என் மலர்tooltip icon

    ஈரோடு

    • 29.12.2022 காலை 8.00 மணி முதல் தண்ணீர் திறக்கப்படும்.
    • இதனால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தமிழக அரசின் நீர்வளத்துறை சிறப்புச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, 2022-2023 ஆம் ஆண்டின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 12.08.2022 முதல் 09.12.2022 வரை 120 நாட்களுக்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஏற்கனவே ஆணையிடப்பட்டு அதன்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    தற்பொழுது பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக தண்ணீர் திறந்து விட கோரிய கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் கோரிக்கையினை ஏற்று, 29.12.2022 காலை 8.00 மணி முதல் 15.01.2023 காலை 8.00 மணி வரை 3378.24 மில்லியன் கன அடிக்கு மிகாமல் மேலும் 17 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பஸ் தொடர்ந்து சென்றிருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.
    • அதிர்ஷ்டவசமாக முன் கூட்டியே புகை வருவது தெரிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஈரோடு:

    புதுச்சேரியில் இருந்து கோவை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த ஆம்னி பஸ் ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியை கடந்து சென்றபோது பஸ்சின் பின்பக்க சக்கர பகுதியில் இருந்து அதிகளவில் புகை வந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் சத்தம் போட்டதால் பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

    அப்போது அதிகாலை என்பதால் பஸ்சில் பயணித்து கொண்டிருந்த 37 பயணிகளும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். பஸ்சில் டிரைவர், கிளீனர் என 2 பேர் மொத்தம் 39 பேர் இருந்தனர்.

    உடனடியாக டிரைவரும், கிளீனரும் பஸ்சில் இருந்து வெளியே வந்து பின்புற சக்கர பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது தொடர்ந்து புகை வந்ததை உறுதி செய்தனர். உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகளை அவசர அவசரமாக கீழே இறங்க செய்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று அரை மணி நேரம் புகை வரும் பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    பின்னர் பரிசோதித்த போது பிரேக் ட்ரம் தேய்ந்து உராய்வு ஏற்பட்டதால் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பஸ் நிறுத்தப்பட்டதால் புகை வருவது கண்டறியப்பட்டு தக்க நேரத்தில் தீயணைப்புத் துறையினர் புகையை நிறுத்தினர்.

    பஸ் தொடர்ந்து சென்றிருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக முன் கூட்டியே புகை வருவது தெரிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதனையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் அங்கு வந்து பஸ்சை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த டிரைவர் பரமேஸ்குமாரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பயணிகளை வேறு பஸ் வரவழைக்கப்பட்டு அந்த பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விசாரணையில் போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரன் குடிபோதையில் பணியில் இருந்தது தெரியவந்தது.
    • போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரனை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் வெங்கடேஸ்வரன். சம்பவத்தன்று இவர் பண்ணாரி சோதனை சாவடி பணிக்கு அனுப்பப்பட்டார்.

    அப்போது பணியில் இருந்த போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிலர் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து உடனடியாக போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். விசாரணையில் போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரன் குடிபோதையில் பணியில் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ் ஏட்டு வெங்கடேஸ்வரனை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பவானி நகராட்சி பகுதியில் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ராஜன் ஆய்வு செய்தார்.
    • வரி வசூல் செய்யும் அலுவலர்களுடன் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

    பவானி:

    பவானி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தமிழக அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ராஜன் பவானி நகராட்சிக்கு வருகை தந்தார்.

    இதனையடுத்து வருகை தந்த அவர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனுசுயா கூடுதல் பிரசவ விடுதி கட்டுமான பணி,

    தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமுதாய கழிப்பிட கட்டுமான பணி, 4-வது வார்டு புதிய பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் உரக்கி டங்கில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோல் 3 நாட்கள் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்படுத்துதல் காரணமாக பவானி நகராட்சி கணினி மையம் செயல்படாதது என அறிவிக்கப்பட்ட நிலையில் வரி வசூல் செய்யும் அலுவலர்கள் பொதுமக்களிடையே 3 நாட்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் குறித்து பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது மேலாளர் (பொறுப்பு) வெங்கடேசன், ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல், துப்புரவு அலுவலர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் ரவி, துப்புரவு ஆய்வாளர் ஜெகதீசன் உள்பட நகராட்சி அலுவலர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பவானி வட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை கலைத்து உரிய காப்பீட்டுத் தொகை யை வழங்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    பவானி:

    பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பவானி வட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பி.ஏ.இ.எல். சரண்டர் ஆகிய வற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

    புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை கலைத்து உரிய காப்பீட்டுத் தொகை யை வழங்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் தாசில்தார் ரவிச்சந்திரன், தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன் மண்டல துணை தாசில்தார் மோகனா உள்பட வருவாய்த்துறை அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுவயதிலேயே 2 மகள்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் கணவன்-மனைவி மனம் உடைந்தனர்.
    • பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    அந்தியூர்:

    சேலம் தாதகாப்பட்டி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் யுவராஜ் (42). இவரது மனைவி மான்விழி (35). இவர்கள் 2 பேரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தனர். இவர்களுக்கு நிதிஷா என்கிற நேகா (7), அக்‌ஷரா (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

    இந்த நிலையில் இவர்களது மூத்த மகள் நேகா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சிறுமிக்கு தினமும் இன்சுலின் ஊசி செலுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 2-வது மகள் அக்‌ஷராவுக்கும் சர்க்கரை நோய் வந்து விட்டது.

