என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடைநம்பி வீடு ஈரோடு அக்ரஹாரம் வீதியில் உள்ளது.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வருகின்றனர்.

    கோபி:

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருப்பவர் ராமேஸ்வர முருகன் (55). இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் ஆகும். இங்கு இவருக்கு சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய் மற்றும் தந்தை வசித்து வருகின்றனர். ராமேஸ்வர முருகன் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து வீட்டில் தங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வெள்ளாங்கோவில் உள்ள ராமேஸ்வர முருகன் தந்தை வீட்டிற்கு சோதனையிடுவதற்காக வந்தனர். வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை பூட்டினர். வீட்டில் ராமேஸ்வர முருகனின் தாய்-தந்தை மட்டும் இருந்தனர்.

    வீட்டில் இருந்து வெளியே யாரும் செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியே இருந்து யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வருகின்றனர்.

    இதேபோல் ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடைநம்பி வீடு ஈரோடு அக்ரஹாரம் வீதியில் உள்ளது. இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டிற்கும் இன்று காலை வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டிலும் சோதனையிட்டு வருகின்றனர்.

    ராமேஸ்வர முருகன் பள்ளி கல்வித்துறை இயக்குனராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    • ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அஜித்குமார் கடந்த வருடம் ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனை வெட்டிக்கொலை செய்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (32). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரே வீட்டில் மனைவி, மாமியார் கல்யாணி (65) உடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு மது போதையில் வந்த அஜித்குமார் மாமியார் கல்யாணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றி ஆத்திரம் அடைந்த அஜித்குமார் வீட்டில் இருந்த அருவாமனையை எடுத்து வந்து மாமியார் கல்யாணியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

    இதில் தலை மற்றும் கையில் வெட்டு காயம் ஏற்பட்டு கல்யாணி வலியால் அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கல்யாணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஜித்குமார் கடந்த வருடம் ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனை வெட்டிக்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எதிர்பாராதவிதமாக திடீரென அந்த ஒற்றை யானை டிராக்டரை காலால் உதைத்து சேதப்படுத்தியது.
    • பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி வனப்பகுதிகளில் யானைகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் அடிக்கடி புகுந்து விடுகிறது. மேலும் அந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து வாழைகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த பவானிசாகர் விளாமுண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சித்தன் குட்டை அய்யம்பாளையம் செல்வ கணேசபுரம் கிராமத்துக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. இதை தொடர்ந்து அந்த யானை விவசாய நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்ட சுமார் 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை உடைத்து சுவைத்து தின்று சேதப்படுத்தியது.

    இதையடுத்து ஓட்டு சாலைகள், தண்ணீர் குழாய்கள், கம்பி வேலிகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது. இதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் டிராக்டர் மற்றும் வனத்துறை வாகனங்கள் மூலம் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்டி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அந்த ஒற்றை யானை டிராக்டரை காலால் உதைத்து சேதப்படுத்தியது. மேலும் வனத்துறை ஜீப் மற்றும் வாகனத்தை யானை விரட்டி சென்றது. இதையடுத்து அதன் தும்பிக்கையால் தூக்கி அடித்ததில் வாகனம் முன்பகுதி சேதமடைந்தது.

    மேலும் பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயம் செய்து வருகிறோம். வாழை மரங்களை நடவு செய்து அறுவடைக்கு வரும் வரை பாதுகாத்து வருகிறோம்.

    ஆனால் வாழைதார்கள் அறுவடைக்கு வரும் முன் யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி விடுகிறது. மேலும் இரவு நேரங்களில் யானைகள் வருவதால் நாங்கள் அதை விரட்டி செல்லும் போது எங்களுக்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம். எங்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை.

    எனவே இது போன்ற காட்டு யானைகளால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க வேண்டும். யானைகள் உருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

    • மயிலாடி வனப்பகுதியையொட்டி சாலையோரம் ஒரு விலங்கு ஓடுவதை பார்த்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த விலங்கை தூக்கி பார்த்தார்.
    • வனத்துறையினர் விரைந்து வந்து அந்த விலங்கு பற்றி ஆராய்ந்தபோது அது அரிய வகை சருகுமான் என தெரிய வந்தது.

    ஈரோடு:

    உலகிலேயே மிகவும் சிறிய, அரிய வகை உயிரினமாக சருகுமான் கருதப்படுகிறது. இதன் எடை 700 கிராம் முதல் 8 கிலோ இடைப்பட்ட அளவில் இருக்கும். மான் இனம் என்றாலும் இதற்கு கொம்புகள் கிடையாது. ஆனால் சிறிய வால் உண்டு. ஆண் சருகுமானுக்கு மட்டும் கோரைப்பற்கள், ஒரு ஜோடி தந்தம் போல நீண்டு காணப்படும்.

