என் மலர்
தர்மபுரி
- விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுகிறது.
- ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி ஆபத்தில் சிக்குபவர்களை நிரந்தர மாக கட்டுப்படுத்த தேவை யான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இருந்து கொண்டே இருக்கும்.
தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், சில நேரங்களில் வெளிநாட்டவர்களும் கூட இங்கே சுற்றுலா வந்து செல்கின்றனர்.
இங்கு, காவிரியாற்றின் சில பகுதிகள் சுழல் மற்றும் இழுவை நிறைந்த பகுதியாக உள்ளன. இதுதவிர, சில பகுதிகளில் ஆற்றில் முதலைகள் உள்ளன.
ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி உட்பட இது போன்ற பகுதிகளை தேர்வு செய்து, ஆபத்தான பகுதி.
இங்கு குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ கூடாது' என 5-க்கும் மேற்பட்ட மொழிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இந்த அறிவிப்புகளையும் மீறி சிலர் காவிரியாற்றில் குளிப்பது உள்ளிட்ட நடவடிக் கைகளில் ஈடுபடுகின்றனர்.
இவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவோரில் பெரும் பாலானவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றோர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை மதித்து நடக்கின்றனர்.
ஒரு சிலர் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு ஆற்றின் அருகில் செல்வது, ஆற்றில் இறங்குவது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரில் சிலர் சில நேரங்களில் ஆபத்தில் சிக்குகின்றனர். இதனால் விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுகிறது.
உயிரிழப்பு நிகழ்ந்த குடும்பங்களில் நீண்ட காலத்துக்கு சோகம் தொடரும் நிலை உருவாகி விடுகிறது. எனவே, அப்பகுதிகளில் காவல்துறை மூலம் கண்காணிப்பை அதிகரித்து இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும்.
அறியாமை, அதீத நம்பிக்கை போன்றவற்றால் காவிரியாற்றில் உள்ள ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி ஆபத்தில் சிக்குபவர்களை நிரந்தரமாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
- தேர்தல் வாக்குறுதி 313-ன் படி முறையான சிறப்பு பென்சன் வழங்கவேண்டும்.
- உண்ணாவிரதம் கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு நிதி ரூ.25000 வழங்க வேண்டும்.
தருமபுரி,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாநில துணைத்தலைவர் கணேசன், மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மதலைமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காவேரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் குப்புசாமி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், நிர்வாகி கேசவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தேர்தல் வாக்குறுதி 313-ன் படி முறையான சிறப்பு பென்சன் வழங்கவேண்டும். உண்ணாவிரதம் கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு நிதி ரூ.25000 வழங்க வேண்டும். சமூகநல முன்னாள் இயக்குநர் ஆப்பிரகாம் உத்தரவுபடி ஓய்வுகால பலன்களை ஓய்வுபெறும் அன்றே முழுமையாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- ரேட்டால் என்ற 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து தயாரிக்கப்பட்ட எலி மருந்து மத்திய மற்றும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் யாரேனும் ரேட்டால் மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பூச்சி மருந்து சட்டம் 1968 இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தருமபுரி,
தடைசெய்யப்பட்ட எலி மருந்து உரக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விஜயா மற்றும் தருமபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) தாம்சன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ரேட்டால் எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில் ரேட்டால் என்ற 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து தயாரிக்கப்பட்ட எலி மருந்து மத்திய மற்றும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த அபாயகரமான மருந்தை விற்பனை செய்ய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தருமபுரி மாவட்ட மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்துக் கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளிலும் இந்த மருந்தை விற்பனை செய்யக்கூடாது.
அதேபோல, பொதுமக்களும் இந்த மருந்தை எந்த காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். இம்மருந்து விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிய வேளாண்துறையை உள்ளடக்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, மாவட்டத்தில் யாரேனும் ரேட்டால் மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பூச்சி மருந்து சட்டம் 1968 இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இம்மருந்து விற்பனை செய்வது தெரிய வந்தால் தருமபுரி (9443635600), நல்லம்பள்ளி (7010172866), பாலக்கோடு (9952401900), காரிமங்கலம் (8526719919), பென்னாகரம் (9443207571), அரூர் (7010983841), மொரப்பூர் (6369976049), பாப்பிரெட்டிப்பட்டி (9444497505) ஆகிய வட்டாரங்களுக்கான பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்தனர்.
