என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
- கோகுலை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு மெட்ராஸ் ஐ இருப்பது தெரியவந்தது.
- பள்ளிக்கு 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் கோகுல் வீட்டில் இருந்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு சென்னிமலை ரோடு, முத்தம்பாளையம், இமயம் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி நாகஜோதி. இவர்களுக்கு தீபக், கோகுல் (15) என 2 மகன்கள் இருந்தனர்.
இதில் மூத்த மகன் தீபக் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கோகுல் வெள்ளோடு அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை கோகுல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது தனக்கு கண் வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து கோகுலை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு மெட்ராஸ் ஐ இருப்பது தெரியவந்தது. இதனால் பள்ளிக்கு 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் கோகுல் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை கோகுலின் தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் கோகுல் மட்டும் தனியாக இருந்துள்ளார். மாலை வேலை முடிந்து கோகுலின் தாய் நாகஜோதி வீட்டுக்கு வந்தார். வீட்டில் கோகுல் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. கதவை பலமுறை தட்டியும் பதில் ஏதும் வரவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் கோகுல் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கோகுலை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோகுல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோகுல் நன்கு படிக்காத காரணத்தால் பெற்றோருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






