என் மலர்
நீங்கள் தேடியது "பலகார கடையில் பயங்கர தீ விபத்து"
- தீபாவளி, ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைக்காக இனிப்பு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.
- மேலும் அடுப்பு, மின்சாதன பொருட்கள் அருகருகே இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (53). இவர் காமராஜர் பஸ் நிலையம் அருகே ஸ்டாலின் காட்டேஜ் பகுதியில் பலகாரம் தயாரிக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். ஆயுத பூஜை முன்னிட்டு இனிப்புகள் தயாரிப்பு பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இரவு வழக்கம் போல் கடையை பூட்டி சென்றார். நள்ளிரவில் கடையில் இருந்து கரும்புகை வெளியானது. இதனை பார்த்த அந்த பகுதியில் சென்றவர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உதவி மாவட்ட அலுவலர் சிவகுமார் தலைமையில், குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர்.
அப்போது தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். 2 தண்ணீர் பீய்ச்சும் வாகனங்கள் மூலம் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரியவந்தது. இதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் கடை எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்ட போது ஊழியர்கள் அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி, ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைக்காக இனிப்பு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் சிறிய குடோன்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண், பெண் ஊழியர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களுக்கு தினசரி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான கடைகளில் சிறிய இடத்தில் அதிக அளவு ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். மேலும் அடுப்பு, மின்சாதன பொருட்கள் அருகருகே இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பண்டிகை காலங்களில் இதுபோல் அவசர அவசரமாக அதிக அளவு இனிப்புகள் தயாரிக்கும் போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
எனவே பெரும் அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்னர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






