என் மலர்
தர்மபுரி
- கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.
- அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜகோபால் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே புட்டிரெட்டிப்பட்டியில் பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநியைத்துறை கட்டுபாட்டில் இருந்து வருகிறது.
இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூசாரி பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் பணம் ரூ.20 ஆயிரம் வரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜகோபால் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இரவு நேரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றதும், உண்டியலில் இருந்து மர்ம நபர் ரூ.20 ஆயிரம் வரை திருடி சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 5 கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்த உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அங்கிருந்த 195 கிலோ கெட்டுபோன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
- கெட்டுபோன மீன்களை விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிந்தால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலா தளத்தில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து அருவிகளை பார்த்து மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்தும் பின்பு அம்மியில் அரைத்து சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை ருசித்து சாப்பிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திலுள்ள மீன் கூடங்களில் அழுகிய நிலையில் உள்ள பழைய மீன்களை விற்பனை செய்து வந்ததும் அதனை உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்து கெட்டுப்போன மீன்களை அளித்தனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்று மாவட்ட கலெக்டரின் சாந்தி உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா அறிவுறுத்தலின் பேரில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து திடீர் ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து மீன்கள் மீது பார்மிலின் கெமிக்கல் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்று மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தினர் அப்பொழுது மீன்களில் எவ்வித பார்மிலினும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் அனைத்து கடைகளிலும் சோதனையிட்டதில் 5 கடைகளில் இருந்து தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 195 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு மண்ணில் குழி தோண்டி கொட்டப்பட்டு மீன்கள் அழிக்கப்பட்டன. மேலும் இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி மீண்டும் இது போல் அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அரசு பள்ளிகளில் சிதலமடைந்து காணப்படும் மேசை உள்பட உபகரணங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்துவதை தவிர்க்க எம்.எல்.ஏ. நிதியில் இருந்து புதிதாக மேசை உள்பட உபகரணங்களை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வழங்கி வருகின்றனர்.
- காரிமங்கலம் அரசு பள்ளிகளில் மேசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் பள்ளி மற்றும் அனுமந்தபுரம் உட்பட 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பில் மாணவ மாணவிகள் உட்காருவதற்காக 220 மேசை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமை வகித்து மேசைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் காவேரி, பி. டி.ஏ பொரு–ளாளர் செந்தில் குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் சந்திரன், முருகன் அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவம், வக்கீல் பெரியசாமி, பாரதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மகள் வீட்டில் இருந்து வீட்டிற்கு சென்றார்.
- சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னான். இவரது மனைவி சின்னம்மா (வயது70). இவர்களுக்கு மாதப்பன் (50) என்ற மகனும், கலா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சின்னம்மா நேற்று முன்தினம் இரவு சாம்பள்ளியில் இருக்கும் தனது மகள் வீட்டில் இருந்து வீட்டிற்கு சென்றார். அப்போது சோளப்பாடி வழியாக செல்லும்போது பின்னால் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது வேகமாக வந்து மோதியது.
இதில் படுகாய மடைந்த சின்னம்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சின்னம்மா வின் மகன் மாதப்பன் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவரை தேடி வருகின்றனர்.
- பென்னாகரம் வனப்பகுதிகளில் யானைகளின் 4 தந்தங்களை தீவைத்து வனத்துறையினர் அழித்தனர்.
- உடல் நிலை பாதிப்பால் உயிரிழந்த யானைகளை பிரேத பரிசோதனையின்போது அறுவை சிகிச்சை செய்து எடுத்து தனியாக எடுத்து வைக்கப்பட்ட தந்தங்களை வனத்துறை அதிகாரிகள் முன்னிலை எரிக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் யானை கூட்டங்கள் அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக கோடை காலங்களில் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் குடிநீருக்காக யானைகள் வனப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி உடல் நிலை பாதிப்பால் உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் அதனுடைய பிரேத பரிசோதனையின்போது அறுவை சிகிச்சை செய்து எடுத்து தனியாக பாதுகாக்கபட்டு வந்தது. அதனை தீயிட்டு அழிக்க தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது அதற்கான அனுமதி கிடைத்த நிலையில் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு தலைமையில் வனத்துறையினர் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் பாதுகாக்கபட்டு வந்த யானைகளின் 4 தந்தங்களை நேற்று தீயிட்டு எரித்து அழித்தனர். அப்போது வனத்துறையினர் மற்றும் வன உயிரின காப்பாளர்கள் உடனிருந்தனர்.
