என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • விழாவில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலர் சின்னக்கண்ணன் தலைமை வகித்தார்.
    • கவிஞர் ரவீந்திர பாரதி ஏற்புரை வழங்கினார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் அதியமான் நாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலர் சின்னக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிங்காரவேலன் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் நடராஜன் வரவேற்றார்.

    விழாவில், திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுப்பராயன் நாவலை வெளியிட தகடூர் புத்தகப் பேரவையின் செயலர் மருத்துவர் செந்தில், தொழிலதிபர் முத்து ராமசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். கவிஞர் ரவீந்திர பாரதி ஏற்புரை வழங்கினார்.

    இந்த விழாவில், இந்திய கம்யூ.கட்சியின் மாவட்ட செயலர் கலைச்செல்வம், தகடூர் புத்தக பேரவைத் தலை வர் சிசுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, நடைபெற்ற கருத்தரங்கில் மாநிலத் தலைவர் எஸ்.கே.கங்கா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் மருத்துவர் அறம் கருத்துரைகளை வழங்கினார். இந்த விழாவில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து, தரமில்லாமல் பணிகள் குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தொப்பூர் வாரச்சந்தையை மேம்பாடு செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி பெரியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பொதுநிதி மற்றும் கவுன்சிலர் நிதியில் இருந்து நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து, தரமில்லாமல் பணிகள் குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொப்பூர் வாரச்சந்தையை மேம்பாடு செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நல்லம்பள்ளி ஒன்றியத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் மற்றும் கழிப்பிட கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராஜா, முருகன், ராஜீவ்காந்தி, காமராஜ், சசிகுமார், புனிதம் பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த நண்பர்கள் 4 பேரும் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தனர்.
    • ஆயுஷ் ஜெயின், கோமலி குமாரி ஆகிய 2 பேரும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றனர்.

    ஒகேனக்கல்,

    ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆயுஷ் ஜெயின் (வயது 24). இவரது தோழி கோமலிகுமாரி (21). என்ஜினீயர்கள். இவர்கள் பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நண்பர்கள் 2 பேருடன் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர்.

    ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த நண்பர்கள் 4 பேரும் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது ஆயுஷ் ஜெயின், கோமலி குமாரி ஆகிய 2 பேரும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன், ஊர்காவல் படை வீரர் ராகுல் ஆகியோர் விரைந்து வந்து காவிரி ஆற்றில் தண்ணீரில் தத்தளித்த 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் ஆயுஷ் ஜெயின் சுயநினைவு இல்லாமல் இருந்ததால் போலீசார் அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் அவரை பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரை பணயம் வைத்து 2 பேரை காப்பாற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • இலவச மருத்துவ பரிசோ தனை முகாம் தர்மபுரி ஆயுதப்படை காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இலவச மருத்துவ பரிசோ தனை முகாம் தர்மபுரி ஆயுதப்படை காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    இந்த முகாமில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பார்வை மற்றும் இ.சி.ஜி. போன்ற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் செல்வமணி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், சக்திவேல் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை தாங்கி தொல்லியல் மன்றத்தை தொடங்கி வைத்தார்.
    • விழாவையொட்டி பழங்கால நாணயங்கள், பழங்கால மண்பாண்ட மாதிரிகள் மற்றும் பழங்கால கருவிகள் கண்காட்சி நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் வாழைத்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொல்லியல் மன்றம் தொடக்க விழா நடை பெற்றது.

    விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை தாங்கி தொல்லியல் மன்றத்தை தொடங்கி வைத்தார். சமூகவியல் ஆசிரியை மஞ்சுளா தொல்லியல் மன்றத்தின் நோக்கங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே விளக்கி பேசினார்.

    இந்த விழாவையொட்டி பழங்கால நாணயங்கள், பழங்கால மண்பாண்ட மாதிரிகள் மற்றும் பழங்கால கருவிகள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியினை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிரியகள் உமாசங்கரி, செந்தில், நீலாம்பிகை மற்றும் பலர் பேசினார்கள். முடிவில் ஆங்கில ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • இந்த கையெழுத்து இயக்கத்தை சித்த மருத்துவப் பேராசிரியர் மாதேஸ் தொடங்கி வைத்து கையெழுத்திட்டார்.
    • தொடர்ந்து சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் இயற்கை மரபுப் பொருட்கள் விற்பனை யாளர்கள் ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர்.

    தருமபுரி, 

    தமிழர் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அதிகாரப்பூர்வமான ஆய்வு களை மேற்கொள்வதற்கு அரசுப் பல்கலைக்கழகம் அவசியம்.

    இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவப் பல்கலைக்கழகம், ஹோமியோபதி மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆங்கில மருத்து வத்துக்கு ஏராளமான பல்கலைக்கழகங்கள் உள்ளன.

    ஆனால், பல ஆயிரம் ஆண்டுகள் முந்தைய- தமிழ் மண்ணின் கலா சாரத்துடன் இணைந்த மூத்த மருத்துவ முறையான சித்த மருத்துவத்துக்கு இதுவரை பல்கலைக்கழகம் இல்லை.

    இந்தக் குறையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, நிதி ஒதுக்கீடும் செய்து நிலமும் தேர்வு செய்யப்பட்டு விட்டது.

    ஆனால், சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவிற்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதனால் தமிழர்களின் நீண்டகாலக்கனவு தடைபட்டு நிற்கிறது.

    எனவே, சித்த மருத்துவப்பல்கலைக்கழக சட்ட முன்வடிவில் கவர்னர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டு ள்ளது.

    சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு என்ற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டு, மூத்த சித்த மருத்துவரும் உலகத் தமிழ் மருத்துவக் கழகத் தலைவருமான மைக்கேல் செயராசு, எழுத்தாளர் முத்துநாகு, செயல்பாட்டாளர் மணிகண்டன் ஆகியோர் மாநில ஒருங்கிணைப்பாள ர்களாக செயல்படு கின்றனர்.

    இந்தக் குழுவினர் மூலம் தருமபுரி மாவட்டத்தில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் நேற்று தொடங்கியது. தருமபுரி தமிழர் மரபுச் சந்தையில் இந்த இயக்கம் தொடங்கியது.

    இந்த கையெழுத்து இயக்கத்தை சித்த மருத்துவப் பேராசிரியர் மாதேஸ் தொடங்கி வைத்து கையெழுத்திட்டார்.

    தொடர்ந்து சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் இயற்கை மரபுப் பொருட்கள் விற்பனை யாளர்கள் ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர்.

    கையெழுத்து இயக்கத்தைத் தொடர்ந்து சந்தையில் மூத்த தமிழர் மருத்தும் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. இதில் டாக்டர் மாதேஸ் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த கையெழுத்து இயக்கம் முடிக்கப்பட்டு அனைத்து கையெ ழுத்துக்கள் கொண்ட அறிக்கை கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரி வித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழர் மரபுச் சந்தை மற்றும் தருமபுரி மக்கள் மன்ற நிர்வாகிகள் உமா சங்கர், நிர்மல்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலம் முழுவதும் 4.57 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.
    • 14,104 குழுக்களில் 1.68 லட்சம் உறுப்பினர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களிடம் கேட்டறிந்தார்.

    இதன்பின்னர் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், தமிழ்நாடு முழுவதற்கான திட்டம். நான், எதற்காக தருமபுரிக்கு வந்திருக்கேன் என்றால், அமைச்சர் கூறியதுபோல், 34 ஆண்டுகளுக்கு முன்பு 1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தருமபுரி மாவட்டத்தில் முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மகளிர்கள் தன்னம்பிக்கையோடும், யாருடன் தயவுமின்றியும், சுயமரியாதையுடன் மகளிர் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவிக்குழு என்ற அற்புதமான திட்டம்.

    ஏழை, எளிய பெண்களை கொண்டு மகளிர் சுய உதவிக்குழு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு அன்றைய காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதி விதைத்த விதைத்தான் இன்றைக்கு மாபெரும் திட்டமாக தமிழ்நாடு முழுவதும் தழைத்து, வளர்ந்து லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்து கொண்டிருக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகின்றன. அதில் 51 லட்சம் 46 ஆயிரம் பெண்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 3லட்சத்து 96 ஆயிரத்து 363 குழுக்களுக்கு ரூ.21,641 கோடி கடனாக வழங்கப்பட்டது.

    2006-2011-ம் ஆண்டு ஆட்சியில் துணை முதல்வராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்தபோது பல்லாயிரக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுக்களை நான் உருவாக்கினேன். அப்போது நான், கடனுதவிகளை பலமணிநேரம் மேடையில் நின்று கொண்டு வழங்கியுள்ளேன். அதையெல்லாம் நான் இப்போது நினைத்து பார்க்கிறேன்.

    நான், ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்ற போது, அரசு நிகழ்ச்சியில் கட்டாயமாக மகளிர் சுயஉதவிக்குழுவை பங்கேற்க வைத்து, அவர்களுக்கு சுழல்நிதி உதவி அனைவருக்கும் வழங்கப்பட்டது. குறைந்த பட்சம் 5 ஆயிரம் பேருக்கு நான் வழங்கியுள்ளேன்.

