என் மலர்
உள்ளூர் செய்திகள்

புயல் சின்னம் எதிரொலி - கடலூரில் கடல் சீற்றம் அதிகரிப்பு
கடலூர்:
வங்ககடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.
இதனால் இன்று முதல் 7-ந் தேதிவரை டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்ததின்பேரில் கடலூர் மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது கிராமங்களிலேயே முடங்கினர்.
இந்நிலையில் கடலூர் பகுதியில் கடல் அலை சீற்றம் அதிகரித்துள்ளது. சுமார் 7 அடி முதல் 9 அடி உயரத்துக்கு அலைகள் சீறி வருகின்றன. மேலும் கடற்கரை பகுதியில் வழக்கத்துமாறாக 200 முதல் 300 மீட்டர் தூரத்துக்கு கடல் அலைகள் வந்து செல்கின்றன. இதனால் கடற்கரை பகுதிகளில் ஏற்கனவே உருவாகி இருந்த மணல் பரப்பு காணாமல் போனது.
இந்த பகுதிகளில் மீன்வளத்துறை சார்பாக பேரிடர் கால தடுப்பு நடவடிக்கையாக கருங்கற்களை கொட்டி பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் தற்போது சீற்றத்துடன் வரும் அலைகளால் அந்த கற்கள் சரிந்து சிதறின.
மேலும் கடலுக்குள் அவை இழுத்துசெல்லப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அதனை தடுக்கும் வழி என்ன? என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.






