என் மலர்
திண்டுக்கல்
- தீபாவளி, ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைக்காக இனிப்பு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.
- மேலும் அடுப்பு, மின்சாதன பொருட்கள் அருகருகே இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (53). இவர் காமராஜர் பஸ் நிலையம் அருகே ஸ்டாலின் காட்டேஜ் பகுதியில் பலகாரம் தயாரிக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். ஆயுத பூஜை முன்னிட்டு இனிப்புகள் தயாரிப்பு பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இரவு வழக்கம் போல் கடையை பூட்டி சென்றார். நள்ளிரவில் கடையில் இருந்து கரும்புகை வெளியானது. இதனை பார்த்த அந்த பகுதியில் சென்றவர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உதவி மாவட்ட அலுவலர் சிவகுமார் தலைமையில், குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர்.
அப்போது தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். 2 தண்ணீர் பீய்ச்சும் வாகனங்கள் மூலம் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரியவந்தது. இதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் கடை எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி, ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைக்காக இனிப்பு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் சிறிய குடோன்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண், பெண் ஊழியர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களுக்கு தினசரி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான கடைகளில் சிறிய இடத்தில் அதிக அளவு ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். மேலும் அடுப்பு, மின்சாதன பொருட்கள் அருகருகே இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பண்டிகை காலங்களில் இதுபோல் அவசர அவசரமாக அதிக அளவு இனிப்புகள் தயாரிக்கும் போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
எனவே பெரும் அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்னர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தற்போது ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை அடுத்தடுத்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
- இதனால் இன்று பல்வேறு ஊர்களில் இருந்து பூக்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டது. இதனால் பல நாட்களுக்கு பிறகு பூக்களின் விற்பனை களைகட்டியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு, மைலாப்பூர், ரெட்டியார்சத்திரம், வடமதுரை, அய்யலூர், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விவசாயிகளால் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இங்கிருந்து வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரை யாகவும் பூக்களை வாங்கி செல்கின்றனர். மேலும் வெளியூர்களுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக புரட்டாசி என்பதால் திருமணம் உள்ளிட்ட எந்தவித விேஷச நிகழ்ச்சிகளும் நிடைபெற வில்லை.
இதனால் பூக்கள் வியாபாரம் மந்தமாக இருந்ததுடன் விலையும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருந்தனர். தற்போது ஐப்பசி மாத முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர தொடங்கியது. தற்போது ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை அடுத்தடுத்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் இன்று பல்வேறு ஊர்களில் இருந்து பூக்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டது. இதனால் பல நாட்களுக்கு பிறகு பூக்களின் விற்பனை களைகட்டியது. இன்று 50 டன் வரை பூக்கள் வந்துள்ள தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மல்லிகை பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனையானது. முல்லை ரூ.600, காக்கரட்டான் ரூ.600, ஜாதிப்பூ ரூ.400, அரளி ரூ.600, சம்பங்கி ரூ.340, செவ்வந்தி ரூ.220, ரோஜா ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.50 என விற்பனையானது.
பூக்களின் விலை அதிகரி த்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல பூஜைக்கு பயன்படுத்தப்படும் பழங்கள், வாழைஇலை உள்ளிட்ட பொருட்களும் விலை அதிகரித்தது. பண்டிகைக்கு 2 நாட்கள் முன்னதாகவே பூஜைக்குரிய பொருட்களின் விற்பனை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி அபினவ்குமார், கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி பாஸ்கரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திண்டுக்கல்:
ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் போலீசார் அணிவகுப்பு நடத்தப்பட்டு எல்லையில் உயிர்தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் இந்த நாளில் காவல்துறை சார்பில் மலர்வளையம் வைத்தும், மவுனஅஞ்சலியும் செலுத்தப்படுவது வழக்கம். 1954-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த உதவி ஆய்வாளர் கரம்சிங் தலைமையில் 10 காவலர்கள் சீனப்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களின் நினைவாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி அபினவ்குமார், கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி பாஸ்கரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் காவல்துறையை சேர்ந்த பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோ விலுக்கு செல்போன், கேமரா கொண்டு வர தடை விதிக்கப்பட்டது.
