என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சப்-இன்ஸ்பெக்டருக்கு கீழ் வரும் எஸ்.எஸ்.ஐ. காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு கொடுக்கப்படுகிறது.
    • உடல் பாதிப்பு பிரச்சினைகள் என்றால் சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது.

    கோவை:

    கோவையில் நேற்று டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண், நேற்று கோவை வந்தார். தொடர்ந்து டி.ஐ.ஜி. உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று கோவை சரக போலீஸ் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள், போலீஸ் துறையின் செயல்பாடுகள், களத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என அனைவருக்கும் யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி, உள்பட பல்வேறு மனநல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இதுவரை அதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. எனவே அதுபோன்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மன நல பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்தனர்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டருக்கு கீழ் வரும் எஸ்.எஸ்.ஐ. காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வகையிலும் அனைத்து போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கும் அதேபோன்று ஒரு நாள் விடுமுறை விடலாமா? என்பது குறித்து ஆலோசித்தனர்.

    இதுதவிர போலீசார் மற்றும் அதிகாரிகளின் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில், மன நல டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் சில, பல கேள்விகளை உருவாக்கி, போலீஸ் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு தேர்வு போன்று நடத்தலாம் என்றும், அப்படி செய்தால், அவர்களின் மனநிலை பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    உடல் பாதிப்பு பிரச்சினைகள் என்றால் சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது, மருத்துவர்களின் ஆலோசனை பெற்றே மருந்துகள் உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் கோவை சரக டி.ஐ.ஜி தற்கொலை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்துள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு, திருப்பூர் சூப்பிரண்டு சாமிநாதன், கோவை சூப்பிரண்டு பத்ரி நாராயணன், ஈரோடு சூப்பிரண்டு ஜவகர், நீலகிரி சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் 6 துணை கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பிறகு தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமாரின் உருவப்படத்திற்கு கூடுதல் டி.ஜி.பி. அருண், தலைமையிலான அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • ஆண்டுதோறும் மாணவர்களுக்கு தேவையான சீருடை, நோட்டு, புத்தகங்களையும் வழங்கி வருகிறார்.
    • ஒவ்வொருவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தில் அரசு ஆரம்ப மற்றும் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த பள்ளிகளில் அதிகளவில் ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படித்து வரும் குழந்தைகளை கடந்த 2 ஆண்டுகளாக சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து சென்று வருகிறார்.

    இதேபோல் இந்தாண்டும் இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்து செல்ல ஞானசேகரன் முடிவு செய்தார். இதற்காக மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தனர். விமானத்தில் பயணித்த மாணவ, மாணவிகள் முதல் முறையாக பயணிப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். விமானத்தில் இருந்தபடி மேல் இருந்து கீழே உள்ளே பகுதிகளை பார்வையிட்டு ரசித்தனர்.

    இந்த பயணமானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறியதாவது:-

    ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கனவை என்னால் முடிந்தவரை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாகவே ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று வருகிறேன்.

    சென்னைக்கு சென்றதும், அவர்களுக்கு தேவையான காலை உணவு, மதிய உணவு என அனைத்தையும் பார்த்து கொள்கிறேன். அங்கு மெட்ரோ ரெயிலிலும் அவர்களை பயணிக்க வைக்கிறேன்.

    அப்போது அவர்களது முகத்தில் வரும் ஒரு மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்று வசதி படைத்தவர்கள், தங்களின் அருகாமையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்றால் நன்றாக இருக்கும். இந்தாண்டு 75 மாணவர்கள், 75 பெற்றோர்கள், 15 ஆசிரியர்கள் என விமானத்தில் அழைத்து செல்ல உள்ளேன். இதில் 55 பேர் வீதம் மொத்தம் 3 முறை செல்ல உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் ஆண்டுதோறும் இப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.

    இதோடு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு தேவையான சீருடை, நோட்டு, புத்தகங்களையும் வழங்கி வருகிறார். இதிலும் குறிப்பாக ஒவ்வொருவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் இவர்களை 3-வது ஆண்டாக விமானத்தில் சொந்த செலவில் அழைத்து சென்று வருகிறார் என்றனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் விமானத்தில் சென்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தரையில் நின்று வானத்தில் பறந்த விமானத்தை மட்டுமே பார்த்துள்ளோம். ஆனால் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் உதவியால் நாங்களும் விமானத்தில் சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு எங்களின் நன்றி என்றனர்.

    • மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுள்ளனர்.
    • போலீஸ் துறை இன்று தி.மு.க அரசுக்கு அடிமையாக இருந்து பணியாற்றி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை அ.தி.மு.கவில் இணைத்து கொண்டனர்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அரசு பதவியேற்று கடந்த 2 ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடியார் ஆகியோர் மக்கள் எந்த திட்டம் கேட்டாலும் அதனை செய்து கொடுத்து வந்தார்.

    50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கொடுத்ததும் அவர்கள் தான். கோவையில் ஸ்மார்ட் சிட்டி, அத்திக்கடவு, அவினாசி திட்டம், 6 இடங்களில் மேம்பாலங்கள் என பல்வேறு திட்டங்களை கொடுத்தார்கள்.

    அதனால் தான் தமிழகம் முழுவதும் சாரை, சாரையாக பொதுமக்கள் அ.தி.மு.க.வில் வந்து சேர்ந்து வருகின்றனர்.

    தற்போது மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுள்ளனர். சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் சுற்றுச்சூவர் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நன்றாக இருந்தவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இது போலீஸ் துறைக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது.

    கோவையில் இருக்க கூடிய ஐ.ஜி. அவரை அழைத்து பேசியிருக்கிறார். அவரிடம் விடுமுறை வேண்டுமா என்று கேட்கவில்லை. அரசு அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்கிறார்கள். அது எந்தளவுக்கு என்பது விசாரித்தால் தான் தெரியும்.

    தற்போது நாம் நல்ல ஒரு போலீஸ் அதிகாரியை இழந்து இருக்கிறோம். எனவே எடப்பாடியார் கூறியது போன்று, டி.ஐ.ஜி. தற்கொலை சம்பந்தமாக சி.பி.ஐ. உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே உண்மையான காரணம் தெரியவரும். அது என்ன என்பதை அவர்கள் தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும். டி.ஐ.ஜியின் மரணம் என்பது மர்மமாகவே உள்ளது.

    போலீஸ் துறை இன்று தி.மு.க அரசுக்கு அடிமையாக இருந்து பணியாற்றி வருகிறார்கள். போலீசாருக்கு அழுத்தம் கொடுத்து பணி வாங்குகிறார்கள்.

    திமுகவில் எவ்வளவு ஊழல்கள் நடக்கிறது. ஆனால் அவர்களுடன் கூட்டணியில் இருக்க கூடிய கூட்டணி கட்சிகள் அவை எதையும் வெளி கொண்டு வருவதுமில்லை. அது பற்றி எங்கும் வாய் திறப்பதுமில்லை. மவுனம் காக்கின்றனர்.

    எங்களை பா.ஐனதாவுக்குஅடிமை என்று பேசினார்கள். ஆனால் நாங்கள் காவிரி பிரச்சனை என்று வரும்போது 23 நாட்கள் பாராளுமன்றத்தை இயங்க விடாமல் புறக்கணித்தோம். ஆனால் அவர்கள் அப்படி செய்தார்களா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.

    திமுககூட்டணி கட்சிகள் அனைத்தும் எது நடந்தாலும் தி.மு.கவிற்கு ஜால்ரா போடுவதை மட்டுமே பழக்கமாக வைத்துள்ளனர். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.திமுக வெற்றி பெறும் எடப்பாடி யார் முதல்-அமைச்சர் ஆவார். எதிர்க்கட்சியாக இருந்து ஆளுங்கட்சி செய்த தவறை சுட்டிக்காட்டும் ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம் எல் ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • செந்தில் பாலாஜி என்ன திட்டத்தை வகுத்துக் கொண்டு வந்தாரோ அதே பாணியில் தொய்வில்லாமல் நானும் செல்வேன்
    • 1000 பிரச்சினை நமக்குள் இருக்கலாம். ஆனால் அதனை மறந்து விட்டு, ஒருவருக்கொருவர் போட்டி போட்டு செயல்பட வேண்டும்.

