என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு ெபாடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி இன்று நடைபெற்றது.
    • திருவிழாவை காண ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் சக்தியாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 3-ந்தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து கடந்த மாதம் 16-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் திருவிழா நடைபெற்றது. 17-ந்தேதிபூச்சொரிதல் எனப்படும் பூத்தேர் ஊர்வலமும், 21-ந்தேதி கொடியேற்றமும் நடைபெற்றது.

    அதனைதொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு ெபாடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி இன்று நடைபெற்றது.

    இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து மெயின்ரோடு, கிழக்குரதவீதி வழியாக கோட்டைமாரியம்மன் கோவிலுக்கு வந்து பாலாபிேஷகம் செய்து வழிபட்டனர். இன்று இரவு அலங்கார மின்னொளி ரதத்தில் கோட்டை மாரியம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை 6 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்காக கோவில் முன்பு அமைக்கப்படும் பூக்குழியில் பக்தர்கள் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். மேலும் நாளை இரவு 8 மணிக்கு திருத்தேர் உலா நடைபெறுகிறது. 4-ந்தேதி தசாவதாரம், 5-ந்தேதி மஞ்சள்நீராட்டுதல் நடைபெற்று கொடியிறக்கம் நடைபெறும். 6-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 7-ந்தேதி தெப்பஉற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவை காண ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    • கொடைக்கானல் மேல்மலை, கீழ் மலைப்பகுதிகளில் போர்வெல், ஜே.சி.பி. போன்ற வாகனங்கள் இயக்க அனுமதி கிடையாது. ஆனால் சட்ட விரோதமாக இயக்கப்படுகிறது.
    • அதிகாரிகள் உடந்தையுடன் சட்ட விரோதமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் மேல்மலை, கீழ் மலைப்பகுதிகளில் போர்வெல், ஜே.சி.பி. போன்ற வாகனங்கள் இயக்க அனுமதி கிடையாது. ஆனால் சட்ட விரோதமாக இயக்கப்படுகிறது.

    நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசு அதிகாரிகள் கண்டும் காணாமலும் உள்ளனர். எனவே இதுகுறித்து தனிஅதிகாரிகளை உடனே நியமித்து முறையாக விசாரணை நடத்தி கொடைக்கானல் மேல்மலை, கீழ் மலை மலைப்பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கும் போர்வேல்,

    கிட்டாட்சி, ஜே.சி.பி. போன்ற வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு தாண்டிக்குடியில் திருட்டுத்தனமாக போர்வெல் லாரி இயக்கப்பட்டது.

    இது குறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ. கூறுகையில், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வத்தலகுண்டு வனத்துறையினர் கூறுகையில், போர்வெல் லாரி எந்த வழியில் வந்தது என்று தெரியவில்லை என்றனர். தா

    ண்டிக்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது தான் விடுமுறையில் உள்ளதாக கூறினார். அதிகாரிகள் உடந்தையுடன் சட்ட விரோதமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இனிமேலாவது கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஆன்மீக நகரான பழனி மிகச்சிறந்த சுற்றுலா நகரமாகவும் உள்ளது.
    • குறைந்த கட்டணம் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருந்து டாட்டூ வரைந்து செல்கின்றனர்.

    பழனி:

    ஆன்மீக நகரான பழனி மிகச்சிறந்த சுற்றுலா நகரமாகவும் உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இவ்வாறு வரும் பக்தர்கள் பழனி கடை வீதிகளில் விற்கப்படும் சில முக்கிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

    சாமி படங்கள், சிலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை இங்கு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. சிவகிரிப்பட்டி பைபாஸ் பகுதியில் டெண்ட் அமைத்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் இந்த சிலை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் இவர்கள் பழனி வரும் பக்தர்களுக்கு எந்திரங்கள் மூலம் டாட்டூ என்னும் நவநாகரீக பச்சை குத்தும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு எழுத்துக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுவாமி படம், உருவங்கள் மற்றும் பல்வேறு வடிவங்கள் வரைவதற்கு அவற்றின் தன்மைக்கு ஏற்க ரூ.300 முதல் வசூல் செய்யப்படுகிறது.

