என் மலர்
தர்மபுரி
- பீரோவில் இருந்த தங்க செயின், மோதிரம், கம்மல் என சுமார் 10 பவுன் தங்க நகை கொள்ளை போனது.
- குற்றவாளி கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி பஞ்சாயத்து சவுளூர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி அருள் (வயது31).
இவர் பெங்களுரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஜீன் மாதம் 6-ந் தேதி ஊருக்கு வந்த அருள் தனது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மனைவி குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு தருமபுரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருளின் வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த தங்க செயின், மோதிரம், கம்மல் என சுமார் 10 பவுன் தங்க நகை கொள்ளை போனது.
இது குறித்து காரிமங்கலம் போலீசில் அருள் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் போலீசார் பேகாரஅள்ளி கூட்டுரோடு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பனந்தூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (26) என்பதும், கடந்த 6-ந் தேதி அருள் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருடியதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் குற்றவாளி கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பேக்கரி கடையில் சி.சி.டி.வி. காமிரா, பெட்ரோல் பங்கில் ரூ.3 லட்சம் பணம், அருள் என்பவர் வீட்டில் கொள்ளை என தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.
இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதனால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தருமபுரி மாவட்ட இளைஞர்கள் தவறான போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் உரிய முறையில் வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு வேலைக்கு செல்லுமாறு வேண்டும்.
- முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் காவலர்களுடன் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பென்னாகரம் ரோடு பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் இளைஞர்கள் அவரவர் தகுதிக்கேற்ப நிறுவனங்களின் வேலை வாய்ப்பினை தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
மேலும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பேசுகையில் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் தவறான போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் உரிய முறையில் வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு வேலைக்கு செல்லுமாறு வேண்டும்.
மேலும் தருமபுரி மாவட்டத்தை ஒரு போதை பழக்க வழக்கம் இல்லாத மாவட்டமாக படித்த இளைஞர்கள் மாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
பின்னர் வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் காவலர்களுடன் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து, மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
- விழாவிற்கு பா.ம.க. மாவட்ட அமைப்பு தலைவர் எஸ்.மதியழகன் தலைமை வகித்தார்.
- பா.ம.க. தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் வன்னியர் சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள சேக்காண்டஅள்ளியில் வன்னியர் சங்க கொடி ஏற்று விழா நடை பெற்றது.
விழாவிற்கு கம்பைநல்லூர் பேரூராட்சி துணைத் தலைவரும், பா.ம.க. மாவட்ட அமைப்பு தலைவருமான எஸ்.மதியழகன் தலைமை வகித்தார்.
மொரப்பூர் ஒன்றிய குழு துணை தலைவர் சி.வன்னிய பெருமாள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முருகம்மாள் மாது, அஜந்தா சண்முகம் ,ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சங்கர் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பா.ம.க. தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் வன்னியர் சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் மதிவாணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாராயணன், அம்பிகா கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் துரை, பூமி சமுத்திரம், அருள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார். விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
- இருளப்பட்டி திருப்பாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
- ஞாயிற்றுகிழமை மங்கள இசை முழங்க கலசப்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி திருப்பாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
விநாயகருக்கு சிறப்பு வழிபாடு மகா கணபதி சிறப்பு ஓமம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து காப்பு கட்டுதல் நடைபெற்றது.
தொடர்ந்து நான்கு நாட்களாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று ஞாயிற்றுகிழமை மங்கள இசை முழங்க கலசப்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கோபுரமுலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
இந்த நிகழ்சிக்கான ஏற்பாடுகளை அரியாஞ்செட்டி, சின்னாஞ்செட்டி, சஞ்சீவிசெட்டி, குண்டன்செட்டி, குருகன்செட்டி குடும்பத்தினர். திருவிழா குழுவினர் சீனு ரவி, தரணிதரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துயிருந்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கலச ஊர்வலம் நடைபெற்றது.
