என் மலர்
கடலூர்
கடலூர்:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலூர் மண்டலம் மற்றும் கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து திருச்சியில் 39-வது வணிகர் தினம் தமிழக வணிகர் விடியல் மாநாடு குறித்து நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நாளை (6 -ந் தேதி) காலை 10 மணிக்கு சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதற்கு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்குகிறார். நகர தலைவர் ஜி.ஆர். துரைராஜ், நகர துணைத் தலைவர் பட்டேல், நகர பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
நகரச் செயலாளர் சீனிவாசன் வரவேற்கிறார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்புரை ஆற்றுகிறார். இதில் சேதுராமன் புதுச்சேரி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சிவசங்கர் எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் கோவிந்த ராஜூலு, மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகர், மாநில பொருளாளர் சதக்கத்துல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இதில் மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட பொருளாளர் ராஜ மாரியப்பன், நகர இணைச் செயலாளர் செல்ல பாண்டியன், வெங்கடேசன், பகுதி செயலாளர்கள் மாஸ்டர் பேக்கரி ராஜா, சன்பிரைட் பிரகாஷ், நிலா ஹோட்டல் தங்கராசு மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். முடிவில் மாவட்ட செயலாளர் வீரப்பன் நன்றி கூறுகிறார்.
கடலூர்:
வங்ககடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.
இதனால் இன்று முதல் 7-ந் தேதிவரை டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்ததின்பேரில் கடலூர் மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது கிராமங்களிலேயே முடங்கினர்.
இந்நிலையில் கடலூர் பகுதியில் கடல் அலை சீற்றம் அதிகரித்துள்ளது. சுமார் 7 அடி முதல் 9 அடி உயரத்துக்கு அலைகள் சீறி வருகின்றன. மேலும் கடற்கரை பகுதியில் வழக்கத்துமாறாக 200 முதல் 300 மீட்டர் தூரத்துக்கு கடல் அலைகள் வந்து செல்கின்றன. இதனால் கடற்கரை பகுதிகளில் ஏற்கனவே உருவாகி இருந்த மணல் பரப்பு காணாமல் போனது.
இந்த பகுதிகளில் மீன்வளத்துறை சார்பாக பேரிடர் கால தடுப்பு நடவடிக்கையாக கருங்கற்களை கொட்டி பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் தற்போது சீற்றத்துடன் வரும் அலைகளால் அந்த கற்கள் சரிந்து சிதறின.
மேலும் கடலுக்குள் அவை இழுத்துசெல்லப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அதனை தடுக்கும் வழி என்ன? என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 31 வார்டுகளை கைப்பற்றியது. எனவே நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் தலைவர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கான தேர்தல் இன்று காலை நடந்தது.
இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. எனவே செந்தில்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
நகராட்சி துணை தலைவர் பதவி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த கட்சியின் வேட்பாளராக முத்துகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான தேர்தல் இன்று மாலை நடக்கிறது. அவர் துணைதலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
வடலூர் நகராட்சியில் தி.மு.க. 24 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது. எனவே நகராட்சி தலைவர் பதவிக்கு சிவக்குமார், துணைதலைவர் பதவிக்கு சுப்பராயலு ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். தலைவர் பதவி தேர்தலில் யாரும் எதிர்த்து மனுதாக்கல் செய்யவில்லை. எனவே சிவக்குமார் போட்டின்றி தேர்வானார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி தொரப்பாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை நடைபெற்றது.
