என் மலர்tooltip icon

    கடலூர்

    • சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 11 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இன்று இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியுடன் ஆனி திருமஞ்சன விழா நிறைவுபெறுகிறது.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம், ஆருத்ரா தரிசனம் என ஆண்டுக்கு 2 முறை நடைபெறும் விழாக்களின் போது மூலவர் சபையிலிருந்து வெளியே வரும் நடைமுறையால் 4 நாட்களுக்கு கனக சபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.

    இது தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கமாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தற்போது ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி முதல் இன்று வரை கனக சபையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

    இது குறித்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறையினர் கடந்த 24-ந்தேதி கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அவர்கள் அறிவிப்பு பதாகையை அகற்றுமாறு தீட்சிதர்களிடம் கூறியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அறிவிப்பு பதாகையில் இருந்த வாசகங்களை அறநிலையத்துறையினர் அழித்தனர். ஆனால் அதன் பிறகு மற்றொரு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன நிகழ்ச்சி நேற்று மதியம் நிறைவடைந்த பிறகு சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான் சித் சபைக்குள் பிரவேசம் செய்தார்.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை சிதம்பரம் உதவி கலெக்டர் (பொறுப்பு) பூமா, இந்து சமய அறநிலயத்துறை இணை ஆணயர் சந்திரன், தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் அறிவிப்பு பதாகையை ஊழியர் மூலம் அகற்றி விட்டு சென்றனர்.

    கனகசபையில் அறிவிப்பு பதாகை விவகாரம் தொடர்பாக சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவராமதீட்சிதர் மற்றும் 10 பொதுதீட்சிதர்கள் மீது மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே இன்று இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியுடன் ஆனி திருமஞ்சன விழா நிறைவுபெறுகிறது.

    • பதாகையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்தனர்.
    • பக்தர்கள் மற்றும் தீட்சிதர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருச்சிற்றம்பல மேடை என்று கூறப்படும் கனகசபை மீது ஏறி நின்று சாமியை தரிசனம் செய்வது வழக்கம். கனகசபையில் ஏறி தரிசனம் செய்யப் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இந்நிலையில், ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு, கனக சபையில் ஜூன் 24, 25, 26 மற்றும் 27 ஆகிய நாள்களில் வழிபடத் தடை விதித்து தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். அதை போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர். பதாகையை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்தனர்.

    பதாகை அகற்றப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள், இன்று கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முயன்றனர். அப்போது கதவு திறக்கப்படவில்லை. எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், பக்தர்களை உள்ளே விடாமல் கதவை உள்பக்கமாக பூட்டியதாக தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பக்தர்கள் மற்றும் தீட்சிதர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையே பதாகையை அகற்றச் சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அறநிலையத்துறை அதிகாரி சரண்யா கொடுத்த புகாரின் அடிப்படையில், தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    • காமராஜ் குடும்பத்துடன் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்‌.
    • 1.20 லட்சம் பணம், 2 பவுன் நகை மற்றும் ஆவணங்கள் ,பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 38). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காமராஜ் தனது குடும்பத்துடன் அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்து பார்த்தபோது, கூரை வீடு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. காமராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.

    இதில் காமராஜுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த 1.20 லட்சம் பணம், 2 பவுன் நகை மற்றும் ஆவணங்கள் ,பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு 2 லட்சம் ஆகும். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • கடலூர் ஜவான் பவன் சாலையில் தொடங்கி அண்ணா பாலம் வழியாக கடலூர் டவுன்ஹால் வரை சென்று முடிவடைந்தது.

    கடலூர்:

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கடலூர் ஜவான் பவான் சாலையில் நடைபெற்றது. இப் பேரணியை கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, உதவி ஆணையர் லூர்துசாமி, கோட்ட கலால் அலுவலர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்தப் பேரணி கடலூர் ஜவான் பவன் சாலையில் தொடங்கி அண்ணா பாலம் வழியாக கடலூர் டவுன்ஹால் வரை சென்று முடிவடைந்தது. அப்போது போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்த பேரணியில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர் சரத் தினகரன், கல்லூரி மாணவ -மாணவிகள், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
    • நாளை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது.

    பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்ற நிலையில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடை பெற்றது.

    தேரோட்டம் முடிந்து சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இன்று (திங்கட்கிழமை)அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி, நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சியும், பஞ்சமூர்த்தி வீதிஉலா நடந்தது.

    பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி முன்னுக்குப் பின்னுமாய் 3 முறை நடனமாடி பக்தர்களுக்கு ஆனித்திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.

    திருமஞ்சன தரிசனத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    பின்னர் ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. நாளை (27-ந் தேதி)பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. இத்துடன் ஆனி திருமஞ்சன உற்சவம் முடிவடைகிறது.

    உற்சவ ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் சிவசங்கர தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சிதம்பரம் நகராட்சி சார்பில் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தூய்மை பணி மற்றும் குடிநீர் வழங்கல் பணியை நகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தீட்சிதர்கள் மீது சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதியிடம் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா புகார் அளித்தார்.
    • சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவராம தீட்சிதர் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தார்.

    சிதம்பரம்:

    இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது சிதம்பரம் போலீசில் தீட்சிதர்கள் புகார் அளித்துள்ளனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையின் மீது ஏறி தரிசனம் செய்ய 4 நாட்களுக்கு அனுமதி இல்லை என வைக்கப்பட்டிருந்த பதாதைகளை அகற்ற கோரியதற்கு மறுப்பு தெரிவித்து தன்னை மிரட்டியதாக தீட்சிதர்கள் மீது சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதியிடம் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா புகார் அளித்தார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையரின் உத்தரவுப் படி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்பு பணிக்காக கடந்த 24-ந்தேதி சென்றேன்.

    அப்போது ஜூன் 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகளில் கனக சபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற பதாதையை பொது தீட்சிதர்களால் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்ததை கண்டேன்.

    நான் அந்த பதாதையை அகற்ற கோரிய போது தீட்சிதர்கள் மறுத்து விட்டனர். இதனை தொடர்ந்து வருவாய் துறை, போலீசாருக்கு புகார் தெரிவித்து அவர்களின் உதவியுடன் பதாதையை அகற்ற முயன்ற போது என்னை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

    மேலும் என்னை பொது தீட்சிதர்களின் செயலர் மற்றும் இதர தீட்சிதர்கள் மிரட்டும் தோணியில் பேசினார்கள். எனவே எனது பணியை செய்ய விடாமல் இடையூறாக இருந்த பொது தீட்சிதர்களின் செயலர் மற்றும் இதர தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பதாதைகளை அகற்றியும், அரசாணைப்படி பொதுமக்கள் மீண்டும் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இது போல் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவராம தீட்சிதர் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தார்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 24 முதல் 4 நாட்களுக்கு கனகசபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என தற்காலிக அறிவிப்பு பதாதை வைக்கப்பட்டது.

    இது குறித்து தர்சன் தீட்சிதர் மற்றும் ஜெயஷீலா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தாசில்தார், போலீசார் எங்களிடம் விசாரித்த போது உரிய முறையில் விளக்கம் அளித்தோம்.

    ஆனால் கோவில் பூஜை விதிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலரது உதவியாளர் அறிவிப்பு பதாதையில் இருந்த வாசகங்களை தன்னிச்சையாக அழித்தார்.

    இது தொடர்பாக அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 6-ம் கால பூஜை செய்து தேர் மற்றும் தரிசனத்திற்கு வெளியே வருவார்கள்.
    • நாங்கள் வைத்த போர்டை அறநிலையத் துறையினர் அழித்துள்ளனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் உள்ளது.