    கடந்த காலங்களில் அரசு நிகழ்ச்சி நடைபெறும்போது, ஒரு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். ஒரு சிலருக்கு தான் உதவிகள் கிடைக்கும். ஆனால், நான், துணை முதல்வராக இருந்தபோது, மகளிர் சுயஉதவிக்குழுகளில் உள்ள பெண்கள் அனைவருக்கும் சுழல்நிதி வழங்கப்பட்டது.

    அதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், பெண்களுக்கு தொடர்ந்து நிதிஉதவி கொடுத்து கொண்டிருக்கும் போது, ஒரு மூதாட்டி என்னிடம் வந்து இப்படி நீண்டநேரம் நின்று கொண்டே இருக்கிறீர்களே உங்களுக்கு கால் வலிக்கவில்லையா? என்றார். அதற்கு நான், நீங்கள் எல்லாம் நிதிஉதவி பெற்று செல்லும்போது உங்கள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சியை நான் கண்டவுடன் அந்த வலியெல்லாம் எனக்கு தெரியவில்லை என்றேன். இதையெல்லாம் நான்பெருமைப்படுத்தி கொள்வதற்காக சொல்லவில்லை. முறையாக அனைவருக்கும் இந்த திட்டம் போய் சேரவேண்டும்.

    எந்த உணர்வோடு மகளிர் சுயஉதவிக்குழு திட்டம் கருணாநிதி தொடங்கினாரோ, தற்போது அந்த திட்டம் கம்பீரமாக வளர்ந்து நிற்பதை பெருமையாக பார்க்கிறேன். சிறப்பான திட்டத்திற்கு விதை போட்ட மண்தான் தருமபுரி மண்.

    இந்த மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் 1,69.648 மகளிர் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் 8625 குழுக்களுக்கு ரூ.729 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. தருமபுரியில் தொடங்கினால் தான் தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சென்றடையும் என்பதால் இந்த திட்டத்தை நான் இங்கு தொடங்கி வைத்துள்ளேன்.

    சுயமரியாதை கொள்கையில் இறுதியாக இருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் வகுத்து கொடுத்த பாதையில் நான் தமிழ்நாடடை வளமான, வலிமையான மாநிலமாக மாற்ற, எல்லா துறைகளிலும் முன்னேற்றம் காண நாள்தோறும் எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

    நான் முதலமைச்சராக பதவியேற்றுபின்பு போட்ட முதல் கையெழுத்து மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம். இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் மகளிர் ரூ.800 முதல் ரூ.1000 வரை சேமிக்க முடியும். இதேபோல் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம். இந்த திட்டத்தால் மாதந்தோறும் மாணவிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் 2லட்சத்து 11,506 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    இதேபோன்று பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டம் காமராஜர் கொண்டு வந்தார். அதனை எம்.ஜி.ஆர். முன்னிலைப்படுத்தினார். அதனை மறுக்கமுடியாது. அதன்பின்னர் தி.மு..க. ஆட்சிக்கு வந்தால் சத்துணவு திட்டம் முடக்கப்படும் என்று சிலர் விஷம பிரசாரங்களை பரப்பினர். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முட்டையுடன் சத்துணவு திட்டத்தை புதுப்பித்தார்.

    காலை சிற்றுண்டி உண்ணாமல் காலை நேரத்தில் பசியோடு வரும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. திட்டத்தினை விரிவு படுத்தபடவுள்ளதால் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். தற்போது பள்ளியில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றோம்.

    மகளிருக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று கருணாநிதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதைத்தொடர்ந்து இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனால் மகளிரின் வாழ்வாதாரம் மேலும் உயரும்.

    தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இப்போது நிறைவேற்றபட்டிருக்கிறது. சிறு வியாபாரம், வணிகம் செய்து பிழைப்பு நடத்தும் பெண்கள், விளிம்பு நிலை பெண்கள் என யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவைப்படுமோ அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும். செப்டம்பர் 15-ந் தேதி பெண்களின் கைகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும்.

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. கொரோனா தொற்றால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அதையெல்லாம் கடந்து, இந்த திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன் அது தான், ஸ்டாலினின் பணி. நம்பிக்கையோடு வாக்களித்தவர்க்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே நல்லாட்சி வழங்குவோம்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான்று செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் வாங்க சிறப்பு முகாம்கள் தொடங்கபட்டிருக்கிறது, விடுமுறை தினமான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பங்கள் பெற்று கொள்ள ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது. தகுதியுள்ள பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கே. என். நேரு. பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி. மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
    • முகாமை தொடங்கி வைத்து பயனாளியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

    தர்மபுரி:

    தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்" என்று பெயரிடப்பட்டது.

    தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு இந்த திட்டத்தின்கீழ் பயன் பெறத்தகுதியானவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

    இந்த திட்டம் மூலம் முதல் கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    அதில் "தமிழக வரலாற்றில் மாபெரும் திட்டமாக அமையப் போகும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது" என்று மாவட்ட கலெக்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்து வருகின்றனர். விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    முதல் கட்டமாக விண்ணப்பங்கள் விநியோகம் செய்வது பெரும்பாலான இடங்களில் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. நேற்று மாலை வரை தமிழகம் முழுவதும் சுமார் 91 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் இந்த மாதமும், அடுத்த மாதமும் 3 கட்டங்களாக நடைபெற உள்ளன.

    முதல் கட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சுமார் 21 ஆயிரம் முகாம்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த 21 ஆயிரம் முகாம்களிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது.

    இந்த முகாம்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை (திங்கட்கிழமை) தொடங்கி வைத்தார். இதற்காக தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் பணியைத் தொடங்கி வைத்தார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையம் சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு சென்றார்.

    அங்கு காலை 9.45 மணியளவில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் பணியை தொடங்கி வைத்து மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் சிலருடன் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்குச் சென்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து உரையாற்றினார். பின்னர் சாலை மார்க்கமாக சேலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி செல்வதை முன்னிட்டு மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமையில் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 6 கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 9 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • மின்சார டிரான்ஸ்பார்மர் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப் பட்டுள்ள நிலையில் அந்த டிரான்ஸ்பார்மரை நிலத்திற்கு சொந்தக்காரர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மின்சாரத்தை துண்டித்ததாக கூறப்படுகிறது.
    • குடிதண்ணீர் இன்றி மக்கள் மற்றும் கால்நடைகள் பெறும் அவதிப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருபரள்ளி பஞ்சாயத்தில் உள்ள பாலசமுத்திரம் கிராமப் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் வீடுகள் மற்றும் விவசாய கிணறுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக அப்பகு தியில் மின்சார டிரான்ஸ் பார்மர் அமைக்கப் பட்டுள்ளது. இந்த மின்சார டிரான்ஸ்பார்மர் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப் பட்டுள்ள நிலையில் அந்த டிரான்ஸ்பார்மரை நிலத்திற்கு சொந்தக்காரர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மின்சாரத்தை துண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதை அடுத்து அங்கு உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் இல்லாததால் குடிதண்ணீர் இன்றி மக்கள் மற்றும் கால்நடைகள் பெறும் அவதிப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் மூன்று நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் குடிதண்ணீர் என்று பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசால் தங்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார்.
    • மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

    மாரண்டஅள்ளி, 

    தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி இ.பி. காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 70). விவசாயி.இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

    பின்னர் வேலை முடிந்த பின்னர் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணி உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து மாரியப்பன் மாரண்டஅள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காந்திநகரை சேர்ந்த அஜித் (எ) குமரன் (27) என்பவர் மாரியப்பன் வீட்டில் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • குபேந்திரன் கூலி வேலைக்காக பெங்களூருவுக்கு சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோஷை கைது செய்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ரஞ்சிதா (வயது29) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    குபேந்திரன் கூலி வேலைக்காக பெங்களூருவுக்கு சென்று விட்டார். வீட்டில் ரஞ்சிதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி ரஞ்சிதா வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சின்னராஜின் மகன் சந்தோஷ் (26) என்பவர் திடீரென்று வீட்டின் சுவரை ஏறி குதித்து, தூங்கி கொண்டிருந்த ரஞ்சிதாவின் அறைக்குள் சென்று அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் ரஞ்சிதா சத்தம்போட்டதால், அக்கம்பக்கத்தினர் ஒடிவந்தனர். இதனை பார்த்த சந்தோஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து ரஞ்சிதா பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோஷை கைது செய்தனர்.

    • காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • தமிழக அரசின் வேளாண்மை துறை மற்றும் அதனை சார்ந்த துறைகளின் திட்டங்கள் குறித்து விவசாயிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேளாண்மை துறை மற்றும் என்.எஸ்.எஸ். சார்பில் உழவன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார்.

    வேளாண்மை துணை இயக்குனர் குணசேகரன் உதவி இயக்குனர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் வேளாண்மை துறை மற்றும் அதனை சார்ந்த துறைகளின் திட்டங்கள் குறித்து விவசாயிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலி தொடங்கப்பட்டது குறித்தும் இதன் பயன்பாடுகள் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர் வேளாண்மை அலுவலர் கனகராஜ் உழவன் செயலி எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர் செல்வம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    ×