    குறைந்த கட்டணம் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருந்து டாட்டூ வரைந்து செல்கின்றனர். இவ்வாறு டாட்டூ வரைய பயன்படுத்தப்படும் எந்திரத்தில் பொருத்தப்படும் ஊசிகள் மாற்றப்படுவதில்லை என்று நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதனால் எய்ட்ஸ் மற்றும் ரத்த பரிமாற்றத்தால் ஏற்படக்கூடிய நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மாவட்ட கலெக்டர், பழனி சப்-கலெக்டர் ஆகியோருக்கு வந்த புகார்களைத் தொடர்ந்து நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் மனோஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் அடிவாரப்பகுதியில் டாட்டூ வரையும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஒருவருக்கு பயன்படுத்தும் ஊசியை மற்றொருவருக்கு பயன்படுத்த கூடாது. ஊசியை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் பதப்படுத்தி வாரம் ஒருமுறை நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரே ஊசியை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் மற்றும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரத்த பரிமாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டதுடன் இது குறித்து நடைபெற உள்ள விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    • பழனி நகராட்சி குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
    • எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழனி நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டனர்.

    பழனி:

    பழனி நகராட்சியில் 1வது வார்டுக்கு உட்பட்ட பெரியப்பா நகர் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதைய டுத்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழனி நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்ட னர்.

    அப்போது பழனி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் மீட்டிங்கில் இருப்பதாகவும், பிறகு வருமாறும் தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து அதிகாரிகளை சந்தித்து விட்டுதான் செல்வோம் என்று கூறி பழனி நகராட்சி அலுவலக வாயிலிலேயே காத்திருந்த னர்.

    நீண்ட நேரம் ஆகியும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை சந்திக்க மறுத்ததாக கூறி ஆவேச மடைந்த பொதுமக்கள், நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தெரிவித்ததாவது:-

    பழனி பெரியப்பா நகரில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில் தற்போது 5ஜி அலைக்கற்றைக்கான கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. குடியிரு ப்புகள் மட்டுமின்றி மருத்து வமனை, அங்கன்வாடி உள்ளிட்டவை உள்ள பகுதியில் அமைக்கக்கூடாது என அரசு அறிவித்துள்ள நிலையில் அதை மீறி டவர் அமைக்கப்படுவதாகவும், இதனால் ஏற்படும் கதீர்வீச்சு காரணமாக கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்பட பலரும் பாதிக்கப்படுவர்.

    மேலும் தற்போது அமை க்கப்படும் கோபுரமானது முதல் முப்பது அடி உயரத்திற்கு மட்டுமே அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து ஆரம்பம் முதலே பலமுறை தங்களது எதிர்ப்பை தெரிவித்தும், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே செல்போன் டவர் அமை க்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்ததாக கூறினர்.

    தங்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் செய்தால் விரைவில் கடுமையான போராட்டத்தில் ஈடு படப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை சந்திக்க வைப்பதாக கூறியதை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • திருக்கல்யாணம் 7-ந்தேதி நடக்கிறது.
    • 9-ந்தேதி கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது.

