என் மலர்
திண்டுக்கல்
- மடத்தில் வழிபாடு நடத்திய பொது மக்கள் இரு பிரிவுகளாக பிரிந்தனர்.
- பூட்டை உடைத்து வழிபாடு நடத்தினர். அங்கு சிவன் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
வடமதுரை:
வடமதுரை அருகே எஸ்.பாறைப்பட்டியில் உள்ள மடத்தின் வளாகத்தில் சிவன்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிராம மக்கள் சார்பில் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மடத்தில் வழிபாடு நடத்திய பொது மக்கள் இரு பிரிவுகளாக பிரிந்தனர். பிரதோசத்தை யொட்டிநேற்று காலை ஒரு தரப்பினர் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் அவர்கள் கோவிலை பூட்டி சென்றனர். மாலையில் மற்றொரு தரப்பினர் வழிபாட்டிற்காக வந்தபோது பூட்டின் சாவியை எதிர்தரப்பினர் தரவில்லை.
இதனால் அவர்கள் பூட்டை உடைத்து வழிபாடு நடத்தினர். அங்கு சிவன் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையில் வடமதுரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பூட்டை உடைத்து கோவிலில் பொதுமக்கள் பூஜை நடத்திய சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு சென்றார்.
- மாலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் சுகன்யாவுக்கு டந்த 45 நாட்களுக்கு முன்பு 2வது ஆண் குழந்தை பிறந்தது. குரு பிரசாத் என அந்த குழந்தைக்கு பெயரிட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டுக்கு வந்த அங்கன்வாடி பணியாளர் குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசியை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து போட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார்.
அதன்படி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு சென்றார். அதன் பிறகு நேற்று மாலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் தடுப்பூசி போட்டதால் காய்ச்சல் இருக்கலாம் என நினைத்து ஆஸ்பத்திரியில் கொடுத்த மருந்துகளை கொடுத்துள்ளனர்.
இன்று காலை தனது குழந்தைக்கு சுகன்யா தாய்ப்பால் கொடுத்தார். ஆனால் பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா மற்றும் அவரது கணவர் குழந்தையை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் கதறி அழுதனர். தடுப்பூசி போட்ட பிறகுதான் தனது குழந்தைக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தற்போது உயிரிழந்து விட்டதாகவும் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே குழந்தை இறப்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- பழனி முருகன் கோவிலில் வருகிற ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- கோவில் அர்ச்சகர்கள் யாரும் ஒத்துழைக்க கூடாது என்பது போல அர்ச்சகர் சங்கதலைவர் பேசும் ஆடியோ வாட்ச்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகஊடகங்களில் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல்:
பழனி முருகன் கோவிலில் வருகிற ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பழமையான சிற்பங்கள் புனரமைக்கப்பட்டு புதிய வண்ணங்கள்தீட்டும் பணி நடந்து வருகிறது.
கோவில் உட்பகுதியில் சன்னதி மண்டபங்களில் பக்தர்கள் வசதிக்காக பொருத்தியிருந்த ராட்சத குளிர்சாதன பெட்டிகளுக்கு பதிலாக ரூ.25 லட்சம் மதிப்பில் நவீனகுளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்காக கோவில் உட்பகுதியில் மூலவர் சன்னதி பகுதியில் இருந்து பழைய குளிர்சாதன பெட்டிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதேபோல் பல்வேறு இடங்களிலும் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேகம் அவசரகதியில் நடத்தப்படுவதாகவும், இதற்கு கோவில் அர்ச்சகர்கள் யாரும் ஒத்துழைக்க கூடாது என்பது போல அர்ச்சகர் சங்கதலைவர் பேசும் ஆடியோ வாட்ச்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இதுபக்தர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் தங்களுக்கு தெரியாது என தெரிவித்துவிட்டனர்.