    கோவை,

    கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கோவை பொறுப்பு அமைச்சரும் வீட்டு வசதி நகர் புறம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சருமான முத்துசாமி தலைமை ஏற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்கு கோவைகாரர்கள் தான் முக்கிய காரணம். அவர்கள் அனைவருக்கும் நன்றி. செந்தில் பாலாஜி என்ன திட்டத்தை வகுத்துக் கொண்டு வந்தாரோ அதே பாணியில் தொய்வில்லாமல் நானும் செல்வேன். செந்தில் பாலாஜிக்கு இருக்கும் பிரச்சினை நீண்ட நாள் நீடிக்காது.

    இந்தியா முழுவதும் முதல்-அமைச்சருக்கு நற்பெயர். கட்சி, அரசு, நாடு தழுவிய அரசியல் ஆகியவற்றை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் உள்ளார்.

    1000 பிரச்சினை நமக்குள் இருக்கலாம். ஆனால் அதனை மறந்து விட்டு, ஒருவருக்கொருவர் போட்டி போட்டு செயல்பட வேண்டும். அந்த போட்டியும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை போன்று, பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றியை ஏற்படுத்தி கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அது நிச்சயம் நடக்கும்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மிகப்பெரியை வெற்றியை பெற வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் நன்றாக உழைக்க வேண்டும்.

    இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டத்திற்கு சென்றேன். அங்கு மக்களின் பொது பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளேன்.

    மாவட்டத்தில் நடந்து வரக்கூடிய திட்டங்கள் பற்றியும், அடுத்ததாக மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் கலெக்டரிடம் பேசுவேன்.

    கவுன்சிலர்கள் உங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிட்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்

    இதில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் கல்பனா, மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

    • ஒற்றை காட்டு யானை அதிகாலை நேரத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மாங்கரையில் சிறிது நேரம் அட்டகாசம் செய்த காட்டு யானை மீண்டும் வனத்துக்குள் சென்று மறைந்து விட்டது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் உள்ள தடாகம், வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. எனவே இங்கு காட்டு விலங்குகள் அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறி, ஊருக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் ஒரு காட்டு யானை அதிகாலை நேரத்தில் வனத்தில் இருந்து வெளியே வந்தது. அப்போது அது ஆக்ரோஷமாக காட்சியளித்தது.மாங்கரை குடியிருப்பு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காட்டு யானை, அங்கு உள்ள சோதனைச்சாவடியை உடைத்து சேதப்படுத்தியது.

    அதன்பிறகு டாஸ்மாக் கடை சுவரையும் தாக்கி இடிக்க முயன்றது. மாங்கரையில் சிறிது நேரம் அட்டகாசம் செய்த காட்டு யானை மீண்டும் வனத்துக்குள் சென்று மறைந்து விட்டது.

    கோவை தடாகம் பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரத்தில் ஊருககுள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஒற்றை காட்டு யானை அதிகாலை நேரத்தில் ஊருக்குள் வலம் வந்து அட்டகாசம் செய்து விட்டு திரும்பி சென்று உள்ளது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே கோவை தடாகம் மாங்கரை பகுதியில் தனியாக வலம் வரும் ஒற்றை காட்டு யானையை வனத்துறை பிடித்து நடுக்காட்டில் கொண்டு சென்று விட வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வீட்டில் ரத்தீஷ் எழுதிய கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
    • தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை கணேஷ் நகரை சேர்ந்த சிவக்குமார் மகன் ரத்தீஷ் (வயது 22). இவர் அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ரத்தீசுக்கு சேலத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. எனவே அவர்கள் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் ரத்தீசுடன் காதல் விவகாரம் இளம்பெண் வீட்டுக்கு தெரிய வந்தது. எனவே அவர்கள் உறவுக்கார பையனுக்கு பேசி முடித்து மகளை திருமணம் செய்து வைத்து உள்ளனர். அந்த பெண்ணின் திருமணத்துக்கு ரத்தீசும் சென்று அட்சதை தூவி வாழ்த்திவிட்டு ஊர் திரும்பினார்.

    இந்த நிலையில் சேலம் பெண் மீண்டும் இன்ஸ்டாகிராமில் ரத்தீசை தொடர்புகொண்டார். அப்போது அவர் என்னால் உன்னை மறக்க முடியவில்லை என்று கூறி கதறி அழுது உள்ளார்.

