என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.
    • தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரலஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கோபால். இவரது மனைவி விஜயா (வயது55). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று விஜயா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி வேலைக்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் வீட்டின் கதவை உடைத்து தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.

    இருந்த போதும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.

    மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ. 7 லட்சம், 2 பவுன் தங்க நகை, வீட்டின் பட்டா , மற்றும் அவரது பேரக் குழந்தையின் சான்றிதழ்கள் எரிந்த நிலையில் இருந்தன. இதனை வீட்டிற்கு வந்து பார்த்த விஜயா கதறி அழுதார்.

    தீ விபத்து குறித்து, விஜயாவின் வீட்டின் அருகே தாழ்வான மின் கம்பி செல்கிறது. மின் கசிவின் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தெரிகிறது.

    கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் உள்ள தாழ்வான மின் கம்பிகளை அப்புறப்படுத்தி சீர்செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    இந்த தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
    • சிலம்பரசன் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி கோட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது தந்தை கோவையில் கட்டிட வேலைக்கு சென்றுவிடுவார். இதன்காரணமாக சிறுமி தனது அத்தையின் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் உறவினர்கள் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கோட்டமேடு கிராமத்திற்கு வந்து உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் தனது மகளை பொம்மிடி அருகே பொ.துரிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாசு மகன் சிலம்பரசன் (வயது21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

    • முதிர்வுதொகை கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் குறைதீர் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்
    • மதிப்பெண் சான்றிதழ் நகல், பிறப்பு சான்றிதழ், வங்கிக்கணக்கு முகப்பு புத்தக நகல், மகள்)வண்ணப்புகைப்படம்-2 ஆகிய சான்றுகளோடு கலந்து கொள்ளவும்.

    தருமபுரி 

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு கீழ் காணும் திட்டபணிகளை மேற்கொள்ள சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படும்.

    முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை இரசீதுகள் கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுதொகை கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் ஆகியோர்கீழ்கண்ட உரிய சான்றுகளோடு ஆஜராகி இச்சிறப்பு குறைதீர் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் பதிவுசெய்து நாளது தேதி வரை வைப்புத்தொகை தொகை இரசீதுகள் கிடைக்கப்பெறாத பயனாளிகள் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்த ஒப்புகை இரசீதுடன் கூடிய இணையவழி விண்ணப்பத்துடன் இச்சிறப்பு முகாமில் கலந்து கொள்ளவும்.

    இத்திட்டத்தில் பதிவு செய்து வைப்புத்தொகை ரசீது பெற்று 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வு தொகை கிடைக்க பெறாத பயனாளிகள் வைப்புத்தொகை இரசீது நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிறப்பு சான்றிதழ், பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக்கணக்கு முகப்பு புத்தக நகல், பயனாளியின்(தாய் மற்றும் மகள்)வண்ணப்புகைப்படம்-2 ஆகிய சான்றுகளோடு இச்சிறப்பு முகாமில் கலந்து கொள்ளவும்.

    மேலும் திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு தருமபுரி மாவட்ட சமூகநல அலுவலக த்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுத்தறிவு விருதுகளை வழங்கினார்.
    • ன்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கற்போர் மையத்திற்கு விருது வழங்கப்பட்டது.

    தருமபுரி, 

    பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பாக 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு கற்றுக் கொடுக்க புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலமாக கற்போர் மையம் ஏற்படுத்தப்பட்டு எழுத்தறிவும் எண்ணறிவும், வாழ்வியல் திறன்களையும் தன்னார்வலர்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களுக்கு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்டங்களுக்கு மூன்று மையங்கள் என்ற அளவில் மாநில எழுத்தறிவு விருதுகளை வழங்கினார்.

    இதில் பென்னாகரத்தை அடுத்துள்ள சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கற்போர் மையத்திற்கு விருது வழங்கப்பட்டது.

    அதே போன்று தருமபுரி ஒன்றியம் முக்கல்நாயக்கம்பட்டி கற்போர் மையத்திற்கும், நல்லம்பள்ளி அருகே உள்ள எர்ரன அள்ளி கற்போர் மையத்திற்கும் என தருமபுரி மாவட்டத்தில் மூன்று மையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    இதில் ஒருவராக சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனி விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சரிடம் விருதினை பெற்றுக்கொண்டார்.

    இவ்விழாவில் தன்னார்வலர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள்.

