முன்னாள் காதலி தற்கொலையால் உயிரை மாய்த்த வாலிபர்

வீட்டில் ரத்தீஷ் எழுதிய கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் காதலி தற்கொலையால் உயிரை மாய்த்த வாலிபர்
Published on

கவுண்டம்பாளையம்,

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை கணேஷ் நகரை சேர்ந்த சிவக்குமார் மகன் ரத்தீஷ் (வயது 22). இவர் அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் ரத்தீசுக்கு சேலத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. எனவே அவர்கள் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலை வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் ரத்தீசுடன் காதல் விவகாரம் இளம்பெண் வீட்டுக்கு தெரிய வந்தது. எனவே அவர்கள் உறவுக்கார பையனுக்கு பேசி முடித்து மகளை திருமணம் செய்து வைத்து உள்ளனர். அந்த பெண்ணின் திருமணத்துக்கு ரத்தீசும் சென்று அட்சதை தூவி வாழ்த்திவிட்டு ஊர் திரும்பினார்.

இந்த நிலையில் சேலம் பெண் மீண்டும் இன்ஸ்டாகிராமில் ரத்தீசை தொடர்புகொண்டார். அப்போது அவர் என்னால் உன்னை மறக்க முடியவில்லை என்று கூறி கதறி அழுது உள்ளார்.

இருந்தபோதிலும் ரத்தீஷ், உனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனவே நீ உன் கணவருடன் சேர்ந்து வாழவதுதான் முறை என்று அறிவுரை கூறியுள்ளார். அதன்பிறகு அந்த பெண், ரத்தீஷ் உடன் பேசவில்லை. இன்ஸ்டாகிராமிலும் தொடர்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சேலம் பெண் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவரம் ரத்தீசுக்கு 2 நாட்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. எனவே அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தடாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்தீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது வீட்டுக்குள் ரத்தீஷ் எழுதி கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில் நான் மிகவும் விரும்பிய பெண் சேலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து விட்டாள். இது என்னை உடல், மனதளவில் பாதித்து உள்ளது. எனவே நான் தூக்கு போட்டு தற்கொலை செய்கிறேன். என்னை மன்னியுங்கள் அம்மா என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com