என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • மாடியில் குடியிருந்த நர்சு வீட்டிற்குள்ளும் கொள்ளையடிக்க முயன்றனர்.
    • வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 75). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு சொந்தமான வீடு இதே பகுதியில் உள்ளது. வீட்டின் மாடியில் நர்சு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுவிட்டு கீழ் தளத்தில் வசித்து வந்தனர்.

    மேலும் வேலுச்சாமி குடும்பத்துடன் ஆந்திராவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு அங்கேயே தங்கியிருந்தனர். எப்போதாவது விடுமுறைக்கு மட்டுமே இங்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். மேலும் பீரோவையும் உடைத்து அதிலிருந்த தங்கம், வெள்ளி நகைகளையும், ரொக்க பணத்தையும் அள்ளிச் சென்றனர்.

    இதனையடுத்து மாடியில் குடியிருந்த நர்சு வீட்டிற்குள்ளும் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அருகில் இருந்த மற்றொரு வீட்டின் வாசலில் கட்டியிருந்த 2 சேவல்களையும் திருடிக்கொண்டு அக்கும்பல் தப்பியோடினர்.

    காலையில் வேலுச்சாமியின் வீடு திறந்து கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் கொள்ளை நடந்த விவரம் தெரியவந்தது. இதுகுறித்து வேலுச்சாமியிடம் கேட்ட போது பீரோவில் 3 பவுன் தங்கநகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் வைத்திருந்ததாக தெரிவித்தார்.அந்த நகை, பணம் திருடு போனது.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திண்டுக்கல்லில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தி யாகும் கொசுக்களால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
    • நமது இடத்தை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகளை சுத்தமாகவும், காற்று புகாதபடி மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டு ள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தி யாகும் கொசுக்களால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதற்காக தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சுகாதாரம் மற்றும் டெங்கு விழிப்பு ணர்வு குறித்து மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் ஆர்.எம். காலனி, ராமநாதபுரம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதியில் இன்று காலை வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது மக்கும், மக்கா குப்பைகள் தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். நமது இடத்தை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகளை சுத்தமாகவும், காற்று புகாதபடி மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பள்ளி குழந்தைகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி சக மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் குடியிருப்பு பகுதிகளில் புகை தெளி ப்பான் மூலம் கொசுக்களை ஒழிக்கும் பணியை பார்வையிட்டார். வீட்டில் மாடி தோட்டம், காலி இடங்களில் காய்கறி தோட்டம் அமைத்த வர்களுக்கு மாநகராட்சி உரங்களை பயன்படுத்த வலியுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் ராஜ்மோகன், உதவி கமிஷனர் வில்லியம் சகாயராஜ், மண்டல தலைவர் ஆனந்த், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணா மூர்த்தி, பாலமுருகன், தங்கவேல், முகமது ஹனீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
    • இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசி களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    தென்தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் விளங்குகிறது. சுற்று வட்டார பகுதிகளான காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, கொசவபட்டி, அம்பி ளிக்கை, கள்ளிமந்தையம், கேதையரும்பு, இடைய கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்பில் காய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இங்கிருந்து ஒட்டன்ச த்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் வெளி மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசி களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆயுதபூஜை, பொங்கல் மற்றும் பூஜை நாட்களில் அர்ஜூனா பூசணிக்காய் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். இங்கிருந்து மகாராஸ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வெளி மாநில வியாபாரிகள் வராததால் பூசணிக்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

    வழக்கமாக 1 கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விலை கேட்கப்படும். ஆனால் தற்போது ரூ.7க்கு மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுதவிர மற்ற காய்கறிகளின் வலை கனிசமாக உயர்ந்துள்ளது.

    கடந்த மாதம் ரூ.25க்கு விற்பனையான சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.80க்கு விற்கப்பட்டது. ரூ.15க்கு விற்கப்பட்ட பல்லாரி ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. கரும்பு முருங்கை ரூ.70, மர முருங்கை ரூ.45, செடி முருங்கை ரூ.60, வெண்டை க்காய் ரூ.30, புடலங்காய் ரூ.30, பாகற்காய் ரூ.25, கல்லாமை மாங்காய் ரூ.65, உருட்டு மாங்காய் ரூ.45, உருளைக்கிழங்கு ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.55, பீன்ஸ் ரூ.45 என்ற விலையில் விற்பனையானது.

    20 கிலோ பை பச்சை கத்தரிக்காய் ரூ.400, வெள்ளை கத்தரிக்காய் ரூ.500, கலர் கத்தரிக்காய் ரூ.550, 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. இனிவரும் காலங்களில் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு போலீஸ் சார்பில் பஸ்நிலையத்தில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு போலீஸ் சார்பில் பஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரூபா தலைமையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    ஊழலை மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் காவடியாட்டம், தேவராட்டம், கரகாட்டம் ஆடியபடி விழிப்புணர்வு பாடல்கள் பாடி பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் “தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • “தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்சேக் முகையதீன் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று"தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    மறைந்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், அக்டோபர் 31-ஆம் தேதியன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் இந்திய அரசு சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டின் மூலம் சுதந்திர இந்தியாவின் சிற்பியாக சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பை இந்தச் சந்தர்ப்பம் அங்கீகரிக்கிறது.

    தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தாங்கும் நமது மக்களின் உள்ளார்ந்த வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் நாள் இதுவாகும். இதை முன்னிட்டு "தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி, மாவட்ட வருவாய் அலுவலர் "இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும், உளமார உறுதியளிக்கிறேன்.

    சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்" என "தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    • கொடைக்கானலில் நகர் பகுதிகளில் தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
    • பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறாக இருந்த குரங்கு கூட்டத்தை கொடைக்கானல் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் நகர் பகுதிகளில் தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வனவிலங்கு களான காட்டெருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி உலா வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் கொடைக்கானல் நகர் பகுதிகளில் அதிக அளவில் குரங்குகளின் நடமாட்டம் உள்ளது.

    வீடுகள், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றில் இவை புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டும் எழுந்து வந்தது. இந்த நிலையில் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறாக இருந்த குரங்கு கூட்டத்தை கொடைக்கானல் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

    மேலும் பிடிபட்ட குரங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். மேலும் பொது மக்களுக்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுத்தி வரும் காட்டெருமை கூட்டத்தை யும் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • பழனி நகரில் அடிவாரம், கிரிவீதி, ஆர்.எப்.ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் நெரிசலான பகுதியாக உள்ளது.
    • கயிறு கட்டிய இடத்தை கடந்து வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    பழனி:

    பழனி நகரில் அடிவாரம், கிரிவீதி, ஆர்.எப்.ரோடு உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் நெரிசலான பகுதியாக உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவ தால் மாலைநேரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    ஜவுளி கடைகள் அதிகம் உள்ள ஆர்.எப். ரோடு பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை யோர ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆர்.எப். ரோடு பகுதியில் வாகனங்கள் நிறுத்த கயிறு கட்டி இடம் கொடுக்க ப்பட்டது. அந்த இடத்தை கடந்து வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கடந்து ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது.

    தீபாவளி பண்டிகை வரை பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூரின்றி வியாபாரிகள் வியாபாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    • தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 2 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று திண்டுக்கல் மாவட்ட த்தில் தாலுகா வாரியாக முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் பாலன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மீனாட்சி நாயக்க ன்பட்டி, செட்டிநாயக்க ன்பட்டி, சின்ன பள்ள ப்பட்டி, முத்தழகுபட்டி, ம.மு. கோவிலூர், பூதிபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோசங்க ளை எழுப்பி அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட கவுரவத்தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த போலி நிருபர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஓட்டல், விடுதி உரிமையாளர்கள், அரசு அதிகாரிகளையும் குறி வைத்து தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நடுத்தர வசதியுடன் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய பல்வேறு விடுதிகள், ஓட்டல்கள், காட்டேஜ்கள், ரிசார்டுகள் ஆகியவை உள்ளன. இது போன்ற இடங்களை குறி வைத்து தீபாவளி சமயத்தில் வசூல் வேட்டை நடத்தி வருவது பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.

    தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த போலி நிருபர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கார்களில் 10க்கும் மேற்பட்டோர் வந்து தங்கள் பெயர் மற்றும் செல்போன் எண்ணை கொடுத்து விட்டு கேள்விப்படாத சில பெயர்களை கூறி அங்கு வேலை பார்ப்பதாக பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.

    இது போன்ற பெயரை கேள்விப்பட்டதே இல்லை என ஓட்டல், விடுதி உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். இது மட்டுமின்றி அரசு அதிகாரிகளையும் குறி வைத்து தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபடும் இக்கும்பல் அதிகாரம் காட்டி வருவதாக தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது என தெரியாமல் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தமிழகத்தில் இது போன்ற வசூல் வேட்டையில் ஈடுபடும் நபர்களை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் இந்த மாவட்ட கலெக்டர் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களது பெயர் மற்றும் செல்போன் எண்ணை சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு கூறியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் அங்கு குறைந்துள்ளது. அது போன்ற ஒரு அதிரடி உத்தரவை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆகியோர் பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    • ஜவுளித்தொழில் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர் களுடன் ஆலோசனைக் கூட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    திண்டுக்கல்:

    ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

    தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து தமிழ்நாடு அரசினால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

    எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும். இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திட்ட பலன்கள் குறித்து எடுத்துரைக்கவும்,

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள், ஜவுளித்தொழில் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 3-ந் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    • மாவட்ட கலெக்டர் “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.
    • நேர்மை உறுதிமொழி வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கலெக்டர் பூங்கொடி தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் நேர்மை உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் "நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.

    நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன்.

    எனவே நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும் லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும் பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும் தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும் ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்" என நேர்மை உறுதிமொழி வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    • பிறந்த நாள் விழா திண்டுக்கல் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி அனுமந்த நகரில் கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கினார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா திண்டுக்கல் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி அனுமந்த நகரில் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் பழனிச்சாமி, கிளை செயலாளர் டாஸ்மாக் மாரிமுத்து, ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் பாலமுருகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கதிரேசன், முன்னாள் ஊராட்சி செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் பரமேஸ்வரி பாண்டித்துரை, அழகு பொன்னையா, காமாட்சி நகர் கிளை செயலாளர் செந்தில்குமார், மாபல் அறக்கட்டளை கோபி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×