- இந்த கோவிலில், சுப்பு (எ) சுப்புலட்சுமி என்ற பெண் நாய் வளர்ந்து வருகிறது.
- சுப்புலட்சுமியை கால பைரவராகவே பக்தர்கள் கருதுகின்றனர்
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், காசிக்கு அடுத்த மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தட்சிண காசி காலபைரவர் கோவில் உள்ளது.
சுமார் 1500 ஆண்டு பழமையான இந்த கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை நாளில், அஷ்டமி பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்கள். காலையில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகத்தை காண, பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம்.
இது தவிர, ராகுகால பூஜை, மாலை 6 மணிக்கு மிளகாய் வற்றல் மூலம் நடத்தப்படும் யாகம், எதிரிகளை ஒழிக்கும் சத்ரு சம்ஹார யாகம், குருதியாகம் ஆகியவை இங்கு நடத்தப்படுகிறது.
இந்த பூஜைகளில் வெளி மாநில விஐபி பக்தர்கள் கலந்து கொள்வர். இங்கு நடக்கும் பைரவர் ஜெயந்தி விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
விழாக்காலத்தின் போது, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இந்த காலபைரவர் கோவிலில், சுப்பு (எ) சுப்புலட்சுமி என்ற பெண் நாய், கடந்த 6 வருடமாக வளர்ந்து வருகிறது. கோவில் பக்தர்கள் கொடுக்கும் பிஸ்கெட், பால் போன்றவற்றையும், ஊழியர்கள் தரும் பால் சாதத்தை மட்டும் சாப்பிடுகிறது. அசைவ உணவை சாப்பிடுவதில்லை.
மேலும், கோவிலை விட்டு வேறு எங்கும் செல்வதும் கிடையாது. இந்த நாய் காலையில் 6 மணிக்கு நடை திறக்கும்போது அய்யருக்கு முன்னால் உள்ளே சென்று விட்டு திரும்பும்.
இதேபோல் மாலை 4 மணிக்கு நடை திறந்ததும் உள்ளே சென்று கால பைரவரை பார்த்துவிட்டு திரும்பும். சில நாட்களில் அடிக்கடி கோவில் உள்ளே சென்று விட்டு திரும்புகிறது. அதன் பின்னர் கோவில் வளாகத்திலோ அல்லது அறநிலையத்துறை செயல் அலுவலர் அறையிலோ படுத்துக் கொள்வது வழக்கம்.
காலபைரவரை தினமும் நாய் வழிபடும் அதிசயம், வேறு எங்கும் இல்லை என்பதால், இந்த காட்சியை பார்க்கும் பக்தர்கள் மெய்சிலிர்த்து போகின்றனர்.
இதுபற்றி கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் கூறுகையில், கடந்த 6 வருடமாக சுப்பு இங்கே வளர்ந்து வருகிறது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும்.
தினமும் கோவில் நடை திறக்கும் சத்தம் கேட்டதும், கருவறைக்குள் சென்று மூலவரை சுற்றி வந்து, பின்னர் கோயில் வளாகத்தில் படுத்துக்கொள்கிறது.
கோவிலை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை. இதற்கு முன்பு பல நாய்கள் இங்கு வளர்ந்த போதும், சுப்பு மட்டுமே பைரவரை தினமும் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது.
எனது அறையில் படுத்திருக்கும் சுப்பு வெளியறினால் நல்லது என நாம் நினைத்தால், உடனே அறையை விட்டு வெளியேறி விடும். அந்த அளவிற்கு நாம் நினைப்பதை உணரும் சக்தியும் இந்த சுப்புக்கு உண்டு. சுப்புலட்சுமியை கால பைரவராகவே பக்தர்கள் கருதுகின்றனர் என்றார்.
- கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
- செவந்தி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் கெரேகோட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக். இவரது மனைவி செவந்தி (வயது24). இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அலசநத்தம் பகுதியில் அபிஷேக் வேலை செய்து வருவதால் கணவனும்-மனைவியும் அங்கேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அபிஷேக் தனது மனைவி செவந்தியிடம் சமையல் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது செவந்தி சமையல் செய்யாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அபிஷேக் சூளகிரியை அடுத்த ஜீபாளையத்தில் உள்ள தனது பெற்றோருக்கு சென்றுவிட்டார்.
இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட செவந்தி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் அட்கோ போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து செவந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனநிலையில் செவந்தி தற்கொலை கொண்டதால் ஓசூர் எஸ்.பி. கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்தப்பா. இவரது மகன் ஹரீஷ் (வயது31). இவர் மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனை முத்தப்பா தட்டிகேட்டதால், தந்தைக்கும், மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஹரீஷின் பெற்றோர் கோபித்து கொண்டு தனது மகள் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதன்காரணமாக மனமுடைந்த காணப்பட்ட ஹரீஷ் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று முன்தினம் இரவு வீட்டில் எழிலரசி தூங்க சென்றார்.
- பதறிபோன பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் லிங்கநாய்க்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் எழிலரசி (வயது22). இவர் பி.ஏ. வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் எழிலரசி தூங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது எழிலரசி காணவில்லை. பதறிபோன பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து கோவிந்தராஜ் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான எழிலரசியை தேடிவருகின்றனர்.
- அனுமதியும் இன்றி, இரண்டு ஐந்து ரூபாய் காயின் செலுத்தினால் 20 லிட்டர் கேன் குடிநீர் என விளம்பர பதாகை வைத்து குடிநீர் கேன்கள் சப்ளை செய்வது கண்டறியப்பட்டது.
- உணவு பாதுகாப்பு உரிமம் எண் அச்சிட்டு பிறகு சப்ளை செய்யப்பட வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சின்ன மாட்லாம்பட்டி கிராமத்தில் ஒரு புதிய கட்டிடத்தில் உரிய அனுமதி இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் சப்ளை செய்வதாக பெறப்பட்ட தகவல் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் மாட்லாம்பட்டி பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் அந்த கட்டிடத்தில், எந்தவித அனுமதியும் இன்றி, இரண்டு ஐந்து ரூபாய் காயின் செலுத்தினால் 20 லிட்டர் கேன் குடிநீர் என விளம்பர பதாகை வைத்து குடிநீர் கேன்கள் சப்ளை செய்வது கண்டறியப்பட்டது.
ஒரு அறையில் 20 லிட்டர் காலி கேன்கள் 50-க்கும் மேற்பட்டவை காணப்பட்டது.மேலும் கட்டிடத்தின் மேற்பகுதியில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள இரண்டு பெரிய டேங்க் உடன் ஆர்.ஓ. சிஸ்டம் அமைத்து நிலத்தடி நீரிலிருந்து நீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது அறியப்பட்டது.
கட்டிடத்தின் உரிமையாளரிடம் விசாரித்த போது ஒரு சில இடங்களில் ஒரு மற்றும் ஐந்து ரூபாய் காயின் போட்டு தண்ணீர் விற்பனை செய்வதை அறிந்து அதன் படி செய்ய முயற்சித்ததாக தெரிவித்தார்.
மேற்படி உரிமையாளருக்கு அவ்வாறு விற்பனை செய்வது உணவு பாதுகாப்பு தர சட்டப்படி தவறு என்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்ய வேண்டும் என்றால் முதலில் பொது பணித்துறை பிறகு ஐ.எஸ்.ஐ. தர சான்று அதன்பின் உணவு பாதுகாப்பு துறை உரிமம் ஆகியவற்றின் அனுமதி பெற்ற பிறகு அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்ய வேண்டும்.
உணவு பாதுகாப்பு உரிமம் எண் அச்சிட்டு பிறகு சப்ளை செய்யப்பட வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டது.
அதுவரை எக்காரணம் கொண்டும் தண்ணீர் சப்ளை செய்யப்படக்கூடாது எனத் தடை விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் அளித்து 20 லிட்டர் காலி கேன்கள் அப்புறப்படுத்தியுடன், விளம்பரப் பதாகையும் அகற்றப்பட்டது.
- வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
- சிகிச்சை பெற்று வந்த அஜீத்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மனைவி மகேஸ்வரி. கூலித் தொழிலாளி. இவர்களது மகன் அஜீத்குமார் (வயது24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் அஜீத்குமாருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளானர். இதற்காக அவர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த காணப்பட்ட அஜீத்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
உடனே அவரை தாய் மகேஸ்வரி மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஜீத்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மகேஸ்வரி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கம்பி வேலியில் அதிவேகமாக மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மான் உயிரிழந்துள்ளது.