    பழனி கிழக்கு ரதவீதியில், முருகன் கோவிலின் உப கோவிலான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசித்திருவிழா, கடந்த மாதம் 17-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    விழாவின் 12-ம் நாளான நேற்று இரவு மாரியம்மன் சன்னதியில் 5 கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, சிறப்பு யாகம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கொடிப்படம் கோவிலை வலம் வந்து, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    அப்போது கொடிமரத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடத்தப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியை காண சிறப்பு அலங்காரத்தில் கொடிமண்டபத்தில் அம்மமன் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் மாரியம்மன் வலம் வருதல், அக்னி சட்டி எடுத்து கம்பத்தில் வைத்தல், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் தங்க மயில் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    கொடியேற்ற நிகழ்ச்சிகளுக்கான பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணி மற்றும் குருக்கள்கள் செய்திருந்தனர். கோவில் இணை ஆணையர் நடராஜன், கோவில் கண்காணிப்பாளா அழகர், சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதா சுப்புராஜ், பெரியநாயகி அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் சுந்தரம், நகராட்சி கவுன்சிலர் பத்மினி முருகானந்தம் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி தினமும் இரவு வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.40 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. 9-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது. திருவிழாக்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்
    • நெல், வெல்லம், மிளகாய் வற்றல், பயிறு உள்பட நவதானியங்கள் டன் கணக்கில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பணம் மற்றும் நவதானியங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மாதம் ஒருமுறையும், திருவிழா காலங்களின் போது மாதம் இருமுறையும் எண்ணுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.7.17 கோடி வருவாய் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து தற்போது நவதானிய காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டது. நெல், வெல்லம், மிளகாய் வற்றல், பயிறு உள்பட நவதானியங்கள் டன் கணக்கில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

    இந்த மூட்டைகளை கோவில் வளாகத்தில் வைத்துள்ளனர். இவை விரைவில் ஏலத்தில் விடப்படும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


    • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம், வடக்காடு கிராமத்தில் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையின் கொள்ளளவை மேம்படுத்துவதற்காக பரப்பலாறு அணை மணல் மற்றும் வண்டல் மண் சுரங்கம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம், வடக்காடு கிராமத்தில் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அணை பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) பிரியங்கா, பழனி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் மணிமாறன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் காஜாமைதீன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, உதவி கோட்டப்பொறியாளர் நீதிபதி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவியதால் செடி, கொடிகள், புல்வெளிகள், முட்புதர்கள் காய்ந்து கருகி வருகின்றன.
    • தீ காரணமாக அரசு வருவாய் நிலங்கள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகளில் ஆங்காங்கே தீ எரிந்து வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவியதால் செடி, கொடிகள், புல்வெளிகள், முட்புதர்கள் காய்ந்து கருகி வருகின்றன.

    இந்நிலையில் விவசாயிகள் தனியார் தோட்டப்பகுதியில் வைக்கும் தீ காரணமாக அரசு வருவாய் நிலங்கள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகளில் ஆங்காங்கே தீ எரிந்து வருகிறது. பழனி பிரதான மலைச்சாலையில் மேல்பள்ளம் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில் உள்ள தனியார் தோட்டத்துப்பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வாழை, ஆரஞ்சு, எலுமிச்சை, அவக்கோடா உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் காட்டுத்தீ மளமள வென பரவி கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.

    மேலும் சாலையின் ஓரங்களிலும் தீ எரிந்து வருவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வனப்பகுதிக்கு அருகே தீ எரிந்து வருவதால் தீயை அணைக்கும் முயற்சியில் பெரும்பள்ளம் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தனியார் இடங்களில் சிலர் தீ வைக்கின்றனர். காற்றின் வேகம் அதிகரிக்கும்போது அருகே உள்ள மற்ற தோட்டப்பகுதிகளில் தீ பரவி வருகிறது. எனவே தனியார் தோட்டப்பகுதிகளில் அனுமதியின்றி தீ வைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை முதல் கொடைக்கானல் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக ஜிகரெண்டா மலர்கள் பூத்து குலுங்குகிறது.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலின் இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை புன்னகையோடு வரவேற்கும் விதமாகவும் மலைச்சாலைகளின் இருபுறமும் பூத்துகுலுங்கும் ஜிகரெண்டா மலர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது.

    கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு மற்றும் பழனி செல்லக்கூடிய சாலை ஓரங்களில் உள்ள இந்த மரங்களில் இளநீல ஊதா நிறத்தில் மரம் முழுவதும் பூக்கள் பூத்து குலுங்குகிறது. இந்த பூக்கள் கோடைகாலத்தை வரவேற்கும் வகையில் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மட்டுமே பூக்கக்கூடிய பூக்களாகும். தற்போது இவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக பூத்து குலுங்குகிறது.

