என் மலர்
தர்மபுரி
- இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த காந்தன் கல்லால் தனது தங்கை மல்லிகாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட ஹேப்பி நகரை சேர்ந்தவர் மல்லிகா (வயது45). இவருடைய அண்ணன் காந்தன் (50). இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் மல்லிகாவுக்கு சொந்தமான இடத்தில் காந்தன் சுவர் எழுப்பி உள்ளார். இதை மல்லிகா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த காந்தன் கல்லால் தனது தங்கை மல்லிகாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் காந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
- பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் நேரத்தை 9 மணியிலிருந்து 10 மணியாக மாற்றி அமைக்க வேண்டும்.
கடத்தூர்,
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரத்துறை சார்பில் மாதந்தோறும் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மின் நிறுத்தம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மற்றும் மாலை 5 மணி வரை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், காலை 9 மணி முதல் செய்யப்படும் மின் நிறுத்தத்தால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு, தனியார் வேலைகளுக்கு செல்லும் பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
மின்நிறுத்த நாட்களில் அவர்களின் உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவற்றை சீராக்கும் வகையில் மின்சார துறை சார்பில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் நேரத்தை 9 மணியிலிருந்து 10 மணியாக மாற்றி அமைக்க வேண்டும் என மின்சார துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- 45 நாட்களுக்குள் பேருந்து நிலைய முழு சீரமைப்பு பணிகளும் முடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் ஒப்பந்ததாரரின் வேலை சுணக்கமாக நடந்து வருகிறது.
- வரும் பேருந்துகள் நகர நெடுஞ்சாலையில் இருபுறமும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய தரைதளம் அமைக்க 83 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து ஏப்ரல் 24-ந் தேதி பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி புதிய தரைத்தளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதையடுத்து புறநகர் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் தரைத்தளத்தை ஜேசிபி எந்திரம் மூலம் வெட்டி எடுக்கப்பட்டது.
ஜல்லி கற்களை கொண்டு சமன் செய்துள்ளனர். அதில் பேருந்து நிலைய கடைகள் இருக்கும் பகுதியில் 10 அடி அகலம் 40 அடி நீளத்திற்கு பழைய தரைத்தளத்தை அகற்றாமல் மற்ற பகுதிகளை மட்டும் சமன் செய்துள்ளனர்.
பேருந்து நிலைய சீரமை பணிகள் ஒருபுறம் ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே செய்வதற்கு 78 நாட்கள் கடந்துள்ளது. மேலும் 45 நாட்களுக்குள் பேருந்து நிலைய முழு சீரமைப்பு பணிகளும் முடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் ஒப்பந்ததாரரின் வேலை சுணக்கமாக நடந்து வருகிறது.
இதனால் தினந்தோறும் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் என எப்போதும் பரபரப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூர், சென்னை மற்றும் தருமபுரி, சேலம், கோவை, பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நகர நெடுஞ்சாலையில் இருபுறமும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வணிக கடைகள் முன்பு பந்தல் அமைத்தும், சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.
மேலும் பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை வரும்போது மேலும் கூட்ட நெரிச்சல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருக்கும் வயதான பெண்கள் உள்ள வீடுகளின் முன்பு விழுந்து கிடப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
- கொட்டாவூர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் மதுபான கடை, நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட டாட்டா நகர் பகுதிக்கு இட மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட அதியமான் கோட்டை மற்றும் வடக்கு தெரு கொட்டாவூர் பகுதி யில் இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடை கள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் இப்பகுதி யில் அதிக அளவில் குடிமகன்கள் நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, சேசம்பட்டி, புறவடை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் அதிக அளவில் மது அருந்த குவிந்து வந்தனர்.