    இதன் நிறம் பழுப்பாகவும், உடலின் மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும். மிகவும் அரிதான இந்த மான் மத்திய பிரதேசம், ஒடிசா, பீகார் மற்றும் இலங்கை நாடுகளில் அடர்ந்த காடுகளில் காணப்படும். இந்த அரிய வகையான மான் இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த மயிலாடி என்ற இடத்தில் பாம்பை பிடித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பாம்பு பிடி வீரர் யுவராஜ் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மயிலாடி வனப்பகுதியையொட்டி சாலையோரம் ஒரு விலங்கு ஓடுவதை பார்த்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த விலங்கை தூக்கி பார்த்தார். பார்க்க வித்தியாசமாக இருந்ததால் இது குறித்து உடனடியாக ஈரோடு வனத்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து அந்த விலங்கு பற்றி ஆராய்ந்தபோது அது அரிய வகை சருகுமான் என தெரிய வந்தது. இந்த மான் இந்த வனப்பகுதியில் எவ்வாறு வந்தது என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதியில் வேறு மான்கள் உள்ளதா? என்றும் சோதனை செய்து வருகின்றனர்.

    • விதை பண்ணையை ஈரோடு மாவட்ட விதை ச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • விதைச் சான்று அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் கீழ்பவானி பாசனப் பகுதியில் சுப்பிர மணி என்ற விவசாயிக்கு உளுந்து கோ 7 என்ற புதிய ரகத்தின் வல்லுநர் நிலை விதை வழங்கி ஆதாரநிலை ஒன்று விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்விதை பண்ணையை ஈரோடு மாவட்ட விதை ச்சான்று மற்றும் அங்கக ச்சான்று உதவி இயக்குநர் சு.மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.

    மேலும் விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வின் போது தெரிவித்ததாவது:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய ரகத்தினை விதைப்பு செய்த நாளில் இருந்து 60 முதல் 65 நாட்களில் அறுவடை செய்யலாம்.

    அனைத்து பரு வங்களிலும் பயிரிடலாம். காய்கள் ஒரே நேரத்தில் முற்றும் தன்மை உள்ளதால் எந்திர அறுவடைக்கு ஏற்றது. உளுந்தின் அளவு மற்ற உளுந்து இரகங்களை விட சற்று பெரியதாக இருக்கும்.

    இந்த ரகமானது ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரவல்லது. 22.3 சதவீதம் புரதச்சத்து உடையது மற்றும் இந்த ரகம் மஞ்சள் தேம்பல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டது.

    விதை பரிசோதனைக்கு பின் இந்த ரகத்தின் சான்று பெற்ற விதைகள் ஈரோடு வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விரைவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட வுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், கலவன்கள் கண்டறிதல் மற்றும் அவற்றை அகற்றும் முறைகள் குறித்து விதைச் சான்று அலுவலர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) ராதா மற்று ம் உதவி விதை அலுவலர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.
    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 68.73 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,734 கனஅடி யாக நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.59 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 9.84 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.95 அடியாகவும் உள்ளது.

    • 2 பேரையும் ஆயுத ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
    • போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்தவர் துரைசாமி. கோவில் பிரச்சனையை முறையாக கையாளாமல் நடவடிக்கையில் மெத்தனம் காட்டியதாக புகார் எழுந்தது.

    இதேபோல் கருங்கல் பாளையம் போலீஸ் நிலை யத்தில் தனிப்பிரிவு ஏட்டு நித்தியானந்தம் சட்டவிரத செயல்கள் பற்றி உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என புகார் எழுந்தது.

    இதையடுத்து 2 பேரையும் ஆயுத ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    இதைபோல் தாளவாடி சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் மான் இறைச்சியை கடத்தி வந்தவர்களிடம் மான் இறைச்சி மற்றும் பணம் பெற்று கொண்டதாக புகார் எழுந்தது. போலீஸ் விசாரணையில் இது உண்மை என தெரிய வந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் அவர்களை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    மாவட்டத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 4 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னிமலை நகரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட கைத்தறி துறை சார்பாக 2005-ம் வருடம் இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னிமலை நகரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    சென்னிமலை பார்க் ரோட்டில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தினை கைத்தறி கட்டுப்பாடு அலுவலர் எம்.அன்புக்கரசி தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை நகரின் நான்கு ராஜ வீதி, காங்கேயம் ரோடு, பஸ் நிலையம் வழியா வலம் வந்த இந்த ஊர்வலம் அப்பாய் செட்டியார் வீதியில் உள்ள சென்டெக்ஸ் நிறுவனத்தில் நிறைவு பெற்றது.