- கொடைக்கானலில் ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு தற்போது ரூ.39 கோடி மதிப்பில் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பல்வேறு நகராட்சி வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு தற்போது ரூ.39 கோடி மதிப்பில் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் நகராட்சி அண்ணா சாலைப்பகுதியில் தினசரி காய்கறி சந்தை வளாகம், அரசு ஆஸ்பத்திரி, கிளை கட்டிடம், ஏரிச்சாலையைச் சுற்றி சுற்றுலா பயணிகளை கவரும் விதமான நவீன டைல்ஸ் பதிக்கும் பணிமற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி, ஆனந்தகிரி பகுதியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நூலகம்,
ஏரிச்சாலை, அண்ணா சாலை, நாயுடுபுரம் போன்ற பகுதிகளில் பயோமெட்ரிக் முறை மற்றும் சிறுவர் சிறுமிகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளிடம் கூடிய 4 கழிப்பறைகள், ஆனந்தகிரி பிரெஞ்ச்லேண்ட் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம், அப்சர்வேட்டரி வி.ஜி.பி.குடியிருப்பு பகுதிக்குள் 2 நவீன பூங்காக்கள்,
கொடைக்கானல் கல்லறை மேடு பகுதியில் உள்ள மின் மயானத்தில் எல்.பி.ஜி கேஸ் பயன்படுத்தும் நவீன எந்திரம் பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், பிரகாசபுரம் குப்பைகள் சேமிப்புக்கிடங்கு பகுதியில் குப்பைகளை மறுசுழற்சி செய்து மின்சாரம் தயாரித்து தெரு விளக்குகளுக்கு பயன்படுத்துவது, பயோ கேஸ் தயாரித்தல், மறுசுழற்சியில் நவீன உரம் தயாரிக்கும் பணி,
அப்சர்வேட்டரி குடிநீர் தேக்க துணை அணையின் விரிவாக்கம் மற்றும் மறு சீரமைப்பு கட்டிடப்பணி ஆகிய திட்டங்களுக்கென ரூ.39 கோடி விடுவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை நகராட்சிகள் நிர்வாகத்துறை இயக்குநர் பொன்னையா அறிவுறுத்தலின்படி நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் சரவணன், மண்டல தலைமை செயற்பொறியாளர் மனோகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், உதவிப்பொறியாளர் செல்லத்துரை மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
- குடியிருப்பு பகுதியில் தனி நபர்ஒருவர் பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனி அமைக்க கட்டிடப் பணிகளை செய்து வருகிறார்
- அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு நுழைவுவாயில் சோணை கருப்பசாமி கோவில் பின்புறம் குடியிருப்பு பகுதியில் தனி நபர்ஒருவர் பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனி அமைக்க கட்டிடப் பணிகளை செய்து வருகிறார்.
இதனால் குடிநீர் மற்றும் காற்று மாசுபட்டு பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று கூறி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனிஅமைக்க ஏற்பாடு செய்து வருபவர் மாசு ஏற்படாத வண்ணம் வேறு தொழில் தொடங்கட்டும். குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் தொடங்கினால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். எனவே வேறு பகுதியில் இதனை அமைக்க வேண்டும்.
இதற்கு தீர்வு காணப்படாவிட்டால் அப்பகுதி மக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.
- கொடைக்கானல் நகர்மற்றும் மலைகிராமங்களில் தினசரி 20 முறைக்கு மேல் மின்வெட்டு ஏற்படுகிறது.
- 40 கி.மீ சுற்றளவுக்கு ஒரே துணைமின்நிலையம் இருப்பதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் மின்வாரிய ஊழியர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர்
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த மாத இறுதியில் 7 டிகிரி செல்சியசுக்கு கீழ் வெப்பநிலை குறைந்ததால் பல இடங்களில் உறைபனி ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு பெய்த மழை காரணமாக இயல்பு நிலைக்கு திரும்பியது.
தற்போது மழை முற்றிலும் நின்றுவிட்ட நிலையில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் நகர்மற்றும் மலைகிராமங்களில் தினசரி 20 முறைக்கு மேல் மின்வெட்டு ஏற்படுகிறது.
கொடைக்கானலில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் காலை 8 மணிக்கே தயாராகிவிடவேண்டும். ஆனால் அதற்குள்ளாகவே 4 முறை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு தேவையான உணவு தயாரித்து கொடுப்பதிலும், சுடுதண்ணீர் வைப்பதற்குகூட இயலாமல் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் தவித்து வருகின்றனர்.