அதிகளவில் மதுப்பிரி யர்களால் நிறைந்து வந்த அரசு மதுபான கடைகள் கடந்த ஒரு வருடங்களாகவே கடைக்கு வரும் குடி மகன்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
அதற்கு முக்கியமாக சந்துக்கடைகள் அதிகரித்தது தான் காரணம் என பல்வேறு புகார்கள் இருந்தது. மேலும் அவற்றில் கள்ள மதுபானங்களோடு சேர்த்து கலப்பட மதுபானமும் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதன் காரணமாக அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட சந்துக் கடைகள் முழுமையாக மூடப்பட்டன.
இதனால் மீண்டும் அதியமான் கோட்டை மற்றும் வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு மது பிரியர்கள் குவிந்து வந்தனர்.
இதனால் அப்பகுதியில் கிராமங்கள் வழியாக வரும் பொழுது பல்வேறு இன்னல்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன.
சில நேரங்களில் விபத்துக்கள் குறிப்பாக வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் தெருக்கள் வழியாக வரும் பொழுது மதுபோதை யில் தள்ளாடியபடி வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருக்கும் வயதான பெண்கள் உள்ள வீடுகளின் முன்பு விழுந்து கிடப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இது குறித்து மாலை மலர் நாளிதழில் பொது மக்களுக்கு அதிக அளவில் டாஸ்மாக் கடைக்கு செல்லும் குடிமகன்களால் பாதிப்பு ஏற்படுகிறது என செய்திகள் வெளியிடப் பட்டிருந்தன.
அதன் காரணமாக தற்பொழுது வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் மதுபான கடை, நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட டாட்டா நகர் பகுதிக்கு இட மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
- அங்கன்வாடி மையத்தில் ஆபத்தான முறையில் சமையலறை மற்றும் கல்வி கற்றல் என ஓரே அறையில் கடந்த 3 வருடங்களாக குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
- கியாஸ் சிலிண்டர்களை சாதாரண பெரியவர்களே கையாள்வது கடினமான சூழ்நிலையில், எரிவாயு சிலிண்டர் பகுதியிலே கல்வி கற்க வந்த சிறுவர்கள் அமர்ந்துள்ளனர்.
தருமபுரி,
தமிழகத்தில் 3 வயதுடைய குழந்தைகள் இளம் வளர் பருவ கல்வி பயில கிராமங்கள் தோறும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு, குழந்தை–களின் ஊட்டச்சத்து வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உணவுகளை அளித்தும், கல்வி ஆர்வத்தை தூண்டும் வகை–யில் கல்வி உபகரணங்கள் வழங்கி கற்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் தருமபுரி நகராட்சிக்குட்பட்ட காமாட்சி அம்மன் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு ஓடு போட்ட கட்டிடத்தில் இருந்தது.
இந்த கட்டடம் பழைய கட்டிடம் என்பதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டிடம் கட்டு–வதற்காக நகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது.
இதற்கு மாற்று இடமாக தொடக்கப்பள்ளியில் அங்கன்வாடி என ஒதுக்கப்பட்ட ஒரு சிறிய சமையல் அறையில் இயங்கி வருகிறது.
அங்கன்வாடி மையத்தில் ஆபத்தான முறையில் சமையலறை மற்றும் கல்வி கற்றல் என ஓரே அறையில் கடந்த 3 வருடங்களாக குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
அரசு தொடக்கப் பள்ளியில் ஆபத்தான வகையில் உள்ள சமையல் கூடத்திலேயே அங்கன்வாடி மையம் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட காமாட்சி அம்மன் தெருவில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்குள்ள மாணவர்கள் கல்வி பயில பாலர் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நகர்ப்புற நூலகம் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வரும் நிலையில், வகுப்பறை இல்லாததால் தற்பொழுது 20 குழந்தைகள் மட்டுமே வருவதாகவும் அதிலும் குறிப்பாக மதிய உணவு வழங்கும் நேரத்தில் மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து உணவை வாங்கி செல்கின்றனர்.
மீதம் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த சமையல் அறையிலேயே ஒரு ஓரத்தில் அமர்ந்து படித்து வருகின்றனர். அதே சமயம் அதே இடத்தில் பொருட்கள் இருப்பு மற்றும் சமையலறையும் செயல்பட்டு வருகிறது.