- கடைக்கு செல்வதாக கூறி சென்ற தமிழ்மணி வீடு திரும்பவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முனியப்பனை தேடிவருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் திப்பிரெட்டி அள்ளி அருகே கொண்டகரஅள்ளி காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகன் தமிழ்மணி (வயது15). இவர் திப்பிரெட்டிஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14-ந் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்ற தமிழ்மணி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மகாராஜன் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவனை தேடிவருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அஞ்சே அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு வீராசாமி (32) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் முனியப்பன் கடந்த 15-ந் தேதி ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால், மீண்டும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது மகன் வீராசாமி பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முனியப்பனை தேடிவருகின்றனர்.
- இலக்கியம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 20 டன்னுக்கு மேற்பட்ட விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன.
- பள்ளி வளாக பராமரிப்பு பணிகள் எனக்கூறி தனிச்சையாக சிலர் எவ்வித அனுமதியின்றி வெட்டி கடத்தி சென்றனர்.
தருமபுரி,
தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர் நிலை பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் உள்ளே வேம்பு, புங்கை, பாதம், மூங்கில், வாகை, தேக்கு உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மரங்கள் நன்கு வளர்ந்து உள்ளது.
இப்பள்ளியின் சுற்று சுவர் அருகாமையில் உயர் மின் அழுத்த மின்சார வயர் செல்வதால் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்பதால் பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை அங்கிருந்து அகற்றி பள்ளிக்கு வெளியே அமைக்குமாறு கடந்த 2022-ம் ஆண்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த கவிதா என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கான நடவடிக்கை இன்று வரை எடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது உள்ள பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் என்பவர் பள்ளி வளாக பராமரிப்பு பணிகள் எனக்கூறி தீர்மானத்தை நிறைவேற்றி தன்னிச்சையாக கடந்த சில தினங்களாக மாவட்ட நிர்வாகத்தின் எவ்வித அனுமதியும் பெறாமல், பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுவிட்டேன் என தெரிவித்து விட்டு மினி லாரியில் 20 டன்னுக்கும் மேற்பட்ட சுமார் 5 லோடு நன்கு வளர்ந்த வேம்பு, புங்கை, பாதாம் உள்ளிட்ட மரங்களும், பள்ளியின் சுற்று சுவர் ஓரத்தில் நன்கு வளர்ந்து விலை உயர்ந்த தேக்கு மரத்தையும் பள்ளி செயல்பட்டு கொண்டு இருக்கும் போதும் இரவு பகலாக வெட்டி கடத்தி சென்றுள்ளார்.
இதனால் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்களும், ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியுற்றனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலவலரிடமும் பள்ளி தலைமை ஆசிரியரிடமும் இச்சம்பவம் குறித்து கேட்ட போது, அம்மாதிரியான சம்பவம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்றும், தங்களிடம் யாரும் அனுமதியும் கேட்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பராமரிக்கபட்டு வந்த மரங்களை வெட்டி கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. ஆனால் கல்வி துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் மரங்களை கடத்துபவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மகளிர் உரிமைச் சட்டம் வருமா? வராதா? என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்பொழுது தொடங்கப்பட உள்ளது.
- கலைஞரின் மகன் முதலமைச்சராகி மகளிர் உரிமைத் திட்டத்தினை வழங்க உள்ளார்.
