என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 37 வார்டுகள் கிழக்கு தொகுதியை உள்ளடக்கி உள்ளது.
    • தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்திக்கும் துயரம் குறித்தும் பட்டியலிட்டு நோட்டீஸ் ஆக விநியோகம் செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தி.மு.க. கூட்டணி வேட்பாளரை சமாளிக்கும் வகையில் அ.தி.மு.க. சார்பில் பலமான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பலரது பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

    இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக ஈரோட்டில் கட்சி நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு, தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது நாளை (இன்று) முதல் 3 நாட்களுக்கு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து இன்று காலை முதல் அ.தி.மு.க.வினர் வீடு வீடாக வாக்காளர் சரிபார்க்கும் பணியை தொடங்கி உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி மாநகராட்சி பகுதியில் தொடங்கி மாநகராட்சி பகுதியிலேயே நிறைவடைகிறது.

    ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 37 வார்டுகள் கிழக்கு தொகுதியை உள்ளடக்கி உள்ளது. அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு முன்னாள் அமைச்சர் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுடன் உள்ளூர் பொறுப்பாளர்களும் இணைந்து அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளில் வாக்காளர் சரிபார்க்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி அசோகாபுரம், பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், பெரியார் நகர், வீரப்பன்சத்திரம் ஆகிய 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்கு வாக்குச்சாவடி வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக வாக்காளர்கள் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர்கள் வீடு வீடாக சென்று வீட்டில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள்? இறந்தவர்களின் விவரம், வெளியூரில் யாராவது தங்கி இருக்கிறார்களா உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர். மேலும் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கி சென்றனர்.

    இந்த பணி இன்று தொடங்கி 3 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு வீடு வீடாக செல்லும் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும், தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்திக்கும் துயரம் குறித்தும் பட்டியலிட்டு நோட்டீஸ் ஆக விநியோகம் செய்து வருகின்றனர்.

    வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே ஈரோடு கிழக்கு தொகுதியில் 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    • தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க செல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தேர்தலையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க செல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதேப்போல் தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் பணம் பட்டுவாடா கொடுப்பதை கண்காணிக்கும் வகையில் நிலை கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர் செயல்பாடுகளை கண்டறியும் வகையில் அவர்கள் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவர்களின் செயல்பாடுகளையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    • தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவம் 12 டி இன்று முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.
    • வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒரு முறை செல்லும்போது சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால் 2-வது முறையாகயும் நேரில் சென்று வழங்குவார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த தேர்தலுக்கு 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு கருவிகள், 500 விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்பு மீண்டும் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் ஓட்டப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். தொடர்ந்து அவை அழிக்கப்பட்டு பாதுகாப்பாக வைத்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்.

    இதே போல் தேர்தல் பணியில் ஈரோடு கிழக்கு தொகுதியை தவிர்த்து கோபி, பவானி, பெருந்துறை தொகுதியை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் தேர்தல் தொடர்பாக 3 கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதே போல் ஓட்டுச்சாவடிகள் தேர்வு அங்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி பொறியியல் கல்லூரியிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தலில் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை தபால் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை அவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான் என்பதற்கு தகுந்த அரசு சான்றிதழ் நகல் வழங்க வேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சுகாதார அலுவலரிடம் இருந்து பெற்ற சான்றிதழை வழங்க வேண்டும்.

    தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவம் 12 டி இன்று முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒரு முறை செல்லும்போது சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால் 2-வது முறையாகயும் நேரில் சென்று வழங்குவார்கள். 31-ந் தேதிக்குள் இந்த படிவம் வழங்குவார்கள்.

    போதிய விவரங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை 31-ந் தேதி முதல் 4-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது வீடுகளுக்கு வந்து பெற்றுக்கொள்வார்கள்.

    இந்த படிவங்களை பெற சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீட்டுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் செல்லும்போது அவர் அங்கு இல்லை என்றால் 5 நாட்களுக்குள் இருமுறை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர்கள் வீட்டுக்கு சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பெற்று வருவார்கள்.

    • சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த ஆனந்த் சாப்பிட்டு விட்டு மீண்டும் மது அருந்தியுள்ளார்.
    • ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (25). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மது அருந்தும் பழக்கம் உடையவர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த ஆனந்த் சாப்பிட்டு விட்டு மீண்டும் மது அருந்தியுள்ளார். பின்னர் நள்ளிரவில் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார்.

    இதனால் மயக்கமடைந்த ஆனந்தை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பா.ஜனதாவின் நிலைப்பாட்டை எதிர்பார்க்காமல் அ.தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.
    • பா.ஜனதாவுக்கு யாரை ஆதரிப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே பா.ஜனதா சார்பில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தொகுதியில் தீவிர கள ஆய்வு செய்து அந்த அறிக்கையை மாநில தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளர் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

    இதையடுத்து 2 அணியினரும் பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டனர். 2 அணிகளும் போட்டியிட விரும்புவதால் பா.ஜனதாவே தேர்தலில் போட்டியிடும் என்றும் கூறப்பட்டது.

    ஆனால் பா.ஜனதா இதுவரை தனித்து போட்டியா அல்லது யாருக்கும் ஆதரவா? என்பதை தெரிவிக்காமலேயே உள்ளது.

    ஆனாலும் பா.ஜனதாவின் நிலைப்பாட்டை எதிர்பார்க்காமல் அ.தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே ஆதரவு கேட்பதால் பா.ஜனதா தேர்தலில் போட்டியிடாமல் நடுநிலை வகிக்கும் என்று கூறப்படுகிறது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் ஈரோடு இடைத்தேர்தலை கருத்தில் கொள்ளாமல் பாராளுமன்ற தேர்தல் பணிகளில் பா.ஜனதா முனைப்பு காட்டி வருகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தால், ஓ.பி.எஸ். கோபித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் பா.ஜனதாவுக்கு யாரை ஆதரிப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் தேவை என்ற அடிப்படையில் பா.ஜனதா கட்சி நடுநிலை வகிக்கவே வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இறுதி முடிவெடுத்து பாரதிய ஜனதா கட்சி இன்னும் சில தினங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேநேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாமா? என்பது பற்றியும் அக்கட்சி ஆலோசித்து வருகிறது. இதனால் பாரதிய ஜனதாவின் முடிவு என்ன? என்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அணையில் இருந்து 2-ம் போக புஞ்சை பாசனத்திற்காக கீழ்ப்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • இன்று முதல் 2000 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து 2-ம் போக புஞ்சை பாசனத்திற்காக கீழ்ப்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முதலில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் அது 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் 2000 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 100.61 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 685 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 2000 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1000 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 3,050 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

    • ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 3-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • கடந்த 8-ந் தேதி கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது.

    இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் கோவிலின் பழமை தன்மை மாறாமல் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி கஸ்தூரி அரங்கநாதர் சுவாமி பரிவார மூர்த்திகள் மற்றும் விமான ராஜ கோபுரங்களும் பலாலயம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவிலுக்கு வர்ணம் பூசும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 3-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி கடந்த 8-ந் தேதி கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டதன் அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் கஸ்தூரி அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வரும் 30-ந் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    • சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்திற்கு முன்பு நடக்கும் பிராட்டியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிராட்டியம்மனை வழிபட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்திற்கு முன்பு நடக்கும் பிராட்டியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

    தேரோட்டத்தினை முன்னிட்டு பிராட்டியம்மன் கோவில் பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 25-ந் தேதி அம்மன் உற்சவம் நடந்தது.

    தேரோட்டம் நேற்று இரவு 8.20 மணிக்கு தொடங்கி சென்னிமலை நான்கு ரத வீதிகளில் வலம் வந்து 8.55 மணிக்கு நிலை சேர்ந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிராட்டியம்மனை வழிபட்டனர்.

    • காஞ்சிக்கோவில் நோக்கி வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    பவானி, சலங்கை பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). கட்டிட மேஸ்திரி.