அவர்களுக்கு தேவையான உணவு தயாரிப்பு செய்ய ஊழியர்கள் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் அருகிலேயே குழந்தைகள் அமர்ந்து விளையாடிக் கொண்டு வருகின்றனர்.
மேலும் குழந்தைகள் அடிக்கடி எழுந்து சென்று வரும் நிலையில், தன்னை அறியாமல் கியாஸ் சிலிண்டரின் பைப் லைன் பகுதி கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதின் ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனர்.
கியாஸ் சிலிண்டர்களை சாதாரண பெரியவர்களே கையாள்வது கடினமான சூழ்நிலையில், எரிவாயு சிலிண்டர் பகுதியிலே கல்வி கற்க வந்த சிறுவர்கள் அமர்ந்துள்ளனர்.
சமையல் செய்யும் போது குழந்தைகளை பள்ளி வராண்டாவில் உட்கார வைத்து விளையாட வைக்கின்றனர். குழந்தைகள் அனைவரும் வெயில், மழை என்று பாராமல் உட்கார வைத்துள்ளனர்.
இடிக்கப்பட்ட அங்கன்வாடி பள்ளி குறித்து பகுதி மக்கள் நகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பலமுறை புகார் மனு வழங்கியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு காமாட்சி அம்மன் தெருவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட அனுமதி அளிக்க வேண்டும். அதுவரை அருகிலுள்ள வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் சிறுமி மாயமானது தெரியவந்தது.
- சிறுமியின் பெற்றோர் காலை எழுந்து பார்த்தபோது தனது மகளை காணவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 15வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. உடனே பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் சிறுமி மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
மொரப்பூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்றார். சிறுமியின் பெற்றோர் காலை எழுந்து பார்த்தபோது தனது மகளை காணவில்லை. இதனால் பதறிபோன அவர்கள் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி வரும் வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளதால் விலை படு வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- வரும் ஆடி மாதம் முதல் பண்டிகை காலம் தொடங்குவதால் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் காய்கறிகள், சிறுதானியங்கள், மலர்கள் உள்ளிட்ட அனைத்து வகை பயிர்களும் சாகுபடி செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்பொழுது மாவட்டத்தில் சம்பங்கி, சாமந்தி, குண்டுமல்லி, சன்னமல்லி, காக்டா கனகாம்பரம், ஜாதிமல்லி, பன்னீர் ரோஸ், நந்தியாவட்டம், உள்ளிட்ட மலர்களை அதிகப்படியாக சாகுபடி செய்து வருகின்றனர்.
சாமந்தி, கோழி கொண்டை உள்ளிட்ட சில மலர்கள் பருவம் இல்லாததால் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.மேலும் மாலை கட்டுவதற்கு பயன்படும் சம்பங்கி பூ மற்றும் பன்னீர் ரோஸ் வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர், மாலூர், பெங்களூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி வரும் வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளதால் விலை படு வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வரும் ஆடி மாதம் முதல் பண்டிகை காலம் தொடங்குவதால் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இன்று தருமபுரி பஸ் நிலைய பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ 300 ரூபாய், சன்னமல்லி கிலோ 200 ரூபாய், குண்டுமல்லி கிலோ 220 ரூபாய், காக்டா கிலோ 240 ரூபாய், ஜாதி மல்லி கிலோ 240 ரூபாய், மூக்குத்தி பூ 120 ரூபாய், அரளி 40 முதல் 80 ரூபாய், வரையும் பன்னீர் ரோஸ் 60 ரூபாய், நந்தியாவட்டம் 300 ரூபாய், என விலை விற்பனை செய்யப்பட்டது.
தினமும் அதிக அளவில் தேவைப்படும் சம்பங்கி பூ கிலோ 15 ரூபாய்க்கு படுவீழ்ச்சியில் விற்பனை செய்யப்பட்டது.