    • ஒரு வார்த்தையில் பாதிக்குமேல் ஆங்கில கலப்பு வந்துவிட்டது.
    • மருத்துவம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம் என எந்த படிப்பையும் தமிழில் படிக்க முடியும்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணம் பா.ம.க.வின் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:-

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தமிைழத்தேடி பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். எந்த இடத்திலும் தமிழை காணவில்லை. திண்டுக்கல்லில் வந்து பார்த்தபோதும் இங்கும் இல்லை. இதனைதொடர்ந்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை தேடிச்செல்கிறேன். அங்காவது தமிழ் இருக்கிறதா என்று பார்க்க விரும்புகிறேன்.

    தமிழ்மொழியை குழந்தைகள் இடத்தில் இருந்து நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். அதன்பிறகு பள்ளியில் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைய குழந்தைகள் டாடி, மம்மி என்று அழைப்பதை பெற்றோர்கள் பெருமையாக கருதுகின்றனர்.

    மகாகவி பாரதியாரின் ஆருயிர் நண்பரான நீலகண்ட சாஸ்திரிகள் ஒருமுறை மெல்லதமிழ் இனி சாகும் என்று கூறினார். இதற்கு ஆவேசமாக பதில் அளித்த பாரதியார் மெல்லதமிழ் இனி சாகும் என்று ஒரு பேதை உரைத்தான் என்றார். அப்போது தனது நண்பர் என்ற போதிலும் தமிழ்மொழி மீது பாரதியார் கொண்ட பற்று வெளிப்படுகிறது. கிராமப்புற பெண்கள் கூட தன் மகள் கருவுற்றால் கன்சிவ் அடைந்துவிட்டதாக கூறுகின்றனர்.

    ஒரு வார்த்தையில் பாதிக்குமேல் ஆங்கில கலப்பு வந்துவிட்டது. சாதம் என்ற சொல்லைக்கூட மறந்து வொயிட்ரைஸ் என்று அழைக்கும் நிலை வந்துவிட்டது. நம்நாட்டில் மிகப்பெரிய தலைவர்களாகிய அப்துல்கலாம், வெங்கட்ராமன், நிதியமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் தமிழில்தான் படித்தார்கள், தமிழை வளர்த்தார்கள்.

    தற்போது தமிழ் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் வந்துவிட்டது. மருத்துவம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம் என எந்த படிப்பையும் தமிழில் படிக்க முடியும். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 102 தமிழ் அறிஞர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். நாங்கள் உயிரைத்தருகிறோம். தயவுசெய்து தமிழை தாருங்கள் என்று போராடினர்.

    கல்வி வணிகமயமானதால் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. சட்டங்கள் போட்டாலும் இதனை பள்ளிகள் மதிப்பது இல்லை. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் போன்ற நீதிமன்றங்களுக்கு சென்று வழக்கு போடுகின்றனர். இவர்கள் தமிழை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி வைத்து செயல்படுகின்றனர். தமிழை அழிப்பதற்கு பதிலாக நீங்கள் பொரிகடலை வியாபாரம் செய்யலாம். தற்போது பிரி.கே.ஜிஎன்ற படிப்பிற்கு ரூ.2லட்சம் வசூல் செய்யப்படுகிறது. இதற்கே இவ்வளவு தொகை என்றால் மற்ற படிப்புகளுக்கு எவ்வளவு செலவாகும் என எண்ணிப்பார்க்க வேண்டும்.