    சிறுவயதிலேயே 2 மகள்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் கணவன்-மனைவி மனம் உடைந்தனர். இதையடுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கடிதம் எழுதி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் யுவராஜ் தனது மனைவி மான்விழி, மகள்கள் நேகா, அக்‌ஷரா ஆகியோருடன் வீட்டை விட்டு புறப்பட்டார்.

    பின்னர் அவர்கள் தமிழக-கர்நாடக எல்லையான ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள பாலாற்றின் நீர்தேக்க பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு 2மகள்களையும் பாலாற்றில் தூக்கி வீசினர். இதில் 2மகள்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 2 குழந்தைகளுக்கும் சிறுவயதிலேயே சர்க்கரை நோய் வந்ததால் மனம் உடைந்த கணவன், மனைவி 2 குழந்தைகளையும் ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்து விட்டு பின்னர் அவர்களும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    மேலும் தற்கொலைக்கு முன்பு அவர்கள் ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தனர். இதில் 2 குழந்தைகளுக்கும் சர்க்கரை வியாதி வந்ததால் எங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    மேலும் 2 குழந்தைகளையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே இந்த உலகில் வாழ எங்களுக்கு விருப்பம் இல்லை.

    எங்களை மன்னித்து விடுங்கள். இதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை. மிகுந்த மன வேதனையோடு தான் நாங்கள் 2 பேரும் இந்த முடிவை எடுத்தோம். அனைவரும் எங்களை மன்னிக்கவும் என்று எழுதப்பட்டு இருந்தது

    இதற்கிடையே 4 பேரின் உடல்களும் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இதனால் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களது உறவினர்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். குழந்தைகளுக்கு ஏற்பட்ட சர்க்கரை வியாதியால் குடும்பமே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.
    • விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை கருப்புசாமி என்பவர் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ள கிராமம் எம்.பி.என்.புரம் நெசவாளர் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய மகன் கவின் குமார்.

    கடந்த 3 மாத்திற்கு முன்பு இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஓட்டப்பாறை பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சாந்தியின் கழுத்தில் இருந்த தங்க செயினை வழிப்பறி செய்து பறித்து சென்றார்.

    இதனையடுத்து 1½ பவுன் தங்க செயின் திருட்டு போனதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் என்றும் இச்சம்பவம் குறித்து கவின்குமார் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கருப்புசாமி (35) என்பவர் இந்த பெண்ணிடம் தங்க செயினை வழிப்பறி செய்தது தெரிந்தது.

    போலீசார் அவரை கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வேலைமுடிந்து தனசேகர் ஒத்தையடி பாதையில் நடந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.
    • அப்போது அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் அருகே உள்ள பொன்னான்டா வலசு பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மகன் தனசேகர் (25). தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் இரவு வேலைமுடிந்து ஒத்தையடி பாதையில் நடந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது. இது தெரியாமல் தனசேகர் இருந்து வந்தார்.

    பின்னர் பெருந்துறை அரசுஆஸ்பத்திரிக்கு சென்ற போது தான் தனக்கு பாம்பு கடித்தது என்பது தனசேகருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனசேகர் பரிதாபமாகஇறந்தார்.

    இது குறித்து காஞ்சி கோவில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்த காரணமாக இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.34 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததாலும், அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்த காரணமாக இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.34 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,556 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி என மொத்தம் 2,900 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • கிருஷ்ணகுமார் வீட்டில் பேனில் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 38). இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கிருஷ்ணகுமாருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போனில் மனைவியுடன் தகராறு செய்து கொண்டு கிருஷ்ணகுமார் வீட்டில் தூக்குபோட்டு கொண்டார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பினனர் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இதையடுத்து கிருஷ்ணகுமாரின் மனைவி கோமதி அவருடன் கோபித்து கொண்டு தனது மகள்களுடன் பு.புளியம்பட்டியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கிருஷ்ணகுமார் மீண்டும் நேற்று மதியம் வீட்டில் பேனில் புடவையால் தூக்குபோட்டு கொண்டார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விசாரணையில் கொள்ளையர்கள் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்து லாக்கரை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் தப்பி சென்றது தெரிய வந்தது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை நால் ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைகடையின் சுவரில் துளை போட்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து உள்ளனர்.