- மாரியம்மன் சிலை மீது வைக்கப்பட்டிருந்த 3.7 கிலோ எடை கொண்ட வெள்ளி கிரீடம் திருடப்பட்டன.
- மேலும் அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் ரூ.30,000 திருடப்பட்டன.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்தது.
இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள், மூடப்பட்டு இருந்த இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து மாரியம்மன் சிலை மீது வைக்கப்பட்டிருந்த 3.7 கிலோ எடை கொண்ட வெள்ளி கிரீடம் திருடப்பட்டன.
மேலும் அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் ரூ.30,000 திருடப்பட்டன.
இதுகுறித்து அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பின்பு தடவியல் துறையினரை வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தில் உள்ள மற்றொரு மாரி யம்மன் கோவிலில் திருடு போனது.
அதில் உண்டியல் மட்டும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கத்தை மட்டும் எடுத்துச் சென்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுற்றுவட்டார பகுதிகளில் நான்கு திருட்டு நடைபெற்றுள்ளதால் இந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த இரண்டு மாதத்திற்கு முன் காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.
- காய்கறிகளின் விலை சந்தையில் ஏற்றம், இறக்கத்தின் போது சராசரி விலை கிடைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தருமபுரி,
காய்கறி பொருட்களை ரேசன் கடையில், குறைந்த விலையில், குடும்ப அட்டை தாரருக்கு வழங்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதாவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் மோசமான கொள்கையே விலை உயர்வுக்கு காரணம். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் காய்கறிகளுக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.
தக்காளி உள்ளிட்ட சிலகாய்களுக்கு உரிய கட்டுப்படியான விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே தக்காளியை அழித்தனர். தற்போது தக்காளி உயர்வுக்கு பருவநிலை ஒரு காரணமாக உள்ளது.
காய்கறிகளின் விலை சந்தையில் ஏற்றம், இறக்கத்தின் போது சராசரி விலை கிடைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு காய்கறிகள் விலை சராசரியாக கிடைக்க ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, முன்னாள் மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, மாவட்ட தலைவர் ஜெயா, நகரசெயலாளர் நிர்மலாராணி, உள்ளிட்டா நிர்வாகிகளுடன் மனு கொடுத்தனர்.
- 5 குடும்பங்களை மட்டும் சேர்க்காமல் எங்களிடம் வரியும் வாங்காமல் உங்களை இந்த ஊரில் இருந்து தள்ளி வைத்து விட்டோம் என்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவருடன் 20 நபர்கள் சேர்ந்து கூறினர்.
- அப்படி கட்டவில்லை என்றால் உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம் என மிரட்டல் விடுத்து எங்களை திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் செய்துவிட்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுக்கா ஜெல்மாரம்பட்டியில் 5 குடும்பங்களை சேர்ந்த மாதப்பன், பச்சமுத்து, முனியப்பன் மணிவண்ணன், சம்பத், ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் எங்கள் குடும்பத்துடன் ஜெல்மாரம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். அனைவரும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இந்த நிலையில் கடந்த 29.5.2023 லவ் இருந்து 31.5.2023 வரை எங்கள் ஊரில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.
அந்த திருவிழாவில் மேற்கண்ட எங்கள் 5 குடும்பங்களை மட்டும் சேர்க்காமல் எங்களிடம் வரியும் வாங்காமல் உங்களை இந்த ஊரில் இருந்து தள்ளி வைத்து விட்டோம் என்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவருடன் 20 நபர்கள் சேர்ந்து கூறினர்.
இதனால் எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழாவில் எங்கள் 5 குடும்பங்களும் கலந்து கொள்ளாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். இதுவரை ஊரில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை. திருவிழாவின் கடைசி நாள் அன்று இரவு நிகழ்ச்சிக்கு சென்ற எங்களை பஞ்சாயத்து தலைவரின் ஆட்கள் சிலர் மது போதையில் அடித்து உதைத்து துன்புறுத்தினர்.