- முதியவர் கடந்த 8-ந் தேதி அதிகாலை வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
- பதறிப்போன சின்னையனின் உறவினர்கள் அவரை பலஇடங்களில் தேடிபார்த்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்து வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் (வயது82). விவசாயி. இவர் கடந்த 8-ந் தேதி அதிகாலை வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சின்னையனின் உறவினர்கள் அவரை பலஇடங்களில் தேடிபார்த்தனர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த சின்னபாப்பா என்பவரின் விவசாய கிணற்றில் சின்னையன் பிணமாக கிடப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று சின்னையனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து சின்னையனின் உறவினர்கள் கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சின்னையனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரித்ததில், சின்னையன் காலை கடன் கழிப்பதற்காக நடந்து வந்தபோது கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதியமான்கோட்டை போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களையும் மீட்டனர்.
- விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் ஜோதியை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே வள்ளுவர் நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், அந்த 2 பெண்களும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களிடம் தண்டுகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஜோதி (வயது40), நடராஜன் ஆகிய 2 பேரும் சேர்ந்து வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அதியமான்கோட்டை போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களையும் மீட்டனர். அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் ஜோதியை கைது செய்தனர். நடராஜன் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- காவிரி பிறப்பிடமான தலைகாவிரியில் நிற்காமல் மழை பெய்தது.
- மைசூரில் உள்ள கபினி அணையில் 2284 அடி மொத்த கொள்ளளவு கொண்டது.
தருமபுரி:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதற்கிடையே மைசூரு, குடகு, மாண்டியா, சாம்ராஜ் நகர், ராம் நகர் போன்ற காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
காவிரி பிறப்பிடமான தலைகாவிரியில் நிற்காமல் மழை பெய்தது. இதன்காரணமாக குடகு பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து ஓடியது.
தற்போது பெய்த கனமழை காரணமாக மாண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 82 அடி காணப்பட்டது. அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 13ஆயிரத்து 449 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் மழை சற்று குறைவாக பெய்ததன் காரணமாக இன்று காலை சற்று குறைந்து 11 ஆயிரத்து 695 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து இன்று 289 கனஅடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மைசூரில் உள்ள கபினி அணையில் 2284 அடி மொத்த கொள்ளளவு கொண்டது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 2266.40 அடியாக உள்ளது.
இதில் அணைக்கு நீர்வரத்து நேற்று 16 ஆயிரத்து 580 கனஅடி வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை சற்று குறைந்து 13 ஆயிரத்து 453 கனஅடியாக சரிந்து வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு நீர் திறப்பு இன்று 500 கனஅடி அளவில் திறந்து விடப்பட்டது.
இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் மொத்தம் 789 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர் திறப்பால், பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதன்காரணமாக ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவிலான இருந்த நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக உயர்ந்தது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று குறைந்து 400 கனஅடியாக சரிந்தது.
தொடர்ந்து பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- சில எலக்ட்ரானிக்ஸ் கடைக்காரர்கள் வேட்டைக்காரர்களுக்கென பிரத்யேக ஹாரன் போன்ற கருவி ஒன்றை விற்பனை செய்கின்றனர்.
- வேட்டைக்காரர்க ளுக்கு முயல் ஹாரன் விற்ற எலெக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர்கள் 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
தருமபுரி,
வனக் குற்றங்களை தடுத்தல், வனத்தில் பசுமைப் பரப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகளில் தருமபுரி மாவட்ட வனத்துறை அண்மைக் காலமாக தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக வன விலங்கு களை வேட்டையாடுவோரை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
அந்த வரிசையில் தற்போது வேட்டைக்காரர்க ளுக்கு முயல் ஹாரன் விற்ற எலெக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர்கள் 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
தருமபுரி நகரில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வரும் பவர்களான் புருஷோத்தமன் (55), திருநீலகண்டன் (வயது48), சரவணன் (36) ஆகிய 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல, முயல் ஹாரன் மற்றும் அதனுடன் தொடர்புடைய பேட்டரி ஆகியவற்றை விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பென்னாகரம் முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் (50) என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, சில எலக்ட்ரானிக்ஸ் கடைக்காரர்கள் வேட்டைக்காரர்களுக்கென பிரத்யேக ஹாரன் போன்ற கருவி ஒன்றை விற்பனை செய்கின்றனர்.
