என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மரணம் அடைந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறையின் தலைவராக பதவி வகித்தார்.
    • தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா (46). இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகன் ஆவார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், சமணா என்ற மகளும் உள்ளனர்.

    திருமகன் ஈவெரா கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லமான தனது வீட்டில் தங்கி இருந்து தொகுதி பணிகளை செய்து வந்தார்.

    தொகுதி தொடர்பான பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து நிறைவேற்றி வந்தார். காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி மாற்று கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் எளிமையாக பழகி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் தங்கி வழக்கம்போல் தொகுதி பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதற்காக தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், மாற்று கட்சியினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் ஈரோட்டுக்கு வந்தார். அங்கு தனது மகனின் உடலை பார்த்து இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதைப்பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் கதறி அழுதனர்.

    திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். பின்னர் கார் மூலம் ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் திருமகன் ஈவெரா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, காந்தி, மதிவேந்தன், எம்.பி.க்கள் கனிமொழி, விஜய் வசந்த், அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை, செல்வக்குமார், ஏ.ஜி.வெங்கடாசலம் மற்றும் தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு மற்றும் முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள், தொண்டர்கள் இன்று காலையில் இருந்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தொகுதி மக்கள் வரிசையில் காத்திருந்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து இறுதி சடங்குகள் நடந்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மின்மயானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிற்பகலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்களும் வழிநெடுக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    மரணம் அடைந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறையின் தலைவராக பதவி வகித்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார்.

    • பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • தற்கொலை குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரை அடுத்த கொளத்துபாளையம் அருகே உள்ள ஆராம்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவருடைய மகள் மாலினி ஸ்ரீ (26). இவர் பி.டெக். ஐ.டி. முடித்து விட்டு பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஒரு மாதமாக ஆராம்பாளையம் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மாலினிஸ்ரீக்கு பெற்றோர் திருமணம் செய்ய வரன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சரியான வரன் அமையவில்லை.

    இதனால் மாலினிஸ்ரீ மனம் உடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) எடுத்து தின்று விட்டார். இது குறித்து வீட்டில் யாரிடமும் அவர் தெரிவிக்கவில்லை.

    இதனையடுத்து மாலினிஸ்ரீக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அதன் பின்னர்தான் அவர் விஷம் குடித்த தகவல் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாலினிஸ்ரீயை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல்சிகிச்சைக்காக அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாலினிஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. டாக்டர்.சி.கே.சரஸ்வதி மரியாதை செலுத்துவதற்காக வந்தார்.
    • திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. டாக்டர்.சி.கே.சரஸ்வதி மரியாதை செலுத்துவதற்காக வந்தார். அப்போது அவர் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலை பார்த்ததும் கதறி அழுதார்.

    பின்னர் அவர் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பிறகு அங்கிருந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வின் உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆறுதல் கூறினார்.

    • கோகுலை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு மெட்ராஸ் ஐ இருப்பது தெரியவந்தது.
    • பள்ளிக்கு 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் கோகுல் வீட்டில் இருந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு, முத்தம்பாளையம், இமயம் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி நாகஜோதி. இவர்களுக்கு தீபக், கோகுல் (15) என 2 மகன்கள் இருந்தனர்.

    இதில் மூத்த மகன் தீபக் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கோகுல் வெள்ளோடு அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை கோகுல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது தனக்கு கண் வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    இதனையடுத்து கோகுலை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு மெட்ராஸ் ஐ இருப்பது தெரியவந்தது. இதனால் பள்ளிக்கு 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் கோகுல் வீட்டில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை கோகுலின் தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் கோகுல் மட்டும் தனியாக இருந்துள்ளார். மாலை வேலை முடிந்து கோகுலின் தாய் நாகஜோதி வீட்டுக்கு வந்தார். வீட்டில் கோகுல் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் வீட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. கதவை பலமுறை தட்டியும் பதில் ஏதும் வரவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் கோகுல் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக கோகுலை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோகுல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோகுல் நன்கு படிக்காத காரணத்தால் பெற்றோருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகராஜ் மது போதையில் வீட்டிற்கு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • நாகராஜ் வீட்டில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த கே.ஆர்.பாளையம் கே.கே.நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (35). லாரி டிரைவர். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலி த்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நாகராஜிக்கு மதுப்பழக்கம் உள்ளதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதேபோல் சம்பவத்தன்று இரவு நாகராஜ் மது போதையில் வீட்டிற்கு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதைப்பார்த்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.