தருமபுரி:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாமினை தருமபுரி மாவட்டம் தொப்பூரில் வருகிற 24-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தருமபுரி மாவட்டம் தொப்பூரில் நடைபெற்று வரும் விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழா நடைபெறும் மேடை, விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும் அரசு பள்ளி வளாகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் முதன் முறையாக தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெறும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாமை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
மகளிர் உரிமைச் சட்டம் வருமா? வராதா? என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்பொழுது தொடங்கப்பட உள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு மகளிர் சுய உதவி குழுவை முதன்முதலாக தருமபுரி மாவட்டத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். தருமபுரியில் விதைத்த விதை தமிழ்நாடு முழுவதும் தற்போது ஆலமரம் போல் வளர்ந்து விருட்சமாகி உள்ளது.
தற்பொழுது கலைஞரின் மகன் முதலமைச்சராகி மகளிர் உரிமைத் திட்டத்தினை வழங்க உள்ளார். அந்த விண்ணப்ப படிவங்கள் வழங்கி, பதிவேற்றம் செய்யும் முகாமினை தருமபுரி மாவட்டத்தில் முதன் முதலாக வருகிற 24-ந் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில்தருமபுரிமாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
- குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி:
தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல், குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான விண்ணப்ப படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாளை மறுநாள் 24-ந் தேதி (திங்கட்கிழமை) தருமபுரி மாவட்டம், தொப்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தொப்பூர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதற்கட்டமாக நடைபெறும் விண்ணப்ப பதிவை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து கணினியில் பதிவு செய்வதை பார்வையிடுகிறார். அங்கேயே மகளிர் குழுவினருடன் சிறிது நேரம் கலந்துரையாடல் நடத்துகிறார்.
அதன் பின்னர், அருகில் உள்ள மைதானத்தில் அமைக்கப்படும் மேடையில் முதலமைச்சர் பேசுகிறார்.
பின்னர், மீண்டும் ஓமலூர் விமான நிலையத்திற்கு சென்று, சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
- கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து நிஷா வெளியே சென்றார்.
- மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை.
தருமபுரி, ஜூலை.21-
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கோட்டப்பட்டியை அடுத்த சிக்கலூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் நிஷா (வயது21). இவர் பி.எஸ்.சி. வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து நிஷா வெளியே சென்றார்.
ஆனால், மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஆறுமுகம் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நிஷாவை தேடி வருகின்றனர்.
- கல்வித் தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
தருமபுரி,
தருமபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து மூன்று ஆண்டு பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18 வயதிலிருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
இதில் கொத்தனார், பற்றவைப்பவர், மின்சாரப் பயிற்சி, குழாய் பொருத்துதல், மரவேலை செய்பவர் மற்றும் கம்பி வளைப்பவர் ஆகிய தொழில்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
பயிற்சிக்காண கட்டணம், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி பெறும் அனைவருக்கும் LT கட்டுமான திறன் பயிற்சி நிலையத்தால் 100 சதவீதம் வேலை வாய்ப்பினை உறுதி செய்துள்ளது.
3 மாத பயிற்சியில் முதல் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் தையூரில் உள்ள கட்டுமான கழகப்பயிற்சி நிறுவனத்திலும் அடுத்து 2 மாதங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் நீவழுரில் உள்ள L T கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெறும்.
மேற்படி ஒருவார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்துக்கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800- ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இத்தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் நலவாரிய அட்டை கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் தருமபுரி, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேர்தலில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு நேற்று பதவி ஏற்பு மற்றும் பதவி பிரமான விழா நடைபெற்றது.
- பள்ளியின் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் கடந்த 6-ம் தேதி அன்று நடைபெற்ற மாணவர் தேர்தலில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு நேற்று பதவி ஏற்பு மற்றும் பதவி பிரமான விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி மாணவர்களை உறுதி மொழி ஏற்க செய்தனர்.
பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம், ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி, புவனேஷ்வரி, மணிமேகலை, பிரவீணா மற்றும் நிர்வாக அலுவலர் கஸ்தூரி வெற்றி பெற்றவர்களை பாராட்டி பதக்கங்களை வழங்கினர்.
உடற்கல்வி ஆசிரியர் செல்வம் மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இவ்விழா இனிதே நிறைவடைந்தது.