- 11 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு அதிகாலை முதல் இரவு வரை ஒரு காவலர் நிறுத்தப் பட்டுள்ளார்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இவ்வாறு வரும் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் மலைக்கோவிைல படம் பிடிப்பதுடன் மூலவருக்கு நடைபெறும் பூஜைகளையும் வீடியோவாக எடுத்து சமூக வலைத ளங்களில் வெளியிட்டு வந்தனர்.
இதனையடுத்து மலை க்கோவிலில் செல்போன், கேமரா பயன்படுத்துவை தடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 1ந் தேதி முதல் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோ விலுக்கு செல்போன், கேமரா கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. இவற்றை பாதுகாக்க அடிவாரம், படிப்பாதை பகுதியில் மையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களிடம் இருந்து செல்போன் வாங்கப்பட்டது.
இதனால் மலைக்கோவிலில் செல்போன் பயன்பாடு பெரும்பாலும் குறைந்தது. இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடன் வரும் நபர் காணாமல் போய்விட்டால் அவரை கண்டுபிடிக்க, தொடர்பு கொள்ள சிரமப்பட்டு வந்தனர்.
இதனை போக்கும் வகையில் படிப்பாதை முதல் மலைக்கோவில் வரை 4 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்ப ட்டது. அங்கு ஒரு காவலர் பணியமர்த்தப்பட்டு வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொண்டு பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்து வருகிறார். தற்போது மேலும் சில இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
11 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு அதிகாலை முதல் இரவு வரை ஒரு காவலர் நிறுத்தப்பட்டுள்ளார். பக்தர்களுக்கு தேவைப்படும் உதவியை அவரிடம் தொடர்பு கொண்டு தெரி வித்தால் அதனை நிறை வேற்றி வருகின்றனர். இந்த நடைமுறை பக்தர்களி டம் வரவேற்பை பெற்றுள்ளது.
- தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு, தனியார் நிறுவனங்க ளிலும் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமானோர் முடிவு செய்துள்ளனர்.
சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஏராள மானோர் திரும்பி வருகின்ற னர். இவர்களுக்காக சிறப்பு ரெயில் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்பவர்கள் கிடைக்கும் பஸ்களில் ஏறி சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் திண்டுக்கல் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் நேற்று முதலே பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக திண்டுக்கல் இருப்பதால் பலஊர்களில் இருந்து இங்கு வந்து பின்னர் தங்கள் பகுதிகளுக்கு செல்கின்றனர்.
குறிப்பாக தேனி, பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவர்கள் திண்டுக்கல் வந்து பின்னர் இங்கிருந்து பஸ் மூலம் தங்கள் ஊருக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் திண்டுக்கல்லில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்பவர்களும் டவுன் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இன்னும் 3நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. இதனிடையே திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களிலும், வெளியூர்களில் இருந்து திண்டுக்கல், தேனி உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் ஆம்னி பஸ்களிலும் குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- பிளாஸ்டிக் கைப்பைகள், உபயோகிப்பதற்கும், கையாள்வதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் இரண்டு நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவ்விரு நிறுவனங் களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
திண்டுக்கல்:
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் இணைந்து அனைத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது. இவற்றில் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளின் தடையினை அளவு மற்றும் தடிமன் வரையறையின்றி, தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது.
பாலிஎதிலீன் டெரிப்தாலேட், உயர் அடர்த்தி பாலிஎதிலீன், வினைல், குறைந்த அடர்த்தி பாலிஎதிலீன், பாலிப்ரோப்பிலின், பாலிஸ்டைரீன் ரெசின்கள் போன்ற அதிக மூலக்கூறு எடை கொண்ட பாலிமரில் இருந்து தயாரிக்கப்பட்டு சுயமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், உபயோகிப்பதற்கும், கையாள்வதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பைகள் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், குளத்தூர் கிராமம் மற்றும் ஆத்தூர் வட்டம், பித்தளைப்பட்டி கிராமம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடுவாரியம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளை தயாரி க்கும் இரண்டு நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவ்விரு நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
- கலைவிழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
- கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தமிழக அரசு செயல்படுகிறது என பேசினார்.
