என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரிய வகையான சருகுமானை காணலாம்
அரிய வகையான சருகுமான் மீட்பு: வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
- மயிலாடி வனப்பகுதியையொட்டி சாலையோரம் ஒரு விலங்கு ஓடுவதை பார்த்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த விலங்கை தூக்கி பார்த்தார்.
- வனத்துறையினர் விரைந்து வந்து அந்த விலங்கு பற்றி ஆராய்ந்தபோது அது அரிய வகை சருகுமான் என தெரிய வந்தது.
ஈரோடு:
உலகிலேயே மிகவும் சிறிய, அரிய வகை உயிரினமாக சருகுமான் கருதப்படுகிறது. இதன் எடை 700 கிராம் முதல் 8 கிலோ இடைப்பட்ட அளவில் இருக்கும். மான் இனம் என்றாலும் இதற்கு கொம்புகள் கிடையாது. ஆனால் சிறிய வால் உண்டு. ஆண் சருகுமானுக்கு மட்டும் கோரைப்பற்கள், ஒரு ஜோடி தந்தம் போல நீண்டு காணப்படும்.
இதன் நிறம் பழுப்பாகவும், உடலின் மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும். மிகவும் அரிதான இந்த மான் மத்திய பிரதேசம், ஒடிசா, பீகார் மற்றும் இலங்கை நாடுகளில் அடர்ந்த காடுகளில் காணப்படும். இந்த அரிய வகையான மான் இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த மயிலாடி என்ற இடத்தில் பாம்பை பிடித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பாம்பு பிடி வீரர் யுவராஜ் வந்து கொண்டிருந்தார்.
அப்போது மயிலாடி வனப்பகுதியையொட்டி சாலையோரம் ஒரு விலங்கு ஓடுவதை பார்த்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த விலங்கை தூக்கி பார்த்தார். பார்க்க வித்தியாசமாக இருந்ததால் இது குறித்து உடனடியாக ஈரோடு வனத்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து அந்த விலங்கு பற்றி ஆராய்ந்தபோது அது அரிய வகை சருகுமான் என தெரிய வந்தது. இந்த மான் இந்த வனப்பகுதியில் எவ்வாறு வந்தது என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதியில் வேறு மான்கள் உள்ளதா? என்றும் சோதனை செய்து வருகின்றனர்.






