என் மலர்
ஈரோடு
தாளவாடி:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்தும் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்தும் சேதமானது.
இதனால் பல்வேறு பகுதிகளில் மின்தடை நிலவி வருகிறது. மேலும் காற்றின் காரணமாக சுமார் 20 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமானதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை 6மணி அளவில் தாளவாடி பகுதியில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல அது கனமழையாக மாறியது. தாளவாடி, தொட்டகாஜனூர், அருள்வாடி, திகினாரை, கெட்டவாடி, சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய இடங்களிலும் கனமழை கொட்டியது.
சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. காலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த மழை காரணமாக தாளவாடி பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
இதே போல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மாயாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர். மேலும் மாயாற்றை கடக்க முடியாததால் தெங்குமரஹடாவில் விளையும் வாழை, மிளகாய், கத்திரிக்காய் போன்ற விளைபொருட்களை கொண்டு வரமுடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து உள்ளனர். சிலர் பரிசல் மூலம் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை சேசன் நகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (55) என்பவரின் வீட்டில் இருந்த காவல் நாயை அங்கு வந்த சிறுத்தை கடித்தது. இதை பார்த்த காளிப்பன் சத்தம் போடவே சிறுத்தை நாயை விட்டுவிட்டு பக்கத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி கொண்டது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பூஜா (17). இவர் மொடச்சூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சிவசங்கர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இறந்ததால் பூஜா மன வேதனையில் இருந்து வந்தார்.
மேலும் தந்தை இல்லாததால் நானும் இறந்து விடுகிறேன் என பூஜா தனது தாயிடம் கூறி புலம்பி கொண்டு இருந்தார். அதற்கு அவரது தாய் பூஜாவுக்கு ஆறுதல் கூறி வந்தார்.
இந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்த பூஜா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகே த.மா.கா. சார்பில் சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில துணை தலைவர் ஆறுமுகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்டி.சந்திரசேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், இளைஞரணி தலைவர் யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சொத்து வரி, வீட்டு வரி உயர்வை திரும்ப பெறவும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தியும் ஜி.கே.வாசன் தலைமையில் நிர்வாகிகள் கோஷமிட்டனர். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக மக்களின் சுப, துக்க நிகழ்வுகளில் பங்கேற்கும் கட்சியாகவும், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் கட்சியாகவும் த.மா.கா. செயல்பட்டு கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.
தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் 5வது பெரிய போராட்டம் இது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. தி.மு.க.வின் வாக்குறுதிகளை நம்பி் மக்கள் ஏமாந்துள்ளனர். கிடப்பில் போடப்பட்ட வாக்குறுதிகள் செயல்படுத்துவார்கள் என மக்கள் காத்து கொண்டிருந்தபோது மக்கள் தலையில் பேரிடியாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிசை முதல் மாளிகை வரை 20 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைப்பு காட்டவில்லை. மாறாக வரியை உயர்த்தி சுமையை உயர்த்திய அரசாக உள்ளது.
திராவிட மாடல் அடிப்படையில் சொத்து வரியை குறைத்திருக்கலாமே. கூட்டணி கட்சிகள் சொத்து வரி உயர்வை பற்றி வாய் திறக்கவில்லை. கூட்டணி கட்சிகளை கட்டுப்படுத்தலாம், ஆனால் தமிழக மக்களை கட்டுப்படுத்த முடியாது.
ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் தேர்தல் வாக்குறுதியை மீறுவது சரியா என கேட்கிறோம். வாக்களித்த மக்களுக்கு தி.மு.க துரோகம் செய்திருக்கிறது. மக்கள், வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் முடிவை மாற்றி வாக்களிப்பார்கள்.
மின்வெட்டு தி.மு.க. ஆட்சியில் அதிகரித்துள்ளது. படிப்படியாக தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுங்கள். வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட 6 மாவட்டங்களை சேர்ந்த தமாகா.வினர் கலந்து கொண்டனர்.