    இந்த ஊர்வலத்தில் சென்னிமலை பகுதியில் செயல்படும் பிரதம கைத்தறி கூட்டுறவு சங்க பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • வெடி பொருட்கள் வாங்கி வந்ததாக லட்சுமணன் போலீசாரிடம் தெரிவித்தார்.
    • மொபட்டில் கொண்டு வந்ததற்கு லட்சுமணன் மீது பங்களாப்புதூர் வழக்கு பதிவு செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த புஞ்சை துறையம்பாளையம் பள்ளம் அருகே பங்களா ப்புதூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மொபட்டில் ஒரு வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் டி.என்.பாளையம் அடுத்த வாணி ப்புத்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த லட்சுமணன் (25) என்றும் சாக்கு பையில் 50 ஜெலட்டின் குச்சிகள், 40 மின்சார அல்லாத டெட்டனேட்டர், 22 மின்சார டெட்டனேட்டர் என வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விவசாய சம்ப ந்தப்பட்ட தேவைகளுக்காக சங்ககிரி தனியார் வெடி மருந்து கிடங்கில் இருந்து வெடி பொருட்கள் வாங்கி வந்ததாக லட்சுமணன் போலீசாரிடம் தெரிவித்தார்.

    வெடி மருந்து வாங்கியதற்கான ரசீது லட்சுமணன் வைத்திருந்தார்.

    ஆனால் முறையான பாதுகாப்புடன் வெடிமருந்து பொருட்களை கொண்டு வராமல் பொது வழியில் அஜாக்கிரதையாக மொபட்டில் கொண்டு வந்ததற்கு லட்சுமணன் மீது பங்களாப்புதூர் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் லட்சுமணன் மொபட்டில் கொண்டு வந்த வெடிமருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கொங்கு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
    • 10 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை கொங்கு நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து பெருந்துறை யில் உள்ள மளிகை கடை களுக்கு விற்பனை செய்ய ப்பட்டு வருவதாக பெரு ந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதைத் தொடர்ந்து போலீசார் கொங்கு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவரது பெயர் சக்தி சிவசுப்பிரமணியன் (வயது 39) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொரு ட்களை பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி களில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 கிலோ புகையினை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தி சிவசுப்பிரமணியனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாக்கடை கழிவுநீர் பள்ளம் நிரம்பி சாலைகள் முற்றிலும் தெரியாமல் ஆறாக ஓடுகிறது.
    • விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் எஸ்.ஆர்.டி.நகர் அருகில் சாக்கடை கழிவுநீர் போகும் வடிகால் பள்ளம் உள்ளது.

    இதில் பவானிசாகர் சாலை எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள வீதிகளில் இருந்தும் மற்றும் பழைய மார்க்கெட் பின்புறம் உள்ள வீதிகளில் இருந்தும் வரும் சாக்கடை கழிவுநீர் அனைத்தும் எஸ்.ஆர்.டி. நகர் அருகே உள்ள சாக்கடை வடிகால் பள்ளத்தில் வந்து சேருகிறது.

    இதில் மழை காலங்களில் அந்த சாக்கடை கழிவுநீர் பள்ளம் நிரம்பி சாலைகள் முற்றிலும் தெரியாமல் ஆறாக ஓடுகிறது.

    மேலும் பவானிசாகர் சாலையில் இருந்து எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் செல்லும் அப்பகுதி மக்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    மேற்படி இருபுறமும் சாக்கடை கழிவுநீர் பள்ளம் இருப்பதால், அது மழைக்காலங்களில் நிரம்பி வழிவதால் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    • கொடிவேரி தடுப்பணைக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது.
    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றானது கொடிவேரி அணை. இந்த அணைக்கு ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநில ங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலா பயனிகள் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை யால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆற்றில் அதிகளவில் வெளி யேற்ற ப்பட்டு வருகிறது.

    இதனால் கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்ெகடுத்து சென்றது. இதையொட்டி சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கொடிவேரியில் நேற்று குளிக்க தடை விதி க்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கோபி மற்றும் சுற்று மழை குறைந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதனால் தடுப்பணையில் வழக்கம் போல் தண்ணீர் செல்கிறது.

    இதையடுத்து தடை நீக்கப்பட்டு கொடிவேரி தடுப்பணையில் இன்று முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் இன்று வழக்கம் போல் பொதுமக்கள் பலர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து மகிழ்ச்சியுடன் குளித்து ரசித்து விட்டு சென்றனர்.

    ×