    அப்போது அவர்கள் லாக்கரை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்தது. இதனால் மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.இதனால் பல லட்சம்மதிப்புள்ள தங்கம், வெள்ளி தப்பியது.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் கடையின் முன் பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த காவலாளி மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்த காவலாளிகள் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது நகை கடையின் சுவரில் துளை போடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    பின்னர் இது குறித்து அவர்கள் கடையின் உரிமையாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    முதல்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்து லாக்கரை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் தப்பி சென்றது தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை பிடிக்க பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன், மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் தலைைமயில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அருகில் உள்ள திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

    • கோபிசெட்டிபாளையம் இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தில் 3 வகையான புதிய திட்டங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
    • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இத்திட்டங்களை விரைவாக எடுத்துச்செல்ல பயிற்சி அளிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தில் புதுமையான ஹெர்போலிவ் முறை மூலமான பயிர் பாதுகாப்பு மற்றும் காட்டு விலங்கு மேலாண்மை, கிராம அளவிலான உணவு பதப்படுத்துதல் சேவை மையம் மற்றும் மூலிகை களை கொண்டு செறிவூ ட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன வங்கி ஆகிய 3 வகையான புதிய திட்டங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது:

    வேளாண் ஆளிள்ளா விமானம் (ட்ரோன் புராஐக்ட்) மூலம் வன விலங்கிடம் இருந்து பயிர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முறைகளை புதுமையான ஹெர்போலிவ் என்னும் இயற்கை மருந்தினை ஆளிள்ளா விமானம் மூலம் தெளிப்பது மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை சார்ந்து இருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கிராம அளவிலான உணவு பதப்படுத்துதல் சேவை மையம் மற்றும் மூலிகை களை கொண்டு செறிவூ ட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன வங்கி உள்ளிட்ட புதிய திட்டங்கள் புதிய முயற்சியாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டிடும் வகையில் புதிய தொழில் முனைவோர்களாக மாறி வருகின்றனர். உழவர் உற்பத்தியாளர் குழுவில் விவசாயிகள் இணைந்து சிறந்த முறையில் மதிப்பு கூட்டப்பொருள்கள் விற்பனை செய்வதன் மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த புதிய 3 திட்டங்களுமே விவசாயிகளை சென்றடைய வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலமாகவும் இத்திட்டங்களை விரைவாக எடுத்துச்செல்லும் வகையில் பயிற்சி அளிக்கலாம்.

    இங்கு வருகை புரிந்துள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுசேவை செய்யும் பழகத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் மாணவர்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் தொழில் முனைவோர்களாக உருவாகிட வேண்டும்.

    இந்த புதிய முயற்சியை செயல்படுத்தவுள்ள விவசாயிகளுக்கும், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தாளவாடி வட்டம், கொங்கள்ளி கிராமத்தில் செறிவூட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீ வனத்தை பயிரிட்டுள்ள விவசாயி மாதேஷ் என்பவரிடம் பசுந்தீவனம் குறித்து தொலைபேசி வீடியோ அழைப்பு மூலமாக கலந்துரையாடினார்.

    புதுமையான ஹெர்போலிவ் முறையில் தெளிக்கப்படும் வளர்ச்சி ஊக்கியின் வாசத்தின் காரணமாக காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள், முள்ளம்பன்றிகள், காட்டு எருமைகள். மயில்கள், முயல், எலிகள், பறவைகள், அணில், குரங்குகள் மற்றும் கிளிகள் மூலம் விலங்குகளை அழிக்காமல் விளை பயிர்கள் சேதமடைவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.

    பயிர்கள் நல்ல வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. பூச்சிகள் வராமல் தடுக்கிறது. பூஞ்சான்நோய்களை கட்டுப்படுத்தி நிலத்தின் சத்துக்களை அதிகப்படு த்துகிறது. மூலிகைகளை கொண்டு செறிவூட்டப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவனமானது வறட்சிகாலத்தில் கால்நடை விவசாயிகளுக்கு ஏற்றவகையில் இருக்கும்.

    இதனையடுத்து 4 விவசாயிகளுக்கு செறிவூட்ட ப்பட்ட மக்காச்சோளம் பசுந்தீவன தொகுப்பு களையும், சிறப்பாக களப்பணியாற்றிய 15 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், ஊக்கத்தொகையினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்திய வேளாண் நிலைய முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர்.அழகேசன், திட்ட தலைவர்; சுதர்சன், கோபி ரோட்டரி சங்க ஆளுநர் சண்முகசுந்தரம், தலைவர் திருவேங்கடசாமி, செயலாளர் வெங்கடேஷ், சரவணன் உள்பட விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×