இதை பேட்டரியுடன் இணைத்து இயங்கச் செய்யும்போது இந்த ஹாரனில் இருந்து மெல்லிய ஓசையுடன் கூடிய ஒருவித அதிர்வலை உருவாகிறது.
இது முயல்களை ஈர்க்கும் தன்மை கொண்டதாக உள்ளதால் இவற்றின் உதவி யுடன் வேட்டைக்காரர்கள் வனத்தில் முயல்களை எளிதாக வேட்டையாடு கின்றனர்.
மான் உள்ளிட்ட வேறு சில விலங்கினங்களை ஈர்க்கும் வகையிலான ஓசை களை எழுப்ப இந்த கருவியை எளிதாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிகிறது.
இந்தக் கருவிகளும் வேட்டைக்காரர்களும் இணையும்போது வனவிலங்குகள் கணிசமாக அழிவை சந்திக்க நேரிடும் என்பதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் உள்ளிட்டோர் மீது தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மாவட்டம் முழுக்க தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றனர்.
- டிராக்டர் தேவை கூடுதலாக இருப்பதால் வாடகை டிராக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
- அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்
தருமபுரி,
தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
உதவி கலெக்டர் கீதாராணி தலைமை தாங்கினார். துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
வேளாண் பொறியியல் துறை சார்பில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் டிராக்டர் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
உழவு பணி மற்றும் சாகுபடி பணி ஆகியவற்றிற்காக டிராக்டர் தேவை கூடுதலாக இருப்பதால் வாடகை டிராக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.பல்வேறு ஏரிகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஏரிக்கரை ஓரங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
இதேபோல் அரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு உதவி கலெக்டர் வில்சன் ராஜசேகர் தலைமை தாங்கினார். துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
காட்டு எருமைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர் சேதத்தை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பீணியாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் மாவட்ட கலெக்டர் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தருமபுரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
- காலாவதி தேதி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் முகவரி, உணவு பாதுகாப்பு லைசன்ஸ் ஆகியவை சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி நகரில் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை கடைகளில் தருமபுரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது தின்பண்ட ங்கள், குளிர் பானங்கள், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட வைகளில் உற்பத்தி தேதி, காலாவதி தேதி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் முகவரி, உணவு பாதுகாப்பு லைசன்ஸ் ஆகியவை சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
மேலும் உணவு தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் தலையுறை, கையுறை அணிந்து உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பேக்கரிகள், ஓட்டல்கள், உணவகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
- ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அரைகுறை ஆடையுடன் பெண்கள் நடனம் ஆடினர்.
- 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் கடந்த 5-ந் தேதி செல்லியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இதையடுத்து அன்று மாலை நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அரைகுறை ஆடையுடன் பெண்கள் நடனம் ஆடினர்.
இதுகுறித்து பேளாரஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேளாரஅள்ளியை சேர்ந்த முனியப்பன் (வயது 60), பெரியாம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (28), சித்திரப்பட்டியை சேர்ந்த செல்வம் (30) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- குடும்ப நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்ற வழக்குகள் என மொத்தம் 1036 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
- விசாரணையின் முடிவில் 873 வழக்குகளுக்கு ரூ.8 கோடியே 73 லட்சம் தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தருமபுரி,
மாவட்ட அளவில் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தர வின்படியும், சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டு தலின்படியும், சிறப்பு மக்கள் நீதிமன்றம் தருமபுரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு சுரேஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தர்ராஜன், கூடுதல் மகளிர் நீதிபதி மதுவர்ஷினி மற்றும் நீதிபதிகள் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.
இதேபோல் அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்ற வழக்குகள் என மொத்தம் 1036 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
விசாரணையின் முடிவில் 873 வழக்குகளுக்கு ரூ.8 கோடியே 73 லட்சம் தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குதாரர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.