பகல் நேரங்களிலும் இதேபோல் மின்வெட்டு ஏற்படுவதோடு மாலை நேரங்களிலும் தொடர்கிறது. தற்போது அரையாண்டுத்தேர்வு நடந்து வரும் நிலையில் தேர்வுக்கு தயாராக முடியாத நிலையில் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வயதான முதியவர்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டாலும் உரிய பதில் கிடைப்பதில்லை. எனவே முன்னறிவிப்பின்றி நடக்கும் மின்வெட்டை போக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 40 கி.மீ சுற்றளவுக்கு ஒரே துணைமின்நிலையம் இருப்பதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் மின்வாரிய ஊழியர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் கூடுதல் மின்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
- பிப்ரவரி 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- திருத்தேரோட்டம் பிப்ரவரி 4-ந்தேதி நடக்கிறது.
தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கோவிலுக்கு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அடிப்படை வசதிகள் குறித்து கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தின்போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதமாக முத்துக்குமாரசாமி தந்த பல்லக்கு, வெள்ளி ஆட்டுகிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் பிப்ரவரி 3-ந்தேதி இரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் வள்ளி-தெய்வானை சமேதமாக முத்துகுமாரசாமி உலாவரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச திருத்தேரோட்டம் 4-ந்தேதி நடக்கிறது.
வழக்கமாக தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் டிசம்பர் மாத இறுதியில் இருந்தே வரத்தொடங்கி விடுவார்கள். மேலும் பொங்கல் பண்டிகை, தைப்பூச திருவிழாவின்போதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டிசம்பர் மாதத்தில் இஸ்ரேல் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலுக்கு வருகின்றனர்.
- உலர் பழங்கள், உயர்ந்த வகை ஒயின் கொண்டு இந்த கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
குறிப்பாக டிசம்பர் மாதத்தில் இஸ்ரேல் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலுக்கு வருகின்றனர்.
இதனால் வட்டகானல் பகுதியில் போலீசார் பாதுகாப்பும் அதிகரிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அதனைத் தொடர்ந்து புத்தாண்டு பிறப்பு என ஒரு வார காலம் திருவிழாபோல் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கும். அவர்களை மகிழ்விக்கும் விதமாக நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் பல்வேறு அலங்காரங்கள், ஸ்டார் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது கேக் ஆகும். கொடைக்கானலில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் மட்டும் பிரத்தியேக கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. உலர் பழங்கள், உயர்ந்த வகை ஒயின் கொண்டு இந்த கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் சுவை சுற்றுலா பயணிகளை சுண்டி இழுப்பதால் விற்பனை களைகட்டி உள்ளது.பல்வேறு ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் கேக்குகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
- கொடைக்கானலில் மிக அரிதாக டிசம்பர் மாதங்களில் மட்டும் பூத்துக்குலுங்கும் சிலுவை மலர்கள் தற்போது அதிகளவில் மலைப்பகுதியில் பூத்து குலுங்குகின்றன.
- சிலுவை மலர்கள் பூத்து குலுங்குவதால் கிறிஸ்துவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் மிக அரிதாக டிசம்பர் மாதங்களில் மட்டும் பூத்துக்குலுங்கும் சிலுவை மலர்கள் தற்போது அதிகளவில் மலைப்பகுதியில் பூத்து குலுங்குகின்றன, கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவரும் இடமான பிரையண்ட் பூங்காவிலும் குடியிருப்பு பகுதிகளான எம்.எம்.தெரு, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன.
மகரந்த தாழ்கள் சிலுவை வடிவில் உள்ளதால் இதனை சிலுவை மலர்கள் என்று அழைக்கின்றனர். மஞ்சள், இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் பூக்கக்கூடியது. எபிடென்ட்ரம் இபாகென்ஸ் என தாவரவியல் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.
தாவரங்கள் நிழலில் வளரக்கூடியது. மேலும் குளிர் பிரதேசங்களில் மட்டும் வளரும் தன்மை கொண்டது. இந்த மலர்கள் கொலம்பியா, மற்றும் வடக்கு பிரேசில் உள்ளிட்ட முக்கிய நாடுகளில் வளரக்கூடியது, கொடைக்கானலுக்கு அதிகளவில் வெளிநாட்டினர் வருவதால் பண்டைய காலத்தில் இவ்வகை தாவரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு நடப்பட்டது. இதில் இன்றளவும் ஒரு சில தாவரங்களே தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது.