- மானை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அ பள்ளிப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தில் பருத்திக்காடு பகுதியில் இருந்து அருகில் உள்ள வாழைத் தோப்பிற்கு கடந்து செல்ல மான் ஒன்று வேகமாக ஓடியது.
அப்போது மானின் தலையில் உள்ள கொம்பு வாழை தோப்பிற்கு பாதுகாப்பாக சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலியில் அதிவேகமாக மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மான் உயிரிழந்துள்ளது.
இது பற்றி மாரியம்பட்டி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வனத்துறை அதிகாரியான சாக்கன் சர்மா தலைமையில் மானை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அபள்ளிப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ஒன்றிய து.தலைவர் ராஜலிங்கம் ஒன்றிய செயலாளர் மணி ஆகியோர் ஏற்பாட்டில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வடக்கு ஒன்றியம், பிக்கிலி ஊராட்சியில் உள்ள தன்டுகாரனஹள்ளி பிக்கிலி, பிக்கிலி கூட்ரோடு ஆகிய 3 ஊர்களில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமையில் மாவட்ட ஓ.பி.சி. அணி செயலாளர் கல்யாண சுந்தரம் மற்றும் ஒன்றிய து.தலைவர் ராஜலிங்கம் ஒன்றிய செயலாளர் மணி ஆகியோர் ஏற்பாட்டில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டார்.
மேலும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், மாவட்ட செயலாளர் குமார், பட்டியல் அணி மாவட்ட தலைவர் களிர்கண்ணன், ஐ.டி பிரிவு மகேஷ் பாபு, லட்சுமி, ஒன்றிய பொதுச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் பச்சையப்பன், ஓ.பி.சி. அணி ஒன்றிய தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் மாதேஷ், சிவக்குமார், இளைஞரணி ராமகிருஷ்ணன், மருத்துவபிரிவு பூவரசன், தொழில் பிரிவு சிவக்குமார், கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் காளி மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் கிளைத் தலைவர்கள் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
- பைரவருக்கு காலை 9 மணிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
- தொடர்ந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தட்சணகாசி காசி காலபைரவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் மாத மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று ஸ்ரீ தட்சிணகாசி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் ராஜ அலங்காரமும் நடைபெறும்.
இதனைக்காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதேபோல் இன்று திங்கட்கிழமை ஆணி மாதம் 25ஆம் நாள் தேய்பிறை அஷ்டமி என்பதால் காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், காலை 6 மணி அளவில் கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம் ஏகாந்த ருத்ர ஹோமம், காலை 8 மணிக்கு கோ பூஜை அஸ்தவ பூஜை, காலை 8.30 மணிக்கு பைரவர் உற்சவமூர்த்தி கோவிலை வலம் வருதல், பைரவருக்கு காலை 9 மணிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று இரவு 10 மணிக்கு 1008 கிலோ மிளகாய் 108 கிலோ மிளகு சத்ரு சம்ஹார யாகம் நடக்கிறது. 64 பைரவர் யாகம் மகா குருதி பூஜை, இரவு 2.30 மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் கோவிலை வலம் வருதல், அதிகாலை 3 மணிஅளவில் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறுகிறது.
கலச அபிஷேகம் 8 வகையான பல அபிஷேகங்கள் நடைபெறும். சுவாமிக்கு சத்ரு சம்ஹாரம் அலங்காரம் செய்யப்படும். சதுர்வேத பாராயணம் சிறப்பு தரிசனம் நடைபெறும்.
- தருமபுரி துணை மின்நிலையம், பைசு அள்ளி துணை மின்நிலையம், சோலைக்கொட்டாய் துணை மின்நிலையம் ஆகிய இடங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
தருமபுரி,
தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி கோட்டம், தருமபுரி துணை மின்நிலையம், பைசு அள்ளி துணை மின்நிலையம், சோலைக்கொட்டாய் துணை மின்நிலையம் ஆகிய இடங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
அதனால் தருமபுரி நகரத்திற்குட்பட்ட பேருந்துநிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
இதே போல் ராஜாபேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தருமபுரி, மாட்லாம்பட்டி, கெங்கு செட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது.
மாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ் மொரப்பூர், பறையப்பட்டி புதூர், கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களுர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர், ஈட்டியாம்பட்டி, வேப்பம் பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.