    கல்வித்துறையை சார்ந்த இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

    தர்மபுரி மாவட்டத்தில் விருது பெற்ற மூன்று மையங்களைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் ஆசிரியர் பயிற்றுநர்களை, தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்டக்கல்வி தொடக்கக்கல்வி அலுவலர் மான்விழி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்கள்.

    • நகர்ப்புர வீடற்றோருக்கான தங்குமிடம் கட்டும் பணியினை கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
    • 5400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாலக்கோடு வட்டாரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள 111 ஆரம்ப பள்ளியில் பயிலும் 5400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது இரண்டாம் கட்டமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1013 அரசு ஆரம்ப பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 51,538 மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்ய முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கென புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள சமையல் பாத்திரங்களின் தரம், எண்ணிக்கை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக, தருமபுரி நகராட்சிக்குட்பட்ட கங்கரன் குட்டை பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புர வீடற்றோருக்கான தங்குமிடம் கட்டும் பணியினை கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து, தருமபுரி நகரில் பிடமனேரியில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் 1873 வீடுகளுக்குட்பட்ட 10,000 மக்கள்தொகைக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதற்கட்டப்பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்வுகளின் போது நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன், நகராட்சி பொறியாளர் புவனேஷ்வரி, தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனந்தராமன் விஜயரங்கன், சத்யா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மேஸ்திரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
    • தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தொட்டப்பன். இவரது மகன் சரவணன் (வயது24). கட்டிட மேஸ்திரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் ஓசூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த சரவணன் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
    • விண்ணப்ப பதிவிற்கான இணையதளத்தினை பயன்படுத்து குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 05.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு, தருமபுரி ரோட்டரி அரங்கத்தில் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார். மேலும், விண்ணப்பங்களைப் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன் கலந்துரையாடினார்கள்.

    தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் கடந்த 24.7.2023 முதல் தொடங்கப்பட்டு இன்றுடன் (4.08.2023) நிறைவு பெறுகிறது. இரண்டாம் கட்டமாக 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெற உள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் நடைபெறும் 2-ஆம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்களின் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி இன்று நடைபெற்றது.

    இப்பயிற்சியில் விண்ணப்பதிவு தன்னார்வலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், விண்ணப்பத் தாரர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை சரியாக பூர்த்தி செய்திடவும், பெறப்படும் விண்ணப்பங்களை முறையாக பராமரித்திடவும், இத்திட்ட விண்ணப்ப பதிவிற்கான இணையதளத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    இப்பயிற்சியில் தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வம், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வர முறையான மாற்று பாதை அமைக்காமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஜல்லிகற்கள் கனரக வாகனம். பஸ்கள் செல்லும்போது சிதறி மேலே விழுவதால் நிலைத்தடுமாறி தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

    அரூர்,

    தருமபுரி முதல் திருவண்ணாமலை வரை ரூ.410 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 4 வழி சாலைகளை தரமான சாலையாக அமைக்க அரசு மூலமா ஒப்பந்தங்கள் விடப்பட்டு அதில் 8 ஒப்பந்ததாரர்கள் இந்த 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒப்பந்ததாரர்கள் பழைய தார்சாலையை அகற்றாமல் பழைய தார் சாலையின் மீது ஜல்லிக்கற்கள் மண்கள் கொட்டி சாலை அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்படி சாலை அமைப்பதால் வரும் காலங்களில் அந்த சாலை தரமான சாலையாக இல்லாமல் பழைய சாலையாக மாறும் நிலை ஏற்படும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அரசு ஒப்பந்தங்கள் விடப்பட்டு சாலை பணியில் சிறப்பாக முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துறை சார்ந்த அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் சாலை அமைக்கும் பணியை கண்டு கொள்ளாமல் இருப்பதால் அரசு அலுவலர்களின் கண்காணிப்பு இல்லாததால், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாலையின்மேல் சாலை போடும் பணியை ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று தருமபுரி மாவட்டம் தொடங்கி திருவண்ணாமலை மாவட்ட எல்லை வரை வடிகால் வசதி அமைக்கப்படும் பகுதிகளில் முறையான அளவீடுகளை பின்பற்றாமல் நெடுஞ்சாலைத்துறை துறை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கடை மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டுக்கொள்ளாமல் வடிகால் வசதி பணியை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரூர் முதல் மொரப்பூர் வரை தனியார் ஒப்பந்ததாரர்கள் 4 வழி சாலை பணிகள் மேற்கொண்டு வருகிறார் பஸ்கள், கனரக வாகனங்கள். இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வர முறையான மாற்று பாதை அமைக்காமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முறையான மாற்று பாதை இல்லாததால் பழைய சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஜல்லிகற்கள் கனரக வாகனம். பஸ்கள் செல்லும்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது வேகமாக சிதறி மேலே விழுவதால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

