என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏக்கத்துடன் பசுமாட்டை சுற்றி வரும் கன்று குட்டி.
    X
    ஏக்கத்துடன் பசுமாட்டை சுற்றி வரும் கன்று குட்டி.

    நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய் சிதைந்த பசுமாடு உணவு, தண்ணீர் குடிக்க முடியாத பரிதாபம்

    டி.என்.பாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய் சிதைந்த பசுமாடு உணவு, தண்ணீர் குடிக்க முடியாத பரிதாப நிலையை அடைந்துள்ளது.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய் சிதைந்த  பசுமாடு உணவு, தண்ணீர் குடிக்க முடியாத பரிதாப நிலையை அடைந்துள்ளது.

    டி.என்.பாளையம் அருகே யுள்ள பங்களாப்புதூர் வடக்கு தோட்டம் பகுதியில் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வைத்து கொண்டு அங்கேயே வசித்து வருபவர் மதன்குமார்(27).

    இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா. மதன்குமார் முதுகலை பட்டம் பெற்று டி.என்.பாளையம் தனியார் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக கடந்த 7-வருடங்களாக பணியாற்றி வந்தவர், சமீபகாலமாக தனது விரிவுரையாளர் பணியை விட்டு விட்டு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டு குத்தகை நிலத்தில் கால்நடைகளை வளர்த்து வந்தார்.

    இதில், ஒரு நாட்டு பசு மாடு, 3 கலப்பின பசு மாடு உட்பட 4 மாடுகள் உள்ள நிலையில், 3 பசு மாடுகள் சினையாக இருந்து உள்ளது, இதில் ஒரு கலப்பின பசு மாடு கடந்த 18&நாட்களுக்கு முன்பு தான் அழகிய கன்று ஒன்றை ஈன்றது.

    இந்நிலையில், மதன்குமார் தனது குத்தகை தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாடுகள் தோட்டத்தின் அருகேயுள்ள வனப்பகுதியில்   மேய்ச்சலுக்கு சென்று உள்ளது. சிறிது நேரத்தில் ஏதோ வெடி  சத்தமும் அதைத்தொடர்ந்து மாடு பயங்கரமாக அலறும் சத்தமும் கேட்டு உள்ளது.

    உடனே மதன்குமார் மாடு மேய்ந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, புதிதாக கன்று ஒன்றை ஈன்ற கலப்பின பசு மாட்டின் தாடை மற்றும் நாக்கு கிழிந்து ரத்தம் கொட்டி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி  அடைந்தார்.

    இது குறித்து மதன்குமார் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரின் விசாரணையில்   சத்திய மங்கலம் அருகேயுள்ள கொண்டப்பநாய்க்கன் பாளையத்தை சேர்ந்த மகேஸ்வரன்(37), பங்களாப் புதூர் அருகேயுள்ள எருமைக்குட்டையை சேர்ந்த நடராஜ்(59) ஆகிய இருவரும் தான் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டை தயாரித்து வனப்பகுதிக்குள் வைத்தது தெரியவந்தது. 

     இதைத்தொடர்ந்து 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த பங்களாப்புதூர் போலீசார் இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வாய்ப்பகுதி பாதிக்கப்பட்ட  பசுமாடு தண்ணீர் மற்றும் உணவு அருந்த முடியாமல் அவதி பட்டு வருகிறது. கால்நடை மருத்துவர்களால் குளுக்கோஸ் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது, தாய் பசுவானது பிறந்த 18- நாட்களே ஆன தனது இளங்கன்றுக்கு தாய்பால் கொடுக்க முடியாமல் வேதனையில் உள்ளது.

    இளங்கன்றோ தனது தாய்க்கு நேர்ந்த சோகத்தை உணர்ந்து கொண்டு வாய் சிதைந்த தனது தாயின் முகத்தை கண்ணீருடன் அருகில் வந்து பார்த்து தாய்க்கு முத்தம் கொடுத்து ஆறுதலையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தாயை சுற்றி சுற்றி வருவதை கண்டு அப்பகுதி மக்கள் கண்கலங்கி செல்கின்றனர்.

    தோட்டத்தில் வந்து பார்த்து செல்லும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தாய் பசு குணமாக வேண்டி கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது, இந்நிலையில் பாதிக்கப்பட்ட பசுமாட்டை மதன்குமார் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு மேல்சிகிச்சைக்காக இன்று கொண்டு சென்றுள்ளார். 

    இளங்கன்றோ தனது தாய்பசு, குணமாகி வந்து தனக்கு பால் கொடுக்கும் என ஏக்கத்துடனும் நம்பிக்கையுடனும் காத்து கொண்டு இருக்கிறது. இந்த பசு மாட்டுக்கு நேர்ந்த இந்த விபரீதம் இனி நடக்காமல் இருக்க வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து இதுபோன்ற இரக்கமில்லாத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×