என் மலர்
திண்டுக்கல்
- மலைக்கோவிலில் இருந்து 200 அடியில் சிறிய அளவிலான பாறை உருண்டு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களின் மீது விழுந்ததால் குழாய்கள் சேதம் அடைந்தது.
- கோவில் ஊழியர்கள் உடைந்த தண்ணீர் குழாயை துரிதமாக செயல்பட்டு சரி செய்தனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோவிலுக்கு கோடைகால நீர்தேக்கம் , பாலாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தண்ணீர் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதான சேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மலைக்கோவிலில் இருந்து 200 அடியில் சிறிய அளவிலான பாறை உருண்டு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களின் மீது விழுந்ததால் குழாய்கள் சேதம் அடைந்தது. பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்ய தனி படிப்பாதையான திருமஞ்சன பாதை உள்ளது.
இந்தப் பாதையின் அருகில் பாறைகள் உருண்டு விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, இதனால் பழனி மலை கோவிலுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏற்கனவே தண்ணீர் உயர்நிலை நீர் தொட்டி தண்ணீர் கொள்ளளவு வைக்கப்பட்டுள்ள தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் கோவில் ஊழியர்கள் உடைந்த தண்ணீர் குழாயை துரிதமாக செயல்பட்டு சரி செய்தனர்.
- பைக்கில் சென்றபோது தடுமாறி விழுந்ததில் அவ்வழியே வந்த அரசு பஸ் இவர்கள் மீது ஏறி இறங்கியது.
- இதில் பூ வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள எத்திலோடு ஊராட்சி, காமாட்சி புரத்தை சேர்ந்தவர் திருக்கோவில் (வயது34). அதே ஊரைச் சேர்ந்தவர் பழனிமுத்து (34). பூ வியாபாரிகளான இவர்கள் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கிக்கொண்டு கொடை க்கானலில் விற்பனை செய்து வந்தனர்.
நேற்று மோட்டார் சைக்கிளில் மணியகார ன்பட்டி அருகே இருவரும் சென்று கொண்டிருந்த போது பைக் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறியது. அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ் இவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் திரு க்கோ வில் சம்பவ இட த்தில் உயிரி ழந்தார்.
பழனி முத்து வுக்கு 2 கால்களும் துண்டான நிலையில் நிலக்கோட்டை அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைக்க ப்ப ட்டார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
- விபத்து குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- போலீசார் விபத்தில் சிக்கிய லாரியை ஓரப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்தனர்.
வேடசந்தூர்:
மகாராஷ்டிராவில் இருந்து ராட்சத காற்றாலையை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள அய்யர் மடம் தனியார் மில் அருகே வந்தபோது திடீரென பழுதானது.
இதனால் டிரைவர் என்ன செய்வதென்று தெரியாமல் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து லாரியை ஓரமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்தினர்.
அப்போது தூத்துக்குடியில் இருந்து உப்பு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த லாரியை முசிறியைச் சேர்ந்த ராஜா (50) என்பவர் ஓட்டி வந்தார்.
அதிகாலை 4 மணி அளவில் லாரியை ஓட்டி வந்த ராஜா சற்று கண் அயர்ந்துவிட்டார். இதனால் சாலையில் பழுதாகி நின்ற காற்றாலை ஏற்றி வந்த லாரி மீது மோதினார்.
அந்த சமயத்தில் முன்னால் சென்ற காரையும் கவனிக்காமல் அதன் மீது மோதி பின்னர் காற்றாலையின் இறக்கை மீது லாரி மோதி நின்றது. இதில் காரில் வந்த சாந்தராஜன் (25) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கி டிரைவர் ராஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய லாரியை ஓரப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- சீவக்கம்பள்ளம் அருகே மின் கம்பி மீது மூங்கில் மரம் முறிந்து விழுந்ததால் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தாளவாடி:
தாளவாடி அடுத்துள்ள ஆசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 3 முதல் 5 மணி வரை குளியாடா, திம்பம், ஒசட்டி, தேவர்நத்தம், மாவள்ளம் மற்றும் வனப்பகுதியில் பலத்த மழை கொட்டியது. பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் பலத்த மழையால் ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கும் கொள்ளேகால் சாலை அரேப்பாளையம் பிரிவு அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கேர்மாளம், குளியாடா, மாவள்ளம், கானக்கரை, தேவர்நத்தம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மலை கிராம மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். பின்னர் வெள்ளம் வடிந்த பிறகு வாகனங்கள் சென்றன. இதேபோல் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் எரகனள்ளி, சிமிட்டள்ளி, ஜீர்கள்ளி, கல்மண்டிபுரம் ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மிதமான மழை பெய்தது.