    இருந்தபோதிலும் ரத்தீஷ், உனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனவே நீ உன் கணவருடன் சேர்ந்து வாழவதுதான் முறை என்று அறிவுரை கூறியுள்ளார். அதன்பிறகு அந்த பெண், ரத்தீஷ் உடன் பேசவில்லை. இன்ஸ்டாகிராமிலும் தொடர்பு கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் சேலம் பெண் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவரம் ரத்தீசுக்கு 2 நாட்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. எனவே அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தடாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்தீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    அப்போது வீட்டுக்குள் ரத்தீஷ் எழுதி கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில் நான் மிகவும் விரும்பிய பெண் சேலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து விட்டாள். இது என்னை உடல், மனதளவில் பாதித்து உள்ளது. எனவே நான் தூக்கு போட்டு தற்கொலை செய்கிறேன். என்னை மன்னியுங்கள் அம்மா என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
    • கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் பக்தகர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் உள்ளது. இதில் 2-வது வார்டு பவர் ஹவுசில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கும்.

    கடந்த 2021-ம் ஆண்டு நெடுஞ்சாலை துறையினர் சிராஜ் நகரில் இருந்து கோவில் வழியாக சீரங்கன்ராயன் ஓடை வரை சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.

    இதில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வரை வந்து பாதியில் இந்த பணி நிறுத்தப்பட்டது. இதனால் கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் அனைத்தும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் முழுவதும் தேங்கி நிற்கிறது.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் பக்தகர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுதொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுத்தி உள்ளனர். இதுகுறித்து வார்டு உறுப்பினர் சரிதா கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் கட்டி பாதியில் நிறுத்தியதால் அங்காளம்மனை தரிசனம் செய்ய முடியாத நிலையில் உள்ளது.

    இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அம்மன் கோவில் வாசலில் கூட நிற்க முடியாத நிலை உள்ளது என்றார்.

    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு 1 மணி நேரத்திற்கு மேலாகியும் வரவில்லை.
    • பொது மக்களே வாகனத்தில் இருந்த பாம்பை 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை காரமடை அரங்கநாதர் கோவில் முன் ஊர்கவுண்டர் வீதியை சேர்ந்தவர் கிரி. இவரது மனைவி பூரணி.

    நேற்று இவர்களது வீட்டின் முன்பு 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு வந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் சத்தம் போட பாம்பு, கிரியின் வீட்டு வாசலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தினுள் நுழைந்தது.

    குழந்தைகள் அதிகளவில் உள்ளதால் இதுதொடர்பாக உடனடியாக காரமடை வனத்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    காரமடை வனத்துறை அலுவலகத்திற்கும் ஊர்கவுண்டர் வீதிக்கும் 500 மீட்டர் தொலைவு தான் இருக்கும். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு 1 மணி நேரத்திற்கு மேலாகியும் வரவில்லை.

    இதையடுத்து வேறு வழியில்லாமல் பொது மக்களே வாகனத்தில் இருந்த பாம்பை 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

    இதையடுத்து அந்த பாம்பை காரமடை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    பொதுமக்கள் குடியிருப்பில் பாம்பு நுழைந்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் அலட்சியமாக நடந்து கொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்மநபர்கள் கண்காணிப்பு காமிராவின் எந்திரத்தையும் தூக்கி கொண்டு தப்பியோடி விட்டனர்.
    • இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சூலூர்,

    சூலூர் அருகே சுல்தான் பேட்டை அடுத்த பூரண்டாம்பாளையத்தில் டாஸ்மாக் மது கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த கடைக்கு நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

    பின்னர் அங்கு இருந்து 14 குவாட்டர் பாட்டில், 2 புல் மதுபாட்டில்களை திருடினர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவின் எந்திரத்தையும் தூக்கி கொண்டு தப்பியோடி விட்டனர்.

    இன்று கடை திறக்க வந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கடையில் உள்ள பணம் அப்படியே இருக்கிறது, குவாட்டர் மற்றும் புல் பாட்டில்கள் மட்டுமே திருடுபோகிறது. இதனால் இந்த சம்பவத்தில் ஈடுபடுவது யார் என்பதை தேடி வருகின்றனர்.