ஒட்டன்சத்திரம்:
தமிழக அரசு பள்ளி க்கல்வித்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சுகப்பிரியா வரவேற்று ப்பேசினார். 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனங்கள் ஆடி தங்களின் திறமைகளை காட்டினர். மேலும் கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்கேற்றனர்.
விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மற்றும் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கி அவர் பேசிய தாவது :-
பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஆகிய துறைகளை இரு கண்களாக நினைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் கல்வியின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறார்.
மாணவர்கள் உயர்ந்த எண்ணங்களை கொண்டு நல்ல கல்வி கற்று வாழ்க்கை யில் உயரவேண்டும்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைசாமி, நகராட்சி துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அய்யம்மாள், மாவட்ட கல்வி அலுவலர் (தொட க்கல்வி) செந்தில்முருகன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, கே.ஆர்.அரசு மேல்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி, வட்டார வளமைய வட்டார ஒருங்கிணைப்பாளர் முனித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவ மாணவிகளின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் வட்டார வள மையங்கள் சார்பில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது.
- ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்ட இந்த கலை விழா இந்த ஆண்டு கொடைக்கானலில் பெயரளவிற்கு நடத்தப்பட்டது.
கொடைக்கானல்:
தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவ மாணவி களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் வட்டார வள மையங்கள் சார்பில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மிகுந்த ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்ட இந்த கலை விழா இந்த ஆண்டு கொடைக்கானலில் பெய ரளவிற்கு நடத்தப்பட்டது. பல்வேறு போட்டிகளில் மாணவ-மாணவிகளின் பங்கேற்பு இல்லாததால் போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டது.
போதிய பங்கேற்பு இல்லாததால் பங்கு பெற்ற ஒருவருக்கு மட்டுமே பரிசும் வழங்க ப்பட்டது. கொடைக்கானல் வட்டார வள மையம் சார்பில் கடந்த 18ஆம் தேதி மாணவ-மாணவி களுக்கான கலை விழா தொடங்கியது. இந்த கலைவிழா நிகழ்வில் விழா 3 நாட்கள் நடத்தப்பட வேண்டும். முதல் நாளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ -மாணவிகளுக்காகவும், அடுத்த நாள் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்காகவும், 3ம் நாள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கும் இந்த கலை விழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
கொடைக்கானலில் 21 பள்ளிகள் உள்ளன. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் இங்கு கல்வி பயில்கின்றனர் . ஆனால் கொடைக்கானலில் நடந்த கலைத்திருவிழாவில் சுமார் 150 மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். 26 வகையான போட்டிகள் நடத்தப்பட வேண்டும். முதல் நாள் போட்டிகளில் 130 மாணவ- மாணவிகள் மட்டுமே பங்கேற்று உள்ளனர். 2ம் நாள் போட்டிகளில் சுமார் 60 மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். 3ம் நாள் போட்டி நடத்தப்படவே இல்லை. மாணவ-மாணவிகள் பங்கேற்காத காரணத்தினால் 3ம் நாள் போட்டி ரத்து செய்ய ப்பட்டது.
வட்டார வள மைய பொறுப்பு அலுவலர் சகாய செல்வி என்பவர் இந்த கலைத் திருவிழாவிற்கு பொறுப்பு ஏற்று நடத்தியுள்ளார். போதிய ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினாலும் பெயரளவிற்கு நடத்த ப்பட்டதாலும் கொடை க்கானல் மலைப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளி க்கொணர முடியாமல் இந்த கலைத் திருவிழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிக் கொணர்வதே இதன் அடிப்படை நோக்கமாக உள்ளது. ஆனால் இந்த அடிப்படை நோக்கத்தை தகர்க்கும் விதமாக கொடைக்கானலில் நடந்த கலை விழா நடந்துள்ளது. கொடைக்கானலில் நடந்த கலை விழா பொறுப்பா ளர்கள் முன் தயாரிப்பு சந்திப்புகளையோ, அல்லது 21 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களையோ சந்திக்காமல் அவர்களுடன் கலந்துரையாடல் செய்யாமல், பெயரளவிற்கு இந்த போட்டிகளை நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியைச் சேர்ந்த மலை வாழ் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியாமலும் பரிசுகள் பெற முடியாமலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்த கலை விழா போட்டிகளை ஒருங்கிணைப்புடன் செய்து மலைவாழ் மாணவ மாணவிகளின் திறமைகளை வெளியே கொண்டு வந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவரை கூட்டாளிகள் வெட்டி படுகொலை செய்தனர்.
- அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கொலைக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்ததாக தகவல் கிடைத்தது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் அழகர் (வயது48). இவர் சுள்ளான் ரமேஷ் என்பவரது கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு இருந்ததால் ரமேசின் கூட்டாளிகள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டில் கார்த்திக், சிவா, கணேசசபரி, மாணிக்கம், சதீஷ், சார்புதீன் ஆகியோர் சரண் அடைந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலைக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்ததாக திண்டுக்கல்லை சேர்ந்த அய்யனார் (26), ராம்குமார் (22), பிரசாத் (30), முத்துக்காமாட்சி (22) ஆகிய 4 பேரையும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நல்லக்கண்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேரும் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஆங்காங்கே மானாவாரி பயிர்களான கம்பு, சோளம். பாசிப்பயிறு, உளுந்து, துவரை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை மழையை நம்பி சாகுபடி செய்தனர்.
- அவ்வாறு சாகுபடி செய்த பயிர்களில் பாசிப்பயிர் செடிகள் தற்போது பெய்த மழையால் நன்றாக விளைந்துள்ளது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள கிராமங்களில் மிளகாய் பட்டி, ஆண்டிபட்டி, பிள்ளையார் நத்தம், குரும்பபட்டி, மைக்கேல் பாளையம், செம்பட்டி என். ஊத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெய்த மழையின் எதிரொலியாக விவசாயிகள் உளவடைப்பணியை தொடங்கி ஆங்காங்கே மானாவாரி பயிர்களான கம்பு, சோளம். பாசிப்பயிறு, உளுந்து, துவரை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை மழையை நம்பி சாகுபடி செய்தனர்.
அவ்வாறு சாகுபடி செய்த பயிர்களில் பாசிப்பயிர் செடிகள் தற்போது பெய்த மழையால் நன்றாக விளைந்துள்ளது. பச்சை பசேலென்று அறுவடைக்கு தயாராகும் நிலையில் நன்றாக விளைந்துள்ளது.
இதனால் பாசிப்பயிர் சாகுபடி செய்து விவசாயிகள் இந்தாண்டு நிச்சயமாக நல்ல மகசூல் கிடைக்கும் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
- வீட்டிற்குள் இருந்த ஒரு அறையில் திண்ணப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
- கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டி தொகையை செலுத்த முடியவில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் 5-வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் திண்ணப்பன் (வயது75). இவர் தனது மனைவி மீனாள் (64), மகன் அருணாச்சலம் (35), மருமகள் லட்சுமி (30), பேரன்கள் சித்தார்த் (12), நித்தின் (7) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
திண்ணப்பன் தனது மகனுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களாக இவரது வீடு பூட்டியே இருந்தது. வீட்டிற்குள் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து சென்றுள்ளனர். மேலும் அவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வீட்டிற்கு சென்றபோது போலீசாரை தள்ளி விட்டு சிலர் தப்பி ஓடினர்.
இதனால் சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் சென்று போலீசார் பார்த்தனர்.
வீட்டிற்குள் இருந்த ஒரு அறையில் திண்ணப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வந்தனர்.
போலீசாரிடம் திண்ணப்பன் தெரிவிக்கையில், நான் தொழில் விஷயமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜாகருப்பையா என்பவரிடம் பணம் வட்டிக்கு வாங்கினேன். நானும் அவரும் 12 வருடங்களுக்கு மேல் ஒன்றாக தொழில் செய்து வருகிறோம். இதனால் அவரும் வட்டிக்கு பணம் கொடுத்தார். அதற்காக மாதந்தோறும் வட்டி தொகையை செலுத்தி வந்தேன்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டி தொகையை செலுத்த முடியவில்லை. இருந்தபோதும் அதன்பிறகு ராஜாகருப்பையா எனக்கு சொந்தமான சொத்துக்களை கட்டாயப்படுத்தி பத்திரப்பதிவு செய்து வட்டி தொகையை எடுத்துக் கொண்டார்.