    இதையடுத்து விஜயலட்சுமியும், அவரது மகள்களும் லீலாவதி என்பவர் வீட்டில் இரவு தூங்க சென்றனர். மறுநாள் மகள் வீட்டிற்கு வந்தபோது நாகராஜ் வீட்டில் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து விஜயலட்சுமி சித்தோடு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவுந்தப்பாடி சுற்று வட்டாரத்தில் நெல் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது.
    • அறுவடைக்கு தொழிலாளர்கள் இல்லாத நிலை யில் நெல் அறுக்கும் எந்திரத்தின் மூலம் இந்தப் பகுதியில் அறுவடை தொடங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் நெல் உள்பட பல்வேறு பயிர்களை நடவு செய்து வருகிறார்கள். இதை யொட்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் அறுவடை செய்யும் பணி நடந்து வரு கிறது.

    இதே போல் கீழ்பவானி வாய்க்கால் பாசனம் முதல் போக நெல் சாகுபடிக்கு கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையொட்டி கவுந்தப்பாடி சுற்று வட்டாரத்தில் கீழ் பவானி வாய்க்கால் பாசனத்தின் மூலம் நடவு செய்யப்பட்ட நெல் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது.

    பாசன பகுதிகளான பாண்டியன் பாளையம், வேலம்பாளையம், மணியம் பாளையம், அய்யம் பாளை யம், நல்லி கவுண்டனூர், பாப்பாங் காட்டூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பகுதிகளில் இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் பவானி, தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா ஏடிடி 38,39, கருப்பு கவுனி, இட்லி குண்டு, பொன்னி மற்றும் பல நெற்பயிர்கள் நடவு செய்துள்ளனர்.

    இதை தொடர்ந்து நெல் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாரானது. இதையடுத்து அறுவடைக்கு தொழிலாளர்கள் இல்லாத நிலை யில் நெல் அறுக்கும் எந்திரத்தின் மூலம் இந்தப் பகுதியில் அறுவடை தொடங்கப்பட்டது.

    இது குறித்து இப்பகுதி விவசாயிகள் பாசன கூட்ட மைப்புச் செயலாளர் பா.மா.வெங்கடாஜலபதி, ஈஸ்வரமூர்த்தி, யூ/8பி யின் தலைவர் ஏகாம்பரம் மற்றும் சர்க்கரை உற்பத்தியாளர் சங்க செயலாளர் மசக் கவுண்டர் ஆகியோர் கூறும்போது,

    பெரும்பா லான விவசாய கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலை, பனியன் கம்பெனி மற்றும் மில் வேலைகளுக்கு சென்று விட்டனர்.

    இதனால் நெல் அறுவடை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. தற்போது எந்திரத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ.1500 முதல் ரூ.2500 வரை கொடுத்து நெல் அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்கள்.

    • நிதிஷ்குமார் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரிநகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் காட்டுராஜா. இவருடைய மகன் நிதிஷ்குமார் (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிதிஷ்குமார் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று காலையில் விஜயா வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். கதவு உள் பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.

    அப்போது நிதிஷ்குமார் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின்னர் நிதிஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நிதிஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோடு அழகம்பாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.
    • சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அழகம்பாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வாய்க்கால் பகுதியில் அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்தது.

    இதன்பேரில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ராயர்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அந்த நபர் ராயர்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புற பகுதியை சேர்ந்த பொன்னான் என்ற பொன்னுசாமி (58) என்பதும், அவரது மொபட்டினை சோதனை செய்தபோது 12 மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து பொன்னுசாமியை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியில் மளிகை கடையில் தாலுகா போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கடையின் உரிமையாளரான நாதகவுண்டன் பாளையத்தை சேர்ந்த திலிப்குமார் (31) என்பவரை கைது செய்து கடையில் இருந்த 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • வெண்டிபாளையம்ரெயில்வே நுழைவு பாலம் அருகே சாக்கடை கால்வாயில் பிளீச்சிங் கழிவுநீர் வெள்ளை நிறத்தில் வெளியேறி வருகிறது
    • இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும், நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோலார் அடுத்த வெண்டிபாளையம் ெரயில்வே நுழைவு பாலம் அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் செல்லும் கழிவுநீர் நேரிடையாக காளிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் கலக்கிறது.

    இந்நிலையில் வெண்டிபாளையம் மற்றும் மோளக் கவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சாயம் மற்றும் பிளீச்சிங் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நாள்தோறும் வெள்ளை நிறத்தில் கால்வாய்களில் பாய்ந்தோடி வருகிறது.

    இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும், நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பிளீச்சிங் தண்ணீர் வெள்ளையாக பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நின்று மூக்கை பொத்தி பிளீச்சிங் கழிவு நீரை வேடிக்கை பார்த்து செய்வதறியாது திகைத்து செல்கின்றனர்.

    வெள்ளை நிறத்தில் பிளீச்சிங் கழிவுநீர் வெளியேறுவதால் தொற்று நோய்கள் மற்றும் புற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பல நாட்களாக பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் பிளீச்சிங் கழிவு நீர் வெளியேறி வருவதால் அப்பகுதி சாக்கடை கால்வாய்கள் அனைத்தும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    பிளீச்சிங் கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகளை கண்டுபிடித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் முறைகேடாக இயங்கும் ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கா விட்டால் விரைவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அப்பகுதியில் போராட்டம் நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 2-வது நாளாக ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று டோக்கன் வழங்கினர்.
    • ரேஷன் கடையிலும் தினமும் 200 பேருக்கு மட்டும் பொருட்கள் மற்றும் தொகை வினியோகிக்கப்படும்.

    ஈரோடு:

    தமிழக அரசு பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகள் மூலம் ரூ.1,000 ரொக்கப்பணம், 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. வரும் 9-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் இந்த பணியை தொடங்கி வைக்கிறார்.

    இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலமும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு பெற கூட்ட நெரிசலை தவிர்க்க, ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேற்று முதல் டோக்கன் வழங்கும் பணியில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    வீடு, வீடாக சென்று அக்கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி அதில் பரிசு தொகுப்பு பெற வர வேண்டிய தேதி, நேரம் ஆகியவற்றை தெரிவிக்கின்றனர்.

    இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கினர்.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி இலாகி ஜான் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 7 லட்சத்து 65,845 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதில் அரிசி கார்டு தாரர்கள் 7 லட்சத்து 47,474 பேர் உள்ளனர்.

    அவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கம் வகையில் நேற்று முதல் வீடுவீடாக ரேஷன் கடை ஊழியர்கள் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர்.

    முதல்-அமைச்சர் வினியோகத்தை தொடங்கி வைத்த பின் இங்குள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கும் டோக்கன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

    கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 200 பேருக்கு மட்டும் பொருட்கள் மற்றும் தொகை வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விதை நேர்த்தி செய்யும் முறையின் செயல் விளக்கம் மாணவிகளால் நடத்தப்பட்டது.
    • பின்னர் அதன் பயன்கள் விளக்கப்பட்டன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரியில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகளின் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்தின் கீழ் வெங்காயத்தில் வேர் அழுகல் நோயை கட்டுப்படு த்துவதற்காக விதை நேர்த்தி செய்யும் முறையின் செயல் விளக்கம் மாணவிகளால் நடத்தப்பட்டது.

    இதில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்திருந்த அந்தியூர், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், வெள்ளையம்பாளையம், அண்ணா மடுவு, சங்கரா பாளையம், பர்கூர் மலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து திருந்த விவசாயிகள் மாணவிகள் கூறும் செயல்விளக்கத்தை கேட்டுஅதில் ஏற்படும் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

    பின்னர் அதன் பயன்கள் விளக்கப்பட்டன.

    இதில் கல்லூரி மாணவிகள் ராகவி, ராய்ஸ் டெல்பின் ராணி, ரேணுகா, ரியானா பேகம், சந்தியா, சங்கவி, சசிகலா, சாலினி மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் கார்த்திகேயன், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலானது பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.
    • இந்த ஆணடு அதிகளவு பக்தர்கள் வருவர்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையத்தில் புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலானது பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குண்டம் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

    பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கிய நிலையில் இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

    இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 9-ந் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், 11 ம் தேதி இரவு குண்டம் திறப்பு நிகழ்ச்சியும், 12-ந் தேதி அதிகாலை திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்துதல் நடைபெற உள்ளது.

    இந்த ஆணடு அதிகளவு பக்தர்கள் வருவர்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு, பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், 24 மணி நேரம் மருத்துவ குழுவினர், திருவிழா நடைபெறும் ஒரு வார காலத்திற்கு 24 மணி நேரமும் அரசு பஸ் போக்குவரத்து வசதி, அடிப்படை வசதிகளான குடிநீர், தற்காலிக கழிப்பறை உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, பொது சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறையினர், நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும், கோவில் விழாக்குழுவினர், பரம்பரை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×