    இதில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

    • 11-ந் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
    • மருதூர் துணை மின் நிலையம் மற்றும் பவானி பேரேஸ் துணை மின் நிலையங்களிலும் 11-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    கோவை,

    பெரியநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் வருகிற 11-ந் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்ம நாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக கு.வடமதுரை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல மருதூர் துணை மின் நிலையம் மற்றும் பவானி பேரேஸ் துணை மின் நிலையங்களிலும் 11-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட உள்ளது.

    தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கரிச்சி பாளையம், கன்னார்பா ளையம், காளட்டியூர், புஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்கு காபி கடை, சமயபுரம், பத்திகாளியம்மன்கோவில், நல்லித்துறை, தேக்கம்பட்டி, நஞ்சைய கவுண்டன் புதூர், கெண்டேபாளைம், தொட்ட தாசனூர், தேவனாபுரம் பகுதியில் மின் தடை ஏற்படும் என மேட்டுப்பா ளையம் மின் வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    • பிறந்தநாள் விழா முடிந்ததும் டி.ஐ.ஜி. விஜயகுமார் இரவிலேயே முகாம் அலுவலகத்துக்கு திரும்பி இருக்கிறார்
    • டி.ஐ.ஜி. சில நாட்களாகவே தற்கொலை எண்ணத்துடன் இருந்தது தெரியவந்துள்ளது.

    கோவையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய விஜயகுமார் நேற்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடைசியாக அவர் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் அவர் மிகவும் அமைதியுடன் காணப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மற்ற போலீஸ்அதிகாரிகள் அவரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் அவர்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை என கூறி இருக்கிறார்.

    பிறந்தநாள் விழா முடிந்ததும் டி.ஐ.ஜி. விஜயகுமார் இரவிலேயே முகாம் அலுவலகத்துக்கு திரும்பி இருக்கிறார். அப்போது தனது பாதுகாவலரிடம் நீ பயன்படுத்தும் துப்பாக்கியை எங்கே வைப்பாய், குண்டு நிரப்பி வைப்பாயா? என்பது போன்ற கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு பாதுகாவலரும் விளக்கம் அளித்துள்ளார். அதன்பிறகு விஜயகுமார் தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்திருக்கிறார்.

    நேற்று காலை விழித்தெழுந்து வந்து பாதுகாவலர் பயன்படுத்தும் துப்பாக்கியை எடுத்து தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் டி.ஐ.ஜி. சில நாட்களாகவே தற்கொலை எண்ணத்துடன் இருந்தது தெரியவந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யும் நோக்கிலேயே பாதுகாவலரிடம் துப்பாக்கி பற்றி விசாரித்ததும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2016-ம் ஆண்டு முதல் நான் கோவை சரக டி.ஐ.ஜி.க்கு தனி பாதுகாப்பு காவலராக இருந்து வருகிறேன்.
    • ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, டி.ஐ.ஜி. இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கோவை:

    கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார் (வயது 45). இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி.

    விஜயகுமார் கோவை டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே உள்ள முகாம் அலுவலகத்திலேயே (வீடு) குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    நேற்று காலை காலை 6 மணி அளவில் தனது வீட்டில் இருந்த டி.ஐ.ஜி விஜயகுமார், அறையை விட்டு வெளியில் வந்தார். அங்கிருந்த தனது பாதுகாவலரான ரவிச்சந்திரனிடம் கைத்துப்பாக்கியை வாங்கி கொண்டு வீட்டிற்குள் சென்றவர் திடீரென தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்து அதிர்ச்சியான பாதுகாவலர் சக போலீசார் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சியாகினர். டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மனைவி கதறி அழுதார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகளும் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊரான தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு அவரது உடலுக்கு டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், டி.ஐ.ஜி. விஜயகுமார் 2 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்ததும், இதற்காக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. மேலும் மன அழுத்தம் காரணமாகவே அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மன அழுத்தத்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பாதுகாவலரான ரவிச்சந்திரன், டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் புகார் அளித்துள்ள போலீஸ்காரர் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

    எனது பெயர் ரவிச்சந்திரன். நான் கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தேன். ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறேன்.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் நான் கோவை சரக டி.ஐ.ஜி.க்கு தனி பாதுகாப்பு காவலராக இருந்து வருகிறேன். இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக எனக்கு கோவை மாவட்ட ஆயுதப்படையில் இருந்து, 183 என்ற 9 எம்.எம் ரக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டது.