இதேபோல் சீவக்கம்பள்ளம் அருகே மின் கம்பி மீது மூங்கில் மரம் முறிந்து விழுந்ததால் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் விடிய விடிய மின்சாரம் இல்லாமல் மலைகிராம மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். குழந்தைகளை வைத்து கொண்டு பெண்கள் கடும் அவதிப்பட்டனர்.
- கர்நாடகத்தில் முத்தான திட்டங்களை அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
- கள்ளக்சாராயம் தயாரிக்க மெத்தனால் புதுச்சேரியில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது.
பழனி:
புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். மலைக்கோவிலுக்கு ரோப்கார் மூலம் சென்று சாயரட்சையின்போது தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் அடிவாரத்தில் அவர் ஓய்வு எடுத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முத்தான திட்டங்களை அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பா.ஜனதாவை மக்கள் நம்ப தயாராக இல்லை. இனி நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.க. தோல்வியையே சந்திக்கும்.
விழுப்புரம் பகுதியில் விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்று பார்த்தது பாராட்டுக்குறியது. வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்சாராயம் தயாரிக்க மெத்தனால் புதுச்சேரியில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த 1½ ஆண்டுகளாக கள்ளச்சாராயம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கலால்துறையில் ஊழல் அதிகரித்துள்ளது. இதில் அம்மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வில்லை. கள்ளச்சாரயம், சட்ட ஒழுங்கு பிரச்சினைக்காக போராட்டம் நடத்த உள்ளோம்.
கவர்னர் தமிழிசை முதலமைச்சர் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளார். அவரின் கைப்பொம்மையாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செயல்படுகிறார். மாநிலத்தில் தொழில் வளம் முதல் எந்த வளமும் மேம்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரையண்ட் பூங்காவில் அனைத்து செடிகளிலுமே சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
- வெள்ளை, சிகப்பு, ஆரஞ்சு, இளஞ்சிகப்பு, மெரூன் ஆகிய வண்ணங்களில் பூத்துள்ள மலர்கள் முன்பு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
கொடைக்கானல்:
கோடைவிடுமுறையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. அவர்களை கவரும் வண்ணமாக கோடைவிழா மலர்கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்காக மலர்கண்காட்சி வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக பல்வேறு பகுதி களில் இருந்து மலர்செடிகள் கொண்டுவரப்பட்டு பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜாபூங்கா உள்ளிட்ட இடங்களில் நடவு செய்து தோட்டக்கலைத்துறையினர் பராமரித்து வந்தனர்.
தற்போது அனைத்து செடிகளிலுமே சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பிரையண்ட் பூங்காவில் பல்வேறு ரோஜா வகைகள், டெல்பீனியம், ஹாலந்து ல்லா, தயாந்தஸ், சால்வியா, ஆப்ரிக்கன்மேரிகோல்டு உள்ளிட்ட பூக்கள் பல வண்ணங்களில் பூத்துள்ளது. வெள்ளை, சிகப்பு, ஆரஞ்சு, இளஞ்சிகப்பு, மெரூன் ஆகிய வண்ணங்களில் பூத்துள்ள மலர்கள் முன்பு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது விதவிதமான வண்ணங்களில் பூத்துள்ள வில்லியம்மலர்கள் தனிமுத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கோவில் திருவிழா தொடர்பாக தி.மு.க. பிரமுகர் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
எரியோடு:
எரியோடு அருகே கோவிலூர் தங்கச்சியம்மா பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல கிராமங்களுக்கு பாத்திய ப்பட்டதாகும்.
கோவில் நாட்டாண்மை ஜெயக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது மகன் பாலுமகேந்திரா பொறுப்பேற்று இந்த ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கினார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் வீரக்குமார் மற்றும் சிலர் கோவில் நிர்வாக பொறுப்பு அதே குடும்பத்திடம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பாலுமகேந்திரா குறித்து வீரக்குமார் அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர். அதன்படி ஏராளமான வாகனங்களில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எரியோடு போலீஸ் நிலையத்திற்கு புறப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையி லான போலீசார் ஒத்தக்கடை பகுதியிலேயே பொது மக்களை தடுத்துநிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பறவைகளின் தண்ணீர் தேவையை மனிதர்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும்.
- தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல்:
தமிழகத்தில் மே மாதம் தொடங்கியதில் இருந்து கோடை வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் காரணமாக மேலும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் காணப்படுவதை போல கொடைக்கானலிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மனிதர்களுக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ள சூழலில் பறவைகளும் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடந்த மாதம் ஒரு சில நாட்கள் பெய்த மழையினால் நீர் நிலைகள் ஓரளவு நிரம்பின. ஆனால் வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகள் தொடர்ந்து வறண்டு காணப்படுகிறது. இதனால் தண்ணீரைத் தேடி பறவைகளும் சுற்றித் திரிகிறது. கொடைக்கானலில் நீர் நிலைகளுக்கு அருகே இருக்கக்கூடிய காடுகளில் பல்வேறு அரிய வகை பறவைகள் உள்ளன. மற்ற காலங்களை விட தற்போது இனப்பெருக்க காலமும் இந்த மாதம் தான் நடக்கும். ஆனால் பறவைகள் தண்ணீருக்கே தங்கள் இருப்பிடத்தை விட்டு வேறு இடங்களுக்கு பறந்து வருவதை குடியிருப்பு பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
பறவைகளின் தண்ணீர் தேவையை மனிதர்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் சுற்றி வரக்கூடிய சிட்டுக்குருவிகள், வெள்ளைக்கண்ணி, புள்ளி புறா, சிவப்பு மீசை சின்னான் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் தண்ணீர் மற்றும் உணவுகள் இன்றி தவித்து வருகிறது. இதனை போக்குவதற்காக மனிதர்கள் தங்களுடைய வீட்டு மொட்டை மாடிகளில் தானியங்கள் மற்றும் தண்ணீர் நிரப்பிய பாத்திரங்களை வைக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வனங்களை விட்டு வெளியே வராத பறவைகளும் இருக்கின்றன. இதற்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் இன்றி உயிரிழக்கக்கூடிய பறவைகள் மற்றும் பறவை இனங்களை காக்க அனைவரும் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- காய்கறி, பழங்களின் கழிவுகள், மரங்களில் இருந்து விழும் இலைகள், மாட்டுச்சாணம் ஆகியவற்றைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து வருகிறார்.
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூர் சென்ற ஷர்மிளா அங்கிருந்து ஹைபிரிட் வகை வெள்ளரி விதையை வாங்கி வந்து தனது வீட்டில் நட்டு வைத்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-தாடிக்கொம்பு ரோடு கருப்பணசாமி கோவில் அருகே வசித்து வருபவர் ஷர்மிளா தினேஷ். இவர் அழகுகலை, பரிசு பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். பல்வேறு வகை காய்கறிகளை ஆர்கானிக் முறையில் வளர்த்து வருகிறார். அன்றாடம் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கருவேப்பிலை, கொத்தமல்லி, எலுமிச்சை உள்ளிட்ட காய்கறிகளை தோட்டத்தில் இருந்து பறித்து பயன்படுத்தி வருகிறார்.
மேலும் காய்கறி, பழங்களின் கழிவுகள், மரங்களில் இருந்து விழும் இலைகள், மாட்டுச்சாணம் ஆகியவற்றைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூர் சென்ற ஷர்மிளா அங்கிருந்து ஹைபிரிட் வகை வெள்ளரி விதையை வாங்கி வந்து தனது வீட்டில் நட்டு வைத்தார்.
பொதுவாக வெள்ளரிக்காய் அரை அடி வரை மட்டுமே வளரும் தன்மை கொண்டது. ஆனால் இவர் வளர்த்த வெள்ளரிச்செடி 33 இன்ச் (2.45 அடி) வரை வளர்ந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்தார்.
இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்களிடம் வீடுகளிலேயே காய்கறித் தோட்டம் அமைத்து பயன்பெறுமாறும், இயற்கை உரத்தை தயாரித்து அதில் இடுமாறும் அறிவுறை கூறி வருகிறார். இந்த அரிய வகை வெள்ளரி மேலும் நீண்டு புடலங்காய் போல வளர்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஜல்லிக்கட்டில் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கி பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிசுகளை வழங்கினார்.
