search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blackmailing"

    • தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த போலி நிருபர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஓட்டல், விடுதி உரிமையாளர்கள், அரசு அதிகாரிகளையும் குறி வைத்து தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நடுத்தர வசதியுடன் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய பல்வேறு விடுதிகள், ஓட்டல்கள், காட்டேஜ்கள், ரிசார்டுகள் ஆகியவை உள்ளன. இது போன்ற இடங்களை குறி வைத்து தீபாவளி சமயத்தில் வசூல் வேட்டை நடத்தி வருவது பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.

    தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த போலி நிருபர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கார்களில் 10க்கும் மேற்பட்டோர் வந்து தங்கள் பெயர் மற்றும் செல்போன் எண்ணை கொடுத்து விட்டு கேள்விப்படாத சில பெயர்களை கூறி அங்கு வேலை பார்ப்பதாக பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.

    இது போன்ற பெயரை கேள்விப்பட்டதே இல்லை என ஓட்டல், விடுதி உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். இது மட்டுமின்றி அரசு அதிகாரிகளையும் குறி வைத்து தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபடும் இக்கும்பல் அதிகாரம் காட்டி வருவதாக தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது என தெரியாமல் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தமிழகத்தில் இது போன்ற வசூல் வேட்டையில் ஈடுபடும் நபர்களை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் இந்த மாவட்ட கலெக்டர் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களது பெயர் மற்றும் செல்போன் எண்ணை சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு கூறியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் அங்கு குறைந்துள்ளது. அது போன்ற ஒரு அதிரடி உத்தரவை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆகியோர் பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    ×