20 குடும்பங்கள் பயன்படுத்தும் சி.சி. ரோடை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். அதை தட்டிக் கேட்டதற்காக எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும், அதனால் நீங்கள் அனைவரும் அபராதமாக 40,000 ரூபாய் கிராமத்திற்கு கட்ட வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.
அப்படி கட்டவில்லை என்றால் உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம் என மிரட்டல் விடுத்து எங்களை திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் செய்துவிட்டனர்.
இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மேற்கண்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் அமைதியையும் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் இனி வரும் காலங்களில் நாங்கள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் பரம்பரையாக ஒன்றாக கூடி திருவிழாவில் கலந்து கொள்ள எங்களுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று மாலை முதல் தருமபுரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது.
- வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்து சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, பருவநிலை மாற்றத்தால் காலதாமதமாக தொடங்கியுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் காலதாமதமாக மழை பெய்ய தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் தகவல் தெரிவித்தது.
இந்த நிலையில் கேரளா, கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது. அதன் தாக்கமாக தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
நேற்று மாலை முதல் தருமபுரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்து சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல் நேற்றுமாலை முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவாக மழை பெய்துள்ளது.
மேலும் தருமபுரி 7 மில்லி மீட்டர், பாலக்கோடு 6.2 மில்லி மீட்டர், மாரண்டஅள்ளி 6 மில்லி மீட்டர், பென்னாகரம் 5 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 3 மில்லி மீட்டர், அரூர் 27.2 மில்லி மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி 18 மில்லி மீட்டர், என மொத்தம் 72.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- காய்கறிகளின் விலை உயர்ந்ததால், குறைந்த விலையில் கிடைக்கும் கீரை வகைகளைப் பொதுமக்கள் அதிக அளவில் வாங்குகின்றனர்.
- தருமபுரி மாவட்டத்திலும் கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்று வட்டாரப் பகுதியில் தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், கேரட் மற்றும் கீரை உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில், காய்கறிகள் குறைந்த பட்சம் 65 முதல் 80 நாட்களுக்கு பின்னர் மகசூல் கிடைக்கும். கீரை வகைகள் 25 நாட்களில் அறுவடைக்குக் கிடைக்கும்.
இதனால், அண்மைக் காலமாக ஓசூர் பகுதி விவசாயிகள் தண்டுக் கீரை, அரைக் கீரை, வெந்தயக் கீரை, பாலக் கீரை உள்ளிட்ட கீரை வகைகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
அறுவடை செய்யப்படும் கீரைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கர்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். குறைந்த நாட்களில் வருவாய் பலன் தருவதாலும், சந்தையில் பெரியதாக விலையில் மாற்றம் இருப்பதில்லை என்பதாலும், கீரை சாகுபடி தங்களுக்குக் கைகொடுப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல் தருமபுரி மாவட்டத்திலும் கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில் ஓசூர் பகுதியில் காய்கறி பயிர்களைப் போலக் கீரை வகைகளையும் அதிகளவில் சாகுபடி செய்கிறோம்.
கீரை 25 நாட்களில் அறுவடைக்கு வருவதால், பொருளாதார ரீதியாக எங்களுக்குக் குறுகிய காலத்தில் பலன் கிடைக்கிறது.
கடந்த சில வாரங்களாக தக்காளி, பீன்ஸ், இஞ்சி, கத்தரிக் காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்ததால், குறைந்த விலையில் கிடைக்கும் கீரை வகைகளைப் பொதுமக்கள் அதிக அளவில் வாங்குகின்றனர்.
இதனால், கடந்த வாரங்களில் ஒரு கட்டு கீரை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்த நிலையில், தற்போது ரூ.15-க்கு விற்பனையாகிறது.
மேலும், ஆண்டு முழுவதும் கீரையை பொறுத்த வரை விலையில் பெரிய ஏற்ற, இறக்கம் இல்லாததால் எங்களுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைத்து வருகிறது என்றனர்.