    எனக்கு டி.ஐ.ஜி. முகாம் அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நான் தங்கி இருந்து பணியாற்றி வருகிறேன்.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் டி.ஐ.ஜி விஜயகுமார் இங்கு வந்தார். அவர் வந்த நாளில் இருந்தே தனக்கு தூக்கம் வரவில்லை. அதனால் மாத்திரை எடுத்து கொள்கிறேன் என்று தெரிவிப்பார். தினமும் தூக்கத்திற்காக மாத்திரை எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

    கடந்த 6-ந் தேதி நான் முகாம் அலுவலகத்தில் இருந்தேன். அப்போது டி.ஐ.ஜி. குடும்பத்துடன் வெளியில் சென்றார். பாதுகாப்புக்காக நாங்களும் சென்றோம். பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டோம். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. வீட்டிற்குள் சென்று ஓய்வெடுத்தார்.

    வழக்கமாக டி.ஐ.ஜி விஜயகுமார் தினமும் காலை 7 மணிக்கு அலுவலகத்தில் உள்ள டி.எஸ்.ஆர் அறைக்கு வந்து டி.எஸ்.ஆரை (தினமும் பதிவாகும் வழக்கு விவரங்கள்) பார்ப்பது வழக்கம்.

    ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக காலை 6.30 மணிக்கெல்லாம் டி.எஸ்.ஆர். அலுவலகத்திற்கு வந்து விட்டார். அப்போது முகாம் அலுவலகத்தில் இருந்த ரவிவர்மா என்பவரிடம் பால் கேட்டார். அவரும் பால் காய்ச்சி கொடுக்கவே அதனை அவர் குடித்தார்.

    இதைபார்த்த நான் டி.எஸ்.ஆரை எடுத்து கொண்டு அவரிடம் செல்ல முயன்றேன். ஆனால் அதற்குள்ளாகவே சரியாக 6.40 மணிக்கெல்லாம் அவரே டி.எஸ்.ஆர் கேட்டு நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து விட்டார்.

    அங்கு வந்தவர் ரவிச்சந்திரன் டி.எஸ்.ஆர் எங்கே கொடுங்கள், பார்ப்போம் என கேட்டார். நானும் அதனை கொடுக்க, அதனை வாங்கி பார்த்தார். பின்னர் நான் பயன்படுத்தும் துப்பாக்கி வைத்திருந்த இடத்துக்கு டி.ஐ.ஜி. சென்றார்.

    அங்கு சென்றவர் அந்த துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் அதனை பார்த்தார். அதனை பார்த்து விட்டு இந்த துப்பாக்கியை எப்படி பயன்படுத்த வேண்டும் என என்னிடம் கேட்டார்.

    நான் சொல்லி கொண்டு இருந்த போதே துப்பாக்கியுடன் அவர் வெளியில் சென்று விட்டார். உடனே நான் டி-சர்ட் அணிந்து கொண்டு வெளியில் வர முயன்றேன். அதற்குள் வெளியே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நானும், என்னுடன் இருந்த டிரைவர் அன்பழகனும் ஓடி வந்து பார்த்தோம். அப்போது டி.ஐ.ஜி. மல்லாந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். என்னிடம் இருந்து எடுத்து சென்ற துப்பாக்கி அவரின் அருகிலேயே கிடந்தது.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான நாங்கள் இதனை அவரது மனைவியிடம் தெரிவிக்க சத்தம் போட்டு கொண்டே ஓடினோம். எங்களது சத்தம் கேட்டு, அவரும் ஓடி வந்து என்ன என்று கேட்டார். நாங்கள் நடந்தவற்றை தெரிவிக்க உடனடியாக அனைவரும் சேர்ந்து, முகாம் அலுவலகத்தில் இருந்து ஒரு காரில் உயிருக்கு போராடிய டி.ஐ.ஜியை தூக்கிக்கொண்டு காலை 7 மணியளவில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.

    செல்லும் வழியிலேயே இதுபற்றிய தகவலை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டேன். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, டி.ஐ.ஜி. இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அவர் சுட்டு கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×