கடந்த சில மாதங்களாக நான் வாங்கிய பணத்துக்கு மேலும் பணம் தர வேண்டும் என என்னை மிரட்டி வந்தார். அவரிடம் டிரைவராக வேலை பார்க்கும் ரவி மற்றும் சரவணன் ஆகியோரை அனுப்பி பணம் கேட்டு மிரட்டினர்.
நான் அவசாகம் கேட்டும் அவர்கள் கேட்கவில்லை. இந்நிலையில் அடியாட்களை வைத்து தொடர்ந்து மிரட்டி வந்தனர். கடந்த 17ந் தேதி இரவு எனது வீட்டிற்குள் வந்த கும்பல் எங்களிடம் இருந்த அனைத்து செல்போன்களையும் பறித்து வைத்துக் கொண்டனர். வாங்கிய கடனுக்கு பணம் எங்கே என கேட்டு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த 2 காரையும் எடுத்து சென்று விட்டனர். பின்னர் எங்களை ஒரே அறையில் அடைத்து பணம் கொடுக்கும் வரை வெளியே விடமாட்டோம் என தெரிவித்து பூட்டி விட்டனர்.
இதனால் எனது பேரன்கள் 2 பேரும் பள்ளிக்குகூட செல்ல முடியவில்லை. எங்களால் இயற்கை கடனை கழிக்க கூட இயலவில்லை. 5 பேர் கொண்ட அடியாள் கும்பல் வீட்டிலேயே முகாமிட்டு சினிமா பாணியில் தொடர்ந்து மிரட்டி வந்தனர்.
எங்களிடம் இருந்த பத்திரங்கள், ஏ.டி.எம். அட்டை, ரூ.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் எடுத்து சென்று விட்டனர். எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டிய ராஜாகருப்பையா, டிரைவர் ரவி, சரவணன் மற்றும் பெயர் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் தப்பி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே 3 நாட்களாக ரியல்எஸ்டேட் குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மர்மநபர்கள் அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, பணம், செல்போனை பறித்ததை பார்த்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் சத்தம் போட்டனர்.
- போலீசார் ரோந்து பணியே மேற்கொள்ளாத நிலையில் பொது மக்களே சுற்றிவளைத்து பிடித்ததால் 2 பேர் சிக்கியுள்ளனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகில் உள்ள சென்னம நாயக்க ன்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார்(32). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைகடை அதிபரிடம் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். நேற்றிரவு பணியை முடித்துவிட்டு இரவு 11 மணிக்குமேல் தன்வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
கரூர் பைபாஸ் சாலையில் அஞ்சலிரவுண்டானா அருகே வந்தபோது தனது பைக்கை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை கத்தி முனையில் தாக்கி பணம் மற்றும் செல்போனை கேட்டு மிரட்டினர்.
மேலும் அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கசங்கிலி, செல்போன் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டனர். அதன்பிறகு சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரையும் மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்தனர். அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, பணம், செல்போனை பறித்ததை பார்த்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் சத்தம் போட்டனர்.
இதேபோல் பூதிப்புரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஓடிவந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை விரட்டிச்சென்றனர். அதில் ஒருவர் தப்பிஓட மற்ற 2 பேரையும் பிடித்து கொண்டனர். அவர்கள் பாலதிருப்பதியை சேர்ந்த சதீஸ்(18), நவீன்(19) என தெரியவந்தது. அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து தாடிக்கொம்பு போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர்.
போலீசார் அவர்களை விசாரணைக்காக அழைத்து ச்சென்றனர். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்களை யும், தனியாக நடந்து செல்பவர்களையும் குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. போலீசார் ரோந்து பணியே மேற்கொ ள்ளாத நிலையில் பொது மக்களே சுற்றிவளைத்து பிடித்ததால் 2 பேர் சிக்கியுள்ளனர்.
இதேபோல மேலும் பல வழிப்பறிகும்பல் நகரின்பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகின்றனர். பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இதுபோன்ற வழிப்பறி கொள்ளை யர்களை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