    கோவிலில் தேர் மற்றும் தரிசன திருவிழாவின் போது கனகசபை மீது பக்தர்கள் ஏரி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கமாட்டார்கள் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கமாகும். அதன்படி கோவில் பொது தீட்சிதர்கள் இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் 27-ந் தேதி வரை கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என பதாகை வைத்தனர்.

    இது குறித்து கோவிலிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட தர்ஷன் தீட்சிதர் அளித்த புகாரின் பேரில் இந்து அறநிலையத்துறையினர், போலீசாருடன் நேற்று மாலை கோவிலுக்கு வந்து விளம்பர பதாகையை அகற்றி, பக்தர்களை அனுமதிக்குமாறு கோரினர்.

    அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொன்று தொட்டு நடைபெற்று வரும் நடைமுறை இது. இதனால் எங்களது உற்சவம் பாதிக்கும் என்பதால் பதாகையை அகற்ற மறுத்தனர். அப்போது அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர் தெரிவித்ததாவது:-

    தேர் மற்றும் தரிசனத்திற்கு கருவறையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை கனகசபையில் எழுந்தருள செய்தும், 6-ம் கால பூஜை செய்து தேர் மற்றும் தரிசனத்திற்கு வெளியே வருவார்கள். அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் பக்தர்களை கனசபையில் சாமி தரிசனத்திற்கு ஏற்றுவது வழக்கம் கிடையாது.

    நாங்கள் வைத்த போர்டை அறநிலையத் துறையினர் அழித்துள்ளனர். மேலும் எங்களது உற்சவ பணியை செய்யவிட்டாமல் அறநிலையத்துறை செயல் அலுவலர் ஈடுபட்டு வருகிறார். மன நெருக்கடியை உருவாக்கி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து இந்து அறநிலையத்துறை தில்லையம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா கூறுகையில் எங்களை பணி செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுத்து விட்டனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம் என கூறினர்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீசார் இறந்து கிடந்தவர் குறித்து விசாரித்தனர்.
    • இறந்தவரின் உடல் ரெயில்வே பாதையில் இருந்து 3 மீட்டருக்கு அப்பால் கிடந்தது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என். பாளையம் பகுதியில் ரெயில்வே பாதை உள்ளது. இதன் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் கடலூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீசார் இறந்து கிடந்தவர் குறித்து விசாரித்தனர். இதில் அவர் அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் (வயது 42). கூலித் தொழிலாளி என்பது தெரிவந்தது.

