search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர்  அருகே   சிதறும் ஜல்லிகற்களால்  இருசக்கர வாகன  ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம்
    X

    அரூர்-மொரப்பூர் செல்லும் சாலையில் பஸ் வேகமாக செல்லும்போது புகை மூட்டமாக இருப்பதை படத்தில் காணலாம்.

    அரூர் அருகே சிதறும் ஜல்லிகற்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம்

    • இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வர முறையான மாற்று பாதை அமைக்காமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஜல்லிகற்கள் கனரக வாகனம். பஸ்கள் செல்லும்போது சிதறி மேலே விழுவதால் நிலைத்தடுமாறி தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

    அரூர்,

    தருமபுரி முதல் திருவண்ணாமலை வரை ரூ.410 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 4 வழி சாலைகளை தரமான சாலையாக அமைக்க அரசு மூலமா ஒப்பந்தங்கள் விடப்பட்டு அதில் 8 ஒப்பந்ததாரர்கள் இந்த 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒப்பந்ததாரர்கள் பழைய தார்சாலையை அகற்றாமல் பழைய தார் சாலையின் மீது ஜல்லிக்கற்கள் மண்கள் கொட்டி சாலை அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்படி சாலை அமைப்பதால் வரும் காலங்களில் அந்த சாலை தரமான சாலையாக இல்லாமல் பழைய சாலையாக மாறும் நிலை ஏற்படும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அரசு ஒப்பந்தங்கள் விடப்பட்டு சாலை பணியில் சிறப்பாக முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துறை சார்ந்த அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் சாலை அமைக்கும் பணியை கண்டு கொள்ளாமல் இருப்பதால் அரசு அலுவலர்களின் கண்காணிப்பு இல்லாததால், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாலையின்மேல் சாலை போடும் பணியை ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று தருமபுரி மாவட்டம் தொடங்கி திருவண்ணாமலை மாவட்ட எல்லை வரை வடிகால் வசதி அமைக்கப்படும் பகுதிகளில் முறையான அளவீடுகளை பின்பற்றாமல் நெடுஞ்சாலைத்துறை துறை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கடை மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டுக்கொள்ளாமல் வடிகால் வசதி பணியை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரூர் முதல் மொரப்பூர் வரை தனியார் ஒப்பந்ததாரர்கள் 4 வழி சாலை பணிகள் மேற்கொண்டு வருகிறார் பஸ்கள், கனரக வாகனங்கள். இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வர முறையான மாற்று பாதை அமைக்காமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முறையான மாற்று பாதை இல்லாததால் பழைய சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஜல்லிகற்கள் கனரக வாகனம். பஸ்கள் செல்லும்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது வேகமாக சிதறி மேலே விழுவதால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

    அது மட்டுமல்லாமல் சாலையில் செல்லும் பஸ் உள்பட கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்லும்போது ரோட்டில் இருக்கும் மண் மற்றும் தூசுகள் பரவி புகை மண்டலமாக மாறி இருசக்கர வாகனங்கள் ஓட்ட முடியாத அளவிற்கு விபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்து வருகிறது.

    வாகனங்களால் ஏற்படும் தூசுகள் காரணமாக பகலிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை போட்டுக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.

    தரமான சாலை அமைக்கிறார்களா? என்று சம்பந்தபட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், விரைந்து இந்த 4 வழிச்சாலை பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×