என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை காரணமாக விவசாய நிலங்களில் வெள்ளம் தேங்கி நின்றது
    X
    மழை காரணமாக விவசாய நிலங்களில் வெள்ளம் தேங்கி நின்றது

    தாளவாடி பகுதியில் இன்று காலை சூறாவளி காற்றுடன் 2 மணி நேரம் பலத்த மழை

    தாளவாடி, தொட்டகாஜனூர், அருள்வாடி, திகினாரை, கெட்டவாடி, சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய இடங்களிலும் கனமழை கொட்டியது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்தும் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்தும் சேதமானது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் மின்தடை நிலவி வருகிறது. மேலும் காற்றின் காரணமாக சுமார் 20 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமானதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை 6மணி அளவில் தாளவாடி பகுதியில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல அது கனமழையாக மாறியது. தாளவாடி, தொட்டகாஜனூர், அருள்வாடி, திகினாரை, கெட்டவாடி, சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய இடங்களிலும் கனமழை கொட்டியது.

    சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. காலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த மழை காரணமாக தாளவாடி பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    இதே போல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மாயாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் பொதுமக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர். மேலும் மாயாற்றை கடக்க முடியாததால் தெங்குமரஹடாவில் விளையும் வாழை, மிளகாய், கத்திரிக்காய் போன்ற விளைபொருட்களை கொண்டு வரமுடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து உள்ளனர். சிலர் பரிசல் மூலம் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.

    Next Story
    ×