    அது மட்டுமல்லாமல் சாலையில் செல்லும் பஸ் உள்பட கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்லும்போது ரோட்டில் இருக்கும் மண் மற்றும் தூசுகள் பரவி புகை மண்டலமாக மாறி இருசக்கர வாகனங்கள் ஓட்ட முடியாத அளவிற்கு விபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்து வருகிறது.

    வாகனங்களால் ஏற்படும் தூசுகள் காரணமாக பகலிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை போட்டுக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.

    தரமான சாலை அமைக்கிறார்களா? என்று சம்பந்தபட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், விரைந்து இந்த 4 வழிச்சாலை பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நுழைவுவாயிலில் இருந்த இரும்பு கேட் ஒன்று திடீரென்று சாய்ந்தது.
    • மருத்துவமனைக்கு வழியிலேயே மோகன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை மேல்தோப்புதெருவைச் சேர்ந்தவர் தணிகாச்சலம். இவரது மகன் மோகன்குமார (வயது34). இவர் குண்டலப்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்காக நிறுவனத்திற்கு சென்றார். அங்கு நிறுவனத்தின் நுழைவுவாயிலில் இருந்த இரும்பு கேட் ஒன்று திடீரென்று சாய்ந்தது. அப்போது அந்த வழியாக சென்ற மோகன்குமார் மீது இரும்பு கேட் விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனே அங்கு இருந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மோகன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
    • பச்சிளங்குழந்தைகள் மேடும் பள்ளமும் உள்ள தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், பூகானஅள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட பொம்மரசம்பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    இக்கட்டிடத்தின் சுவர்கள் விரிசல்விட்டு எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

    மேலும் வகுப்பறை முழுவதும் சுமார் அரை அடி அளவிற்கு பள்ளமாகி உள்ளது. இதனால் குழந்தைகள் நடக்க முடியாமல் கீழே தடுமாறி விழுந்து வருகின்றனர்.

    பச்சிளங்குழந்தைகள் சமதளத்தில் அமர முடியாமல் மேடும் பள்ளமும் உள்ள தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏரியில் இருந்து வரும் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
    • ஜமாபந்தியில் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை,

    அரூர்,

    அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார். இதில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், கே.ஈச்சம்பாடி வலதுபுற கால்வாயை துார்வார வேண்டும். அரூர் பெரிய ஏரியில் இருந்து வரும் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதே போல், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் காணவில்லை. ஜமாபந்தியில் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, நிலம் அளவீடு செய்யக்கோரி விவசாயிகள் பணம் கட்டி ஓராண்டுக்கு மேலாகியும் அளவீடு செய்யப்படவில்லை. ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பணம் கட்டிய ஒரு சில நாட்களில் நிலம் அளவீடு செய்யப்படுகிறது என புகார் தெரிவித்தனர்.

    இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • 106 பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கப்பட்டது.
    • 22 குழந்தைகளுக்கு ரூ.75,000-க்கான நிதிப் பத்திரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து செல்வ மகள் சேமிப்பு திட்டம் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 106 பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கப்பட்டு, ஒவ்வொரு மாணவிக்கும் தலா ரூ.500 வீதம் சேமிப்பு கணக்கில் செலுத்தி சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் மாவட்ட கலெக்டர் சாந்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்கள்.

    முன்னதாக தருமபுரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த தினமான கல்வி வளர்ச்சி தினத்தில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி. ஓவிய போட்டி, பட்டி மன்றம் மற்றும் கவிதை போட்டி ஆகிய போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 39 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் விபத்தில் வருவாய் ஈட்டும் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரூ.75,000 நிதி நல்லம்பள்ளி ஒன்றியத்தை சேர்ந்த 21 குழந்தைகளுக்கும், ஏரியூர் ஒன்றியத்தை சேர்ந்த 1 குழந்தைக்கும் ஆக மொத்தம் 22 குழந்தைகளுக்கும் தலா ரூ.75,000/- க்கான இட்டு வைப்பு நிதிப் பத்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மான்விழி, பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×