    சம்பவத்தன்று செல்வராஜ் காஞ்சிக்கோ வில் பகுதியில் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு செல்வத ற்காக கவுந்தப்பாடி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காஞ்சிக்கோவில் நோக்கி வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மேக்கூர் மாரியம்மன் கோவில் எதிரில் முதியவர் ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து பூ மாணிக்கத்தை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள மேக்கூர் பகுதியில் கேரள லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு சென்று பார்த்தபோது மேக்கூர் மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள மரத்தினடியில் முதியவர் ஒருவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரியை விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பூமாணிக்கம் (67) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து பூ மாணிக்கத்தை கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 12 கேரள மாநில லாட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.

    • மதுபோதையில் அந்தியூர் பஸ் நிலையத்திலேயே இருசப்பன் படுத்து தூங்கியுள்ளார்.
    • இந்த நிலையில் காலையில் பஸ் நிலையத்திலேயே இறந்து கிடந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் அருகே உள்ள விளாமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் இருசப்பன் (40). இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருசப்பன் விவசாய கூலி வேலைகள் செய்து வந்தார்.

    அதிக வயிற்று வலிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பப்பாளி பறிக்கும் வேலைக்காக உடுமலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு செல்ல அந்தியூர் வந்துள்ளார். இரவு மதுபோதையில் அந்தியூர் பஸ் நிலையத்திலேயே இருசப்பன் படுத்து தூங்கியுள்ளார்.

    இந்த நிலையில் காலையில் பஸ் நிலையத்திலேயே இறந்து கிடந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் வந்து இருசப்பனை ஆம்புலன்ஸ் மூலமாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இருசப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 2 ஆண்டு ஆட்சி காலத்தில் கிழக்கு தொகுதிக்கு ஒரு துரும்பை கூட தி.மு.க. கிள்ளி போடவில்லை.
    • அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டங்களை கூட தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று கிழக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டுகிற அளவுக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பணி செய்ய வேண்டும். இரு பெரும் அரசியல் தலைவர்கள் கற்றுக்கொடுத்த அரசியலை இந்த தொகுதியில் பயன்படுத்தி மிகப்பெரிய சரித்திர வெற்றியை பெற வேண்டும்.

    கட்சிக்காரர்கள் எங்கு இருந்தாலும் அவர்களது உணர்வுகள் கிழக்கு தொகுதி நோக்கி இருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சி எப்போது விலகும் என மக்கள் எதிர்பார்ப்பதாக தி.மு.க.காரர்களே கருதுகின்றனர்.

    2 ஆண்டு ஆட்சி காலத்தில் கிழக்கு தொகுதிக்கு ஒரு துரும்பை கூட தி.மு.க. கிள்ளி போடவில்லை. தி.மு.க.காரர்கள் கூனி குறுகிதான் வாக்கு சேகரிக்க முடியும். அ.தி.மு.க.காரர்கள் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிக்கலாம்.

    5-ல் ஒரு பகுதி ஆட்சி முடிந்த பிறகும் முக்கிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டங்களை கூட தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர்.

    ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு 485 கோடியில் செயல்படுத்தப்பட்ட ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக தி.மு.க. நிறுத்துகிறது. மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. இதனால் 564 பேர் மருத்துவ கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் மருத்துவ படிப்பு செலவுகளையும் அ.தி.மு.க. ஏற்றது.

    தி.மு.க. ஆட்சியில் வெல்லத்தை உள்ளூரில் கொள்முதல் செய்தால் கமிஷன் பெற முடியாது என்பதால் வெளி மாநிலத்தில் இருந்து வெல்லத்தை பெற்று பயன்படுத்த முடியாத வெல்லத்தை வழங்கினார்கள். திராவிட மாடல் என்பது அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதுதான்.

    3 நாட்களுக்குள் வாக்காளர்கள் விவரங்களை தொகுதி பொறுப்பாளர்கள் சரிபார்க்க வேண்டும். நமக்கு சோதனை புதிதல்ல. பல சோதனைகளை வென்ற இயக்கம். சிலர் எட்டப்பன்களாக மாறி எட்டப்பன் வேலை செய்து இந்த இயக்கத்தை முடக்க வேண்டும் என்று எதிரிகளோடு பணி செய்து வருகின்றனர். இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

    சிலர் எப்படியாவது அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வை தோற்கடித்த வரலாறு இல்லை. நாம் சரியான முறையில் உழைத்தால் வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×