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 906 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை 734 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 20 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (27). இவர் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக கடந்த 7-வருடங்களாக பணியாற்றி வந்தார்.
ஆனால் அவர் தனது விரிவுரையாளர் பணியை விட்டு விட்டு இயற்கை விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் வடக்கு தோட்டம் பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார்.
இதில் ஒரு நாட்டு பசு மாடு, மூன்று கலப்பின பசு மாடுகள் உட்பட 4 மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் 3 பசு மாடுகள் சினையாக இருந்தது. இதில் ஒரு கலப்பின பசு மாடு கடந்த 19 நாட்களுக்கு முன்பு தான் கன்று ஒன்றை ஈன்றது. இந்த நிலையில் மதன் குமார் தனது குத்தகை தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாடுகள் தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் திடீரென வெடி சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து மாடு அலறும் சத்தம் கேட்டது.
இதையடுத்து மதன்குமார் அங்கு சென்று பார்த்தார். அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்து கன்று ஈன்ற கலப்பின பசு மாட்டின் வாய், தாடை மற்றும் நாக்கு கிழிந்து ரத்தம் கொட்டி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்.
இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து மாட்டின் வாய் சிதைந்தது தெரிய வந்தது.
நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய்ப்பகுதி பாதிக்கப்பட்ட அந்த பசுமாடு தண்ணீர் மற்றும் உணவு அருந்த முடியாமல் அவதி அடைந்தது. கால்நடை மருத்துவர்கள் மாட்டுக்கு சிகிச்சை அளித்தனர்.
பசு மாடு தனது இளங்கன்றுக்கு தாய்பால் கொடுக்க முடியாமல் தவித்தது. கன்று குட்டியும் அதை சுற்றி வந்து பார்த்து ஏக்கத்துடன் சென்றது. படுகாயம் அடைந்த பசு மாட்டை மதன்குமார் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அந்த மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாட்டை வீட்டுக்கு அழைத்து வந்து கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை படுகாயம் அடைந்த பசு மாடு பரிதாபமாக இறந்தது. இதை கண்டு மதன்குமார் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு அழுதார்.
இதையடுத்து பிறந்து 19 நாட்களே ஆன கன்று குட்டி பால் குடிக்க முடியாமல் அந்த பசுமாட்டை ஏக்கத்துடன் பார்த்து வருகிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இறந்த பசு மாட்டை சோகத்துடன் பார்த்து சென்றனர்.
இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் அங்கு வந்து பசு மாட்டை பிரேத பரிசோதனை செய்து அந்த பகுதிலேயே அடக்கம் செய்யப்பட்டது.