    தொடர்ந்து அங்கு வந்த ரெயில்வே போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இறந்தவரின் உடல் ரெயில்வே பாதையில் இருந்து 3 மீட்டருக்கு அப்பால் கிடந்தது. எனவே, இது குறித்து வழக்கு பதிவு செய்து எங்களால் விசாரிக்க முடியாது. நெல்லிக்குப்பம் போலீசார்தான் விசாரிக்க வேண்டுமென கூறினர். அதன்படி, இறந்து கிடந்த வடிவேலுவின் உடலை கைப்பற்றிய நெல்லிக்குப்பம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து போன வடிவேலு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இவரை யாரேனும் கொலை செய்து ரெயில்வே பாதை அருகில் வீசி சென்றனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கவர்னரை கண்டித்து தமிழ் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மார்க்சிஸ்டு மாநில செயலாளர் அமர்நாத், மக்கள் அதிகாரம் பாலு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    சனாதனத்திற்கு எதிராக போராடிய வடலூர் வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என்று பேசிய தமிழக கவர்னர் ஆர்.என் ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் உணர்வார்கள் கூட்டமைப்பு சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ இள.புகழேந்தி, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், காங்கிரஸ் மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் குளோப், தி.க. மாவட்ட செயலாளர் எழிலேந்தி, மார்க்சிஸ்டு மாநில செயலாளர் அமர்நாத், மக்கள் அதிகாரம் பாலு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வடலூர் ரெயில் நிலையம் அருகில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது.
    • மயக்க நிலையில் இருந்த மூதாட்டி யார் என்பது தெரியவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வடலூரில் மெக்கானிக் சங்க கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த மெக்கானிக்குகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற 3 பேர் டீ குடிக்க கூட்ட அரங்கை விட்டு வெளியில் வந்தனர். இவர்கள் வடலூர் ரெயில் நிலையம் அருகில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேேய உடல் நசுங்கி உயிரிழந்தார். மீதமுள்ள 2 பேர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தனர். இதேபோல சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீதும் டிப்பர் லாரி மோதியது. அவரும் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தார்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வடலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் பாரி (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும், பலத்த காயமடைந்தவர்கள் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கே.சுரேஷ், இ.சுரேஷ் என்பதும் தெரியவந்தது. மயக்க நிலையில் இருந்த மூதாட்டி யார் என்பது தெரியவில்லை. பலத்த காயமடைந்த மூதாட்டி உள்ளிட்ட 3 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மெக்கானிக் கூட்டத்திற்கு வந்தவர் லாரி மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சம்பவத்தன்று கூத்தப்பாக்கத்தில் குமார் என்பவரின் வீட்டில் வாடகைக்கு செல்வதற்காக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
    • வீட்டில் அடைத்து வைத்திருந்த சுமதி மற்றும் அவருடன் இருந்த பெண்களை மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வீட்டிற்குள் பூட்டி வைத்து பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  கடலூர் அடுத்த காராமணிக் குப்பத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 50). இவர் சம்பவத்தன்று கூத்தப்பாக்கத்தில் குமார் என்பவரின் வீட்டில் வாடகைக்கு செல்வதற்காக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சுமதி மற்றும் அவருடன் இருந்த 3 பெண்களையும், ராணி மற்றும் சேகர் தாக்கி வீட்டுக்குள் அடைத்து பூட்டி வைத்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி மற்றும் அவருடன் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் அடைத்து வைத்திருந்த சுமதி மற்றும் அவருடன் இருந்த பெண்களை மீட்டனர். இதில் காயம் அடைந்த சுமதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் . இதுகுறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் ராணி, சேகர் ஆகியோர் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்து தாக்கிய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாமி கோவில் வளாகத்தில் உலா வந்தடைந்தது.
    • திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோ ற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழா இன்று 25-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று காலை வரதராஜ பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அப்போது பட்டாச்சாரி யார்கள் வேத மந்திரம் முழுங்க மங்கள வாத்திய த்துடன் கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் சாமி மற்றும் கொடி மரத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. சாமி கோவில் வளாகத்தில் உலா வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு அம்ச வாகனத்திலும் , 2-ம் நாள் திருபல்லக்கிலும், இரவு சூரிய பிரபை வாகனத்திலும், 3-ம் நாள் ராஜகோபாலன் சேவை, சேஷ வாகனத்திலும், 4 ம் நாள் ஸ்ரீ வேணு கோபாலன் சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் 5-ம் நாள் நாச்சியார் திருக்கோலம் மற்றும் ஊஞ்சல் உற்சவமும், இரவு அனுமந்த் வாகனத்திலும், 6-ம் நாள் மாலை யானை வாகனத்திலும், 7-ம் நாள் காலை சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனம், இரவு புண்ணியகோடி விமானத்திலும், 8-ம் நாள் காலை வெண்ணைத்தாழி உற்சவம் இரவு குதிரை வாகனத்திலும் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை மாதம் 3-ந் தேதி, சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் உற்சவம் 5-ந் தேதியும் நடைபெற வுள்ளது. 6-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவ டைகிறது.விழா விற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கட கிருஷ்ணன், அறங்காவலர் குழுத்தலைவர் சாரங்க பாணி, அறங்காவலர்கள் ராதாகிருஷ்ணன், கிஷோர், கமலநாதன், கோவிந்த ராஜலு மற்றும் தலைமை எழுத்தர் ஆழ்வார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×