இதில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்த தி.மு.க. பெண் கவுன்சிலர் வனஜா சுந்தரவடிவேலு தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யாததால் இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் தி.மு.க.-27 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி-3 வார்டுகளிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி 3 வார்டுகளிலும், காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், சுயேட்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றதையடுத்து கடலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக 20-வது வார்டில் வெற்றிபெற்ற சுந்தரியை தி.மு.க. தலைமை அறிவித்தது. இன்று காலை சுந்தரி தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். திடீர் திருப்பமாக கடலூர் மாநகராட்சியின் 2-வது வார்டில் வெற்றிபெற்ற தி.மு.க. வேட்பாளர் கீதா குணசேகரனும் மேயர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அவரது கணவரும் தி.மு.க. நிர்வாகியுமான குணசேகரன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
ஏற்கனவே மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் மாயமாகி உள்ளதாக கூறப்படும் சூழலில் 32 கவுன் சிலர்கள் மட்டுமே மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். கடும் கட்டுப்பாடுகளுக்கு பிறகு போலீசார் அவர்களை உள்ளே அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து 32 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதில் சுந்தரி 19 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்த்து போட்டியிட்ட கீதா 12 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளது. தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-11, அ.தி.மு.க-3, வி.சி.க-2, ம.தி.மு.க-1, பா.ம.க-1, காங்கிரஸ்-1, தே.மு.தி.க-1, த.வா.க-1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, மனித நேய மக்கள் கட்சி-1, சுயேட்சைகள்-7 வெற்றி பெற்றனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி 18 வார்டுகளை கைப்பற்றியது. தனிப்பட்ட முறையில் தி.மு.க. 14 வார்டுகளில் வெற்றிவாகை சூடியது.
எனவே, நகராட்சி தலைவர் பதவி தி.மு.க.வுக்கு கிடைக்கும் என்று அக்கட்சியினர் எதிர் பார்த்திருந்தனர். இந்த சூழ்நிலையில் நகராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் பதவிக்கு அந்த கட்சியின் வேட்பாளராக கிரிஜா திருமாறன் போட்டியிடுகிறார். முன்னதாக விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஆதரவு கோரி கட்சியின் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், தி.மு.க. கவுன்சிலர்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.
இந்த நிலையில் இன்று மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னதாக நகராட்சியில் உள்ள 20 கவுன்சிலர்கள் திடீரென மாயமானார்கள். அவர்களது செல்போன் எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இன்று காலை தேர்தல் நடப்பதால் வி.சி.க. வேட்பாளர் கிரிஜா திருமாறன் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். நகராட்சி பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளிநபர்கள் யாரும் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது. இதற்காக அங்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஊழியர்கள் அடையாள அனுமதி அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். 200 மீட்டர் தூரத்துக்கு வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி தலைமையில் இந்த தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நகராட்சி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நகராட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக தி.மு.க. கவுன்சிலர்கள் ஒரு வாகனத்தில் நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்த வேனை மறித்தனர். கூட்டணி தர்மத்தின்படி நகராட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
சாலையில் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை எடுத்து வந்து தி.மு.க.வினர் வந்த வேன் முன்பு வைத்து தடுத்தனர். இதனால் அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து நகராட்சி அலுவலகம் உள்ள பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
பண்ருட்டி- சிவா, விருத்தாசலம்- டாக்டர் சங்கவி முருகதாஸ், திட்டக்குடி- வெண்ணிலா, சிதம்பரம்- செந்தில்குமார், வடலூர்- சிவக்குமார்.
அண்ணாமலை நகர்- பழனி, காட்டுமன்னார் கோவில்- கணேசமூர்த்தி, பரங்கிப்பேட்டை- தேன்மொழி சங்கர், குறிஞ்சிப்பாடி- கோகிலா குமார், புவனகிரி- கந்தன், கங்கைகொண்டான்- பரிதா அப்பாஸ், ஸ்ரீமுஷ்ணம்- செல்வி தங்க ஆனந்தன், கிள்ளை- மல்லிகா செல்லப்பா, சேத்தியா தோப்பு- குலோத்துங்கன், தொரப்பாடி-வனஜா, மேல்பட்டாம் பாக்கம்- ஜெயமூர்த்தி ஆகியோர் போட்டியிடுவதாக தி.மு.க.பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தற்போது குறைந்து உள்ளதால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகிற 7-ந்தேதி முதல் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே குறைதீர்வு கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தங்களின் குறைகளை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு செய்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
வாராந்திர பொதுமக்கள் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் புதிய இணையதள பதிவு நடைமுறையின் படி தங்களது மனுவில் ஆதார் அட்டை எண், செல்லிடை பேசி எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகியவற்றை மனுவில் தவறாமல் பதிவு செய்து மனு செய்திட வேண்டும். மேலும் பொது மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும் கூட்டத்திற்கு வரவேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.