    தற்போது பிறமொழியில் பெயர்பலகை வைத்துள்ளவர்கள் உடனடியாக அதனை தமிழில் மாற்றவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஒரு மாதத்திற்கு பிறகு எங்கள் இளைஞர்கள் அதனை தார் பூசி அழிப்பார்கள். நாங்கள் எந்தமொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழ்மொழியை காக்கவே விரும்புகிறோம். சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். இவ்வாறு பேசுவதால் நாங்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதாக நினைக்ககூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சரஸ்வதி யாரிடமும் கூறாமல் பிரகாசுடன் சென்றுவிட்டதாக தெரிகிறது.
    • கடத்தப்பட்ட பெண்ணையும், அவரை கடத்திய வாலிபரையும் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள விருவீடு தெப்பத்துப்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி மனைவி சரஸ்வதி(34). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் குருவித்துறையை சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் என்பவர் சரஸ்வதியிடம் தான் முருக்கு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும், அங்கு வந்தால் அதிக சம்பளம் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

    இதனையடுத்து சரஸ்வதி யாரிடமும் கூறாமல் பிரகாசுடன் சென்றுவிட்டதாக தெரிகிறது. தனது மனைவியை காணாமல் பல இடங்களில் தேடிப்பார்த்த அவரது கணவர் தங்கபாண்டி இதுகுறித்து விருவீடு போலீசில் புகார் அளித்தார். சரஸ்வதியை பிரகாஷ்தான் கடத்தி சென்றிருக்கக்கூடும் என்றும், இதற்கு உடந்தையாக அவரது உறவினர்கள் அன்னக்களி, பாண்டி, தெப்பத்துப்பட்டியை சேர்ந்த சந்திரசேகர், அவரது மனைவி பொன்மணி ஆகியோர் உள்ளனர் என்றும், தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது மனைவியை மீட்டுத்தரும் வரை தான் செல்லமாட்டேன் எனக்கூறி போலீஸ் நிலையத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடத்தப்பட்ட பெண்ணையும், அவரை கடத்திய வாலிபரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • குரங்கணி மலைப்பகுதியில் தற்போது வறண்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது.
    • கொடைக்கானல் மேல்பள்ளம், பி.எல்.செட் பகுதியிலும் 2 வது நாளாக காட்டுத்தீ பற்றி எரிகிறது.

    கொடைக்கானல்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் தற்போது வறண்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது. இதனால் இப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. குரங்கணி மலைப்பகுதியில் புலியூத்து முதல் குரங்கணி மலைத்தொடரில் ஹெவிகுண்டு என்னும் வனப்பகுதியில் 6 கி.மீ தூரத்துக்கு காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

    இதனால் 20க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் காற்றின் வேகம் அதிகரிப்பாலும், போதிய தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததாலும் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் அரியவகை மூலிகைகள் மற்றும் மரங்கள் எரிந்து சேதமாகி வருகிறது.

    பற்றி எரியும் காட்டுத்தீயால் இப்பகுதியில் உள்ள மா, இலவம் மரங்கள், பாக்கு மரங்கள் போன்றவை பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கோடை காலங்களில் இது போல் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதன் அருகே உள்ள கொலுக்கு மலையில் கடந்த 3 வருடத்துக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

    அது போன்ற சூழல் ஏற்படுவதற்குள் தீயை அணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக காட்டுத்தீ பரவும் காலங்களில் நவீன உபகரணங்கள் அல்லது ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதே போல் கொடைக்கானல் மேல்பள்ளம், பி.எல்.செட் பகுதியிலும் 2 வது நாளாக காட்டுத்தீ பற்றி எரிகிறது. இதனால் இங்குள்ள காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் போன்ற வன விலங்குகள் இடம்பெயர்ந்து அருகில் உள்ள பெரும்பள்ளம், வடகவுஞ்சி, பேத்துப்பாறை, வெள்ளப்பாறை போன்ற பகுதிகளுக்கு செல்கின்றன. வடகவுஞ்சி வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை வனத்துறையினர் பழங்குடியினர், வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் கட்டுப்படுத்தினர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் வறண்ட பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் காட்டுத்தீ தொடர்ந்து வருகிறது. எனவே தீயை கட்டுபடுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    ×