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலமான டிசம்பர் மாதத்தில் மட்டும் குறிப்பாக இந்த சிலுவை மலர்கள் பூத்து குலுங்குவதால் கிறிஸ்துவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
- கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள வனங்களிலிருந்து அவ்வப்போது காட்டெருமைகள் நகர் பகுதிக்குள் உலாவருவது வாடிக்கையாகும்.
- முன்பு காட்டெருமை தெருவில் வந்தால் ஓரமாக சென்ற நபர்கள் தற்போது தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள வனங்களிலிருந்து அவ்வப்போது காட்டெருமைகள் நகர் பகுதிக்குள் உலாவருவது வாடிக்கையாகும். நகர்ப்பகுதியின் ஒரு சில இடங்களில் புகுந்துள்ள காட்டெருமைகள் அங்கேயே நிரந்தரமாக முகாமிட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது.
இதேபோல் சமீப காலமாக நகர் பகுதிக்குள் அமைதியாக உலா வந்த காட்டெருமைகள் அவ்வப்போது வாகனங்களின் மீதும்,நடந்து செல்வோர் மீதும் மோதி உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. நகர் பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தற்காலிக பணியாளர்களை நியமித்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் அவ்வப்போது நகர் பகுதியின் ஒரு சில இடங்களில் புகும் காட்டெருமைகளை கண்டறிந்து வனப்பகுதிக்கு விரட்டி வருகின்றனர்.இருப்பினும் உகார்தேநகர் பகுதியில் திடீரென்று கூட்டமாக காட்டெருமைகள் உலா வந்தது.
இதனால் பொதுமக்கள் மற்றும் அவ் வழியாக வந்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.நகர் பகுதியின் ஒரு சில இடங்களில் காட்டெருமைகள் புகுவதை வனத்துறையினர் எவ்வாறு தடுத்து நிறுத்தினாலும் எங்காவது ஒரு பகுதியில் இருந்து காட்டெருமைகள் புகுந்து விடுகின்றன.
நிரந்தரமாக வனப் பகுதியில் இருந்து நகர்ப்பகுதிக்குள் நுழையும் காட்டெருமைகளை முழுமையாக அகற்ற நகரின் பல்வேறு பகுதிகளில் கூடுதலாக வனத்துறை பணியாளர்களை நியமித்து அச்சத்தை போக்க வேண்டும். முன்பு காட்டெருமை தெருவில் வந்தால் ஓரமாக சென்ற நபர்கள் தற்போது தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
- பழனி பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு உள்ளிட்ட அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
- அணையில் இருந்து உபரிநீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
பழனி:
கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவை பொருத்து பழனியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பரவலாக தற்போது மழை பெய்து வருவதால் மலையடிவாரத்தில் உள்ள பழனி பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு உள்ளிட்ட அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
இருப்பினும் அணையில் இருந்து உபரிநீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பாலாறுபொருந்தலாறு அணை நீர்மட்டம் 63.75 அடியாக உள்ளது. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 118 கனஅடியாக உள்ளது. இதேபோல குதிரையாறு அணை நீர்மட்டம் 77.01 அடியாக உள்ளது. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 80 கனஅடியாக உள்ளது.
பழனி வரதமாநதி அணை முழுகொள்ளளவான 66.47 அடி, ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாறு அணை முழுகொள்ளளவான 39.37 அடியை எட்டி தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது.
- தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.
- தைப்பூச திருவிழா அனுமதி கேட்டும், பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காகவும் மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா அடுத்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.
ஆண்டுதோறும் தைப்பூசதிருவிழாவுக்கான அனுமதி கேட்டும், பாதயாத்திரைவரும் பக்தர்களின் நலனுக்காகவும் மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதி, அடிவாரம் வடக்கு கிரிவீதி வீரதுர்க்கையம்மன், கிழக்கு கிரிவீதி அழகுநாச்சியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா அனுமதி கேட்டும், பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காகவும் நேற்று முன்தினம் மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்கையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக அங்கு கலசபூஜை, புண்ணியாக வாஜனம், பாராயணம், கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உபயதாரர்கள் சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.