- பீரோ, சைக்கிள், குக்கர், மின்விசிறி, நாற்காலிகள், வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி சங்கரன்பாறையில் உள்ள முத்துமாரியம்மன், பாலமுருகன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை, அலங்காநல்லூர், பாலமேடு, தவசிமடை ,கொசவபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 காளைகள் போட்டியில் பங்கேற்க அழைத்து வரப்பட்டன.
அதனை கால்நடை மருத்துவக் குழுவினர் காளைகளை மருத்துவ பரிசோதனை செய்து வாடிவாசலுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் அரசு மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 150 மாடுபிடி வீரர்கள் 5 சுற்றுகளாக களமிறங்கினர்.
இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு திண்டுக்கல் ஆர். டி. ஓ.பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் வாடிவாசலில் இருந்து முதலில் ஊர்கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
அதில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, திமிறிய தோள்களை கொண்ட காளையர்கள் அடக்கினர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க மல்லுக்கட்டினர். அவர்களிடமிருந்து சில காளைகள் பிடிபடாமல் ஓடியது. ஒரு சில காளைகள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் நின்று எகிறியது. பார்வையாளர்கள் கோஷமிட்டு மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினார். ஜல்லிக்கட்டு போட்டியில் 10பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கி பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிசுகளை வழங்கினார். பீரோ, சைக்கிள், குக்கர், மின்விசிறி, நாற்காலிகள், வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டையொட்டி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி ஆகியோர் மேற்பார்வையில் 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த வருடம் நடைபெறும் கடைசி ஜல்லிக்கட்டு இது என்பதால் ஏராளமான ஜல்லிக்கட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- வில்வித்தை போட்டி என்பது கண், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஒருசேர வலிமை சேர்க்கும் பயிற்சி ஆகும்.
- இந்த பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பார்வைதிறன் அதிகரிப்பது டன், சிந்திக்கும் திறனும் கூடும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகாலத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் உடல் வலிமையை கூட்டுவதை போல, மன வலிமையையும் அதிகரிக்கச் செய்யும் வில்வித்தை போட்டியில் மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒலிம்பிக் அசோசியேசன், தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடை க்கானல் ஆகிய 5 இடங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய பயிற்சியாளரும், நடுவர் சங்க தலைவருமான சீத்தாராமன், உதவி பயிற்சியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் இந்த பயிற்சியை அளித்து வருகின்றனர்.
வில்வித்தை போட்டி என்பது கண், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஒருசேர வலிமை சேர்க்கும் பயிற்சி ஆகும். இந்த பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பார்வைதிறன் அதிகரிப்பது டன், சிந்திக்கும் திறனும் கூடும்.திண்டுக்கல் விளையாட்டு அரங்கில் 4 முதல் 45 வயதுடைய அனைத்து தரப்பினருக்கும் வில்வித்தை பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. மாணவர்கள் தங்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் பெற்றோர்களே முன்வந்து தங்கள் பிள்ளை களை இந்த பயிற்சிக்கு அழைத்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட த்தில் பயிற்சி மேற்கொண்டு உலக கோப்பை, வில்வித்தை தகுதி போட்டிக்கு தேர்வுபெற்ற மாணவர்கள் தனுஷ்கந்தன், அன்புராஜ், கோபிநாத், ஹனுஸ் ஆகியோர் விளையாட்டு கோட்டாவில் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். பள்ளி குழந்தைகள் தற்போது வில்வித்தை போட்டியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தகுதியான பயிற்சியாளர்களை கொண்டு மாவட்டத்தில் சிறந்த பயிற்சி அளிக்கப்படு கிறது.
தேசிய போட்டிகளில் பங்குபெற இந்தியன் வில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரீர்கொவ், காம்பவுண்டு ஆகிய வில் பயிற்சிகள் அளிக்கப்படு கிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் சிந்தனையை ஒருமுக ப்படுத்தி தனித்திறமையை வளர்த்துக் கொள்ள உதவும் என்றார்.
கொடைரோடு:
கொடைரோடு அருகே மாலையகவுண்டன் பட்டி பிரிவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் கணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த தேசிய டெங்கு தின விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார அலுவலர் டாக்டர் வினோத் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட பூச்சியாளர் துறை அலுவலர் தெய்வேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி தாளாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், இளநிலை பூச்சியாளர் விஜயா, சுகாதார ஆய்வாளர் மாரிவேல், ஆசிரியர் பொன்ராம் மற்றும் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






